ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் கொண்டுள்ள இடம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2025 ஆகஸ்ட் 2 முதல் 9 வரை இடம்பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளியை அறிமுகப்படுத்துவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், பின்வரும் அறிக்கையை வழங்கினார். வரும் வாரங்களில் பள்ளியில் வழங்கப்பட்ட அனைத்து விரிவுரைகளையும் WSWS வெளியிடும்.

1. அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களையும், உலகம் முழுவதிலுமிருந்து பங்குபற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைச் சேர்ந்த தோழர்களையும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளிக்கு வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்து வரும் ஏழு நாட்களில், இந்தப் பள்ளியில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதைப் பற்றி தீவிரமாக கவனம் செலுத்துவோம்.   

ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் கொண்டுள்ள இடம்

2. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அரை நூற்றாண்டுக்கு முன்பு லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை சம்பந்தமான விசாரணையை முன்னெடுத்தது. 1975 மே மாதம் அனைத்துலகக் குழுவின் ஆறாவது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த விசாரணையைத் தொடங்கிய தீர்மானம், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்று அழைக்கப்படுகிறது, இது

3. 1974 ஆகஸ்ட் 31 அன்று வேர்க்கர்ஸ் லீக் (தொழிலாளர் கழகம்) இன் தேசியக் குழுவானது, அதன் தேசிய செயலாளர் ரிம் வொல்ஃபோர்த்தின் தனிப்பட்ட நண்பியான நான்சி ஃபீல்ட்ஸ், மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.ஐ.ஏ.) உயர் மட்ட அதிகாரியுடன் மிக நெருக்கமான குடும்ப தொடர்பைக் கொண்டிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்ததில் இருந்தே, இந்த விசாரணையைத் துரிதப்படுத்திய அரசியல் பிரச்சினைகள் எழுந்தன. வொல்ஃபோர்த் இந்த உண்மையை கட்சித் தலைமையிடம் இருந்து வேண்டுமென்றே மறைத்திருந்தார்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக, வொல்ஃபோர்த், 1974 ஏப்ரலில் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐந்தாவது மாநாட்டிற்கு ஃபீல்ட்ஸை தன்னுடன் கூட்டிவர தேர்ந்தெடுத்தார். அவர், பொலிஸ்-அரசு சர்வாதிகாரங்களால் ஆளப்பட்ட பெரு, ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் போன்ற நாடுகளில், சட்டவிரோத நிலைமைகளின் கீழ் தங்கள் பணிகளை மேற்கொண்ட தோழர்களும் அடங்கிய அதன் பிரதிநிதிகள் மத்தியில் சுற்றி வந்தார். தனது அரசியல் பொறுப்புகளை தனது தனிப்பட்ட விவகாரங்களுக்குக் கீழ்ப்படுத்திய வொல்ஃபோர்த், பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்கும் மாநாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தினார்.

5. வொல்ஃபோர்த்தை தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, நான்சி ஃபீல்ட்ஸை அங்கத்துவத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது மட்டுமன்றி, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், அவரது குடும்ப தொடர்புகளுக்கு மேலாக, அவருக்கு சி.ஐ.ஏ. உடன் உறவு இருந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, வேர்க்கர்ஸ் லீக்கும் அனைத்துலகக் குழுவும், நான்சி ஃபீல்ட்ஸின் (நான்சி கோர்ன்ரைஷ் என்றும் நான்சி ஃபிரோய்டன் என்றும் அறியப்படும்) தனிப்பட்ட பின்னணி குறித்து விசாரணைக் குழுவைத் தொடங்கின. ஆனால், விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, வொல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸும் வேர்க்கர்ஸ் லீக்கை விட்டு வெளியேறினர். வொல்ஃபோர்த் தனது இராஜினாமா கடிதத்தில், வரவிருக்கும் ஆணைக்குழுவின் விசாரணையை ஒரு 'தனிப்பட்ட உரிமையை மீறும் விசாரணை' எனக் கண்டனம் செய்தார்.

ரிம் வொல்ஃபோர்த் மற்றும் நான்சி ஃபீல்ட்ஸ்

6. இராஜினாமா செய்த சில மாதங்களில் வொல்ஃபோர்த், சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்ததற்கு எதிரான தனது முந்தைய 14 ஆண்டுகால போராட்டத்தை கைவிட்டு மீண்டும் சோசலிசத் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அவர் எழுதிய ஒரு நீண்ட ஆவணம், இன்டர்கான்டினென்டல் பிரஸ் (Intercontinental Press) 1975 பிப்ரவரி-மார்ச் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. இந்த இதழின் ஆசிரியர், 1963 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சி பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மீண்டும் இணைவதற்கும் நான்காம் அகிலத்தின் அடிப்படைக் கொள்கைகளை அது கைவிடுவதற்கும் பிரதான காரணகர்த்தாவாக இருந்த ஜோசப் ஹான்சன் ஆவார்...

7. தனது சொந்தக் கட்சியின் அரசியல் பாதுகாப்பை தானே அலட்சியம் செய்ததன் தாக்கங்களை நிராகரித்த வொல்ஃபோர்த், வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் நெருக்கடியில் ஹீலி தலையீடு செய்ததை, 'தனிநபருக்கு ஏற்ப உலகை மறு ஒழுங்கமைக்கும் ஒரு வகையான பைத்தியக்காரத்தனம்' என்று கண்டித்தார். “தான் சி.ஐ.ஏ. முகவர்களால் சூழப்பட்டிருப்பதாக நம்பிக்கொண்டு, அந்த அடிப்படையில் அவர் (ஹீலி) செயற்படுகின்றார்”, என அவர் தெரிவித்தார்.

8. வொல்ஃபோர்த்தின் தூற்றுதலைத் தொடர்ந்து, ஹான்சன் இன்டர்கான்டினென்டல் பிரஸ் 1975 மார்ச் 31 பதிப்பில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவரான ஹீலியை, 'ஹீலியின் இயங்கியலின் இரகசியம்' என்ற தலைப்பில் கண்டனம் செய்தார். அவர் எழுதியதாவது:

ஹீலியின் செயற்பாட்டை 'பைத்தியக்காரத்தனம்' என்று வொல்ஃபோர்த் விவரிக்கிறார். 'சித்தப்பிரமை' போன்ற நவீன வார்த்தையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாக இருக்கும், ஒருவேளை இன்னும் துல்லியமாகவும் இருக்கும், அல்லவா?

இந்த வார்த்தைப் பிரயோகம் பொருத்தமாக இருந்தால், சி.ஐ.ஏ. முகவர்கள் பற்றிய ஹீலியின் மன உறுத்தல்கள், அவரது உயிருக்கு எதிரான சதித்திட்டங்கள், அதே போல் அவரது கோபங்கள், அவரது 'தீவிர எதிர்வினைகள்' மற்றும் அவரது விசித்திரமான இயங்கியலினதும் உண்மையான விளக்கத்தை, அவரது அரசியலிலோ, மெய்யியல் வழிமுறையிலோ அல்லது பப்லோ அல்லது கனன் போன்றோரின் மாதிரிகளிலோ அன்றி, மாறாக மனநல மருத்துவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மனதின் செயல்பாடுகளிலேயே தேட வேண்டும்.

9. பாதுகாப்பு குறித்த ஹீலியின் கவலையை ஹான்சன் கண்டனம் செய்ததை, அதன் பொருத்தமான உள்ளடக்கத்தில் வைக்க, 1973 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவின் (FBI) பாரிய ஊடுருவல் இருந்தமை பற்றிய தகவல்கள் அம்பலமானதை நினைவுபடுத்த வேண்டும். மதிப்பிழந்த COINTELPRO (எதிர்-புலனாய்வு நடவடிக்கை திட்டம்) ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டதிலிருந்து, எஃப்.பி.ஐ. அந்த அமைப்பை உளவு பார்க்க 1,300 தகவல் வழங்குவோரை வேலைக்கு அமர்த்தியிருப்பது தெரியவந்தது. உத்தியோகபூர்வ வெளியீடுகளின்படி, குறைந்தட்சம் 301 தகவல் வழங்குபவர்கள் கட்சிக்குள் ஊடுருவியிருந்தனர். 1941 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் முகவர்கள் ஊடுருவியிருந்ததை ஆவணங்கள் சுட்டிக்காட்டின.

10. சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் எஃப்.பி.ஐ.யின் பாரிய பகிரங்கமாக வெளிப்பட்ட நிலையில், ஹீலியின் பாதுகாப்பு குறித்த அக்கறையை ஹான்சன் 'சித்தப்பிரமை' என்று கேலி செய்தமை, குறைந்தபட்சமேனும், அரசியல் ரீதியாக கண்டிக்கத்தக்கதும் பொறுப்பற்ற செயலுமாகும். இது 1973 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான இளம் சோசலிசக் கூட்டணியும் மத்திய அரசாங்கத்தின் ஊடுருவல் திட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கைக் கூட குறைத்து மதிப்பிடுகிறது. கட்சிப் பாதுகாப்பு குறித்த அக்கறை வெறுமனே 'சித்தப்பிரமை'யின் வெளிப்பாடாக இருந்தால், எஃப்.பி.ஐ. ஊடுருவலை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்க வேண்டும்?

11. ஹான்சன் ஹீலியைக் கண்டித்ததில் மற்றொரு தீய அம்சமும் இருந்தது. 1960 கள் மற்றும் 1970களின் முற்பகுதியில், சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஸ்ராலினிச ஆட்சி, அதன் அரசியல் அதிருப்தியாளர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறியே அவர்கள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்தியது. GPU மற்றும் NKVD இன் வாரிசான KGB, அரசியல் எதிர்ப்பாளர்களை அடிக்கடி மனநல மருத்துவர்களிடம் அனுப்பியது. நிகிதா குருஷ்சேவ், ஒரு பகிரங்க உரையில், குற்றங்களையும் சோவியத் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பையும் மனநோயுடன் வெளிப்படையாக இணைத்தார்.

