முன்னோக்கு

போலந்தின் மீது ஆளில்லா விமானங்கள் சுட்டு சுட்டுவீழ்த்தப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய வல்லரசுகள் ரஷ்யாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், போலந்தின் வோஹின் நகரில் உள்ள ஒரு இடத்தில் போலந்து அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்களின் சேதமடைந்த பொருட்களின் பாகங்களை பொலிஸ் மற்றும் இராணுவ பொலிசார் சேகரிக்கின்றனர். செப்டம்பர் 10, 2025, புதன்கிழமை [AP Photo/Rafal Niedzielski]

கடந்த புதன்கிழமையன்று, போலந்து மற்றும் டச்சு போர் விமானங்கள் போலந்து பிரதேசத்தின் மீது பறந்ததாகக் கூறப்படும் ஆளில்லா விமானங்களின் அணியை சுட்டு வீழ்த்தின. இது, நேட்டோ உறுப்பு நாடு ஒன்று, ரஷ்ய இராணுவ உடைமைகள் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்திய முதல் நிகழ்வாகும்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிலைமை வெளிப்படையான மோதலுக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டு வருகிறது” என்று பிரதமர் டொனால்ட் டஸ்க் நேற்று போலந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நேட்டோ ஒப்பந்தத்தின் 4 வது பிரிவின் கீழ் அவரது அரசாங்கம் இது தொடர்பாக ஆலோசனை நடத்துமாறு கோரியுள்ளது.

நேட்டோ உறுப்பு நாடு ஒன்று, தன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாட நேட்டோ உறுப்பு நாடுகளை பிரிவு 4 கட்டாயப்படுத்துகிறது. 76 ஆண்டுகால நேட்டோ இராணுவக் கூட்டணி வரலாற்றில், ஏழு முறை மட்டுமே இது செயல்படுத்தப்பட்டுள்ளது. போர் ஏற்பட்டால் நேட்டோ நாடுகள் பரஸ்பர உதவியை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிரிவு 5 இன் முன்னோடியாக இது உள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடனான ஒரு வெளிப்படையான மோதல் தவிர்க்க முடியாதது என்று பிரதமர் டஸ்க்கும் அவரது நேட்டோ சகாக்களும் உறுதியாக நம்புகிறார்கள் என்றால், அத்தகைய பேரழிவைத் தடுப்பதற்கு அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் ஏன் செய்யவில்லை?

1962 ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது, உலகம் முன்னெப்போதையும் விட அணு ஆயுத மோதலுக்கு மிக அருகில் இருந்தது. அப்போது, ​​அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி மிகப்பெரிய ஆபத்தான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், இறுதியில் அவர் தனது இராணுவத்தில் இருந்த சவால்களை முறியடித்து ஒரு இராஜதந்திர தீர்வைக் கண்டார்.

ஆனால் இன்று, நேட்டோவின் முன்னணி பிரதிநிதிகள் மத்தியில் மிதவாதத்தின் ஒரு குரல் கூட இல்லை. போலந்து மற்றும் டச்சு போர் விமானங்களும் ஜேர்மன் பேட்ரியாட் ஏவுகணைகளும், இத்தாலிய AWACS கண்காணிப்பு விமானங்களின் ஆதரவுடன், போலந்து வான்வெளியில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, போர் வாய்வீச்சுக்களில் அவை ஒன்றையொன்று விஞ்சத் தொடங்கின.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, போலந்து வான்வெளியை ரஷ்யா மீறியதாக குற்றம் சாட்டினார். “அது வேண்டுமென்றே செய்யப்பட்டதோ இல்லையோ, அது முற்றிலும் பொறுப்பற்றது, அது முற்றிலும் ஆபத்தானது” என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகார பிரதிநிதியும் முன்னாள் எஸ்தோனிய பிரதம மந்திரியுமான காஜா கல்லாஸ், “போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவால் ஐரோப்பிய வான்வெளியில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான இந்த மீறல், தற்செயலானது அல்ல, வேண்டுமென்றே செய்யப்பட்டது” என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “போலந்து வான்வெளியை பொறுப்பற்ற மற்றும் முன்னொருபோதும் இல்லாத வகையில் மீறியதற்காக” ரஷ்யாவை கண்டனம் செய்தார். உக்ரேனுக்கு அதன் சொந்த ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்காக முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் மீதான வட்டியில் இருந்து 6 பில்லியன் யூரோக்களை வழங்குவதுக்கு அவர் உறுதியளித்தார்.

