சோசலிச சமத்துவக் கட்சி (துருக்கி) உருவாக்கம் குறித்த காணொளி அறிவிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சி (Sosyalist Eşitlik Partisi) – நான்காம் அகிலம் (Dördüncü Enternasyonal), 2025 ஜூன் 13–15 தேதிகளில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியது. கட்சியின் அதிகாரப்பூர்வ உருவாக்க செயல்முறை ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. காங்கிரஸ் ஒருமனதாக மூன்று தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது: “கோட்பாடுகளின் அறிக்கை” (உத்தியோகபூர்வ திட்டம்), “சோசலிச சமத்துவக் கட்சி - நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள்” மற்றும் “அரசியலமைப்பு” ஆகியவை. சோசலிச சமத்துவக் கட்சியின் (துருக்கி) தேசியத் தலைவரான உலாஸ் செவின்க் வெளியிட்ட அறிவிப்பு காணொளியின் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே வெளியிடுகிறோம்.

துருக்கியும் உலகமும் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளன. இனப்படுகொலையும் பாசிசமும் இயல்பாக்கப்பட்டு வருகின்றன. அணுஆயுதப் போருக்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மைக்கு எந்த நம்பிக்கையையும் அல்லது எதிர்காலத்தையும் வழங்காத திவாலான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு மாற்றீடு இல்லை.

சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் இந்த பொய்யை நிராகரிக்கிறது. உண்மை என்னவென்றால், இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் மூலம் நாகரிகத்தை அழித்தொழிப்பதற்கு உந்தும் ஒரு முதலாளித்துவ அமைப்புமுறை. மற்றொன்று உலகளாவிய சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அமைப்புமுறையாகும்: அது சோசலிசம். மனிதகுலத்தின் நம்பிக்கையும் எதிர்காலமும் சோசலிசத்தில் உள்ளது.

இந்த ஒற்றை முற்போக்கான தேர்வை யதார்த்தமாக மாற்றுவதற்காகவே எங்கள் கட்சி நிறுவப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உற்பத்தி மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் மூலம் ஐக்கியப்பட்டு, அனைத்து சமூக செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கம், அதன் சொந்த நலன்களைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணிதிரண்டு, உலகம் முழுவதும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் முறைகேடாக சம்பாதித்த செல்வவளம் தேசியமயமாக்கப்பட வேண்டும், உற்பத்தியின் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாடு ஸ்தாபிக்கப்பட வேண்டும், தனியார் இலாபத்தை அல்லாமல் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இதர அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் உள்ளது. நாம் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் பாகமாக இருக்கிறோம். நாம் சகல வடிவிலான தேசியவாதத்தையும் நிராகரித்து, உலகளவில் பொதுவான நலன்களையும் எதிரிகளையும் கொண்டுள்ள தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காக போராடுகிறோம். சமூகத்தில் அடிப்படைப் பிளவு வர்க்க அடிப்படையிலானது என்பதை உணர்ந்து, குட்டி-முதலாளித்துவ அடையாள அரசியலை நாங்கள் நிராகரிக்கிறோம்.

மனிதகுலம் முகங்கொடுக்கும் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளும் முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து எழும் உலகளாவிய பிரச்சினைகளாகும். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களில் ஒன்று உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடமையும், மற்றொன்று உலகத்தை பொருளாதார ரீதியாக காலாவதியாகிப் போன தேசிய அரசுகளாகப் பிரிப்பதாகவும் இருப்பதால், இதற்கான தீர்வுகளும் சர்வதேசிய ரீதியாக இருக்க வேண்டும். ஒரு சர்வதேச வர்க்கமாக இருக்கும் தொழிலாள வர்க்கம் மட்டுமே, இந்தத் தீர்வுகளைச் செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரேயொரு சமூக சக்தியாகும். ஒரு “பன்முக” முதலாளித்துவ உலகத்தைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியப் போருக்கும் இனப்படுகொலைக்கும் வழிவகுக்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கு மாற்றாக, எல்லைகளை ஒழித்துக்கட்டும் உலகத் தொழிலாளர் அரசுகளின் கூட்டமைப்பு இருக்கும்.

காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையானது, முதலாளித்துவ அமைப்பு முறையின் காட்டுமிராண்டித்தனத்தையும், அதைப் பாதுகாக்கும் அனைத்துக் கட்சிகளின் சிதைவையும் மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

இதர முக்கியமான பிரச்சினைகளைப் போலவே, பாலஸ்தீனிய பிரச்சினையும் தற்போதுள்ள முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்குள் தீர்க்கப்பட முடியாது என்பது தெளிவாகிவிட்டது. இது, ஒரு சர்வதேச பிரச்சினையாக இருக்கும் குர்திஷ் பிரச்சினைக்கும் பொருந்தும். இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே செல்லுபடியாகக்கூடிய, முற்போக்கான தீர்வு மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்பு ஆகும். அது, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை புரட்சிகரமாக அணிதிரட்டுவதன் மூலம் ஸ்தாபிக்கப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சி “குறைந்த தீமை” கொள்கையை ஐயத்திற்கிடமின்றி நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுகிறது. இதன் அர்த்தம், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அடிபணியச் செய்யும் வர்க்க-ஒத்துழைப்புவாத “மக்கள் முன்னணி” அரசியலை அடியோடு நிராகரிப்பதாகும்.

அவற்றின் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் இரண்டு அடிப்படை பிரச்சினைகளில் முழுமையாக உடன்பட்டுள்ளன: ஒன்று, ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதம். இந்தக் காரணத்திற்காகவே, குர்திஷ் பிரச்சினை உட்பட எந்த அடிப்படை அரசியல் பிரச்சினைகளையும் அவர்களால் தீர்க்க முடியாது. அவர்களால் ஒரு ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிக்கவோ, சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தவோ அல்லது ஏகாதிபத்திய விரோத வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றவோ முடியாது. லியோன் ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் விளக்கியதைப் போல, சோசலிசத்திற்கான போராட்டத்தில் இந்தக் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகின்றன. அதாவது, ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ ஸ்தாபனக் கட்சிகளையும், அவர்களுடன் ஒத்துழைப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று கூறும் போலி-இடது கட்சிகளையும் நிராகரிக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியை தங்கள் சொந்த புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு “வரலாற்றுக் கட்சி” ஆகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் செவ்வியல் மார்க்சிச மரபிலும், அத்துடன் 1917 அக்டோபர் புரட்சியின் மரபிலும் எமது கட்சி நிற்கிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1923 இல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஏகாதிபத்தியத்துடனான கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் “அமைதியான சகவாழ்வின்” நலன்களுக்காக புரட்சியைக் காட்டிக் கொடுத்த ஸ்ராலினிசத்திற்கு எதிராகவும், முதலாளித்துவத்தை சீர்திருத்தும் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டம் தோல்வியடைந்த சமூக ஜனநாயகத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கும் தோல்விக்கும் தவிர்க்க முடியாமல் சரணடைவதில் முடிவடையும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராகவும் இந்த மரபைப் பாதுகாத்து வளர்த்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நோக்கம், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான ட்ரொட்ஸ்கியின் பின்வரும் அறிக்கையில் சுருக்கமாக கூறப்படுகிறது: அது, “... சோசலிசப் புரட்சியின் மூலமாக உழைக்கும் மற்றும் சுரண்டப்பட்டுவரும் மக்களின் முழுமையான சடரீதியான மற்றும் ஆன்மீக விடுதலை.”

மனிதகுலம் முழுவதின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்தப் போராட்டத்தில் எங்களுடன் சேருங்கள். sosyalistesitlikpartisi.org ஐப் பார்வையிடவும், எங்கள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, கட்சியில் சேரவும்!

Loading