ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக சீனா, ரஷ்யா மற்றும் இந்தியத் தலைவர்கள் ஒன்றுகூடினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organisation ) தலைவர்களின் இரண்டு நாள் ஒன்றுகூடல் (ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை) சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்து, “மேலாதிக்கத்திற்கும் அதிகார அரசியலுக்கும்” எதிரான பல துருவ உலகம் குறித்த தனது தொலைநோக்கு பார்வையை முன்வைத்தார்.

புட்டின், நரேந்திர மோடி, ஜி ஜின்பிங் [AP Photo/Suo Takekuma]

இந்தக் குழு, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிறகு மத்திய ஆசியாவில் அமெரிக்க தலையீடுகளை எதிர்கொள்வதற்காக, 1996 ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட “ஷாங்காய் ஐந்தில்” இருந்து அதன் வேர்களைக் கொண்டுள்ளது. 2001 இல் முறையாக நிறுவப்பட்ட SCO ல் உஸ்பெகிஸ்தானையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகியவை, இதில் முழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட 14 நாடுகள், இதில் பேச்சுவார்த்தை பங்காளிகளாக உள்ளன.

இந்த உச்சிமாநாட்டில் 20 தலைவர்களில் பலரின் வருகை குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டாலும், இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வருகை —ஏழு ஆண்டுகளில் அவர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம்— வாஷிங்டனில் எச்சரிக்கை மணிகளைத் தூண்டியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்தியாவுடன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை கவனமாக வளர்த்து வந்துள்ள அதேவேளையில், அது அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாக கருதும் சீனாவுடனான போருக்கான தயாரிப்புக்களை தீவிரப்படுத்தியும் வந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தனது கட்டாய வருகையை மேற்கோள் காட்டி, சீனாவை அவமதிக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக மட்டுமே அர்த்தப்படுத்தப்படக் கூடிய வகையில், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று மோடி முன்னர் குறிப்பிட்டிருந்தார். 2020 ஆம் ஆண்டு, சர்ச்சைக்குரிய எல்லையில் 20 இந்திய மற்றும் நான்கு சீன சிப்பாய்களை கொன்று குவித்த இராணுவ மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் உறைபனியாக இருந்தன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், மோடி திடீரென தனது திட்டங்களை மாற்றினார். கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதிகள் மீதான சுங்கவரிகளை பாரியளவில் 50 சதவீதமாக இரட்டிப்பாக்குவதன் மூலமாக ட்ரம்ப் இந்தியாவை அடிபணிய வைக்க முயன்றார். மோடி அதற்கு இணங்க மறுத்துவிட்டார். மேலும், சுங்கவரி விதிப்பின் இறுதி 25 சதவீதம் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. உண்மையில், ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் போரில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உக்ரேனுக்கு சலுகைகளை வழங்க, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கட்டாயப்படுத்தும் முயற்சியில், ஒரு நெம்புகோலாக ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு ட்ரம்ப் இந்தியா மற்றும் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அமெரிக்கா உடனான இந்தியாவின் நீண்டகால மூலோபாய கூட்டணியை எடுத்துக்கொண்டால், இந்தியா மீது விதிக்கப்பட்ட இதேபோன்ற சுங்கவரி விதிப்பு அதிகரிப்பை சீனா மீது ட்ரம்ப் திணிக்கவில்லை என்ற உண்மை, மோடிக்கு இரட்டிப்பு எரிச்சலூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வாரம் சீனாவில் மோடியின் பிரசன்னம் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு இராஜாங்க சதி போன்றதாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மோடியை உற்சாகமாக வரவேற்ற ஜின்பிங், எல்லைப் பிரச்சினை ஒட்டுமொத்த உறவுகளை வரையறுக்க அனுமதிக்கக்கூடாது என்றும், போட்டியாளர்களாக அல்லாமல் வளர்ச்சிக்கான கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மோடி, பதிலுக்கு, அவர்களுக்கு இடையே இப்போது “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல்” இருப்பதாக அறிவித்தார்.