12. இந்த அவதூறானது மனநல நோயாளிகளை காவலில் வைப்பதை, அரசியல் அடக்குமுறைக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்தது. இந்த வகையான அடக்குமுறைக்கு ஆளானவர்களில் விஞ்ஞானி ஜோர்ஸ் மெட்வெடேவ், எழுத்தாளர் யூலி டனியல் மற்றும் கவிஞர்கள் ஐயோசிஃப் ப்ராட்ஸ்கி, நடால்யா கோர்பனேவ்ஸ்கயா ஆகியோர் அடங்குவர். ஆட்சியை விமர்சித்த எதிர்ப்பாளர்கள், பொதுவாக 'சீர்திருத்தவாத சித்தப்பிரமை வெறி', 'சித்தப்பிரமையின் ஆளுமைக்கோளாறு' ஆகியவற்றால் கூட பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டனர்.

கீழே இடமிருந்து கடிகார திசையில்: யூலி டானியல், ஐயோசிஃப் ப்ராட்ஸ்கி [டச்சு தேசிய ஆவணக்காப்பகம்], ஜோரெஸ் மெட்வெடேவ் [RIA நோவோஸ்டி], நடால்யா கோர்பனேவ்ஸ்கயா [Ondřej Lipár]

13. ஹீலி 'சித்தப்பிரமை'யால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹான்சன் கண்டனம் செய்ததில், அவர் ஸ்ராலினிச பாணி அவதூறுகளையே நாடினார். அத்தகைய முறைகளில் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதற்கான மூலவேர்கள் இறுதியில் தெளிவாகத் தெரிந்தது.

14. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டதற்கான உடனடிக் காரணங்களை விட, பரந்த வரலாற்று சூழல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1975 ஏப்ரலில் வெளியிடப்பட்ட 'ஹீலியின் இயங்கியலின் ரகசியம்' என்ற ஹன்சனின் புத்தகத்திற்கு பதிலளித்த தொழிலாளர் புரட்சிகரக் கட்சியின் அரசியல் குழு அறிவித்ததாவது:

பாதுகாப்புப் பயிற்சி மீதான எங்கள் வலியுறுத்தல், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோர் போராடிய புரட்சிகர இயக்கத்தின் மரபுகள் மற்றும் கொள்கைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது.

பாதுகாப்பு என்பது ஒரு அருவமான அல்லது இரண்டாம் தரப் பிரச்சினை அல்ல. அதன் சொந்த அணிகளில் புரட்சிகர ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொள்ளாத ஒரு கட்சி, முதலாளித்துவ அரசு இயந்திரத்தை எதிர்கொள்வதிலும், அதைத் தூக்கியெறிவதிலும், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைப் பெற முடியாது.

இது ஒருதலைப்பட்சமான முறையில் பாதுகாப்பை முன்வைக்கின்ற விடயம் அல்ல. தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர காரியாளரைப் பயிற்றுவிப்பதில் இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாகக் கருதப்பட வேண்டும். பொலிஸ் ஊடுருவலைத் தடுக்க, அதன் அணிகளை பீதியின் கீழ் முறையாக ஒழுங்கமைக்க முடியாத காரணத்தால், ஒரு சீரிய புரட்சிகரக் கட்சி அதன் அணிகளில் பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாளும் போது பீதியுடன் செயற்படுவதில்லை.

இதன் பொருள், தொழிலாள வர்க்கத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு பயிற்சி பெற்ற புரட்சிகரக் கட்சியே, CIA, FBI, MI5, MI6 போன்ற இன்னும் பல எதிர் புரட்சிகர சதிகளுக்கு எதிரான, பொறுப்புறுதி கொண்டே ஒரே மிகப்பெரிய அமைப்பு என்பதை அறிந்து, பாதுகாப்பு விவகாரங்களில் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஹான்சனின் கட்டுரை ட்ரொட்ஸ்கிச வரலாற்றில் இன்றியமையாத பக்கங்களை மீண்டும் திறக்க நமக்கு உதவுகிறது. கடந்த காலத்தில், நமது இயக்கம் தனது அணிகளில் பாதுகாப்புப் பயிற்சியை அலட்சியம் செய்து, ஏளனம் காட்டியதன் விளைவாக, ஒரு பயங்கரமான விலை கொடுத்திருப்பதன் காரணமாக, இந்த வரலாறு, வடுக்கள் மற்றும் அனைத்தையும் முன்வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இவையே ஹான்சன் அழிக்க விரும்பும் பக்கங்கள் ஆகும்.

புறநிலை நிலைமைகள் நான்காம் அகிலத்தை வெகுஜனங்ளிடமிருந்து கணிசமான அளவில் தனிமைப்படுத்தியிருந்ததாலும், அதன் விளைவாக அவரது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்ந்து ஆபத்தில் இருந்ததாலும், ட்ரொட்ஸ்கி ஸ்ராலினின் ஜி.பி.யு. ஆல் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்றில் மிகவும் அர்ப்பணிப்புடன் அரசியல் ரீதியில் அவரைப் பின்பற்றியவர்கள் அவரைச் சூழ்ந்திருந்தாலும், அவர்களில் சிலர் பாதுகாப்பு விஷயங்களில் மேம்போக்காக இருந்தமை, ஜி.பி.யு. கொலையாளிகளுக்கு சாதகமாகியது....

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, திருத்தல்வாதிகளின் கூச்சல்களையும் அலறல்களையும் கண்டு மிரளப் போவதில்லை. தங்கள் முகம் வெளிறிப் போகும் வரை அவர்கள் எங்களை 'குறுங்குழுவாதிகள்' மற்றும் 'சித்தப்பிரமை பிடித்தவர்கள்' என்று அழைக்கலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் உண்மையில் அனைத்துலகக் குழுவின் கொள்கைகளுக்கான போராட்டத்தையும், எங்கள் அணிகளில் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வில் அது கவனம் செலுத்துவதையுமே தாக்குகிறார்கள். ஹன்சனின் சர்வதேச குழுக்களின் அடையாளமான, மத்தியதர வர்க்க    கடற்கொள்ளையர்களுக்கும் சாகசக்காரர்களுக்குமான ஒரு 'கடை'யை நாங்கள் உருவாக்கவில்லை. அந்தப் பாதையானது சி.ஐ.ஏ.வுக்கும் பொலிஸ் ஊடுருவலுக்கும் ஒரு திறந்த அழைப்பாகும். ஏனெனில், துல்லியமாக அத்தகைய பண்புகொண்ட சக்திக்களுக்கு மத்தியேலேயே பொலிஸ் தொடர்பாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன.

ஹான்சன் பாதுகாப்பு விவகாரத்தை மறைக்க விரும்புகிறார்; நாங்கள் அதனை எங்கள் இயக்கத்தின் பயிற்சியிலும், கட்டமைப்பதிலும் அதை முன்னுரிமையின் நிலைக்கு உயர்த்த விரும்புகிறோம். இதனால்தான் வொல்ஃபோர்த்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்த காரணங்களையும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் இதேபோன்ற நடவடிக்கைகள் ஏன் மீண்டும் எடுக்கப்படும் என்பதையும் விளக்க, ட்ரொட்ஸ்கிச வரலாற்றின் பக்கங்களை மீண்டும் திறப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்.

15. 1975 மே மாதம் அனைத்துலகக் குழு அதன் ஆறாவது மாநாட்டைக் கூட்டி, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையைத் தொடங்க ஜெர்ரி ஹீலி முன்வைத்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்தபோது, படுகொலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட சரியாக 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை, 1990 ஆம் ஆண்டு நமக்கு இருப்பது போலவே, ஒப்பீட்டளவில் சமீபத்தியது. ட்ரொட்ஸ்கி இறந்த நேரத்தில் நான்காம் அகிலத்திலும் சோசலிசத் தொழிலாளர் கட்சியிலும் தீவிரமாகச் செயல்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தனர். அவர்களில் பலர் பெரிதும் வயதானவர்கள் அல்ல.

  • 1932 முதல் 1939 வரை ட்ரொட்ஸ்கியின் செயலாளராக இருந்த ஜோன் வொன் ஹெய்னூர்ட்டை நான் 1975 செப்டம்பரில் பேட்டி கண்டபோது அவருக்கு 63 வயது.
  • 1939-40ல் கொயோகானில் ட்ரொட்ஸ்கியின் காவலரின் அணியின் தலைவராக பணியாற்றிய ஹரோல்ட் ரொபின்ஸை 1975 கோடையில் வேர்கர்ஸ் லீக் தொடர்பு கொண்டபோது அவருக்கு 67 வயது.
  • 1939-40ல் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் முன்னணி உறுப்பினரான பீலிக்ஸ் மோரோவை 1976ல் நான் சந்தித்தபோது அவருக்கு 71 வயது.
பீலிக்ஸ் மோரோ, ஜோன் வொன் ஹெய்னூர்ட் (1937 ஏப்பிரலில் டூவி கமிஷன் விசாரணை), ஹரோல்ட் ரொபின்ஸ் (கொயோகானில் ட்ரொட்ஸ்கியின் வசிப்பிடம், 1940)

16. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சதியில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் பலர் இன்னும் அவர்களது அறுபதுகளில் இருந்தனர்.

  • ட்ரொட்ஸ்கியின் கொலையாளியான ரமோன் மெர்காடருக்கு 61 வயது, விசாரணை தொடங்கியபோது சோவியத் ஒன்றியத்தில் வசித்து வந்தார்.
  • நான்காம் அகிலத்திற்குள் செயல்பட்டு வந்த மிக முக்கியமான ஜி.பி.யு. முகவரான மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, ஆகஸ்ட் 1975 இல் சான் பிரான்சிஸ்கோ அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே அவரையும் அவரது மனைவியையும் புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவருக்கு 67 வயது.
  • ஜோசப் ஹான்சனுக்கு 65 வயது.
  • சோசலிசத் தொழிலாளர் கட்சி தலைவர் ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளராக ஆன ஜி.பி.யு. முகவர் சில்வியா காலனுக்கு 63 வயது.
  • ஜாக்சனை ட்ரொட்ஸ்கிக்கு அறிமுகப்படுத்திய சில்வியா அகெலோஃப் 65 வயதுடையவர்.

