மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்களன்று, பிரதமர் பிரான்சுவா பேய்ரூவின் சிறுபான்மை அரசாங்கம் வீழ்ந்த பிறகு, செவ்வாய் இரவு, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது நெருங்கிய கூட்டாளியான பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னுவை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் தனது ஐந்தாவது பிரதமராக நியமித்தார். பிரான்சின் இறையாண்மைக் கடனுக்கும் மற்றும் அதன் இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கும் நிதியளிக்க பேய்ரூ 44 பில்லியன் யூரோ சமூக வெட்டுக்களை முன்மொழிந்திருந்தார். இப்போது, ஒரு தொங்கு பாராளுமன்றம், பிளவுபட்ட வாக்காளர்கள் மற்றும் சாதனையாக 85 சதவீதமான மக்கள் மக்ரோனை ஏற்காத நிலையில், மற்றொரு பலவீனமான அரசாங்கத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அடுத்த வாரத்திற்கான போராட்ட வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரான்ஸ் எங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் “அனைத்தையும் முடக்கும்” போராட்டங்களில் வீதிகளில் இறங்குவதால் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. டெலிகிராம் செயலியில் ஒழுங்கமைக்கப்பட்ட உள்ளூர் போராட்டங்களின் இந்த தளர்வான கூட்டணி, முக்கிய உள்கட்டமைப்பை முற்றுகையிடவும் மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது. இந்தக் கோரிக்கையானது, மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரால் ஆதரிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி உள்துறை அமைச்சர் புரூனோ ரீடெயில்லோ 80,000ம் கலகத் தடுப்பு பொலிசாரை அணிதிரட்டி வருகிறார்.
முதலாளித்துவ தன்னலக்குழுவின் பாசிச ஆட்சி வடிவங்களை நோக்கிய உலகளாவிய திருப்பத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் நுழைந்து வருகிறது. வாஷிங்டன் மற்றும் சிக்காகோவை ஆக்கிரமிக்க இராணுவப் பிரிவுகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையிலும், பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம் காஸா இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பெருமளவில் கைது செய்யத் தொடங்கியுள்ள நிலையிலும், பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒரு போலீஸ் அரசை எதிர்கொள்கின்றனர். “அனைத்தையும் முடக்கு” என்ற அழைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் முழுப் பலத்தையும் அணிதிரட்டும் ஒரு பொது வேலைநிறுத்தம் மட்டுமே, சிக்கன நடவடிக்கை மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட முடியும் என்ற வளர்ந்து வரும் உணர்வை பிரதிபலிக்கின்றன.
முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டாமல் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற எந்த வழியும் கிடையாது. எவ்வாறெனினும், தற்போதுள்ள அரசியல் அமைப்புமுறையில் பொதிந்துள்ள எந்தவொரு அமைப்பிடமிருந்தும் அத்தகைய பிரதிபலிப்பை எதிர்பார்க்க முடியாது. போராடுவதற்கான ஒரு வழியைத் தேடும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் பொறுத்த வரையில், முதலாளித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில், சாமானிய தொழிலாளர்களிடையே புதிய போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவது என்பது முக்கிய பிரச்சினையாகும்.
ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரான போராட்டங்களை முடக்கிவரும் அமைப்புகளுடன் - எல்லாவற்றிற்கும் மேலாக, ஜோன்-லூக் மெலன்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணியிலுள்ள (NFP) கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் - ஒரு கணக்கீடு இருக்க வேண்டும். கடந்த செவ்வாய், அதன் தொழிற்சங்க அதிகாரிகள் நேற்றைய போராட்டங்களை ஆதரிக்க மறுத்துவந்த நிலையில், அதன் சமூக ஜனநாயக, பசுமை, மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக மக்ரோனுக்கு முந்தியடித்துக்கொண்டு வழங்க முன்வந்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை.
மெலோன்சோன் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகளை ஆதரித்து, மக்ரோன் இராஜினாமா செய்யக் கோரி, ஒரு தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எவ்வாறெனினும், ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே தொழிலாளர்களின் போராட்டங்களை அவர் பயன்படுத்த முன்மொழிகிறார். பேய்ரூவின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒரு முதன்மை நேர தொலைக்காட்சி நேர்காணலில் அவர் கூறியதைப் போல, மக்ரோன் வீழ்ச்சியடைந்த பிறகு, “இந்த நாட்டின் நல்ல மக்கள், தொழில்முனைவோருக்கு.... என்ன நடக்கும் என்பதைப் பற்றிய தெரிவுநிலையை” கொடுக்க வேண்டும் என்ற புதிய கொள்கைகளை மெலோன்சோன் விரும்புகிறார்.