கடந்த அக்டோபரில் ரஷ்யாவில் இடம்பெற்ற BRICS உச்சிமாநாட்டின் போது, எல்லை ரோந்து ஒப்பந்தம் எட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே மோடியும் ஜியும் ரஷ்யாவில் சந்தித்தனர். சமீபத்திய வாரங்களில், நேரடி விமான சேவைகளை மீண்டும் நிறுவுதல் மற்றும் அரிய மண் தாதுக்கள் உட்பட இந்தியா மீதான சீன ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவற்றால் உறவுகள் மேலும் சூடேற்றப்பட்டிருப்பதை காணலாம். கடந்த திங்களன்று, மோடியின் கூற்றுப்படி, இரு தலைவர்களும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடன் இந்தியாவின் மிகப்பெரிய 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

சீனாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கும், இராணுவரீதியில் சுற்றி வளைப்பதற்குமான அமெரிக்க முயற்சிகளை எதிர்ப்பதற்கான சீனாவின் திறனை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு களமாக ஜிங்பிங் தெளிவாக SCO உச்சிமாநாட்டை பயன்படுத்தினார். “உலகளாவிய நிர்வாகம் ஒரு புதிய திருப்புமுனையில் உள்ளது” என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் மீதான மற்றொரு தாக்குதலில், பெயர்களைக் குறிப்பிடாமல், ஜிங்பிங் “கொடுமைப்படுத்தும் நடைமுறைகளை” விமர்சித்ததுடன், “ஒரு சில நாடுகளின் உள் விதிகள் மற்றவர்கள் மீது திணிக்கப்படக்கூடாது” என்று அறிவித்தார்.

உலக வர்த்தகம் மற்றும் நிதியத்தில் அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, ஒரு புதிய SCO அபிவிருத்தி வங்கிக்கான ஜியின் முன்மொழிவுக்கு இந்தக் கூட்டம் ஒப்புக் கொண்டது. பெய்ஜிங் இந்த ஆண்டு புதிய வங்கி கூட்டமைப்பிற்கு 10 பில்லியன் யுவான் (US1.4 பில்லியன் டாலர்) கடன்களையும், உறுப்பு நாடுகளுக்கு மேலும் 2 பில்லியன் யுவான் உதவிகளையும் வழங்க உள்ளது. SCO நாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு மையத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

“யூரேசியாவில் ஒரு புதிய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு அமைப்புமுறைக்கு” அடித்தளத்தை அமைக்க “உண்மையான பன்முகத்தன்மைக்கு” அழைப்பு விடுக்க, புட்டின் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்கா மற்றும் நேட்டோவைக் குறித்த ஒரு வெளிப்படையான குறிப்பில், “இந்த பாதுகாப்பு அமைப்புமுறை, யூரோ-மைய மற்றும் யூரோ-அட்லாண்டிக் மாதிரிகளைப் போலல்லாமல், ... [அது] உண்மையிலேயே சமநிலையானதாக இருக்கும், மேலும் ஒரு நாடு மற்ற நாடுகளின் இழப்பில் அதன் சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த அனுமதிக்காது” என்று புட்டின் தெரிவித்தார்.

உக்ரேன் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு எதிராகவும் புட்டின் கடுமையாக சாடினார். இந்தப் போர், “உக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பின் விளைவாக எழுந்ததல்ல, மாறாக உக்ரேனில் [2014 இல்] மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தூண்டிவிடப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாக எழுந்தது” என்றார். இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வை எளிதாக்குவதில் சீனா மற்றும் இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், கடந்த மாதம் அலாஸ்காவில் ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்களை SCO உறுப்பினர் நாடுகளுக்கு இருதரப்பு சந்திப்புகளின்போது தெரிவிப்பதாகவும் கூறினார்.

சீனாவும் இந்தியாவும் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளன, ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவின் 2022 படையெடுப்பைக் கண்டிக்க மறுத்துவிட்டன.

ஒரு இணக்கமான மற்றும் நட்புறவு சூழலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, கடந்த திங்கள் இடம்பெற்ற கூட்டத்திற்கு புட்டினின் வாகனத்தில் மோடியும், புட்டினும் ஒன்றாக வந்து, நெருக்கமான வட்டத்தில் கைகளைப் பிடித்தபடி புகைப்படம் எடுக்கும் வாய்ப்புக்காக ஜின்பிங்குடன் இணைந்தனர். இந்திய மற்றும் ரஷ்ய தலைவர்களும் பகிரங்கமாக தங்கள் சொந்த கலந்துரையாடல்களில் இதனை பாராட்டினர்.