17. விசாரணை தொடங்கிய நேரத்தில், அந்தப் படுகொலை 'பண்டைய வரலாறு' அல்ல என்பதை வலியுறுத்த 1975 இல் இந்த நபர்களையும் அவர்களின் வயதையும் நான் குறிப்பிடுகிறேன். வரலாற்று ரீதியாக, ட்ரொட்ஸ்கியின் படுகொலை ஒரு சமீபத்திய நிகழ்வாக இல்லாவிட்டாலும், பல உயிருள்ள தனிநபர்களின் அரசியல் நினைவில் பதிந்துள்ளது. ஆயினும்கூட, அந்த நேரத்தில், சோசலிசத் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களும் ஜோசப் ஹன்சனை நியாயப்படுத்துபவர்களும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 'இவ்வளவு காலத்திற்கு முன்பு' நடந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் முன்னீடுபாட்டுடன், அல்லது ஆர்வமாக இருந்ததா? என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். நாம் ஏன் இன்னும் படுகொலையைப் பற்றி 'பேசிக்கொண்டிருந்தோம்'?

18. மீண்டும், கால அளவைப் பற்றிய ஒரு புரிதலை வழங்குவதெனில், இன்றைய நிகழ்வுகளுக்கும் 1985-86 இன் பிளவுக்கும் 1989 இல் ஜெர்ரி ஹீலியின் மரணத்திற்கும் இடைப்பட்டகாலமானது, 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும் 1975 இல் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை தொடக்குவதற்கும் இடையிலான காலத்தோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமானதாகவே காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 1963 இல் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டதை நான் குறிப்பிடலாம் என்றாலும், அவரது மரணத்தின் சூழ்நிலைகள் இன்னும் கடுமையான சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளன. கென்னடி படுகொலை குறித்த எஃப்.பி.ஐ. இன் விசாரணை தொடர்பான புதிய ஆவணங்கள் கடந்த சில மாதங்களில்தான் பகிரங்கப்படுத்தப்பட்டன. இந்த ஆவணங்கள், ஜனாதிபதியின் கொலை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஜோன் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான கேள்விகளுக்கு முடிவுகட்டுவதற்குப் பதிலாக, அவரது உயிரைப் பறித்த சதி பற்றிய புதிய கேள்விகளுக்கு எண்ணெய் வார்த்துள்ளன.

19. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் தொடங்கப்படுவதற்கு முன்பு, லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்து அவர் ஸ்தாபித்த இயக்கத்தால் எந்த முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை. ட்ரொட்ஸ்கி ஒரு 'உலக வரலாற்று' முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபரும் இருபதாம் நூற்றாண்டின் முழுப் போக்கிலும் செல்வாக்கு செலுத்திய 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சியின் இணைத் தலைவருமாவார் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டால், இந்த விடயம் இன்னமும் காரணம் கூறி விவரிக்க முடியாததாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் படுகொலை செய்யப்பட்டமை, நான்காம் அகிலத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு -எனவே, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் மனிதகுலத்தின் தலைவிதியில் ஏற்படுத்திய பாதிப்பு- கணக்கிட முடியாததாகும். மனிதகுலம் அதன் வழிகாட்டிகளில் ஒருவரை, அதிலும் அவர்களில் அதிசிறந்த ஒருவரை இழந்துவிட்டது, என மார்க்சின் மறைவைப் பற்றி ஏங்கெல்ஸ் எழுதியதையே ட்ரொட்ஸ்கியின் மரணத்தைப் பற்றியும் ஒருவரால் கூற முடியும்.

லியோன் ட்ரொட்ஸ்கி

20. நான்காம் அகிலத்திற்குள், ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றிய வரலாற்று விவரிப்பு, 21 ஆகஸ்ட் 1940 முதல் கிட்டத்தட்ட மாறாமல் இருந்தது. அது இதுதான்: நல்லெண்ணம் கொண்ட சில்வியா அகெலோஃபின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் தனி வீட்டுக்குள் நுழைந்த, பிராங்க் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் ரமோன் மெர்காடர் என்ற ஒற்றை ஜி.பி.யு. முகவரால் படுகொலை செய்யப்பட்டார், நான்காம் அகிலம் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் நுழைந்திருந்த ஜி.பி.யு. முகவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டம் பற்றி எந்தப் பேச்சும் இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கியின் உயிரை எடுக்க முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட 1940 மே 24 அன்று, டாவிட் சிக்கேய்ரோஸின் படுகொலைக் குழுவிற்கு கொயோகான் வீட்டின் வாயில் கதவைத் திறந்துவிட்ட காவலாளியான ரொபேர்ட் ஷெல்டன் ஹார்ட், ஒரு ஜி.பி.யு. முகவராக இருந்தார் என்பதற்கான சான்றுகள் ஒதுக்கித் தள்ளப்பட்டன.

21. ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்து விசாரணை ஒன்று நடத்தப்பட்டிருந்ததென்றால், அது நான்காம் அகிலத்தால் அன்றி, அமெரிக்க அரசாங்கத்தாலேயே நடத்தப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சோவியத் உளவு முகவர்கள் சம்பந்தமாக விசாரணை நடத்தி வழக்குத் தொடர்ந்தபோது அமெரிக்க அரசாங்கம் ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றியும் விசாரித்தது. இந்த அரசு விசாரணைகள், ட்ரொட்ஸ்கியின் படுகொலையையும், 1937-38 இல் ஐரோப்பாவில் எர்வின் வொல்ஃப், இக்னேஸ் ரைய்ஸ், லெவ் செடோவ் மற்றும் ருடோல்ப் கிளெமென்ட் உட்பட முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் படுகொலையையும் ஒழுங்கமைத்த ஜி.பி.யு. முகவர்களின் வலையமைப்பை அம்பலப்படுத்தின.

22. சோபோலேவிச்சியஸ் சகோதரர்களான ஜாக் சோபிள், ரோபர்ட் சோப்லென் மற்றும் மார்க் ஸ்போரோவ்ஸ்கி, ஃபுளோய்ட் கிளிவ்லன்ட் மில்லர், தோமஸ் பிளாக், சில்வியா காலன் ஆகியோரை அம்பலப்படுத்தியமை அமெரிக்க அரசாங்கத்தின் வேலையாக இருந்தது. ட்ரொட்ஸ்கிச-விரோத முகவர்களின் ஜி.பி.யு. வலையமைப்பில் இருந்த உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கைதுகள், விசாரணைகள் மற்றும் சாட்சியங்களும் அமெரிக்கா முழுவதும் தலைப்புச் செய்திகளாக தடித்த எழுத்தில் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த முகவர்கள் அம்பலப்படுத்தப்பட்டதும், நான்காம் அகிலத்தினுள் அவர்கள் ஊடுருவியுள்ளமை குறித்து வெளியான முக்கியமான தகவல்களும், சோசலிசத் தொழிலாளர் கட்சியால் புறக்கணிக்கப்பட்டன. அதன் தலைமையகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள நியூ யோர்க் நகரில் பிரதிவாதிகளில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் கட்சி அதனை அலட்சியம் செய்தது.

ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஈடுபட்டதற்காக பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையால் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்ராலினிச முகவர்கள். மேல் இடமிருந்து வலமாக: மார்க் ஸ்போரோவ்ஸ்கி; சில்வியா காலன்; சோபோலேவிச்சியஸ் சகோதரர்களான ஜாக் மற்றும் ரோபர்ட்; தோமஸ் எல். பிளாக்; சில்வியா அகலோஃப்; ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்.

23. இந்த வாரம் தோழர்கள் நிகழ்த்தும் விரிவுரைகளை நான் முன்கூட்டியே விவரிக்கப் போவதில்லை. இருப்பினும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பது, ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றிய வரலாற்று விவரிப்பை மாற்றியமைத்தன என்பதே உண்மை. நான்காம் அகிலத்திற்கு எதிரான ஸ்ராலினிச சதி மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றிய அனைத்து கருத்தார்ந்த கற்கைகளும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை மற்றும் அதன் கண்டுபிடிப்புகளையும், வேர்கர்ஸ் லீக்கினதும் அனைத்துலகக் குழுவினதும் ஆதரவுடன் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் எதிராக 1979 இல் அலன் கெல்ஃபான்ட் முன்னெடுத்த வழக்கின் போது, அவை மறுக்க முடியாதவாறு உறுதிப்படுத்தப்பட்டதையும் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளும்.

24. இந்த கட்டத்தில், ஸ்ராலினிசத்தின் மிச்சசொச்சங்களும், பப்லோவாதிகளும் அதனுடன் தொடர்புடைய மத்தியதர வர்க்க தீவிரவாத அமைப்புகள், மற்றும் போலி-இடதுசாரிவாதத்தின் அறிவுசார் ஊழல் நிறைந்த கல்விமான் சமூகமும் மட்டுமே ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் ஊடுருவியிருந்த ஜி.பி.யு. முகவர்கள் தீர்க்கமான பங்கு வகித்தமைக்கான மிகப்பெரியளவிலான ஆதாரங்களை தொடர்ந்து அலட்சியம் செய்தும் நிராகரித்தும் மறுத்தும் வருகின்றன. ஒரு ஜி.பி.யு. உளவாளியாக ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளரான (சில்வியா பிராங்க்ளின், சில்வியா கால்ட்வெல் மற்றும் சில்வியா டாக்ஸி என்றும் அறியப்பட்ட) சில்வியா காலனின் வகிபாகம் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் ஐ பொறுத்தளவிலும் இதுவே உண்மை.

25. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ஜி.பி.யு. முகவராகவும், ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர், எஃப்.பி.ஐ. க்கு தகவல் வழங்குபவராகவும் ஜோசப் ஹான்சன் வகித்த பங்கு உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு புரட்சிகர சோசலிச அமைப்பின் உறுப்பினர் ஜி.பி.யு. உடனும் ஒரு முதலாளித்துவ அரசின் அரசியல் பொலிசாருடனும் இரகசிய சந்திப்புகளை நடத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நம்புபவர்களால் மட்டுமே இது மறுக்கப்படுகிறது; 'தண்டனையிலிருந்து விலக்களிப்புடன் இரகசியத் தகவல்களை வழங்கும் முறையின் கீழ்' நியூ யோர்க்கில் இருக்கும் ஒரு எஃப்.பி.ஐ. முகவரின் பெயரை தருமாறு ஹான்சன் 1940 செப்டம்பரில் கோரியமை அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை தெளிவாக குறிப்பிடாமல் போகலாம்; மற்றும் ஜி.பி.யு., எஃப்.பி.ஐ. ஆகிய இரண்டுடனும் தனது உறவுகள் பற்றி ஹான்சனின் ஏமாற்றுக்களும் அப்பட்டமான பொய்களும் குற்றத்திற்கான ஆதாரமாக இல்லை என்று நம்புபவர்களால் மட்டுமே இது மறுக்கப்படுகிறது.

ஜோசப் ஹன்சன் சுமார் 1940

26. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் முக்கியத்துவம், குறிப்பிட்ட நபர்களை அம்பலப்படுத்துவதைத் தாண்டி நீண்டதாகும். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் அரசியல் துப்பறியும் பணியில் ஒருபோதும் ஒரு எளிய பயிற்சியாக இருந்ததில்லை. அதன் ஆரம்ப கட்டங்களிலிருந்தே அனைத்துலகக் குழுவானது பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதை ஒரு பரந்த வரலாற்று மற்றும் சர்வதேச உள்ளடக்கத்தில் வைத்தது.

27. 1978 இல் அதன் முன்னோக்குத் தீர்மானத்தில் (1979 ஜூனில் திருத்தப்பட்டது), சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் பின்வருமாறு கூறியது:

ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று தொடர்ச்சியின் அடிப்படையில் புரட்சிகர காரியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான போராட்டமானது 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் குறித்து, நான்காம் அகிலத்தால் 1975 வசந்த காலத்தில் ஆறாவது உலக மாநாட்டுடன் தொடங்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத பலத்தையும் வீச்சையும் அடைந்துள்ளது.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பது, நான்காம் அகிலத்தாலும் அனைத்துலக் குழுவாலும், ஸ்ராலினிச எதிர்ப்புரட்சி மற்றும் பொய்மைப்படுத்தலின் வஞ்சகப் பிடியிலிருந்து போல்ஷிவிசத்தின் முழு வரலாற்றுத் தொடர்ச்சியையும் மீட்டெடுப்பதைத் தவிர    வேறொன்றையும் குறிக்கவில்லை. உலகரீதியான அக்டோபருக்கான போராட்டத்தின் அரசியல் உருவகமான ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராக ஸ்ராலினிசம் கூறிய அனைத்து பொய்கள், திரிபுபடுத்தல்கள் மற்றும் இழைத்த குற்றங்களுக்கும்; அக்டோபர் புரட்சியின் உண்மையான வரலாறு மற்றும் ட்ரொட்ஸ்கியின் வகிபாகம் குறித்து தொழிலாளர் தலைமுறைகளை குழப்பி, திசைதிருப்ப செய்த அனைத்து நேர்மையற்ற செயல்களுக்கும், ஒரு பெரும் அடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடியில் இருந்து ஸ்ராலினிசமும் ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் அனைத்து முகமைகளும் ஒருபோதும் மீள முடியாது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் செயல்படும் ஸ்ராலினிச மற்றும் ஏகாதிபத்திய முகவர்களின் பரந்த எந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் இடையூறுகளை அதன் விசாரணையின் மூலம் இடைவிடாமல் அம்பலப்படுத்தி, அனைத்துலகக் குழுவானது நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றையும் ஒளிரச் செய்துள்ளது.

28. பல தசாப்தங்களாக, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அதிகாரம், சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் சர்வதேச அளவிலும் அதன் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவதை அடக்குவதற்கு இரக்கமின்றி பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 1953 இல் ஸ்ராலினின் மரணம் அதிகாரத்துவ ஆட்சியின் நெருக்கடியுடன் ஒத்துப்போனதுடன் அதை துரிதப்படுத்தியது. பிப்ரவரி 1956 இல் நிகிதா குருஷ்சேவ் ஆற்றிய 'இரகசிய உரையில்' ஸ்ராலினின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அரை வருடத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர் புடாபெஸ்டில் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக ஹங்கேரிய தொழிலாளர்கள் எழுச்சி செய்தனர். ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், செக்கோஸ்லோவாக்கியாயிலும் போலந்திலும் வெகுஜன இயக்கங்களால் ஸ்ராலினிச ஆட்சிகள் அதிர்ந்தன.

29. அதிகாரத்துவத்தின் தேசிய பொருளாதார சுய நிர்வாக வேலைத்திட்டத்தின் திவால்நிலையுடன் மோதிக்கொண்ட இந்த புறநிலை நிகழ்வுகள், ஸ்ராலினிசத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான உறவை ஆழமாக மாற்றியது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் தொடக்கத்துடன், ட்ரொட்ஸ்கிச இயக்கமானது எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவங்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மாறியது.

30. ஆனால் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் நெருக்கடியில் இருந்தபோதிலும், கணிசமான அதிகாரத்தையும் அரசியல் கௌரவத்தையும் தக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பப்லோவாத போக்குகள், 1953 முதல் ஸ்ராலினிசக் கட்சிகளின் அரசியல் கூட்டாளிகளாகச் செயல்பட்டு, அவற்றின் அதிகாரத்துவ சுய-சீர்திருத்தம் சாத்தியமானது என்றும், அவற்றுக்கு புரட்சிகர ஆற்றல் இருப்பதாகவும் மாயைகளை ஊக்குவிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தன.

31. ஸ்ராலினிசத்தின் கொலைகார எதிர்ப்புரட்சிகரப் பாத்திரம் தொடர்பாக கவனத்தை குவித்த பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையின் தொடக்கமானது, அதிகாரத்துவங்களை நோக்கிய பப்லோவாத நோக்குநிலையை தகர்த்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்ராலினிசத்தினதும் ஏகாதிபத்திய அரசுகளினதும் போலீஸ் முகவர்கள் நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவுகின்றமை சம்பந்தமான பிரச்சினையை எழுப்புவதன் மூலம், அனைத்துலகக் குழுவானது அடிப்படை அரசு நலன்களை ஆழமாக அச்சுறுத்தியது.

32. தனது சொந்த அரசியல் பாதுகாப்பை அனைத்துலகக் குழு பேணுவதை ஹான்சன் கடுமையாகக் கண்டித்ததற்கு எதிராக கொடுத்த ஆரம்ப பதிலில், தொழிலாளர் புரட்சிக் கட்சி, பப்லோவாத அமைப்புகளுக்குள் முதலாளித்துவ அரசு வலுவாக ஊடுருவுவதைப் பற்றி கவனம் செலுத்தியது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதியில், ஹான்சனும் சோசலிசத் தொழிலாளர் கட்சியும் உடந்தையாக இருந்தமைக்கான ஆதாரங்களையும் சேகரித்தது.

33. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதன் வளர்ச்சி, ஏகாதிபத்தியத்தாலும் அதன் அரசியல் நிறுவனங்களாலும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக அடையாம் காணப்பட்டது. 1976 செப்டம்பரில் இன்டர்கான்டினென்டல் பிரஸ்ஸில் வெளியிடப்பட்ட 'தீர்ப்பு' என்ற ஆவணத்தின் மூலம் பிரதிபலித்த அவர்கள், ஜி.பி.யு.வை ஹான்சன் திட்டமிட்டு மூடிமறைத்தமை சம்பந்தமான கண்டுபிடிப்புகளை 'வெட்கமற்ற ஜோடிப்பு' என்று கண்டனம் செய்தனர். உலகில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு பப்லோவாத அமைப்பின் முன்னணி பிரதிநிதிகளும் இந்த ஆவணத்தில் தங்கள் கையொப்பங்களை வைத்தனர். பின்னர், கெல்ஃபான்ட் வழக்கின் போது நிறுவப்பட்டது போல், கையொப்பமிட்டவர்களில் எவரும் தாம் கண்டிக்கும் ஆவணங்களை உண்மையில் படிக்கவில்லை.

34. 'தீர்ப்பு' வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து 14 ஜனவரி 1977 அன்று ஹீலியையும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையையும் கண்டனம் செய்வதற்காக சர்வதேச பப்லோவாத குழுக்களின் தலைவர்கள் இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அனைத்துலகக் குழு, 'வெட்கக்கேடான மேடை' என்று மறக்கமுடியாதவாறும் பொருத்தமாகவும் விவரித்த அந்த மேடையில், ஏர்னெஸ்ட் மண்டேல், ரிம் வொல்ஃபோர்த், (அனைத்துலகக் குழுவால் ஹான்சனின் ஜி.பி.யு. கூட்டாளி என குற்றம் சாட்டப்பட்ட) ஜோர்ஜ் நோவாக், பியர் லம்பேர் மற்றும் பலர் அடங்குவர். அந்தக் கூட்டத்திற்கு, முற்றிலும் கொள்கையற்ற மத்தியதர வர்க்க தீவிரவாதியான (இறுதியில் ட்ரொட்ஸ்கிசத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்த) தாரிக் அலி தலைமை தாங்கினார்.

ஜனவரி 14, 1977 அன்று லண்டனில் நடைபெற்ற பப்லோவாதிகளின் "வெட்கக்கேடான மேடை" கூட்டத்தில் பேச ஜெர்ரி ஹீலி கையை உயர்த்துகிறார்.