இது, தொழிலாளர்களுக்கு ஒரு அரசியல் பொறியாகும். பேய்ரூவுக்குப் பின்னர் பதவிக்கு வரும் எந்த முதலாளித்துவ அரசாங்கமும் வெளிநாடுகளில் போர் தொடுக்கும். அதேநேரம், உள்நாட்டில் சர்வாதிகாரம் மற்றும் வர்க்கப் போரால் ஆட்சி செய்யும். ட்ரம்பின் வர்த்தகப் போரின் அழுத்தத்தின் கீழ், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொண்டு போருக்குள் மூழ்கி வருகிறது. வங்கிகள் பிரான்ஸை, அதன் பிரமாண்டமான கடனை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 சதவீதம்) ஆழமான சிக்கன நடவடிக்கைகள் மூலமாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கோருகின்றன.
பிரெஞ்சு அரசின் வருடாந்திர வரி வருவாய் 330 பில்லியன் யூரோவைக் கொண்டுள்ளது. அதன் செலவினங்களில் 71 சதவிகிதம் ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் குடும்ப நலன்கள் போன்ற சமூக நலன்களுக்கு செலவிடப்படுகிறது. ஆனால், இராணுவத்திற்காக கூடுதலாக 100 பில்லியன் யூரோக்கள், கடனுக்கான வட்டியாக 100 பில்லியன் யூரோக்கள், மற்றும் பிரான்சின் கடனை அடைப்பதற்காக இன்னும் பல பில்லியன் யூரோக்களை செலவிட பாரிஸ் சூளுரைத்துள்ளது. இதன் அர்த்தம், சமூக வேலைத்திட்டங்களை ஏறத்தாழ ஒழித்துக்கட்டுவதும், இதனால் தூண்டப்படும் பாரிய எதிர்ப்பை நசுக்குவதற்கு ஒரு பாசிச போலிஸ் அரசைக் கட்டியெழுப்புவதும் ஆகும்.
முதலாளித்துவ வர்க்கம் அத்தகைய திட்டங்களை வகுத்து வருகிறது. உண்மையில், நவ-பாசிச தேசிய பேரணிக் கட்சியின் (RN) தலைவரான ஜோர்டான் பார்டெல்லா சமீபத்தில் பிரான்சின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். வெளிநாட்டினரிடமிருந்து பிரெஞ்சு மக்களைப் பாதுகாப்பது குறித்த RN இன் சிடுமூஞ்சித்தனமான, மற்றும் வெளிநாட்டினரை வெறுக்கும் சொல்லாட்சியை நிராகரித்த அவர், ஒழுங்கை மீட்டெடுக்கவும் சமூக செலவினங்களை 44 பில்லியன் அல்ல, 100 பில்லியன் யூரோக்களாக வெட்டிக் குறைக்கவும் RN சிறந்த இடத்தில் உள்ளது என்று வெளிப்படையாக முன்வைத்தார்.
எவ்வாறெனினும், மெலோன்சோன் ஜனாதிபதியானாலும் கூட அவரது கொள்கை, அடிப்படையில் வேறுபட்டதாக இருக்கப் போவதில்லை. உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கும், போலிஸை வலுப்படுத்துவதற்கும், முதலாளித்துவ சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம் சூளுரைக்கிறது. அதிகாரத்தில் இருக்கும்போது, அது விரைவில் பிரெஞ்சு முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அதன் நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கு மிருகத்தனமான அடக்குமுறையை நாடும்.
புதிய மக்கள் முன்னணியின் கிரேக்க துணை அமைப்பான சிரிசாவின் (SYRIZA) (”தீவிர இடதுகளின் கூட்டணி”) பாத்திரத்தை ஒருவர் நினைவுகூர வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாக்குறுதிகளின் பேரில் 2015 இல் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிசா, கிரேக்கக் கடனுக்கு எதிரான நிதியியல் ஊகங்களுக்கு சரணடைவதன் மூலமும், ஆழமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலமும், அகதிகளுக்காக சித்திரவதை முகாம்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும் பதிலளித்தது.
