பாசிச ட்ரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் துப்பாக்கிதாரியால் கொலை செய்யப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

செப்டம்பர் 10, 2025 அன்று படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு சார்லி கிர்க்.

கடந்த புதன்கிழமை பிற்பகல், 31 வயதான பாசிச ட்ரம்ப் ஆதரவு அரசியல் செயல்பாட்டாளர் சார்லி கிர்க் ( Charlie Kirk ), உட்டாவின் ஓரெமில் உள்ள உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாக திறந்தவெளியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிர்க், கல்லூரி வளாகங்களில் வெள்ளையர் மேலாதிக்கத்தையும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடதுசாரிகள் மீதான வெறுப்பையும் ஊக்குவிக்கும் ஒரு பாசிச இளைஞர் குழுவின் அமைப்பான திருப்புமுனை அமெரிக்காவின் (Turning Point USA) நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார். கிர்க், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் முதன்மைப் பேச்சாளராகப் பங்கேற்றது உட்பட, ட்ரம்பின் 2024 தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த பிறகு, புதிய நிர்வாகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த ஆலோசகரானார். மேலும், ட்ரம்பின் பாசிச “முகாமிற்கு” அமைச்சரவை வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர்களை பரிசோதித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் சூழ்நிலைகள் குறித்து உட்டா பொலிசார் மற்றும் அதிகாரிகள் இதுவரை மிகக் குறைந்த தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கங்கள் குறித்து எதுவும் வெளியிடவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவலில் இருப்பதாக FBI இயக்குநர் காஷ் படேல் கூறியிருந்தாலும், உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் தங்களிடம் “தேடப்படும் நபர்” ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கேள்விகள் கேட்டு, மேலும் விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் இதுபோன்று நடைபெற இருந்த ஒரு டசின் பொதுக் கூட்டங்களில் முதலாவதாக இருந்தது. இந்த கூட்டங்களில். ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள், குறிப்பாக புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை ஆகியவற்றை கிர்க் பாதுகாக்க இருந்தார். செப்டம்பர் 25 அன்று, டார்ட்மவுத் கல்லூரியில் ஹசன் பைக்கருடன் ஒரு விவாதம் நடத்துவதும் இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.

கிர்க்கின் மரணம் குறித்த முதல் பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், சமூக ஊடகங்களில் “சிறந்த, மற்றும் புகழ்பெற்ற, சார்லி கிர்க், இறந்துவிட்டார்” என்று பதிவிட்டார். மேலும், “அவர் அனைவராலும், குறிப்பாக என்னாலும் நேசிக்கப்பட்டு போற்றப்பட்டார், இப்போது அவர் நம்முடன் இல்லை” என்று கூறினார்.

கடந்த புதன்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் இருந்து வழங்கப்பட்ட ஒரு பாசிச அறிக்கையில், ட்ரம்ப் “தீவிர இடதுகளை” கண்டனம் செய்தார், இது, “நமது நாட்டில் நாம் காணும் பயங்கரவாதத்திற்கு நேரடி பொறுப்பாகும், இது இப்போதே நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவில் அதி தீவிர வலதுசாரிகளின் வன்முறை அதிகரிப்பதை நியாயப்படுத்தவும், தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், இந்த துப்பாக்கிச் சூட்டைப் பயன்படுத்திக் கொண்டு கிர்க்கை தியாகியாக மாற்றவும், ட்ரம்ப் தெளிவாக தேசிய தொலைக்காட்சிக்கு சென்றார். இது, யாரும் கைது செய்யப்படாத சூழ்நிலையிலும், கொலையாளி குறித்து உண்மையான தகவல் இல்லாத சூழ்நிலையிலும் நடைபெறுகிறது.

பொதுச் சேவையில் எந்தப் பதிவும் இல்லாத, ஆனால் மிகவும் அருவருப்பான வெறுப்புப் பேச்சு மற்றும் இனவெறிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவருக்கு அசாதாரணமாக, விதிவிலக்கான முறையில் துக்கத்தின் அடையாளமாக, அமெரிக்கா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வரை கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட ட்ரம்ப் உத்தரவிட்டார். கிர்க் நிச்சயமாக அத்தகைய கௌரவத்தைப் பெற்ற முதல் முழுமையான பாசிசவாதி ஆவார்.

துக்கம் மற்றும் வருத்தம் பற்றி வெளிவந்த பெரும்பாலான அதிகாரப்பூர்வ அறிக்கைகள், கிர்க் ஒப்பீட்டளவில் இளம் வயதினராக இருப்பதையும், அவர் இரண்டு இளம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார் என்பதையும் குறிப்பிடுகின்றன. கில்மர் அப்ரிகோ கார்சியா (இவர் அமெரிக்க குடிமகளான மனைவிக்கு மூன்று குழந்தைகளைக் கொண்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்) மற்றும் மஹ்மூத் கலீல் (இவரது முதல் குழந்தையின் பிறப்புக்காக தனது மனைவியுடன் இருக்க கருணை விடுதலைக்கு மறுக்கப்பட்டவர்) போன்ற குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க குண்டர்களின் கைகளில் காணாமல் போன மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற எந்த அக்கறைக் குரல்களும் எழுப்பப்படவில்லை.

இதுவரை ஒரு துளி ஆதாரத்தையும் முன்வைக்காமல், உட்டாவிலுள்ள குடியரசுக் கட்சி, இந்த துப்பாக்கிச் சூட்டை அரசியல் நோக்கம் கொண்ட இடதுசாரி வன்முறை என்று வகைப்படுத்திக் கூறியது. அதன் அறிக்கையானது, “சார்லி கிர்க் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான இந்த தாக்குதல் வெறுமனே தீயது. தீவிர தீவிரவாதிகளால் பரப்பப்படும் வெறுப்பு, வன்முறை மற்றும் தீமைக்கு இந்த நாட்டில் இடமில்லை! பள்ளிகளும் சமூக ஊடகங்களும் இடதுசாரி வெறுப்பின் மையங்களாக மாறிவிட்டன. இது போதும் போதும்!” என்று குறிப்பிட்டது.

தீவிர வலதுசாரி மற்றும் பாசிச வர்ணனையாளர்கள் கிர்க்கின் படுகொலை குறித்து, “தாராளவாதிகளும்”, “தீவிரவாதிகளும்,” ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க சமுதாயத்திற்கு எதிராகவும் ஒரு வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறினர். பில்லியனர் எலோன் மஸ்க், “இடதுசாரிகள் படுகொலை செய்யும் கட்சியினர்” என்று ட்வீட் செய்தார்.

உண்மையில், சமீபத்திய ஆண்டுகளில் தீவிர வலதுசாரி வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றபோது நடந்த பாசிச தாக்குதலாகும். ஏராளமான ஆயுதமேந்திய பாசிஸ்டுகள் அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் தூண்டப்பட்ட படுகொலைகளை நடத்தியுள்ளனர்.

மினசோட்டாவில் ஜனநாயகக் கட்சியின் மாநில சட்டமன்றத் தலைவர் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்டதையும், பென்சில்வேனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநரின் வீட்டின் மீது தீ வைத்து தாக்குதல் மேற்கொண்டதையும் தொடர்ந்து, கிர்க்கின் படுகொலை நிகழ்ந்துள்ளது. வாஷிங்டன் அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள ட்ரம்பினது எதிர்ப்பாளர்கள் முதல், துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க அல்லது வேலை தேடி அமெரிக்காவிற்கு வந்த மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரையிலான இலக்குகளுக்கு எதிராக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் இடைவிடாத வன்முறை, சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இது வந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் பதில் கோழைத்தனமாகவும், இந்த தீவிர வலதுசாரிக் கட்டுக்கதைக்கு உடந்தையாகவும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடென், முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் உட்பட முன்னணி ஜனநாயகக் கட்சியினர் அனைவரும் அனுதாப அறிக்கைகளை வெளியிட்டனர். சாண்டர்ஸ் எக்ஸ் / ட்விட்டரில், “இந்த நாட்டில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை” என்றும், “எனது எண்ணங்கள் சார்லி கிர்க் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன” என்றும் எழுதினார்.

”இது கவின் நியூசம்” நிகழ்ச்சியில், கவின் நியூஸம் சார்லி கிர்க்கிடம் அவர் 10,000 நாடுகடத்தல்களை ICE உடன் ஒருங்கிணைத்துள்ளார் என்று பெருமை பேசுகிறார். மார்ச் 6, 2025. [Photo: Gavin Newsom]

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் கிர்க்கின் கொலையை “அருவருப்பான, இழிவான மற்றும் கண்டிக்கத்தக்கது” என்று அழைத்தார். நியூசோம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது சொந்த போட்காஸ்டில் கிர்க்கை விருந்தினராக அழைத்து நேர்காணல் செய்தார். இது பாசிச ஸ்டீவ் பானனுக்கு ஒரு அன்பான வரவேற்பை உள்ளடக்கிய, அதி தீவிர வலதுசாரிகளுடன் பொதுவான தளத்தைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

கிர்க் கொலை செய்யப்பட்டதற்கும், அதிலிருந்து அரசியல்ரீதியாக ஆதாயம் அடைவதற்கான பாசிஸ்டுக்களின் முயற்சிக்கும் மிகவும் கீழ்த்தரமான எதிர்வினை, ஜனநாயகக் கட்சியின் அரை-உத்தியோகபூர்வ குரலான நியூ யோர்க் டைம்ஸிடம் இருந்து வந்தது. படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குள், இந்த செய்தித்தாளின் வலைத் தளத்தில் “அமெரிக்கா சார்லி கிர்க்கிற்கு துக்கம் அனுசரிக்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. (இந்த தலைப்பு பின்னர் “சார்லி கிர்க்கின் கொடூரமான கொலை மற்றும் அமெரிக்காவின் மோசமடைந்து வரும் அரசியல் வன்முறை” என்று மாற்றப்பட்டது.)

இந்தப் படுகொலையை கண்டனம் செய்வது அரசியல் ரீதியாக பொருத்தமானது. இது, முற்போக்கான எதையும் சாதிக்கவில்லை. உண்மையில் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை, ஜனநாயக உரிமைகளைத் தாக்கி, ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு இது உதவுகிறது. ஆனால், இது பாதிக்கப்பட்டவரை மகிமைப்படுத்தவோ அல்லது அவரது அரசியல் முன்னோக்கின் இரத்தவெறி, மதவெறித்தனமான தன்மையை மறைக்கவோ ஒரு காரணமல்ல.

டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர்கள், “இத்தகைய வன்முறை அமெரிக்காவுக்கு எதிரானது” என்று கூறுகின்றனர். மாறாக இது, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், இன சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர்கள் அல்லது ஆபத்தான அல்லது வெறுமனே அசௌகரியமானதாகக் கருதப்படும் அரசியல் பிரமுகர்களை இலக்காகக் கொண்டாலும், இத்தகைய வன்முறை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கையிருப்பில் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி வெனிசுலா மீன்பிடி படகில் இருந்த 11 பேரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி, எரித்துக் கொல்ல உத்தரவிட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை.

கிர்க் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் இரண்டும் அவரை மகிமைப்படுத்துவது, கிட்டத்தட்ட ஒப்பிடமுடியாத மோசமான அரசியல் பதிவை மறைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த தசாப்தத்தில், சார்லி கிர்க் இனவாதம், மதவெறி மற்றும் பாசிசத்தை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு, பில்லியனர் ரிச்சர்ட் உய்ஹ்லைனின் நிதியுதவியுடன் திருப்புமுனை அமெரிக்கா என்ற குழுவை உருவாக்கினார்.

ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கேப்பிடோல் மீதான தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடைந்த “திருடுவதை நிறுத்து” பேரணியின் முக்கிய அமைப்பாளராக கிர்க் இருந்தார். புலம்பெயர்தல் மூலம் வெள்ளை மக்களை “மாற்றுவதற்கு” யூத கோடீஸ்வரர்கள் சதி செய்கிறார்கள் என்று கூறும் நவ நாஜிக்களின் “பெரிய மாற்றுக்” கோட்பாட்டை உரத்து வாதிடுபவர்களில் கிர்க்கும் ஒருவர். அரிசோனாவில் நடைபெற்ற 2023 திருப்புமுனை குழுவினரின் பேரணியில், புலம்பெயர்ந்தோரால் மினியாபோலிஸ் “அழிக்கப்பட்டது” என்று அவர் கோஷமிட்டார். நகரத்தை “பெரிய மாற்றுக்” கோட்பாட்டுக்கான சரியான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.

இந்த ஆண்டு மட்டும், வன்முறை மற்றும் பிற்போக்குவாத அரசியலுடன் அமெரிக்காவின் தொடர்புகள் தெளிவாகத் தெரிகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்த அமைப்பின் ஒரு உறுப்பினர் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். சிறிது காலத்துக்கு பிறகு, டெக்சாஸில் வெள்ளத்தால் ஏற்பட்ட மரணங்களை கிர்க் பயன்படுத்திக் கொண்டு இன வெறுப்பைத் தூண்டினார், இந்த சோகத்திற்கு ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க அதிகாரியைக் குற்றம் சாட்ட அவரது போட் காஸ்டைப் (podcast) பயன்படுத்திக் கொண்டார்.

Loading