35. சுமார் 1,500 பப்லோவாதிகள் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில், ஜெர்ரி ஹீலியுடன் தொழிலாளர் புரட்சிகரக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களுக்கு மேல் இருக்கவில்லை. மண்டேல், வொல்ஃபோர்த், நோவாக், லம்பேர் ஆகியோர் அவர் மீது கடுமையான  அவமானங்களை வீசியபோது, ஜெர்ரி ஹீலி பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பேச்சாளர்கள் அனைவரும் பேசிக் களைத்த பின்னர், ஹீலி தனது இருக்கையிலிருந்து எழுந்து கையை உயர்த்தி பேசுவதற்கான தனது விருப்பத்தைக் கூறினார். ஜனநாயக நடைமுறைகளுக்கு அல்லது குறைந்தபட்சம் பாரம்பரிய பிரிட்டிஷ் 'நியாயமான நடத்தையை' கடைப்பிடித்த பார்வையாளர்களிடமிருந்து கணிசமான எதிர்ப்புகள் எழுந்த போதிலும், தாரிக் அலி, ஹீலியைப் பேச அனுமதிக்க மறுத்துவிட்டார். ஹீலியைக் கண்டிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் இருந்தது. ஆனால் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்வதற்கு சர்வதேச ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்ற அனைத்துலகக் குழுவின் அழைப்பை பகிரங்கமாக மீண்டும் வலியுறுத்துவதற்கு ஹீலிக்கு ஒரு நிமிடம் கூட ஒதுக்கப்படவில்லை. கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.


36. அங்கே ஹீலியின் வருகைக்கு தனது சொந்த பிரதிபலிப்ப விவரித்த வொல்ஃபோர்த்தின் சுயசரிதையிலிருந்து மேற்கோள் காட்டுவது பெறுமதியானது:

வெளியே பார்க்க நான் அமைதியாகத் தெரிந்தாலும், ஆழமாகப் பார்க்கும்போது, கட்டுப்படுத்த முடியாத ஒரு பயம் என்னைப் பற்றிக் கொண்டது. நான் சொல்லப் போவதை ஆதரிக்கும் ஆயிரம் மக்களால் சூழப்பட்டிருந்த, ஒரு டஜன் ஆதரவாளர்களுடன் மட்டுமே அங்கு வந்திருந்த இந்த மனிதரால், இன்னும் எனக்குள் அத்தகைய ஒரு பிரதிபலிப்பை தூண்டுவது ஆச்சரியமாக இருந்தது. ஹீலியைப் பற்றி வேறு என்ன கூறப்பட்டாலும், அந்த மாலைக்குப் பின்னர், அவரது தைரியத்தையோ அல்லது தலையிடுவதற்கான திறமையையோ பற்றி யாருமே கேள்வியெழுப்பக் கூடாது.1

37. விசாரணையின் அந்தக் கட்டத்தில், முதலில் 1947 இல் லூயிஸ் புடென்ஸால் ஜி.பி.யு. முகவராக அடையாளம் காணப்பட்டு, பின்னர் 1960 இல், இரண்டு சோபோலேவிசியஸ் சகோதரர்களில் ஒருவரான ஜி.பி.யு. முகவர் ரோபர்ட் சோப்லன் மீதான விசாரணையில் குற்றஞ்சாட்டப்படாத இணை-சதிகாரராக பட்டியலிடப்பட்டிருந்த சில்வியா கால்ட்வெல்-காலனை அனைத்துலக் குழு இன்னும் கண்டுபிடித்திருக்கவில்லை. இயற்பெயர் காலன், முன்பு சால்மன்ட் பிராங்க்ளினை மணந்தவரான கால்ட்வெல், 1977 மே மாதமே இல்லினோயின் வீட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு நேர்காணல் செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அவர் பிராங்க்ளினை விவாகரத்து செய்து, மறுமணம் செய்து கொண்டு, சில்வியா டாக்ஸி என்று அழைக்கப்பட்டார்.

38. மேலும், 1977 ஜூலையின் பின்னரே, அனைத்துலகக் குழுவுக்கு, தகவல் சுதந்திரச் சட்ட கோரிக்கையின் அடிப்படையில், பொதுமக்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிராத ஏராளமான ஆவணங்களைப் பெற்றது. அவை ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர் ஹன்சன் எஃப்.பி.ஐ. உடன் மிகவும் விரிவான தொடர்புகளைப் பராமரித்திருந்தார் என்பதை வெளிப்படுத்தின. அதில் 'தண்டனையின்றி இரகசியத் தகவல்களை வழங்கக்கூடியவாறு' ஒரு 'முகவர்' தேவை என்ற ஹன்சனின் மேற்கூறிய கோரிக்கையை பற்றிய குறிப்பிடும் கடிதங்களும் அடங்கும்.

39. 1977 வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் உண்மைத் தகவல்களின் அடிப்படையிலேயே, ஹான்சன் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் ஜி.பி.யு.வின் முகவராகவும் எஃப்.பி.ஐ.க்கு தகவல் கொடுப்பவராகவும் செயல்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அனைத்துலகக் குழு முடிவு செய்தது. 29 ஜூலை 1977 திகதியிட்ட ஒரு அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அறிவித்ததாவது:

சில்வியா பிராங்க்ளின், ஃபுளோய்ட் கிளிவ்லன்ட் மில்லர் மற்றும் மார்க் ஸ்போரோவ்ஸ்கி போன்ற ஸ்ராலினிச முகவர்களை மூடிமறைத்ததன் மூலம், ஜோசப் ஹான்சன் ஜி.பி.யு.வின் கூட்டாளி என்பதை அனைத்துலகக் குழு நீண்ட காலத்திற்கு முன்னரே நிரூபித்துள்ளது.

அனைத்துலகக் குழு இப்போது, அவர் எஃப்.பி.ஐ. உடன் இரகசியத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் என்பதற்கும், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அந்தரங்க ஆவணங்களை அதன் முகவர்களுக்கு வழங்கியிருதந்தார் என்பதற்கும் ஆதாரங்களை வழங்குகிறது.

ஜோசப் ஹான்சன் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் அல்ல, ஒருபோதும் அவர் அப்படி இருந்ததில்லை என்பதை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும், சர்வதேச தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர் பார்வையாளர்களுக்கும் முன்பாக அனைத்துலகக் குழு நிரூபித்துள்ளது.

40. சோசலிசத் தொழிலாளர் கட்சியில், தான் இருந்த ஆண்டுகள் குறித்து தனக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாக கூறிக்கொண்ட அதேவேளை, ஜேம்ஸ் பி. கனன் மீதான அவமதிப்புகளையும் வெளிப்பாடுத்திய சில்வியா டொக்ஸியுடனான நேர்காணலுக்கு பிரதிபலித்த ஹன்சன், பொய்கள், கட்டுக்கதைகள் மற்றும் தவிர்த்துக்கொள்ளும் கொள்கையைத் தொடர்ந்தார். அனைத்துலகக் குழுவானது 'தொழிலாளர் புரட்சிக் கட்சி இப்போது எதிர்கொள்ளும் கொடிய விளைவுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது' என்றும் எச்சரித்த அவர், 'ஹீலிவாதிகள் தொழிலாளர் இயக்கத்தின் பிற பிரிவுகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவதில் மிகவும் திறமையானவர்கள்...' என்றும் விசமத்தனமாக கூறினார்.

41. ஆனால் நடந்த ஒரே வன்முறை வேர்க்கர்ஸ் லீக்கிற்கு எதிராக குறிவைக்கப்பட்டிருந்தது. 16 அக்டோபர் 1977 அன்று, வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு உறுப்பினரான ரொம் ஹீனஹன், ஒரு இளம் சோசலிச அமைப்பின் சமூக நிகழ்வை மேற்பார்வையிடும் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த அரசியல் படுகொலையை உலகில் எந்தவொரு பப்லோவாத அமைப்பும் கண்டிக்கவில்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக இளைஞர் குழுவில் டொம் ஹெனஹன் பேசுகிறார், 1975

42. COINTELPRO திட்டத்தின் போது முகவர்கள் ஊடுருவியது தொடர்பாக, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் வழக்கை ஆதரித்து ஒரு அமிகஸ் கியூரி ('நீதிமன்றத்தின் நண்பர்') மேல்முறையீட்டு வழக்கு ஏட்டைத் தாக்கல் செய்தமைக்காக அலன் கெல்ஃபான்டை வெளியேற்றிய சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு வாரத்தின் பின்னர், 18 ஜனவரி 1979 அன்று ஹான்சன் திடீரென இறந்தார். கெல்ஃபான்டின் ஆவணம், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் அரசாங்கத்திற்கு தகவல் கொடுப்பவர்களை அடையாளம் காண, அமெரிக்க சட்டமா அதிபரை தலைமை நீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டும் என்று வாதிட்டது. கெல்ஃபான்டின் வழக்கு ஏடு கூறியதாவது:

இந்த தகவல் கொடுப்போர், நிச்சயமாக கட்சியைக் கட்டியெழுப்ப உதவுவதற்காக சோசலிசத் தொழிலாளர் கட்சியில் இருக்கவில்லை. அவர்களின் இறுதி நோக்கம் அதை அழிப்பதாகும். இந்த தகவல் கொடுப்போரினால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான 'இழிந்த தந்திரங்கள்', கன்னம் வைத்தல் மற்றும் திருட்டுகளும், மற்ற சமீபத்திய வழக்குகளைப் போலவே இந்த வழக்கிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தகவல் கொடுப்போர் வகித்த தீய பங்கை பெருமளவில் உறுதிப்படுத்துகின்றன.

43. கெல்ஃபான்டின் வழக்கு ஏடு சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைமைத்துவத்தால் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. அதன் சொந்த வழக்கறிஞர்கள், முகவர்களை அம்பலப்படுத்த நிர்ப்பந்திக்கும் எந்த நோக்கமும் இல்லாமல், அதன் வழக்கை அக்கறையற்ற முறையில் நடத்திய அதேவேளை, கெல்ஃபான்ட், அரசாங்கம் அதன் முகவர்களை சோசலிசத் தொழிலாளர் கட்சியிலிருந்து அடையாளம் கண்டு அகற்ற நிர்ப்பந்திப்பதில் முற்றிலும் தீவிரமாக இருந்தார். இது சோசலிசத் தொழிலாளர் கட்சி தலைமைத்துவத்தின் உறுப்பினர்கள் அம்பலப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும். கெல்ஃபான்டை நீக்குவதை இனி தாமதப்படுத்த முடியாது என்று சோசலிசத் தொழிலாளர் கட்சி அரசியல் குழு முடிவு செய்தது. கெல்ஃபான்டை வெளியேற்றும் தீர்மானத்தை சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசிய செயலாளர் ஜாக் பார்ன்ஸ் அரசியல் குழுவில் முன்வைத்தார்.

