முன்னோக்கு

கரீபியனில் ட்ரம்பின் படுகொலை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தெற்கு கரீபியனில் 11 பேரை ஏற்றிச் சென்ற படகு, அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்ட தருணம் [Photo: Donald Trump/Truth Social]

கடந்த செவ்வாய்க்கிழமை, வெனிசுவேலாவின் ட்ரென் டி அரகுவா என்ற போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் தெற்கு கரீபியன் கடற்பகுதியில் ஒரு சிறிய படகில் போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி, அப்படகின் மீது ட்ரம்ப் நிர்வாகம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பேரைக் கொன்றுள்ளதாக வெள்ளை மாளிகையும் பென்டகனும் பெருமையாகக் கூறின. இது, நாட்டுக்கு வெளியே ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வதற்கும், உள்நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை நியாயப்படுத்துவதற்கும், சட்டவிரோத படுகொலைகளை மேலும் பயன்படுத்துவதை நிரூபித்துள்ளன.

உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில், இந்தப் படுகொலையைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்ட வெள்ளை மாளிகை, உடனடியாக படகு சுக்குநூறாக தகர்க்கப்படும் ஒரு வான்வழியாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டது.

கடந்த புதனன்று, பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்செத் இது விரிவடைந்து வரும் தாக்குதலின் பாகமாகும் என்று எச்சரித்தார். “நாங்கள் வான், கடல் மற்றும் கப்பல் மூலம் தாக்கும் வளங்களைக் கொண்டுள்ளோம். ஏனெனில் இது எங்களுக்கு மிகவும் தீவிரமான பணி, அது நடக்காது, மேலும் இந்த ஒரு தாக்குதலுடன் இது நின்றுவிடாது,” என்று அவர் ஃபொக்ஸ் நியூசிற்கு கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ட்ரம்ப், “மேலும் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது” என்று அச்சுறுத்தினார்.

இந்த தாக்குதல் வெனிசுவேலா கடற்கரையில் தீவிரமடைந்து வரும் அமெரிக்க கடற்படைக் குழு நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடைபெறுகிறது. இதில் குறைந்தது எட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் 5,000 மாலுமிகளும் கடற்படையினரும் உள்ளனர். ட்ரம்ப் ஒட்டுமொத்த வெனிசுவேலா அரசாங்கத்தையும் ஒரு “போதைப்பொருள்-பயங்கரவாத” கும்பலைத் தவிர வேறொன்றுமில்லை என்று சித்தரித்தார். மேலும் அவர், ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் தலைக்கு 50 மில்லியன் டாலர்களாக இருந்த பரிசுத்தொகையை இரட்டிப்பாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து பெருமைபீற்றும் ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப், ட்ரென் டி அரகுவா குழுவானது, “நிக்கோலா மதுரோவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது” என்றும், “அமெரிக்கா மற்றும் மேற்கு அரைக்கோளம் எங்கிலும் வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு” பொறுப்பு என்றும் கூறினார்.

இது அபத்தமானது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் சந்தையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது மட்டுமல்ல, மாறாக இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி எங்கிலும் எண்ணற்ற இராணுவ படையெடுப்புகள், CIA முடுக்கிவிட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்கள் மூலம் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி முழுவதும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புவதில் அமெரிக்க அரசு நீண்ட காலமாகவே முக்கிய பங்கு வகித்து வருகிறது

ஒவ்வொரு நம்பத்தகுந்த புலனாய்வு அறிக்கையின்படியும், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி பாயும் போதைப்பொருட்களில் வெனிசுவேலா ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. ட்ரென் டி அரகுவா குழுவைப் பொறுத்தவரை, இந்தக் கும்பல் வெனிசுலாவில் கூட கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. அமெரிக்காவில், இந்தக் கும்பலின் ஒரு சந்தேக நபர் கூட கொலைக் குற்றவாளி என்று தண்டிக்கப்படவில்லை.

இந்த உள்ளடக்கத்தில், இந்த தாக்குதல், முதலில் வெனிசுவேலாவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி அல்லது உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கான நீண்டகால முயற்சிகளின் பாகமாக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருந்தது. வெனிசுவேலாவில், அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும், உலகின் மிகப்பெரிய வெனிசுவேலா எண்ணெய் இருப்புக்களை கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்குள் பிளவுகளைத் தூண்டுவதே இதன் நோக்கமாகும்.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் இந்த குற்றவியல் நடவடிக்கையை உலக சோசலிச வலைத் தளம் கடுமையாக கண்டிக்கிறது. தற்பொழுது கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத மக்களுக்கு எதிராக, அமெரிக்காவின் சர்வதேச சட்டத்தை மீறிய ஒரு தேவையற்ற பாரிய படுகொலை நடவடிக்கை இது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூற முடியும்.

