மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
தேசிய நாடாளுமன்றத்தில் இருந்துவரும் கடுமையான பிளவுகளுக்கு மத்தியில், பிரெஞ்சு அரசாங்கம் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியடைய உள்ளது. ஐரோப்பா முழுவதும், ஆளும் வர்க்கம் அதிகரித்து வரும் இராணுவச் செலவுகள் மற்றும் அரசாங்கக் கடன்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்காக மிருகத்தனமான சமூக வெட்டுக்களை விரும்புகிறது. ஆனால், பிரான்சில் இருந்துவரும் தொங்கு நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் செல்வாக்கிழந்த சிறுபான்மை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கையை எந்த எதிர்க்கட்சியும் ஆதரிக்கத் துணியவில்லை. அதே நேரத்தில், பிரான்ஸ் நிர்வகிக்க முடியாதது என்று வெளிப்படையாக கூறும் முதலாளித்துவ ஊடகங்கள் அஞ்சுகின்றன.
முதலாளித்துவத்தின் தோல்வியில் வேரூன்றிய இந்த ஆட்சி நெருக்கடி, புதிய மக்கள் முன்னணியை (NFP) வழிநடத்திவரும் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோனை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. சமரசப்படுத்த முடியாத வர்க்க மோதல் மேலெழுந்து வருகிறது. உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் மற்றும் காஸா படுகொலைக்கு மத்தியில், முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுக்கள் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை போர் எந்திரத்திற்கும், வங்கிகளுக்கும் திருப்பி விடுவதற்காக சமூக செலவினங்களை வெட்டுவதற்கும் தொழிலாளர்களை வறுமையில் ஆழ்த்துவதற்கும் திட்டமிடுகின்றன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் இந்தக் கொள்கையை நிராகரிக்கின்றனர்.
ஆனால் மெலோன்சோன், இந்த ஒட்டுமொத்த நெருக்கடிக்கும் மக்ரோன் மற்றும் பிரதம மந்திரி பிரான்சுவா பேய்ரூ ஆகிய இருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டுகிறார். அவர்கள் துரோகத்தனமாக காழ்ப்புணர்ச்சியால் ஒரு நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தேசிய நாடாளுமன்றம் அவர்களின் பதவி நீக்கத்தை ஒழுங்கமைக்க முடிந்தால் பிரான்சில் எல்லாம் தீர்க்கப்படும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். இந்த வாரம் LFI இன் கோடைகாலப் பள்ளியில் அவர் ஆற்றிய உரையில், மெலன்சோன் பின்வருமாறு கூறினார்:
அவர்கள் ஏன் துரோகிகள்? ஏனெனில், நிதி நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. அது பொய், ஆனால் நீங்கள், ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ, தொடர்ந்து நெருக்கடி இருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நீங்கள் இறுதியாக ஒரு பேரழிவு சூழலை உருவாக்குவீர்கள். அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன்? கிரேக்கம், இத்தாலி மற்றும் இதர எல்லா இடங்களிலும் முன்பு செய்தது போல், நிதிச் சந்தைகளை பிரெஞ்சு அரசியலில் தலையிட வைக்கிறது. அதாவது, மதிப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் மதிப்பீட்டை மாற்றுகின்றன, வட்டி விகிதங்கள் உயர்கின்றன, மேலும் நீங்கள் மூச்சுத் திணறுகிறீர்கள். ஆனால், அத்தகைய சூழ்நிலையிலிருந்து நாம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறோம். …
அவர் [மக்ரோன்] பதவி விலகி, முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வேறு எந்த நடவடிக்கையும் அமைப்புமுறையின் வேதனையை நீடிக்கச் செய்யும். பிரெஞ்சு மக்களின் அடையாளம், அதன் அமைப்பு, அது தேர்ந்தெடுக்கும் பாதை ஆகியவை குறித்து ஒரு பெரும் கேள்வி முன்வைக்கப்படுவதால், முடிவெடுக்கும் உரிமை பிரெஞ்சு மக்களுக்கு உண்டு.