44. சரியாக ஆறு மாதங்களுக்குப் பின்னர், 18 ஜூலை 1979 அன்று, அலன் கெல்ஃபான்ட், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைமையில் செயல்படும் அமெரிக்க அரசாங்க முகவர்களாலேயே தான் வெளியேற்றப்பட்டதாகக் கூறி, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு மத்திய அரசு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். கெல்ஃபான்ட் வழக்கின் வளர்ச்சி அடுத்தடுத்த விரிவுரைகளில் விரிவாக கலந்துரையாடப்படும்.

45. ஆனால் இரண்டு புள்ளிகள் வலியுறுத்தப்பட வேண்டும். முதலாவதாக, கெல்ஃபான்டை இழிவுபடுத்தும் அதன் முயற்சிகளில், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக யார் இருக்க முடியும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க உதவுவதே வழக்கின் நோக்கம் என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து கூறினர். உண்மையில், இந்த வழக்கின் தெளிவாகக் கூறப்பட்ட நோக்கம், அரசாங்கம் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமைக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதும், பின்னர் தலைமையை அம்பலப்படுத்த முயற்சிக்கும் எவரையும் கட்சி எந்திரத்தின் மீதான அதன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வெளியேற்றுவதுமாகும்.

46. ​மாவட்ட நீதிமன்ற நீதிபதி மரியானா ஃபேய்ல்சர், வழக்கை தள்ளுபடி செய்ய சோசலிசத் தொழிலாளர் கட்சி விடுத்த கோரிக்கையை மறுத்ததில், கெல்ஃபான்டின் வழக்கால் வலியுறுத்தப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 'அரசாங்கத்தின் கையாளுதலும், வாதியின் அரசியல் கட்சியை கையகப்படுத்துதலும், அதன் ஆதரவாளர்களின் ஒன்றுகூடும் உரிமைகளில் கடுமையாக தலையிடுவதாக இருப்பதோடு அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதுமாகும் என்பது தெளிவாகிறது,' என்று அவர் எழுதினார்.

47. இரண்டாவதாக, சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைவர்கள் கூறிக்கொண்டபடி, அவர்கள் உண்மையான சோசலிஸ்டுகளாக இருந்திருந்தால், கெல்ஃபான்டின் வழக்கை எதிர்க்க எந்த காரணமும் இருந்திருக்காது. சோசலிசத் தொழிலாளர் கட்சியை அரசாங்கம் கையகப்படுத்தியதாக கெல்ஃபான்டின் கூற்றுக்களை மறுப்பதற்கு திறந்த நீதிமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை அவர்கள் வரவேற்றிருப்பார்கள். ஆனால் இந்த வழக்கு மறுக்க முடியாத உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அதன் தொடர்ச்சி கெல்ஃபான்டின் குற்றச்சாட்டுகளை மட்டுமன்றி, முழு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையையும் நிரூபிக்க வழிவகுக்கும் என்பதையும் பார்ன்ஸும் அவரது கூட்டாளிகளும் நன்கு அறிந்திருந்தனர்.

48. இந்த வழக்கு விசாரணை வெளிவரத் தொடங்கியபோது, ​​சோசலிசத் தொழிலாளர் கட்சியின் கிட்டத்தட்ட மத்திய தலைமை முழுவதுமே மினசோட்டாவின் நோர்த்ஃபீல்டில் உள்ள ஒரு சிறிய பழமைவாத நிறுவனமான கார்ல்டன் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் என்பதை அனைத்துலகக் குழு கண்டுபிடித்தது. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசிய செயலாளர் ஜக் பார்ன்ஸ் தொடங்கி இந்த அனைத்து உறுப்பினர்களும், அக்கல்லூரித் தலைவர் ரிச்சார்ட் கில்மன் உடன் 1979 இல் நடத்திய நேர்காணலில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறுவதெனில் பெருந்தொகை சி.ஐ.ஏ. உறுப்பினர்கள் ஊடுருவியிருந்த Fair Play for Cuba Committee மூலம் சோசலிசத் தொழிலாளர் கட்சியல் 'இணைந்தவர்கள்'.

49. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த கெல்ஃபான்ட் வழக்கின் போக்கை நான் இங்கு சுருக்கமாகக் கூற முயற்சிக்க மாட்டேன். இது இந்த வார இறுதியில் பல விரிவுரைகளின் உள்ளடக்கமாக இருக்கும். எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணையின் முடிவு, சத்தியப்பிரமாண வாக்குமூலங்கள், சட்டபூர்வமாக சரிபார்க்கப்பட்ட ஆவணங்களின் வடிவில், அனைத்துலகக் குழுவால் வெளிப்படுத்தப்பட்ட சான்றுகளையும் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக உறுதிப்படுத்தியது என்பதை நான் வலியுறுத்த வேண்டும். உண்மையில், அலன் கெல்ஃபான்ட் மற்றும் அவரது முதன்மை வழக்கறிஞர் ஜோன் பேர்ட்டன் ஆகியோரால் பெறப்பட்ட முக்கியமான மேலதிக தகவல்கள், ஹான்சன் எஃப்.பி.ஐ. மற்றும் ஜி.பி.யு. உடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து ஹான்சன், நோவாக் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைமையால் கூறப்பட்ட பொய்களை உறுதியாக அம்பலப்படுத்தின. அலன் நடத்திய போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவமும் வீரத் தன்மையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

1983 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அலன் கெல்ஃபான்ட்டுடன், கொயோகானில் ட்ரொட்ஸ்கியின் காவலரின் தலைவரான ஹரோல்ட் ரொபின்ஸ்.

50. இந்தப் பள்ளியைத் தயாரிக்கும் போது, ​​விசாரணையில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றவர்கள் கூட, கெல்ஃபான்ட் வழக்கு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் மகத்தான அளவைக் கண்டு ஓரளவு ஆச்சரியப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த விசாரணை இடைவிடாத எதிர்ப்பு, அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைக்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது.

51. விசாரணையைத் தொடங்குவதற்கான அரசியல் உந்துதல் முதலில் ஜெர்ரி ஹீலியிடமிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1930களில் மாஸ்கோ விசாரணைகள் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான ஜி.பி.யு.வின் பயங்கரவாத பிரச்சாரத்தின் போது, ஸ்ராலினிச இயக்கத்திலிருந்து முறித்துக் கொண்ட ஹீலி, நான்காம் அகிலத்தின் பாதுகாப்பு குறித்த ஹான்சனின் அலட்சிய அணுகுமுறையின் கேடுவிளைவிக்கும் தாக்கங்களை புரிந்துகொள்ளும் நிலையில் இருந்தார்.

52. 'சித்தப்பிரமை' பிடித்தவர் என்ற குற்றச்சாட்டை ஹீலி மீது ஹான்சன் சுமத்தியபோது, அவர் அதை வெறுமனே ஒரு தனிப்பட்ட அவமதிப்பாகக் கருதவில்லை. மாறாக, நான்காம் அகிலத்திற்குள் முகவர்கள் ஊடுருவுவதால் ஏற்படும் ஆபத்தை ஹான்சன் இழிவாக நிராகரித்தமை, மார்க் ஸ்போரோவ்ஸ்கி மற்றும் ரமோன் மெர்காடரின் உதாரணங்களை உடனடியாக நினைவுபடுத்திக்கொள்ள ஹீலியை இட்டுச் சென்றது. மேலும், கொயோகானில் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை உண்மையில் நேரில் கண்ட ஹான்சன், புரட்சிகர இயக்கத்தில் விழிப்புணர்வின் அவசியத்தை எவ்வாறு நிராகரிக்க முடியும் என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

53. ஜெர்ரி ஹீலி நிச்சயமாக ஒரு 'கடினமான மனிதர்'. அதுமட்டுமன்றி, அவர் 1930களின் கொடூரமான நிகழ்வுகள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் அரசியல் கல்வி பெற்ற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர். ஸ்ராலினிசத்திலிருந்து அவரை முறித்துக் கொள்ள வழிவகுத்த படைப்பு மக்ஸ் சாக்ட்மனின் 'மாஸ்கோ விசாரணைக்குப் பின்னால்' என்ற கையேடு ஆகும். 2 நவம்பர் 1937 அன்று வெளியிடப்பட்ட 'தொழிலாளர் அமைப்புகளுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி வெளியிட்ட எச்சரிக்கையை ஹீலி ஒருபோதும் மறக்கவில்லை:

தொழிலாளர் இயக்கம் அதன் சொந்த அணிகளில் ஸ்ராலினின் குழு மற்றும் அதன் சர்வதேச முகவர்கள் போன்ற கொடூரமான, ஆபத்தான, சக்திவாய்ந்த மற்றும் நேர்மையற்ற எதிரியை இதற்கு முன் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அலட்சியம் என்பது காட்டிக்கொடுப்பதற்குச் சமமாகும். அரட்டை அடிப்பவர்களும், மேம்போக்காளர்களும் பரிதாபகரமான கோபத்துடன் திருப்தி அடையலாம், ஆனால் தீவிர புரட்சியாளர்கள் திருப்தியடைய முடியாது. ஸ்ராலினிஸ்டுகளின் சூட்சுமம், சதிகள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கவும், காத்திருக்கும் ஆபத்து குறித்து தொழிலாளர் அமைப்புகளுக்கு எச்சரிக்கவும், மாஸ்கோ குண்டர்களை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளை விரிவுபடுத்தவும் சிறப்பு ஆணையங்களை உருவாக்குவது அவசரமானதாகும்.

54. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தை ஹீலி முன்கொணர்ந்தமை, ஹான்சன் எழுதிய 'ஹீலியின் இயங்கியலின் இரகசியம்' என்ற புத்தகத்திற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அளித்த பதிலிலும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதை முன்னெடுப்பதற்கான தீர்மானத்திலும் ஜி.பி.யு. ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொன்றது என்ற புத்தகத்தின் வரைவிலும் வெளிப்பாட்டைக் கண்டது.