ஒரு வரலாற்று திருப்புமுனையில் தன்னைக் காண்கின்ற தொழிலாள வர்க்கம், 1930 களின் படிப்பினைகளையும் பாசிசத்தின் எழுச்சிக்கு எதிரான தனது போராட்டங்களையும் அவசரமாக கற்றுக்கொள்வது அவசியமானது. அதற்கு முன்னால், இரண்டு தெளிவான மாற்று வழிகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, முதலாளித்துவ தன்னலக்குழு தொழிலாள வர்க்கத்தை நசுக்க ஒரு பாசிச சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது, அல்லது தொழிலாள வர்க்கம் தன்னலக்குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்துகிறது. இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் இறுக்கமான தளைகளை உடைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க அர்ப்பணிக்கப்பட்ட உண்மையான, சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது (IWA-RFC), அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து அதிகாரத்தை மாற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறது. பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் இத்தகைய புதிய வடிவிலான வர்க்க அமைப்பு, பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவின் பாசிசம், இனப்படுகொலை மற்றும் போர் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், அதனைத் தோற்கடிக்கவும் அவசியமாக இருக்கிறது.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கு ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கு, தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் தாக்குதலை நடத்தக்கூடிய பின்வரும் கோரிக்கைகளை சோசலிச சமத்துவ கட்சி முன்வைக்கிறது:
பொதுப் பிணையெடுப்பு நிதிகளைப் பறிமுதல் செய், முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்!
சமூக வேலைத் திட்டங்களுக்கும், தொழில்களுக்கும் பணம் இல்லை என்ற பொய்யை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள முதலாளித்துவ தன்னலக்குழுக்களால் ஏகபோகமாக கொண்டிருக்கும் டிரில்லியன் கணக்கான யூரோ பொது நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, இவற்றை வேலைகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், ஐரோப்பாவின் பிரதான நிறுவனங்களை மக்களின் நலன்களுக்கு சேவை செய்யும் பொதுப் பயன்பாடுகளின் ஒரு வலையமைப்பாக மாற்றுவதற்கும் தொழிலாள வர்க்கம் நடத்தும் ஒரு போராட்டம் அவசியமாகும்.
மக்ரோனை வீழ்த்தி, ஐந்தாவது குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழி!
பிரெஞ்சு முதலாளித்துவம் போலிஸ் அடக்குமுறை மற்றும் வேலைநிறுத்தக்காரர்களை பாரியளவில் கைது செய்வதன் மூலம் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறது. ஜனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டங்களின் நரம்பு மையமாக விளங்கும் பிரான்சின் 1958 அரசியலமைப்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். இறுதியில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது அவசியமாகும்: ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இருக்க முடியாது என்பதைப் போலவே, சோசலிசம் இல்லாமல் எந்த ஜனநாயகமும் இருக்க முடியாது.
ஏகாதிபத்திய போர் வேண்டாம், நேட்டோவை கலை! இராணுவக் கட்டமைப்புக்கு முற்றுப்புள்ளி வை!
பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட, உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். நேட்டோவை தகர்த்து அதன் போர்களை முடிவுக்குக் கொண்டுவர தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போரைத் தூண்ட அச்சுறுத்தும் ஏகாதிபத்திய நேட்டோ கூட்டணியிலிருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டும். “அதிக தீவிரமான போருக்கு” அதாவது ரஷ்ய மற்றும் உக்ரேனிய சிப்பாய்களின் தற்போதைய சகோதரத்துவ படுகொலையைப் போல, பாரிய படுகொலைகளுக்கான இராணுவ செலவின அதிகரிப்புக்கு ஒரு பைசா கூட செல்லக்கூடாது.
காஸா இனப்படுகொலையை நிறுத்து! இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை துன்புறுத்தக் கூடாது!
பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதையும், விநியோகிப்பதையும் தடுக்க வேண்டும். போலி பயங்கரவாத எதிர்ப்பு அல்லது யூத எதிர்ப்புவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு பொறுப்பான இஸ்ரேலிய அதிகாரிகள், அதற்கு உடந்தையாக இருந்துவரும் பிரெஞ்சு மற்றும் நேட்டோ அதிகாரிகளைப் போன்றவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தலை நிறுத்து! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!
சோசலிசத்திற்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். புலம்பெயர்ந்தோர் துன்புறுத்தப்படுவதையும், அகதிகளுக்காக பாரிய தடுப்பு முகாம்களை அமைப்பதையும், பிரெஞ்சு பள்ளிகளில் முஸ்லீம் ஆடைகளை தடை செய்வது போன்ற அவமானகரமான சட்டங்களையும் தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். தொழிலாளர்களை தேசிய வழிகளில் பிளவுபடுத்துவதற்கும், அதன் மூலம் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு ஐரோப்பிய போராட்டத்தை தடுப்பதற்கும் ஆளும் உயரடுக்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளை முறியடிப்பதற்கு இது இன்றியமையாததாகும்.
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக!
பிரான்சில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் போர், பாசிசம், இனப்படுகொலை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடையே சக்திவாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளனர். அதிகாரத்துவத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்குத் தடையாக நிற்பார்கள். பிரான்சிலும், ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும், முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளால் மாற்றுவதற்கும், தொழிலாளர்கள் போராட்டத்திற்கான சாமானிய அமைப்புகளையும் ஒரு அரசியல் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.