பிரிட்டனின் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், “ரஷ்ய ஆளில்லா விமானங்கள், போலந்து மற்றும் நேட்டோ வான்வெளியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அத்துமீறி பறந்ததை மிகவும் கவலைக்குரியதாகவும், மிகவும் பொறுப்பற்ற நடவடிக்கையாகவும்” கண்டித்தார். மேலும் அவர் போலந்து பிரதமர் டஸ்க்கிற்கு பிரிட்டனின் ஆதரவை உறுதியளித்தார்.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், 19 க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் “வெளிப்படையாக பெலாரஸ் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்டிருக்கின்றன” என்று பாராளுமன்றத்தில் கூறினார். “இவை நிச்சயமாக பிழையான பாதையில் வந்துள்ளன என்று சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை,” இந்த ஆளில்லா விமானங்கள் வேண்டுமென்றே இந்த பாதையில் அமைக்கப்பட்டிருந்தன என்பது தெளிவாகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்ய ஆயுதப் படைகள் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், மேலும் நேட்டோ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த செய்தியை குறிப்பிடுவதாக உறுதியளித்தார்.

இந்த சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் முற்றிலும் தெளிவாக இல்லை. ட்ரோன்களின் எண்ணிக்கையோ அல்லது அவற்றின் தோற்றமோ தெரியவில்லை. போலந்து வான்வெளியில் நுழைந்த 19 ஆளில்லா விமானங்கள் பற்றி டஸ்க் பேசிய அதேவேளை, மூன்று அல்லது நான்கு மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வலதுசாரி கடும்போக்காளரான போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி கூட, இன்னும் 48 மணி நேரத்திற்குள் இந்த நிகழ்வுகள் குறித்த முழுமையான தகவல்கள் தனக்குக் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் போலந்தில் உள்ள எந்த இலக்குகளையும் தாக்கும் நோக்கத்தை மறுத்ததுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் போலந்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்தாலோசிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் கூறியது. கடந்த காலத்தில், உக்ரேன் போரில் இருந்து ஆளில்லா விமானங்கள் போலந்துக்குள் வழிதவறி வந்தபோதும் கூட, நேட்டோ ரஷ்யாவை எந்த நோக்கத்திலும் குற்றம் சாட்டவில்லை.

போலந்தின் எல்லையில் உள்ள நாடான பெலாரஸின் துணை பாதுகாப்பு அமைச்சர் பாவெல் முராவிகா கூறுகையில், இந்த ஆளில்லா விமானங்களின் வழிசெலுத்தல் அமைப்பு தற்செயலாக சீர்குலைந்ததால், போலந்து வான்வெளியில் அவை நுழைந்தன என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆளில்லா விமானங்கள் தங்கள் திசையை இழந்துவிட்டபோது, பெலாரஸ் தனது எல்லைக்குள் வைத்து இவற்றை சுட்டு வீழ்த்தியது. உக்ரேனில் நடந்துவரும் போரில் GPS சிக்னல்களை சீர்குலைப்பது என்பது ஒரு பொதுவான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், நேட்டோ கூறும் அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆளில்லா விமானங்கள், நேட்டோ இராணுவக் கூட்டணிக்கு ஒரு தீவிர இராணுவ அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை. மாறாக, ஐரோப்பிய நேட்டோ சக்திகள் ரஷ்யாவுக்கு எதிரான மேலதிக இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும், அவற்றை தாங்களாகவே செயல்படுத்துவதற்கான திறனை நிரூபிப்பதற்கும், இந்த நடவடிக்கையை தயாரிப்பு செய்து ஓரளவு அரங்கேற்றியுள்ளன என்பதையே இந்த சூழ்நிலைகள் காட்டுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அலாஸ்காவில் சந்தித்ததில் இருந்து, ஐரோப்பிய வல்லரசுகள் இத்தகைய வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. அலாஸ்கா உச்சிமாநாட்டில் இருந்து, அமெரிக்காவை இனியும் நம்ப முடியாது என்று முடிவு செய்து, ரஷ்யாவிற்கு எதிராக அதிகளவில் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை இவை எடுத்து வருகின்றன. இந்த வல்லரசுகள், உக்ரேனுக்கான நிதி மற்றும் இராணுவ ஆதரவை பெருமளவில் அதிகரித்துள்ளன. ரஷ்யாவிற்குள் ஆழ ஊடுருவி இலக்குகளைத் தாக்க உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஊக்குவித்து வரும் இவர்கள், உக்ரேனுக்கு மேலும் தங்கள் சொந்த துருப்புக்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு செய்வதன் மூலம், மனிதகுலத்தின் உயிர் வாழ்வை அச்சுறுத்தும் ஒரு பேரழிவை நோக்கி, இவர்கள் இன்னும் நெருங்கி வருகிறார்கள். இந்த பைத்தியக்காரத்தனம் ஒரு சர்வதேச வடிவத்தைப் பின்பற்றுகிறது. அரசியல் நெருக்கடிகளும் வன்முறையும் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகம், சமூகப் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவை காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில், ஜனாதிபதி ட்ரம்ப் பாதுகாப்புத் துறையை “போர் துறை” என்று மறுபெயரிட்டுள்ளார் —மேலும் “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவதற்காக” அவர் பொய் சொல்லவில்லை — அதாவது, அமெரிக்க தன்னலக்குழுக்களின் இலாபத்தைப் பாதுகாக்க, அவர் ஒட்டுமொத்த உலகையும் தண்டனைக்குரிய சுங்கவரிகள் மற்றும் போர் அச்சுறுத்தல்களால் மூடி மறைத்து வருகிறார்.