ஜெர்ரி ஹீலி, 1964

55. ஹீலியின் தலையீடு வேர்க்கர்ஸ் லீக்கின் இளம் காரியாளர்களிடையே ஒரு சக்திவாய்ந்த எதிர்வினையைத் தூண்டியது. இதை எவ்வாறு விளக்க முடியும்? முதலாவதாக, பப்லோயிசத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்தின் மூலம் இந்தக் காரியாளர் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்கு ஈர்க்கப்பட்டனர். 1953 இல் கனனின் பகிரங்கக் கடிதமும், 1961-1963 க்கு இடையில் சோசலிச தொழிலாளர் கழகத்தால் ட்ரொட்ஸ்கிசத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முக்கியமான ஆவணங்களும், கட்சி காரியாளர்களின் அரசியல் கண்ணோட்டத்தை வடிவமைத்தன.

56. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சி மீது அனைத்துலகக் குழு வழங்கிய முக்கியத்துவம், வேர்க்கர்ஸ் லீக்கின் காரியாளர்களுக்குள் வரலாற்றுப் பிரச்சினைகள் குறித்த ஒரு தீவிரமான அணுகுமுறையை ஏற்படுத்தியது. நமது தற்போதைய பணிகளுக்கும் நான்காம் அகிலத்தின் முந்தைய அனுபவத்திற்கும், அதற்கு அப்பால், அக்டோபர் புரட்சி, கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகளுக்கும், இடது எதிர்ப்பின் ஸ்தாபகத்திற்கும் அதன் அடுத்தடுத்த போராட்டங்களுக்கும் வழிவகுத்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு இடையேயான ஆழமான அரசியல் தொடர்பு பற்றிய சிந்தனை வேர்க்கர்ஸ் லீக் காரியாளர்களின் அரசியல் நனவில் இருந்தது.

57. தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்தப் போராட்டத்தில் இருந்து பெருமளவில் பின்வாங்கிக் கொண்டிருந்தபோதும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை முன்னெடுப்பதில் வேர்க்கஸ் லீக் கொண்டிருந்த கடுமையான உறுதிப்பாட்டை இது விளக்குகிறது என்று நான் நம்புகிறேன்.

58. அனைத்துலகக் குழுவின் காரியாளர்களின் கல்விக்கு அடிப்படையாக அமைந்த வரலாற்று அனுபவம், அரசியல் கொள்கைகள் மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்ட அடித்தளங்கள் மீதான அக்கறையும், சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள்ளும் பப்லோவாத ஐக்கிய செயலகத்திற்குள்ளும் (குறிப்பாக ஹான்சனின் நேரடி செல்வாக்கின் கீழ் மிக நெருக்கமாக இருந்த பிரிவுகள், பிரிட்டனில் உள்ள சர்வதேச மார்க்சிஸ்ட் குழு மற்றும் ஆஸ்திரேலியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகம் போன்றவற்றுக்குள்) காணப்பட்ட அப்பட்டமான நடைமுறைவாதம், சந்தர்ப்பவாதம் மற்றும் வெறுப்புணர்வு சூழலுக்கும் நேர் எதிரானதாகும்.

59. இந்த அமைப்புகளின் தலைவர்கள் அனைத்துலகக் குழுவால் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்கள் எவ்வளவிற்கு கண்டனத்திற்குரியதாக இருந்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பவில்லை. 29 ஜூலை 1977 அன்று அனைத்துலகக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டது போல், 'அவர்கள் அனைத்துலகக் குழுவின் மீதான அதிகளவிலான அரசியல் வெறுப்பில் மூழ்கியிருப்பதால், ஹான்சனுடன் நரகத்திற்கும் சென்று வருவார்கள்.' தாரிக் அலி போன்ற பரம சந்தர்ப்பவாதிகளிடமும், சுய-விளம்பரம் தேடுபவர்களிடமும் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. பப்லோவாத குழுக்களுக்குள் மறைந்து வசதியாக செயல்படும் பல பொலிஸ் முகவர்களின் இயல்பைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை.

60. ஆனால் அதன் அரசியல் ஊழல் மட்டுமே ஹான்சனை சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைமையில் தக்கவைத்துக் கொள்ளவில்லை. அதன் உறுப்பினர்களில் பெரும்பகுதியைக் கொண்ட மத்தியதர வர்க்க சக்திகள் ஹன்சனை ஆதரித்தமைக்கான காரணம் நம்பிக்கை அல்ல, மாறாக, அவர்கள் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையால் எழுப்பப்பட்ட வரலாற்று அனுபவங்கள் மற்றும் அரசியல் பிரச்சினைகளிலும் அக்கறையற்றவர்களாகவும், அலட்சியமாகவும் இருந்தனர்.

61. எதிர்ப்பு அரசியலின் குறுகிய கால நோக்கங்களில் மூழ்கியிருந்த, அதனால் முதலாளித்துவ அரசை தூக்கியெறிவதற்குப் பதிலாக அதனை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டு அழுத்தத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியதால், பப்லோவாத உறுப்பினர்கள் தமது அமைப்பில் அரசு ஊடுருவுவது குறித்து கவலைப்பட குறிப்பாக எந்த காரணத்தையும் காணவில்லை. ஜி.பி.யு. மற்றும் எஃப்.பி.ஐ. உடனான ஹான்சனின் உறவுகளை அம்பலப்படுத்தும் அறிக்கைகளை வேர்க்கர்ஸ் லீக்கின் உறுப்பினர்கள் விநியோகித்தபோது சோசலிசத் தொழிலாளர் கட்சியின் சாமானிய உறுப்பினர்கள் அதை நிராகரித்து அளித்த பொதுவான பதில்கள், 'அதனால் என்ன?', 'யார் கவலைப்படுகிறார்கள்?' என்பவையே ஆகும். சோசலிசத் தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு வகையான அரசியல் குறிக்கோளாக மாறிய மற்றொரு சொற்றொடர் 'முகவர்கள் நன்றாக வேலை செய்கிறார்கள்' என்பதாகும்.

62. கட்சியின் முன்னணி உறுப்பினரான ரோமன் மாலினோவ்ஸ்கி, ஜாரிச இரகசியப் போலீஸான ஓக்ரானாவின் முகவராக இருந்தார் என்ற அம்பலப்படுத்தலில் இருந்து போல்ஷிவிக்குகள் கற்றுக்கொண்ட பாடங்களை ஹான்சன் திரித்துக் கூறியதிலிருந்து இந்தப் பிந்தைய அரசியல் ஞானம் உருவானது.

ரோமன் மாலினோவ்ஸ்கி

63. இந்த முகவரின் செயல்பாடுகள் கட்சியின் பணிகளில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் ஓக்ரானாவிற்கு வழங்கிய தகவல்கள் எண்ணற்ற கைதுகளுக்கும் மரணங்களுக்கும் வழிவகுத்தன. மாலினோவ்ஸ்கி வழக்கை மதிப்பாய்வு செய்ததில், புரட்சிக்கு முன்னர் ரஷ்ய நாடாளுமன்றத்தில் முன்னணி கட்சி செய்தித் தொடர்பாளராக இருந்த இந்த முகவர், போல்ஷிவிக்குகளின் நிலைப்பாடுகளை விளம்பரப்படுத்தும் உரைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என்று போல்ஷிவிக்குகள் பின்னர் குறிப்பிட்டனர். ஒரு தகவல் அளிப்பவராக தனது நயவஞ்சக பணிகளை நிறைவேற்றுவதற்காக, மாலினோவ்ஸ்கி கட்சியின் நலன்களுக்கு சேவை செய்யும் சில அரசியல் செயல்பாடுகளை விருப்பமின்றி செய்தார்

64. இருப்பினும், இந்த அவதானிப்பு புரட்சிகர இயக்கத்திற்குள் முகவர்கள் 'நல்ல வேலை' செய்யக்கூடும் என்ற தவறான சாக்குப்போக்கின் கீழ், அவர்களின் பங்கை அங்கீகரிப்பதாக இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆட்சிக்கு வந்ததும், போல்ஷிவிக் ஆட்சி, எதிர் புரட்சி உளவாளிகளின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக செக்காவை (Cheka) ஸ்தாபித்தது. புரட்சிகர நோக்கத்திற்காக அவர்கள் தற்செயலாக செய்யும் பங்களிப்புகளுக்காக உளவாளிகளுக்கு வெகுமதி அளிக்கப்படவில்லை. மாலினோவ்ஸ்கியின் தலைவிதியைப் பற்றி ஹரோல்ட் ரொபின்ஸ் வறண்ட முறையில் கருத்து தெரிவித்தது போல்: 'போல்ஷிவிக்குகள் அவரைப் பிடித்தபோது, ​​அவர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனர்.'

65. மாலினோவ்ஸ்கி விவகாரத்தை ஹன்சன் திரித்துக் கூறியமை, சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அரசியல் மெத்தனத்தை விதைக்கவும், முகவர்கள் நல்ல வேலை மற்றும் கெட்ட வேலை இரண்டையும் செய்கிறார்கள் என்ற கருத்தை ஊக்குவிக்கவும், அதாவது நல்ல வேலை, கெட்ட வேலையை விட முக்கியமானது என்பதை நிரூபிக்கவும் வடிவமைக்கப்பட்டது. உண்மையான புரட்சியாளர்கள், முகவர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து அத்தகைய சமநிலையான, 50-50 சதவீத அணுகுமுறையைப் பேணுவதில்லை. தனது நினைவுக் குறிப்புகளில், விக்டர் சேர்ஜ், பொலிஸ் முகவரை ஒரு 'ஆத்திரமூட்டும் நபர்', அவர் 'ஒரு தகவல் கொடுப்பவர் மட்டுமன்றி; அவர் தவறாக வழிநடாத்துபவர், அழிவிற்கான மூலோபாயவாதி' என்று விவரித்தார்.

66. சோசலிசத் தொழிலாளர் கட்சி தலைமையால் முன்வைக்கப்பட்ட மற்றொரு வாதமும் இருந்தது. அதை அறியாமையும் மெத்தனமுமான சாமானிய உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். ஏப்ரல் 7, 1978 அன்று அலன் கெல்ஃபான்டிற்கு எழுதிய கடிதத்தில், சோசலிசத் தொழிலாளர் கட்சி தலைவர் லாரி சீகிள் எழுதியதாவது: 'கட்சி அதன் அணிகளில் முகவர்-வேட்டையை அனுமதிக்க முடியாது மற்றும் அனுமதிக்காது.' 'முகவர்-வேட்டை' என்பது 'கம்யூனிச-வேட்டை' அல்லது 'யூத-வேட்டை' போன்ற இந்த கடுமையான வார்த்தையின் பயன்பாடு போல் காவல்துறை மற்றும் இரகசிய சேவைகளுடன் தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் இருந்தாலும் கூட ஒரு கட்சி உறுப்பினரின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த விதியின் நடைமுறைப் பயன்பாடு, பொலிஸ் முகவர்களுக்கு அவர்கள் அம்பலப்படுத்தப்படாமல் இருப்பதற்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்தது.

67. அரை நூற்றாண்டு காலத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை தொடர்பாக அரசியல் போக்குகள், அவற்றின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட அணுகுமுறைகள், அவற்றின் அரசியல் நோக்குநிலையைப் பற்றிய மிகவும் துல்லியமான மற்றும் தவறாத அடையாளமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எப்போதும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் மீதான கண்டனம், ட்ரொட்ஸ்கிசத்தை மறுப்பதுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

68. ஒரு தசாப்த காலமாக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்களான கிளிஃவ் சுலோட்டரும் மைக்கல் பண்டாவும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதன் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். விசாரணையைத் தாக்கி அவதூறு செய்தவர்களைக் கண்டித்து அவர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதினர். ஆனால் 1985 கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் வெடித்த நெருக்கடியின் மத்தியிலும், அது அனைத்துலகக் குழுவுடன் பிளவுக்குத் தயாரித்த போதும், சுலோட்டரும் பண்டாவும் தாம் முன்பு எழுதிய அனைத்தையும் மறந்து, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் மீதான கசப்பான கண்டனங்களை வெளியிட்டனர். ஹான்சனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட பண்டா, விசாரணையை 'ஒரு வெறித்தனமான பழிவாங்கல், துல்லியமாகச் சொன்னால், ஹீலியின் சித்தப்பிரமை மூளைக்கோளாறையும், அதேபோல் அவரது தத்துவார்த்த-விரோத அனுபவவாதத்தையும் திருப்திப்படுத்த மேற்கொள்ளும் ஒரு அவநம்பிக்கையான தடயவியல் திசைதிருப்பல்' என்று விவரித்தார். இந்த வெறித்தனமான வசைபாடலை உருவாக்கிய சில வாரங்களுக்குள், பண்டா ட்ரொட்ஸ்கியைக் கண்டித்து ஜோசப் ஸ்ராலினுக்கு தனது அபாரமான அபிமானத்தை அறிவித்தார்.

கிளிஃவ் சுலோட்டர்

69. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்த பண்டாவின் கண்டனத்தை சுலோட்டர் ஆதரித்ததோடு, அதன் பணி ஸ்ராலினிசம் மற்றும் பப்லோயிசத்திற்கு எதிரான தத்துவார்த்த போராட்டத்திற்கு மாற்றாக இருந்ததாக சேர்த்துக் கூறினார். முரண்பாட்டின் ஒரு அங்கமும் அடங்கிய இந்தக் கூற்றின் அபத்தம் என்னவென்றால், பண்டாவும் சுலோட்டரும் ட்ரொட்ஸ்கிசத்தை நனவுடன் நிராகரித்த நிலையிலேயே இதைக் கூறினர். பண்டா ஸ்ராலினிசத்தின் பாதுகாவலராகவும் சியோனிசத்திற்கு வக்காலத்து வாங்குபவராகவும் சீரழிந்தபோது, சுலோட்டர் வலதுசாரி அரசியலை நோக்கிய தனது நீண்ட பயணத்தைத் தொடங்கினார். இது கட்சி பற்றிய லெனினிசக் கருத்தை நிராகரிப்பதற்கும் குட்டி-முதலாளித்துவ அராஜகவாத மனிதநேயத்தைத் தழுவுவதற்கும் வழிவகுத்தது.

70. பாதுகாப்பும் நான்காம் அகிலமும், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்தும் மார்க்சிசத்தின் வளர்ச்சியிலிருந்தும் ஒரு விலகலைக் குறித்தது என்ற கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, 1975 மற்றும் 1985 க்கு இடையிலான அனைத்துலகக் குழுவின் வரலாறு, அதற்கு நேர்மாறை நிரூபித்துள்ளது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் வேர்க்கர்ஸ் லீக்கின் தீவிர ஈடுபாடு, தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிராக, ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தையும் மார்க்சிசத்தின் மெய்யியல் அடித்தளங்களையும் பாதுகாப்பதோடு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

71. உண்மையில், தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதத்தை நோக்கி நகர்வதையும், இயங்கியல் வழிமுறையை ஹீலி திரிபுபடுத்தியதையும் எதிர்க்கும் முக்கிய வேர்க்கர்ஸ் லீக் ஆவணங்கள், கெல்ஃபான்ட் வழக்கின் மிகவும் தீவிரமான கட்டத்தில், அதாவது விசாரணைக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தபோதே எழுதப்பட்டன.

72. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பது ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றில் ஒரு பிரதான அத்தியாயமாகும். அதன் கண்டுபிடிப்புகள் காலத்தின் சோதனையை அரை நூற்றாண்டு காலமாக தாங்கி நின்றது மட்டுமல்லாமல், அதன் பணியும் தொடர்கிறது. 1941 இல் 18 சோசலிசத் தொழிலாளர் கட்சி தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதன் பின்னணியிலும், லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் சில்வியா அகெலோஃப் வகித்த பங்கை ஆராய்வதன் அடிப்படையிலும், எஃப்.பி.ஐ. உடனான ஹன்சனின் தொடர்புகள் குறித்து தோழர் எரிக் லண்டன் எழுதிய பகுப்பாய்வு, நான்காம் அகிலத்திற்கு எதிரான ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் கூட்டுச் சதித்திட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமான பங்களிப்புகளாகும்.

73. சர்வதேசப் பள்ளிக்கான இந்த அறிமுகத்தை முடிக்கும்போது, கட்சியின் பாதுகாப்பு என்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசியல் பிரச்சினை என்பதை நான் வலியுறுத்த வேண்டும். பாதுகாப்பிற்கான தேவையை அங்கீகரிப்பது என்பது, முதலாளித்துவ அரசின் தன்மை, வர்க்கப் போராட்டத்தின் விதிகள், ஏகாதிபத்திய சகாப்தத்தின் தன்மை, உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி மற்றும் கட்சியின் வேலைத்திட்டத்திற்கு ஆழமாக வேரூன்றிய அர்ப்பணிப்பு பற்றிய மார்க்சிச புரிதலிலிருந்து எழுகிறது. அமைப்புரீதியான பாதுகாப்பைப் பராமரிப்பதில் உள்ள சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தேவையான தத்துவார்த்த மற்றும் அரசியல் நனவின் நிலைக்கு, மிகவும் கல்வியறிவூட்டப்பட்டதும் அரசியல் ரீதியாக உறுதியானதுமான மார்க்சிசக் காரியாளர்கள் அவசியமாகும்.

74. ஒரு புரட்சிகரப் போராளியின் வளர்ச்சிக்கு, தெளிவான அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட உள் உறவுகள் தேவை. இது ஜனநாயகபூர்வமான, கட்டுப்பாடான மற்றும் அரசு தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு நிர்வாகமுறையை செயல்படுத்துகிறது. அது சந்தர்ப்பவாத மனநிறைவாலும், பயத்தாலும் உந்தப்படும் வெறி இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புணர்வு பீதியுடன் பொருந்தாது. ஊடுருவலுக்கு எதிரான வலுவான பாதுகாப்பு என்பது, அரசியல் ரீதியாக கல்வியூட்டப்பட்ட, நன்கு விவரமறிந்த காரியாளர்களே ஆகும். இது உள் ஜனநாயகத்தை பேணுவதற்கும் கவனமாக ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டத்தையும் பராமரிக்கவும் அவசியமானதாகும். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பது மிக தீர்க்கமான படிப்பினைகளில் ஒன்றாகும்.

75. நமக்கு முன்னால் மிகவும் சவாலான வாரம் உள்ளது. விரிவுரைகள் வரலாறு, அரசியல், சட்டம் தொடர்பான ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். ஆனால் நாம் சவாலான மற்றும் ஆபத்தான காலங்களில் வாழ்ந்துகொண்டிப்பதோடு புறநிலை நிகழ்வுகள் நமது போராளிகள் மீது பெரும் கோரிக்கைகளை சுமத்தும். இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளும் இனப்படுகொலைகளும் இயல்பாக்கப்பட்டு, முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படை அரசியலமைப்பு அடித்தளங்கள் சிதைந்து கொண்டிருக்கும் நேரத்தில், அரசியல் பாதுகாப்பு பிரச்சினை மகத்தான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது கிட்டத்தட்ட தெளிவாகத் தெரிகிறது. இவை, உலக அளவிலான வர்க்கப் போராட்டத்தின் மகத்தான விரிவாக்கத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் சமூகப் புரட்சிக்குமான மாற்றத்தின் வெளிப்பாடுகளாகும். உலக முதலாளித்துவத்தின் துரிதமடைந்து வரும் நெருக்கடியால் ஏற்படும் சவால்களைச் சந்திக்கவும், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, உலக சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு தயார்படுத்தவும், சோசலிச சமத்துவக் கட்சியினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் காரியாளர்களின் அரசியல் மட்டத்தை உயர்த்துவதே இந்த சர்வதேசப் பள்ளியின் நோக்கமாகும். உங்கள் கவனத்திற்கு நன்றி தோழர்களே.

Loading