இலங்கையின் திசாநாயக்க அரசாங்கம் சந்தை சார்பு கல்வி சீர்திருத்தங்களை அறிவிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை அரசாங்கம் 2026 முதல் கல்வி முறையில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது. இருப்பினும், அதன் கல்வித் திட்டம், அடிப்படையில் முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் 2023–2033 கல்விக்கான தேசியக் கொள்கை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது முதலில் 2024 மே மாதம் வெளியிடப்பட்டது.

கொழும்பில் உள்ள சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் திறப்பு விழாவிற்கு முன்பு, வணிக அதிபர்களுடன் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (இடமிருந்து இரண்டாவதாக அமர்ந்திருக்கிறார்). திசாநாயக்கவின் வலதுபுறத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷன் பாலேந்திரா, மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லோரன்ஸ் ஹோ ஆகியோர் உள்ளனர். [Photo: Facebook/City of Dreams Sri Lanka]

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, ஜூலை 29 அன்று மோர்னிங் பத்திரிகைக்கு கூறியதாவது: “[திசாநாயக்க அரசாங்கம் பதவியேற்றபோது] [கல்வி] மறுசீரமைப்புக்கான முழு கட்டமைப்பும் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. ஒரு மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது… மறுசீரமைப்புகள் இப்போது செயல்படுத்தும் நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றன.”

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் இருக்கும் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 27 விளக்கக்காட்சிகள் மூலம், பாடங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளில் முன்மொழியப்பட்டுள்ள சில மாற்றங்களை வெளியிட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், அரசாங்கத்தின் சந்தை-சார்பு கல்வி சீர்திருத்தங்களை எதிர்க்குமாறு தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. இந்த தனியார்மயமாக்கல் மற்றும் செலவுக் வெட்டுக் கொள்கைகள் இலங்கையின் ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள இலவசக் கல்வி முறைமைக்கு பெரும் அடியை கொடுக்கும்.

கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு (NPFE) என்ற ஆரம்ப ஆவணம், விக்கிரமசிங்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 25 பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது. குழுவில் 12 கல்வியாளர்கள் இருந்த போதிலும், அது இலங்கை பெருவணிகங்களின் 11 பிரதிநிதிகள் மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டு அதிகாரிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இலங்கை வர்த்தக சபையின் அப்போதைய துணைத் தலைவரும் தற்போது ஜனாதிபதி திசாநாயக்கவின் சிரேஷ்ட ஆலோசகருமான துமிந்த ஹுலங்கமுவ, குறித்த வணிக பிரதிநிதிகளில் ஒருவர் ஆவார்.

கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பெறுபேறாக, 2023 மார்ச்சில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புக் கடனை கொடுப்பதை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்ததன் பின்னணியிலேயே விக்கிரமசிங்கவின் கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு 'மறுசீரமைப்பு' திட்டம் முன்கொணரப்பட்டது. இந்த சிக்கன நடவடிக்கைகளில், 400க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் அல்லது மறுசீரமைப்பு செய்தல், இலட்சக்கணக்கான தொழில்களை அழித்தல், குறிப்பாக, சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட, பொதுச் செலவினங்களை கடுமையாக வெட்டிக் குறைத்தல், பொதுமக்கள் மீது பிரமாண்டமான வரி அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.

முன்னெப்போதும் இருந்திராத அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தொடர்ந்து, 2022 ஏப்ரல் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்காக இவ்வாறு அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம், பொதுக் கல்விக்கான செலவினங்களைக் குறைத்தல், தனியார்மயமாக்கலுக்கான தடைகளை நீக்குதல் மற்றும் 'பொது-தனியார் கூட்டாண்மை உட்பட அரசு சாராத கூட்டாண்மை அமைப்புகளின் பங்கேற்பை' அனுமதிப்பதாகும். உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் வெளிநாட்டு உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்த கட்டமைப்பு முன்மொழிகிறது.

பாடசாலைகளுக்கு அரசு நிதியுதவி அளிப்பதில், தொழில்துறையால் கோரப்படும் பாடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், தொழில்துறைத் துறைசார் திறன்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால ஏற்பாடுகளுக்கும் ஊக்கத்தொகைகள் வழங்குவதும் அடங்கும்.

மஹாபொல போன்ற தற்போதைய உதவித்தொகைகளை ரத்து செய்வதற்கான திட்டங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நிலைக் கல்விக்காக அரசாங்க ஆதரவுடன் கடன்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும் - அதாவது மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர கடன்களை எடுக்க வேண்டும்.

ஜூலை 24 அன்று, ஜனாதிபதி திசாநாயக்க தனது அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதற்காக பாராளுமன்றத்தில் உரையாற்றினார். சர்வதேச மூலதனத்திற்கான மனிதவள முகாமையாளர் போல் காட்டிக்கொண் அவர், இலங்கையில் எண்ணெய், எரிவாயு, தங்கம் மற்றும் இரும்புத் தாது போன்ற வணிக வளங்கள் இல்லாதது குறித்து வருத்தப்பட்டார்.

'நமது மிகவும் மதிப்புமிக்க சொத்து, இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப கூர்மைப்படுத்தப்பட்டு மெருகூட்டப்பட வேண்டிய வளம், நமது மனித மூலதனம்', 3 சதவீத தொழிலறிஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள், மீதமுள்ள 97 சதவீதம் பேர் குறைந்த திறன் கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர், என்று அவர் கூறினார்.

'பொருளாதாரக் கண்ணோட்டத்தில், முன்னேறிய உலகளாவிய உழைப்புச் சந்தையில் நாம் ஒரு இடத்தைப் பெற வேண்டும். இதற்காக, எந்த நேரத்திலும் உலகில் உருவாகும் அறிவைப் பெற்று, பரப்பும் உயர்தர கல்வி முறை நமக்குத் தேவை' என்று அவர் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கை மற்றும் உலகளாவிய நிதி மூலதனத்தின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி முறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள மறுசீரமைப்புப் பொதியின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் உள்ள பாடங்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்படும், இதில் 5 கட்டாய பாடங்களும் 2 விருப்பப் பாடங்களும் இருக்கும். கட்டாயப் பாடங்களில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகியவை அடங்கும். விருப்பப் பாடங்களில் இரண்டாம் மொழி, தகவல் தொழில்நுட்பம், வரலாறு, குடிமையியல், சுகாதாரம், தொழில்நுட்பம், புவியியல், அழகியல் மற்றும் தொழில்முனைவு மற்றும் நிதி ஆகியவை அடங்கும்.

அழகியல் மற்றும் வரலாறு போன்ற பல்பூரண கல்விக்கு அவசியமான பாடங்களை விட, உழைப்புச் சந்தை தேவைகளை நோக்கிய பாடங்களைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்ற கவலையை பல்வேறு கல்வியாளர்கள் எழுப்பியுள்ளனர். எதிர்கால சந்ததியினரை சிந்தனைமிக்க, சுயாதீனமான விமர்சன சிந்தனையாளர்களாக வளர்ப்பதற்குப் பதிலாக, ஆளும் உயரடுக்கானது உள்ளூர் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களால் குறைந்த ஊதியத்தில் சுரண்டப்படுவதற்கு இளைஞர்களை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறிய மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் என்றும், அத்தகைய வசதிகளை ஒருங்கிணைப்பது 'அதிக லாபகரமானது' என்றும் திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மூடல்கள் தொடர்பாக 'மக்களை தூண்டிவிட வேண்டாம்' என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் உட்பட அனைத்து பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும், ஜூலை 24 அன்று பிரதமர் அமரசூரியவுடன் மறுசீரமைப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய, சிக்கனக் கொள்கைகள் மற்றும் இதேபோன்ற கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னர் ஆதரித்த நிலையில், சமீபத்திய திட்டங்களுக்கும் எவரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

'மக்களை தூண்டிவிடாதீர்கள்' என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திசாநாயக்க விடுத்த எச்சரிக்கை, உண்மையில், இந்த பிற்போக்கு கல்வி நடவடிக்கைகளை எதிர்க்கக் கூடிய, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

இலங்கை தொழிலாளர்களும் ஏழைகளும் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க முயற்சிப்பதில் ஏற்கனவே தாங்க முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். கல்வி அமைச்சின் 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2022 உடன் ஒப்பிடும்போது புதிய பாடசாலை சேர்க்கை 180,697 ஆல் குறைந்துள்ளது. பாடசாலையை விட்டு இடைவிலகுவோர் எண்ணிக்கை 20,000 பேரால் அதிகரித்துள்ளதுடன் 80,000 மாணவர்கள் அதே ஆண்டில் இடைவிலகும் 'கட்டத்தில்' இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சரிவு, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அமுல்படுத்தப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளால் ஏற்படும் மோசமான வறுமையுடன் நேரடியாக தொடர்புடையதாகும்.

மில்லியன் கணக்கான இலங்கை குடும்பங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கான நிதிச் சுமையுடன் போராடி வருகின்றன. இதற்கிடையில், 40,000 என மதிப்பிடப்பட்டுள்ள தேசிய ஆசிரியர் பற்றாக்குறையுடன், கற்பிப்போர் மோசமான வேலை நிலைமைகள், ஊதியப் பற்றாக்குறை மற்றும் அதிக மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

முந்தைய அரசாங்கங்களும் – அதே போல் தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் - கல்விச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  வெறும் 1 முதல் 2 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளன. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களைப் போலவே, அவை செலவுகளைக் வெட்டி, கல்வித் தரத்தைக் குறைத்துள்ளதுடன் பெருவணிகக் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தனியார்மயமாக்கலை துரிதப்படுத்தியுள்ளன.

கல்விசார் தொழிற்சங்கங்கள் எதுவும் இந்தத் திட்டங்களை முழுமையாக எதிர்க்கவில்லை. அதாவது அரசாங்கம் அதன் பிற்போக்கு நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் அர்த்தத்தில், அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் 'கலந்துரையாடலுக்கு' அழைப்பு விடுக்கின்றன,

போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியமும், (அ.ப.மா.ஒ.) அரசாங்கத்தை தெளிவான கல்வித் திட்டத்தை முன்வைக்குமாறும், மறுசீரமைப்பு குறித்து 'பரந்த உரையாடலை' தொடங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளன. ஆகஸ்ட் 5 அன்று, மு.சோ.. கட்டுப்பாட்டிலான அ.ப.மா.ஒ., பல்கலைக்கழக மற்றும் பாடசாலை ஆசிரியர் சங்கத் தலைவர்களுடன் ஒரு ஒன்றிணைந்த கூட்டத்தை நடத்தியது.

பங்கேற்றவர்களில் இருந்த இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்தை முதலில் பாடசாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தியதுடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க, அரசாங்கம் கல்வியியலாளர்களைக் கலந்தாலோசிக்காமல் மறுசீரமைப்புகளை முன்வைப்பதாக முறைப்பட்டுக்கொண்டார்.

இதேபோன்ற உணர்வுகளை எதிரொலித்த மு.சோ.க. கட்டுப்பாட்டில் உள்ள ஐக்கிய ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் தலைவர் அமில சந்தருவன், தனது தொழிற்சங்கம் அதன் கோரிக்கைகளை வலியுறுத்த 'தெருக்களில் போராட' தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த வாய்ச்சவடால், பெருவணிக சார்பு தே.ம.ச. அரசாங்கத்தை 'சரியான பாதையில்' பயணிக்க அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மு.சோ.க.யின் போலி கூற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு இழிவான முயற்சியாகும்.

திசாநாயக்க அரசாங்கத்தின் பிற்போக்கு கல்விக் கொள்கைகள் தனிமைப்படுத்தப்பட்ட முடிவுகள் அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியம் திணித்துள்ள சிக்கன நடவடிக்கைகளை அது பரந்த அளவில் செயல்படுத்துவதோடு நேரடியாக ஒத்துப்போகின்றன.

இலவச கல்வியை தற்போதைய தேசிய கட்டமைப்பிற்குள் அல்லது முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராடாமல் பாதுகாக்க முடியாது என்று, சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளை எச்சரிக்கின்றன.

1930கள் மற்றும் 1940களின் பிற்பகுதியில் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட இலவச கல்வியைப் பாதுகாப்பது என்பது, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வணிக சார்பு திட்ட நிரலுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சமூக அழிவுகர கொள்கைகளுக்கும் எதிராக, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதோடு பிணைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், பெரும் பணக்காரர்களின் செல்வம் குவிந்து வருவதை உத்தரவாதம் செய்வதற்கும் திருப்பி விடப்பட்டுள்ள வளங்களை, பிரமாண்டமான முறையில் மறுஒதுக்கீடு செய்து, இலாபத்திற்காக அன்றி, சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியை மறுசீரமைப்பது அவசியமாகும்.

இதன் அர்த்தம், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதோடு வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பதுமாகும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கான போராட்டத்தின் பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே இத்தகைய திட்டத்தை செயல்படுத்த முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வலிமையை அணிதிரட்டுவதற்காக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சுற்றுப்புறத்திலும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.

இந்த இன்றியமையாத போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பாடசாலைகளில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன.

Loading