உள்நாட்டில், அவர் ஒரு அடக்குமுறை சர்வாதிகாரத்தை ஸ்தாபித்து வருகிறார்: நாஜிக்களின் கெஸ்டபோ பொலிஸ் துறையான குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) புலம்பெயர்ந்தோரை வேட்டையாடி வருகிறது. தேசிய காவல்படை மற்றும் இராணுவம் “சமூக அமைதியின்மையை” அதாவது வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எந்த வகையான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதற்காக பெரிய நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.

அனைத்து சட்ட மற்றும் தார்மீக நெறிகளையும் மீறி வருகின்ற இஸ்ரேலின் சியோனிச ஆட்சி, 2 மில்லியன் மக்களைக் கொண்ட காஸா பகுதியை அழித்து வருகிறது. கட்டாரை தண்டனையின்றி தாக்குகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவையும் பெற்று வருகிறது. இதற்கு எதிராக, எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் “யூத-விரோதி” என்று துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.

ஐரோப்பாவும் அமெரிக்காவைப் போலவே அதே பாதையை பின்பற்றுகிறது. நூற்றுக்கணக்கான பில்லியன்களை மீள் ஆயுதமயமாக்கல் மற்றும் போருக்கு மறு ஒதுக்கீடு செய்வது, வெடிக்கும் கடன்களை திருப்பிச் செலுத்துவது, மற்றும் ஒரு சிலரை மட்டும் வளப்படுத்துவது ஆகியவை சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயகத்துடன் ஒருபோதும் பொருந்திப் போகாது. ஐரோப்பிய வல்லரசுகள், ரஷ்யாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் அதே இரக்கமற்ற தன்மையுடன், அவர்கள் தங்கள் சொந்த தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி வருகின்றார்கள். போரும், வர்க்கப் போராட்டமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்து வருகின்றன.

1938 இல், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக பின்வருமாறு எழுதினார்:

முதலாளித்துவ சிதைவின் அதிகரித்து வரும் பதட்டத்தின் கீழ், ஏகாதிபத்திய குரோதங்கள் ஒரு முட்டுச்சந்தை அடைந்து வருகின்றன. அதன் உச்சத்தில் தனித்தனி மோதல்கள் மற்றும் இரத்தக்களரி உள்ளூர் கலவரங்கள் (எத்தியோப்பியா, ஸ்பெயின், தூர கிழக்கு, மத்திய ஐரோப்பா) தவிர்க்க முடியாமல் உலக அளவிலான பெரும் நெருப்புத் தாக்குதலாக ஒன்றிணைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ வர்க்கம், நிச்சயமாக, ஒரு புதிய யுத்தத்தால் அதன் மேலாதிக்கத்திற்கு ஏற்படும் மரண ஆபத்தை அறிந்திருக்கிறது. ஆனால் இந்த வர்க்கமானது, இன்று 1914 க்கு முந்தைய காலத்தை விட போரைத் தடுக்கும் திறனை குறைவாகவே கொண்டுள்ளது.

முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் ஏகாதிபத்திய குரோதங்கள் இன்று மீண்டும் அதே உச்சத்தை எட்டியுள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு இதுவே காரணமாகும். பரந்த மக்களிடையே இந்தப் போருக்கு எந்த ஆதரவும் இல்லை. மேலும் பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள், சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்திடையே எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.

இந்த வெடிப்பார்ந்த எதிர்ப்பானது, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் வலதுசாரி மற்றும் “இடதுசாரி” என்று கூறப்படும் அத்தனை கட்சிகளின் செல்வாக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்காக போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம்தான் போர், சர்வாதிகாரம் மற்றும் வறுமைக்குள் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்தும் தகமையைக் கொண்டிருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சிகளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்த முன்னோக்குக்காக போராடி வருகின்றன.

Loading