நிதி நெருக்கடி எதுவும் இல்லை என்ற மெலோன்சோனின் கூற்று தவறானது. பிரான்சின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 சதவீதமாக உள்ளது. யூரோ மண்டலத்தின் கூட்டு அரசாங்கக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 91 சதவீதமாகும். ஆளும் வர்க்கம் நாட்டை அழித்து வருகின்ற நிலையில், பிரான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இழந்து வருகிறது. ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் செல்வ வளத்தைக் குவித்தும், “அதிக தீவிரமான போருக்கு” தயாரிப்பு செய்ய இன்னும் பல பத்து பில்லியன்கள் செலவிடப்பட வேண்டுமென ஆளும் வர்க்கம் கோருகிறது.
உலக வல்லரசுகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வருவதாலும், வங்கிகள் உலகளாவிய கடன் சந்தைகளின் நெருக்கடி குறித்து கவலைப்படுவதாலும், 2009 இல் கிரேக்கத்திற்கு நடந்தது போல் பிரான்சை திவாலாக்கும் பிரெஞ்சு கடன் மீதான ஊகவணிகத் தாக்குதலின் அபாயம் உண்மையானது. இது “1,000 கிலோமீட்டர் தொலைவில்” இல்லை, மாறாக அரசியல் ஸ்தாபனத்தில் இது தீவிரமாக விவாதிக்கப்பட்ட வருகிறது.
சமூக சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்த 1936-1938 பிரெஞ்சு மக்கள் முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக ஊக வணிகர்கள் எழுப்பிய “பணச் சுவரை” நினைவூட்டும் வகையில், நிதிச் சந்தைகளில் ஒரு கடன் தாக்குதல் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரப் பணிகளுடன் எதிர்கொள்ளும். சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்க முதலாளித்துவ தன்னலக்குழுவின் செல்வத்தை அது பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், அதிலிருந்து அதிகாரத்தைப் பறித்து, போரின் விரிவாக்கத்தை தடுக்க ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
ஆனால் முதலாளித்துவத்தின் தோல்வி, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், மற்றும் செல்வந்த தன்னலக் குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான அவசியம் குறித்து மெலோன்சோன் மௌனமாக இருக்கிறார்.
பிரான்ஸ் ஒரு புரட்சிகர நெருக்கடியை முகங்கொடுக்கிறது என்ற ஒப்புதலுடன் அவர் குதூகலிக்கின்ற அதேவேளையில், இப்போதைய சமூக ஒழுங்கிற்குள் சீர்திருத்தங்களை மட்டுமே மெலோன்சோன் முன்மொழிகிறார். 1789 புரட்சியைத் தூண்டிய பிரெஞ்சு நிலப்பிரபுத்துவ முடியாட்சியின் வரவு-செலவுத் திட்ட நெருக்கடியைக் குறிப்பிட்டு, “நாம் வாழும் வாழ்க்கையில் 1788 இன் ஏதோ ஒன்று இருக்கிறது” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். பதினாறாம் லூயி மன்னரின் நிதி மந்திரிகளான ஜாக் நெக்கர் மற்றும் சார்லஸ்-அலெக்சாண்டர் கலோன் ஆகியோருக்கு இடையிலான விவாதத்தைச் சுட்டிக்காட்டி, மெலன்சோன் இன்று மீண்டும் ஒரு முறை சுதந்திர வர்த்தகம் அல்லது தற்போதைய சமூக ஒழுங்கின் அடிப்படையில் பொருளாதாரத்தில் அரசு தலையீடு ஆகியவற்றுக்கு இடையே தேர்வு உள்ளது என்று வாதிடுகிறார்:
1788 மற்றும் 1789 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், துர்கோவிற்கும் [இது உண்மையில், 1781 இல் இறந்துபோன ஜாக் துர்கோவின் சீடரான சார்லஸ்-அலெக்ஸாண்ட்ரே கலோனுக்கு இடையில்தான் நடந்தது] நெக்கருக்கும் இடையே ஒரு நம்பமுடியாத விவாதம் நடந்தது. நான் முழுக் கதையையும் கூற மாட்டேன், ஆனால் துர்கோ சுதந்திர சந்தை பொருளாதாரத்தை ஆதரித்தார், நெக்கர் அரசு தலையீட்டை ஆதரித்தார், இது வரலாற்றில் மாறுபாடுகளை அனுமதிக்கிறது. எனவே அது உங்களுக்கு ஒருவரை நினைவூட்ட வேண்டும். இறுதியாக, அழகான ஆனால் மிகவும் புத்திசாலி இல்லாத லூயி முதலில் நெக்கரையும், பின்னர் துர்கோவையும், பின்னர் மீண்டும் நெக்கரையும் வைக்கிறார், இறுதியாக என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது ... எனவே நாம்தான் முடிவு செய்ய வேண்டும். சமூக மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான முன்னோக்கை வழங்குவது சுதந்திர வர்த்தகமா அல்லது சூழலியல் திட்டமிடலா?
மெலோன்சோனின் சொந்த உதாரணமே அவருக்கு எதிராக பேசுகிறது. நாம் 1788 இல் இருக்கிறோம் என்றால், ஒரு சில மூத்த அதிகாரிகளை மாற்றுவதன் மூலம் தீர்க்க முடியாத, ஒரு பிரிக்க முடியாத சமூகப்-பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்று அர்த்தமாகும். 1788 இல் நெக்கர் மற்றும் கலோன் இடையே இருந்ததைவிட, இனி “அரசு-தலையீட்டாளர்கள்” மற்றும் “சுதந்திர-சந்தைவாதிகள்” இடையே இன்றைய தேர்வு இருக்கப் போவதில்லை. 1789 இல் வெடித்த புரட்சிகர நெருக்கடியின் போது, பதினாறாம் லூயியையும், நிலப்பிரபுத்துவத்தையும், முடியாட்சியையும் புரட்சிகரமாக தூக்கியெறிந்த ஜாக்கோபின்களுக்கு இடையே தேர்வு இருந்தது.
ஆனால், மெலன்சோன் நீண்ட காலமாகவே ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், ஒரு சோசலிசப் புரட்சி என்பது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும் வலியுறுத்தி வருகிறார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் அல்ல, “மக்களை” ஈடுபடுத்தும், முற்றிலும் பிரான்சின் தேசிய எல்லைகளுக்குள் ஒரு “குடிமக்கள் புரட்சிக்கு” அவர் அழைப்பு விடுத்து வந்துள்ளார். இது வாக்குப் பெட்டி மூலமாக மட்டுமே நடக்க வேண்டும். LFI இன் கோடைப் பள்ளியில் மெலோன்சோன் வழங்கிய உரையில், அவர் இவ்வாறாக அறிவித்தார்:
அரசியல் கலை என்பது சாதனைக்கான கலையாகவும், மூலோபாயப் போராட்டக் கலை என்பது இயக்கத்தின் அறிவியலாகவும், விஷயங்களைப் திடப்படுத்த உதவுவதில் அடங்கியுள்ளன. அதனால்தான் நாங்கள் ஒரு புரட்சிகரத் தலைமை என்று நாங்கள் நம்பவில்லை. குடிமக்களின் புரட்சிகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நமக்கு நாமே ஒரு குறிக்கோளை அளித்துள்ளோம். மேலும் அவற்றின் அனைத்து நிலைகளையும் நாங்கள் புரிந்துகொண்டுள்ளதால், ஒவ்வொரு கட்டமும் தன்னை நிலைநிறுத்தி அடுத்த கட்டத்திற்குச் செல்ல உதவுவதே எங்கள் பங்கு என்று நாங்கள் கூறுகிறோம்.