“இந்தியாவுடனான ட்ரம்பின் கடுமையான ஒப்பந்தம் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்” என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான ஒரு தலையங்கம், புது டெல்லியை அடிபணியச் செய்யவும், ரஷ்யாவுடனான நீண்டகால இந்திய உறவுகளை முறிக்கவும் அதிக சுங்கவரிகளைப் பயன்படுத்த வெள்ளை மாளிகையின் கொடூரமான முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்ற எச்சரிக்கையை அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் வெளிப்படுத்தியுள்ளது.

“பெய்ஜிங் வாஷிங்டனின் மிகவும் சக்திவாய்ந்த போட்டியாளராக உள்ளது. முற்றிலும் பொருளாதார அர்த்தத்தில், சீனா ஏற்கனவே சோவியத் ஒன்றியத்தை விட மிகவும் பலமான எதிரியாக உள்ளது” என்று போஸ்ட் குறிப்பிட்டது. மேலும் அது பின்வருமாறு தெரிவித்தது:

“பேச்சுவார்த்தை மேசையில் எந்தப் பணத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதே ட்ரம்பின் பூஜ்ஜிய-தொகை அணுகுமுறையாக உள்ளது. வணிகத்தில் கூட, இது ஒரு தவறு என்று வாதிடலாம். நல்லெண்ணத்திற்கு மதிப்பு உண்டு. சீனாவுடனான ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள் அவர் நட்பு நாடுகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளைப் போலவே, இன்னும் சிராய்ப்புத் தன்மை கொண்டதாக மாறக்கூடும். ஒருவேளை அப்போதுதான் அவர் நண்பர்களுடனான சிறந்த உறவுகளைப் பாராட்டலாம்.”

எவ்வாறாயினும், ட்ரம்ப்பின் அதிகாரிகள் இந்த ஆலோசனைக்கு செவிசாய்ப்பதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் SCO உச்சிமாநாட்டை “செயல்திறன் மிக்கது” என்று விவரித்ததுடன், இந்தியாவையும் சீனாவையும் “ரஷ்ய போர் எந்திரத்திற்கு எரியூட்டும்” “மோசமான நடிகர்கள்” என்று கண்டனம் செய்தார். ட்ரம்பின் சீன-விரோத வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ, ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் “இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் இலாபம் ஈட்டுகிறார்கள்” என்று அறிவித்து, இந்தியாவை “திமிர்பிடித்தது” என்று கண்டித்தார். எரிச்சலூட்டும் வகையில், நவார்ரோ உக்ரேனிய மோதலை “மோடியின் போர்” என்று முத்திரை குத்தினார்.

அமெரிக்காவுடனான உறவுகளை உடனடியாக முறித்துக் கொள்ளும் எண்ணம் மோடிக்கு இல்லை. SCO உச்சிமாநாட்டிற்கு செல்லும் வழியில், அவர் டோக்கியோவில் தங்கினார். அங்கு அவர் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உடனான ஒரு அரை-இராணுவ உடன்படிக்கையான நாற்தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை அல்லது குவாட் இன் வேலைகளைப் பாராட்டினார். நிக்கி ஆசியா நாளிதழுடன் பேசிய மோடி, “துடிப்பான ஜனநாயக நாடுகள், திறந்த பொருளாதாரங்கள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்கள் என, எதேச்சதிகார சர்வாதிகார சீனாவிற்கு எதிராக சுதந்திரமான, திறந்த மற்றும் அதனை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று அமெரிக்காவின் நிலையான பிரச்சாரத்தை மீண்டும் கூறினார்.

சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட மற்ற SCO உறுப்பு நாடுகளைப் போலவே, ட்ரம்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளால் மோசமடைந்து வரும் சர்வதேச பொருளாதாரக் கொந்தளிப்பு, அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் உலகப் போர் ஆகியவற்றுக்கு மத்தியில், இந்தியா தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை ஆக்ரோஷமாகப் பின்தொடர்கிறது. உள்நாட்டில் சமூக பதட்டங்களால் சிதைக்கப்பட்டு, பல தீர்க்கப்படாத மோதல்களால் பிளவுபட்டுள்ள இந்த நாடுகளில் எதுவுமே ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்புக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கும் ஒரு முற்போக்கான தீர்வைக் கொண்டிருக்கவில்லை.

Loading