பென்டகன் தவறு செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்றாலும், புதன்கிழமை ட்ரம்ப், அந்த படகு ஏன் இடைமறிக்கப்படவில்லை மற்றும் பிரச்சினையைத் தவிர்ப்பதன் மூலம் அதில் இருந்தவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விகளைத் தவிர்த்தார். அதற்கு பதிலாக, “ஏராளமான மக்களைக் கொல்ல பாரியளவிலான போதைப்பொருட்கள் நம் நாட்டிற்குள் வருகின்றன, ஒவ்வொருவரும் இதனை முழுமையாக புரிந்துகொள்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

இந்த ஒரு சிறிய படகை “போதைப்பொருள்-பயங்கரவாதத்தின்” ஒரு கருவியாக சித்தரிப்பது, வெறும் முட்டாள்தனம் என்று சொல்ல முடியாத ஒரு அப்பட்டமான போர்க்குற்றத்திற்கான ஒரு போலி-சட்ட நியாயப்படுத்தலாகும். எந்தவொரு சட்டபூர்வமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையும் படகை இடைமறித்து சோதனை செய்வதையும், அது போதைப்பொருட்களை எடுத்துச் சென்றிருந்தால், அவற்றை பறிமுதல் செய்வதையும் உள்ளடக்கியிருக்கும். மேலும், போதைப்பொருட்களை கொண்டு செல்ல 11 பேர் தேவையில்லை. இந்தப் படகில் பயணித்தவர்கள் மீனவர்களாகவோ அல்லது புலம்பெயர்ந்தவர்களாகவோ இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டபடி, ஒரு சிறிய வேகப் படகை வெடிக்கச் செய்ய சிறப்பு நடவடிக்கை விமானம் மற்றும் அதிநவீன ஏவுகணைகளைப் பயன்படுத்துவது என்பது முற்றிலும் பொருத்தமற்றது.

அனைத்திற்கும் மேலாக, வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரில் இலத்தீன் அமெரிக்க போர்முனையைத் திறப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கும், அமெரிக்காவிலேயே ஒரு பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக நடந்து வரும் அதன் அரசியலமைப்பு சதிக்கும் இடையிலான தொடர்பை இந்த நேரம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

முன்னதாக செவ்வாயன்று, ஒரு கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், வெனிசுவேலா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த அன்னிய எதிரிகள் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியை நிராகரித்தது. இந்த சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அவசியமானவாறு, ஒரு வெளிநாட்டு நிறுவனம் “படையெடுப்பு அல்லது சூறையாடும் ஊடுருவல்” செய்ததற்கான சரியான ஆதாரம் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ட்ரென் டி அரகுவா கும்பலுடன் புலம்பெயர்ந்தோரை இணைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்று, அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அவசரகால அதிகாரங்களைக் கோருவதன் மூலம் சாதாரண கட்டுப்பாடற்ற நிர்வாக அதிகாரத்தை நியாயப்படுத்தும் ஒரு போர்க்கால நிலைமைக்கு சமமானதல்ல என்று நீதிமன்றம் தீர்மானித்தது. இத்தீர்ப்பே, ட்ரென் டி அரகுவா குழுவின் படகு என்று கூறப்படுவதற்கு எதிரான போர் நடவடிக்கை என்பது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற வாதத்தை முன்வைக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், ட்ரம்ப் நியமித்த ஒருவரால் வரையப்பட்ட ஒரு நீண்ட மாறுபட்ட கருத்து, ஜனாதிபதிக்கு போரை நடத்துவதற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்றும், “கொள்ளையடிக்கும் ஊடுருவல்” பற்றிய அவரது அறிவிப்பு, அந்த விஷயத்தில் எந்தவொரு ஜனாதிபதியின் புனை கதையையும் “முடிவானது” என்று கருத வேண்டும் என்றும் வாதிட்டது.

கரீபியனில் படகு மீதான அமெரிக்க கடற்படை தாக்குதல் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாடு, ஜனாதிபதி போரை நடத்த சர்வாதிகார அதிகாரங்களைக் கோர விரும்புகிறார், மேலும் சர்வாதிகார அதிகாரங்களைக் கோருவதற்காக போரை தொடுக்க விரும்புகிறார்.

அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களை இரத்தவெறியுடன் பின்தொடர்வது, மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சாக்குப்போக்கின் கீழ் பயன்படுத்தப்படும் அதே படுகொலை முறைகளை, உள்நாட்டு அல்லது வெளிநாட்டிலுள்ள எந்தவொரு குழுவிற்கும் எதிராக, காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை வரை, வெள்ளை மாளிகையும் பென்டகனும் நாடத் தயாராக இருப்பதை எச்சரிக்கிறது. இது, அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்ட காலமாக அதன் சொந்த கொல்லைப்புறமாக கருதிய நாடுகள் உட்பட, உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

வெளியுறவுத்துறை செயலர் ரூபியோ செவ்வாயன்று கூறிய போது அவ்வாறே ஒப்புக் கொண்டார்: “இந்த போதைப்பொருள் கும்பல்களை அவர்கள் எங்கிருந்து இயங்கினாலும், அவற்றை எதிர்த்து ஒழிக்க அமெரிக்காவின் முழு சக்தியையும், அமெரிக்காவின் முழுப் பலத்தையும் பயன்படுத்தப் போகிறார் என்பதில் ஜனாதிபதி மிகவும் தெளிவாக உள்ளார்.”

வெனிசுவேலா படகு மீதான தாக்குதல் குறித்து பெருமைபீற்றி வெறும் சில மணி நேரங்களுக்குப் பின்னர், ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு “அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்து வருகின்ற நிலையில், விளாடிமீர் புட்டின் மற்றும் மற்றும் கிம் ஜாங்-உன்னுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக” கிண்டலாக எழுதினார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக சீனாவில் நடந்த ஒரு பெரிய இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய மற்றும் வட கொரிய அரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எல்லையில் உள்ள நாடுகளில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ள ட்ரம்பின் கீழ் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, 2011 இல் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் சீனாவிற்கு எதிராக தொடங்கப்பட்ட “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்” ஒரு மூலோபாய விளைவாக உள்ளது. சீனா, தென் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளியாக ஆகியுள்ள அதேவேளை, ஒட்டுமொத்தமாக இலத்தீன் அமெரிக்காவுடனான அதன் மொத்த வர்த்தகம் கடந்த கால் நூற்றாண்டில் அண்மித்து 30 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பரில் வெளியுறவு விவகாரங்கள் என்ற பத்திரிகையில் வந்த தலைப்புச் செய்தி குறிப்பிட்டதைப் போல, “லத்தீன் அமெரிக்கா, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முன்னுரிமையாக மாற உள்ளது”. அந்தக் கட்டுரையில், ஆய்வாளர் பிரையன் வின்டர் பின்வருமாறு விளக்குகிறார்:

ட்ரம்பும் அவரது குழுவினரும் பெரிய அச்சுறுத்தலாகக் கருதும் சீனாவின் விஷயத்திற்காக தங்கள் சக்தியைச் சேமிக்கலாம்... புதிய நிர்வாகம் லத்தீன் அமெரிக்க நாடுகளை பெய்ஜிங்கிற்கு முற்றிலுமாக முதுகெலும்புகளைத் திருப்பும்படி சமாதானப்படுத்த முடியும் என்று ட்ரம்பின் குழுவில் உள்ளவர் யாரும் நம்பவில்லை. ஆனால், அதிகாரிகள் சீனர்களை, லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள மிகவும் முக்கியமான சிவில் மற்றும் இராணுவ சொத்துக்களிலிருந்து விலக்கி வைக்க முயற்சிப்பதில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க திட்டமிட்டுள்ளனர். இதனை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

தெற்கு கரீபியனில் ஒரு சிறிய படகை அழித்து 11 பேரைக் கொல்ல ஒரு மேம்பட்ட ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்துவது என்பது, கராகஸில் டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்ட பிரமாண்டமான கடற்படையை நிலைநிறுத்துவது அல்லது வெனிசுலா கடற்கரைகளில் கடற்படையினரை நிலைநிறுத்துவது, பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலின் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள், மெக்சிகோவை குண்டுவீசி ஆக்கிரமிப்பதற்கான அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற ஆத்திரமூட்டல்கள் ஆகியவற்றுடன் கைகோர்த்துச் செல்கிறது.

வெனிசுவேலா அரசாங்கம், அதன் பங்கிற்கு, ட்ரம்பை ஈர்க்கவும், மேலும் ஆக்கிரமிப்பை ஆதரிக்க அவரை ஏமாற்றவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதலின் வீடியோவை ரூபியோ உருவாக்கியதாகக் கூறி பதிலளித்துள்ளது. வாஷிங்டனில் பிளவுகளை வெளிக்கொணர்வதற்கும், மதுரோ மீண்டும் மீண்டும் செய்ததைப் போல, அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் தலைமையில் உள்ள பாசிசவாதியின் “சிறந்த இயல்புக்கு” முறையிடுவதற்குமான இந்த முயற்சி, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது.

இலத்தீன் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல், வளர்ந்து வரும் உலகப் போர் மற்றும் அமெரிக்காவிலேயே கூட ஒரு பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் ஆகியவை, முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றும் சமூகத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கு செய்யவும் அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலமாக மட்டுமே நிறுத்தப்பட முடியும்.

Loading