மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ட்ரம்ப் நிர்வாகமும் அதன் கூட்டாளிகளும் “தீவிர இடதுசாரிகளுக்கு” எதிராகப் பல அச்சுறுத்தல்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதிருப்தியாளர்களை “உள்நாட்டு பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி, ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மத்திய கூட்டாட்சி தொழிலாளர்களை அரசின் எதிரிகளாக திறம்பட அறிவித்துள்ளனர். இந்தக் களையெடுப்பில் பெருநிறுவனங்களும் இணைந்துள்ளன: விமான ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் வெறுமனே கிர்க் குறித்து விமர்சனக் கருத்துக்களை தெரிவித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மறுக்க முடியாத வகையில், பாசிச அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நபர், தேசிய நாயகனின் அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் போது இவை அனைத்தும் நடைபெறுகின்றன. ஆளுமை மற்றும் அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில் கிர்க்குடன் மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் நபர் யாராவது இருந்தால், அது 1960 களில் அமெரிக்க நாஜி கட்சியின் தலைவராக இருந்த ஜோர்ஜ் லிங்கன் ராக்வெல் தான் இருப்பார். ராக்வெல்லின் பெயர் நீண்ட காலமாக பரந்தபட்ட மக்களால் மறக்கப்பட்டிருந்தாலும், அவர் அதி தீவிர வலதுசாரிகளுக்கு உத்வேகம் அளிப்பதுக்கு ஆதாரமாக இருக்கிறார்.
ராக்வெல் பின்பற்றிய உத்தியை பின்னர் கிர்க் உருவாக்கியிருந்தார்: மாணவர்களுடன் கருத்துக்களை “விவாதிக்க” பல்கலைக்கழகங்களுக்கு பயணம் செய்து நாஜி சீருடையை விட, ஒரு சூட் மற்றும் டை (suit and tie) அணிந்திருந்து, சுதந்திரமான “பேச்சுரிமையைப் பாதுகாப்பவராகக்” தன்னைக் காட்டிக் கொண்டார்.
ராக்வெல், எப்போதும் சுங்கானில் புகைத்து, தன்னை ஒரு அரசியல் தத்துவஞானி, சிந்தனைமிக்க அறிவுஜீவி மற்றும் சிந்தனைகளின் மனிதராக காட்டிக் கொண்டார். தனது எதிரிகளுடன் வாதிடுவதுக்கு பயப்படவில்லை. ஒரு காட்டுமிராண்டித்தனமான இனவாதி என்றாலும், ராக்வெல் 1961 இல் கறுப்பின முஸ்லிம்களின் பேரணியில் கூட கலந்து கொண்டார். கவனத்தை ஈர்ப்பதற்கும் தனது நாஜி அமைப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அவர் அத்தகைய ஊடக நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொண்டார்.
இறுதியில் ஆகஸ்ட் 1967 இல், ராக்வெல் தனது சொந்தக் கட்சியின் அதிருப்தியடைந்த உறுப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை முதல் பக்க செய்தியாக வந்திருந்த போதிலும், அவரது அரசியலை அம்பலப்படுத்துவதில் செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தின. கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கப்படவில்லை. மேலும், அமெரிக்காவின் தெற்குப் பகுதியை சேர்ந்த வலதுசாரி செனட்டர்கள் கூட அமெரிக்காவின் ஹிட்லராக இருக்கவிருந்தவருக்குப் புகழாரம் சூட்டவில்லை. அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் ராக்வெல்லின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால், அந்தக் காலங்கள் வேறுபட்டவை. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து இரண்டு தசாப்தங்களுக்கும் சற்று குறைவான காலத்தையே அது கடந்திருந்தது. மேலும், ஹிட்லரின் மூன்றாம் பேரரசின் இனவெறி அரசியலும் குற்றங்களும் இன்னும் மக்களின் நினைவில் பசுமையாக இருந்தன.
இன்று, ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனத்தாலும், கடுமையான பெருநிறுவன ஊடக தணிக்கையாலும், கிர்க்கை ஒரு பாசிசவாதியாக அடையாளம் காண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. கிர்க்கினுடைய “பேச்சு சுதந்திரத்தின்” வாய்வீச்சு மோசடியை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு துணிச்சலான போர் நாயகனாக அவர் கொண்டாடப்படுகிறார். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் தாராளவாத கட்டுரையாளர் எஸ்ரா க்ளீனின் அறிக்கை, ஜனநாயகக் கட்சியின் கிர்க் பற்றிய புராணத்திற்கு ