மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமையன்று, லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் 850க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய பாரிய கைதுகளில் இதுவும் ஒன்றாகும். பாலஸ்தீன நடவடிக்கை எதிர்ப்புக் குழுவின் தடையை அடுத்து இடம்பெற்ற இந்தக் கைதுகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை போலீஸ் அரசு ஆட்சி வடிவங்களில் ஆழமாக மூழ்கடித்துள்ளன.
கடந்த ஜூலை 2 அன்று, பல நூற்றாண்டுகளாக நிறுவப்பட்ட ஜனநாயக சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தடைக்கு “பாராளுமன்றங்களின் தாய்” கிட்டத்தட்ட ஒருமனதாக வாக்களித்தது. இந்த ஜனநாயக சுதந்திரங்கள், 1215 ஆம் ஆண்டு, மாக்னா கார்ட்டாவிலிருந்து 1689 ஆம் ஆண்டு உரிமைகள் மசோதா மற்றும் 1830 களில் சார்டிசத்துடனான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் நுழைந்தது வரை நீண்டுள்ளது. மேலும் இவை, கூட்டாக அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கவும், பேச்சு சுதந்திரம், சிந்தனை மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் உத்தரவாதம் அளித்தன.
ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அடிப்படைத் தாக்குதல், 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய குற்றமான காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக கருதுவதுக்கும், இந்த அட்டூழியத்திற்கு எதிரான அமைதியான எதிர்ப்பு போராட்டத்தை பயங்கரவாதத்துடன் சமப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படுகிறது.
பயங்கரவாதச் சட்டத்தின் (2000) கீழ், தடைசெய்யப்பட்ட குழுவில் உறுப்பினராக, அல்லது அதற்கு ஆதரவை ஊக்குவிக்கும் எவருக்கும் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், அந்த அமைப்பின் ஆடை அணிந்தால் அல்லது அதற்கு ஆதரவைக் குறிக்கும் பொருட்களைப் பொதுவில் எடுத்துச் சென்றால் கூட 6 மாத சிறைத்தண்டனை அல்லது 5,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
பாராளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகு, இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கிட்டத்தட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த சனிக்கிழமை 850 பேரும், ஆகஸ்ட் மாதம் அதே இடத்தில் நடந்த போராட்டத்தின் போது 500க்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீன நடவடிக்கை குழு மற்றும் சட்ட உரிமைகள் பிரச்சாரக் குழுவான எங்கள் நியாயங்களைப் பாதுகாத்தல் ஆகிய குழுக்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் போலீஸ் சோதனைகளில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதோடு, சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் இதர சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போரை நிறுத்து கூட்டணியின் துணைத் தலைவர் கிறிஸ் நைனிஹாம் மற்றும் பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சார இயக்குனர் பென் ஜமால் ஆகியோரும் அடங்குவர். பிரபல பத்திரிகையாளர்களின் வீடுகள் சோதனை செய்யப்பட்டு, அவர்களது சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை மற்றும் அதைத் தொடர்ந்து வந்த அரச ஒடுக்குமுறை, பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் வலதுசாரியான பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் கீழுள்ள தொழிற் கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதை ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் மையப் பகுதியாகவும், புகலிடம் கோருபவர்களை அரக்கத்தனமாகவும், தேசியவாத விஷத்தை வாந்தி எடுக்கும் வகையிலும், நிகல் ஃபராஜின் சீர்திருத்த UK கட்சியிலிருந்து பிரித்தறிய முடியாத அளவிற்கு தொழிற் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கை உள்ளது.
இது, கட்சியின் இடதுசாரிப் பிரிவினரின் சிறிதளவு எதிர்ப்பையே சந்தித்துள்ளதுடன், தொழிற்சங்கங்களின் செயல்திறன்மிக்க ஒத்துழைப்பையும் பெற்றுள்ளது.
சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவின் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது தொழிற்கட்சி எம்.பி.க்கள் மட்டுமே பாலஸ்தீனிய நடவடிக்கை குழு மீதான தடைக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் அனைவரும் ஸ்டார்மரின் விசுவாசமான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
பெயரளவில் சுமார் 6 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களுக்கு தலைமை தாங்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம், இந்தப் பாரிய ஒடுக்குமுறையை எதிர்த்து ஒரு அறிக்கையைக்கூட வெளியிடவில்லை.
தொழிற் கட்சியின் தாக்குதல், பல ஆண்டு கால முரண்பாடுகளுக்குப் பிறகு, முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் மற்றும் முன்னாள் தொழிற் கட்சி எம்.பி. ஜாரா சுல்தானா ஆகியோர், ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு இடதுசாரி மாற்றாக இருப்பதாக உறுதியளிக்கும் புதிய கட்சியைத் தொடங்குவதோடு ஒத்துப்போகிறது. ஆனால், இவர்கள் முக்கால் மில்லியன் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், அவர்களும் தொழிற் கட்சியின் ஒடுக்குமுறையை எதிர்க்க எதையும் ஒழுங்கமைக்கவில்லை.
பிளேரிச வலதுசாரிகளுக்கு கோர்பின் அளித்த பதில், அவர் முன்னர் தொழிற் கட்சித் தலைவராக இருந்தது போலவே, மீண்டுமொருமுறை, பாதையை மாற்றுவதற்கான தார்மீக முறையீடுகளை விடுப்பதாக இருந்தது. “அரசாங்கத்தால் ஒரு கணம் யோசிக்க முடியாதா, ஒருவேளை அவர்கள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார்களா?” என்று அவர் ஸ்கை நியூஸிடம் ஆச்சரியத்துடன் கூறினார். தொழிற்கட்சி, “நிச்சயமாக, அவசரமான சூழ்நிலைகளில் புகலிடம் கோருபவர்களை மனிதர்களாக நடத்துவதற்கு ஒரு தார்மீக வழக்கை முன்வைக்கும் திறன் கொண்டது” என்று அவர் வாதிட்டார்.
ஜனநாயக உரிமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்ற போதிலும், இனப்படுகொலைக்கு எதிரான ஆர்வலர்களை இலக்கு வைத்திருந்தாலும், போரை நிறுத்து கூட்டணி பாலஸ்தீன நடவடிக்கை குழுவை தடை செய்வதை எதிர்த்து ஒரு சில சார்பு கட்டுரைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான தேசிய ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் மீதான தடைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அவர்கள் தடுத்தனர். இதனால் கடந்த சனிக்கிழமை, 200,000 பேர் அணிவகுத்துச் சென்றபோது, இந்த வாரம் கைது செய்யப்பட்ட ஐந்து எங்கள் நியாயங்களைப் பாதுகாத்தல் அமைப்பின் தலைவர்களுடன் ஒற்றுமையை அறிவிக்க ஒரு சிறிய தலைமைக் குழுவை மட்டுமே பாராளுமன்ற சதுக்கத்திற்கு அவர்கள் அனுப்பினர்.
பிரிட்டனில் உள்ள போலி இடது குழுக்களின் பதில், “எங்கள் நியாயங்களைப் பாதுகாத்தல்” அமைப்பினரின் போராட்டங்களை மகிமைப்படுத்துவதாக உள்ளது. இவை, பாலஸ்தீனிய நடவடிக்கை குழு மீதான தடையை செயல்படுத்துவதை சாத்தியமற்றதாக்குகின்றன என்றும், இவை அரசாங்கத்தை பின்வாங்க கட்டாயப்படுத்தும் என்றும் கூறுகின்றன. எங்கள் நியாயங்களைப் பாதுகாத்தல் அமைப்பினரின் போராட்டங்கள், தொழிற் கட்சியை அவமானப்படுத்தி, போலிசை திணறவிட்டதாக சோசலிச தொழிலாளர் கட்சி எழுதியது.
“பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கினரைக் கைது செய்ய போலிஸ் தவறிவிட்டதாக” நோவாரா மீடியா அறிவித்தது. இது, “லண்டன் பெருநகர போலிஸ்துறை ஆணையர் சேர் மார்க் ரோவ்லிக்கு ஒரு பெரிய அவமானம்” என்று விவரித்தது. “ஸ்டார்மர் அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கின்” பயனற்ற தன்மையை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய படிப்பினையை மறைப்பதே இவர்களின் அரசியல் நோக்கமாகும்: குறிப்பாக, ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு எதிராக, அத்தகைய இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தொழிற்கட்சி “இடதுகளின்” (தொழிற்கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும்) முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலுக்கு அணிதிரட்ட வேண்டியது அவசியமாகும்.
பாலஸ்தீன நடவடிக்கை குழுவுக்கான ஆதரவு மற்றும் எங்கள் நியாயங்களை பாதுகாத்தல் போன்ற போராட்ட அமைப்புக்களை பாதுகாப்பது என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரேலின் படுகொலை மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான இனச் சுத்திகரிப்புக்கு எதிரான பாரிய இயக்கத்தை செயலற்றதாக்கிய தொழிற்கட்சியின் “இடது” மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் அதிகாரத்துவ நாசவேலைக்கு அரசியல் ரீதியாக குழப்பமான பதிலாகும்.
அக்டோபர் 7, 2023 முதல், இங்கிலாந்திலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் காஸா இனப்படுகொலையை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால், இதில் எந்தப் பயனும் இல்லை. அன்றைய கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள், எதிர்க்கட்சித் தலைவராக இஸ்ரேலின் “சுய பாதுகாப்பு” உரிமையைப் பாதுகாத்த ஸ்டார்மர் மீதும் கோபம் செலுத்தப்பட்டது. போரை நிறுத்துங்கள் என்ற குழுவினரும் மற்றும் போலி இடது குழுக்களும் தெருக்களில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வரும் என்றும், இனப்படுகொலைக்கான அதன் ஆதரவை மாற்றியமைக்க அது கட்டாயப்படுத்தும் என்றும் வலியுறுத்தின.
அதற்கு பதிலாக, நெதன்யாகுவின் பாசிச அரசாங்கத்துடனான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கூட்டணிக்கு ஒரு முழுமையான உறுதிப்பாட்டை தொழிற்கட்சியின் ஸ்டார்மர் பேணி வருகிறார். மேலும், அவரது டோரி முன்னோடிகளை விட சியோனிச-விரோத போராட்டங்கள் மீது, மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை அவர் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
பாலஸ்தீன நடவடிக்கை குழுவினர் மற்றும் DOJ இன் ஆதரவாளர்கள் தைரியமான தனிநபர்களின் நேரடி நடவடிக்கை மட்டுமே இனப்படுகொலையை நிறுத்த முடியும் என்று நம்பினர். ஆனால், நேரடி நடவடிக்கையோ அல்லது லண்டனில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களோ அரசாங்கத்தை பின்வாங்க கட்டாயப்படுத்தாது.
ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளான சர்வதேச ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளைத் தாக்கி, உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய தாக்குதலை நடத்துவதன் மூலம் தனது நிலையை உறுதிப்படுத்த முயல்கிறது.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குற்றம் அல்ல. மாறாக, புவிசார் மூலோபாய ரீதியில் முக்கியமான மற்றும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்த அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளின் ஒரு மையத் தூணாகும். இது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் மற்றும் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கான தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய மோதலின் ஒரு முன்னரங்காகும்.
இந்த மோதலில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போரைத் தொடங்குவது இவர்களுக்கு அவசியமாகும். இராணுவ செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பை முன்னெடுக்கின்ற அதேவேளை, பூகோள ரீதியில் போட்டித்தன்மையுடன் இருப்பதும், அத்தியாவசிய சமூக சேவைகளில் எஞ்சியுள்ள அனைத்தையும் அழிப்பதும், ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பாதுகாப்பதற்குப் பொருந்தாத மிருகத்தனமான அளவிலான சுரண்டலைத் திணிப்பதும் இவர்களுக்கு அவசியமாகிறது.
இந்த நிகழ்ச்சி நிரலின் மிகவும் உயர்ந்த வெளிப்பாடு, வாஷிங்டன், லொஸ் ஏஞ்சல்ஸ், சிக்காகோ மற்றும் பிற முக்கிய நகரங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக ஆயுதப்படைகளை நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் தாக்குதலாகும். பிரிட்டன் மட்டும் அல்ல, அமெரிக்காவுடனான அதன் “சிறப்பு உறவை” சார்ந்து, அதன் போர் நிகழ்ச்சி நிரலை மிகவும் உற்சாகமாக ஆதரிக்கும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இதைப் பின்பற்ற வேண்டும்,
இந்த வர்க்க கட்டாயங்களே ஸ்டார்மர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆணையிடுகின்றன. இதன் பொருள், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெறுப்பு மற்றும் அவமதிப்பிற்கு, ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு வலதை நோக்கிய ஒரு கூர்மையான சாய்வாக இருக்கும் என்பதாகும். பாலஸ்தீனிய நடவடிக்கை குழு மீதான தாக்குதல் என்பது, ஆழமான செல்வாக்கற்ற போர்களை நடத்துவதற்கும், அவற்றை நடத்துவதற்கு அவசியமான பாரிய சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக தவிர்க்கவியலாமல் வெடிக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய எதிர்ப்புக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறைக்கு களம் அமைக்கிறது.
மில்லியன் கணக்கானவர்கள் ஸ்டார்மர் அரசாங்கத்துடனும், பெருநிறுவனங்களுடனும், அது சேவையாற்றும் பெரும் செல்வந்தர்களுடனும் மோதலுக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த இயக்கத்திற்கு ஒரு அரசியல் வேலைத்திட்டம், அமைப்பு மற்றும் தலைமை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், சீர்திருத்த இங்கிலாந்து கட்சி (Reform UK) அதிகரித்து வரும் அதிருப்தியின் முக்கிய அரசியல் பயனாளியாக மாறும்.
சோசலிச சமத்துவக் கட்சி இடைவிடாது விளக்கியுள்ளபடி, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதும், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டமும் ஒரு புதிய போராட்ட அச்சை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதும் ஒவ்வொரு வேலையிடத்திலும், பல்கலைக்கழகத்திலும் மற்றும் சுற்றுப் புறங்களிலும் வர்க்கப் போராட்டத்தின் புதிய அமைப்புகளை உருவாக்குவதும் அவசியமாகும்.