நேட்டோ ஏகாதிபத்திய போர்கள், காஸா இனப்படுகொலையை எவ்வாறு நிறுத்துவது, அல்லது தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டுமென மெலோன்சோன் விரும்புகிறார் என்பது குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்காத இந்த தெளிவற்ற, பகட்டான வாய்வீச்சு ஒரு அரசியல் பொறியாகும்.
ஆளும் உயரடுக்கு அடிபணியா பிரான்ஸ் கட்சியை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக மக்ரோனை வெளியேற்றினால், மெலோன்சோன் இறுதியில் வங்கிகளிடம் சரணடைவார். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. உண்மையில், ஏற்கனவே ஒரு நீண்ட தட பதிவு உள்ளது. கிரேக்கத்தில், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீதான கோபம், 2015 இல் மெலோன்சோனின் NFP இல் இருக்கும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) ஒரு துணை அமைப்பான சிரிசா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. ஆனால், கிரேக்கக் கடனுக்கு எதிரான ஊகங்களுக்கு இடையே, சிரிசா அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்து, பில்லியன் கணக்கான யூரோக்களை புதிய சிக்கன நடவடிக்கைகளில் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு எதிராகத் திணித்தது.
மெலன்சோனின் வரலாறு, குறிப்பாக 1981 முதல் 1995 வரை பிரான்சுவா மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமையின் கீழ் அவர் வகித்த பாத்திரம், ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 1971 ஆம் ஆண்டில், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) முறித்துக் கொண்ட பியர் லம்பேர்ட்டின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (OCI) மெலன்சோன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். OCI ஒரு தேசிய முன்னோக்கில் PS உடன் கூட்டணி வைத்தது. 1936 மக்கள் முன்னணியில் இருந்ததைப் போன்றே, “மக்கள் அரசாங்கம்” மற்றும் இடதுசாரி சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதியளித்த சோசலிஸ்ட் கட்சி-பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை அது ஆதரித்தது.
1981 ஆம் ஆண்டு மக்களின் உற்சாக அலையின் மத்தியில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மித்திரோன், 1982 இல் பிரெஞ்சு வர்த்தக மற்றும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள் அதிகரித்த நிலையில், ஒரு “சிக்கன நடவடிக்கை திருப்பத்தை” தொடங்கினார். இது, தொழிலாள வர்க்கத்தின் மீதான நான்கு தசாப்த கால சமூகத் தாக்குதல்களுக்கு அரங்கு அமைத்துக் கொடுத்தது. “மக்கள் புரட்சி” மற்றும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் எஞ்சியிருப்பவற்றுடன் ஒரு புதிய மக்கள் முன்னணிக்கான அவரது அழைப்புகளின் மூலமாக, 45 ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவத்தின் மரணகரமான நெருக்கடிக்கு மத்தியில் அதனுடன் கட்டிப்போடுவதற்காக, அதே ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு நோக்குநிலையை மட்டுமே மெலன்சோன் பாதுகாக்கிறார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES), ஒரு புறநிலை ரீதியிலான புரட்சிகர நெருக்கடி உருவாகி வருவதாகவும், அதற்கு சோசலிசப் புரட்சிக்கான தொழிலாள வர்க்கப் போராட்டம் அவசியப்படுகிறது என்றும் விளக்குகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டளைகளில் இருந்து தொழிலாளர் போராட்டங்களை விடுவிக்கவும், ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவ செல்வந்த தன்னலக் குழுக்களுக்கு எதிரான அவசியமான சர்வதேச போராட்டத்தை ஒருங்கிணைக்கவும், பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. தோல்விகண்ட முதலாளித்துவ ஐரோப்பாவுக்கு எதிராக, PES ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற முன்னோக்கை முன்னெடுக்கிறது.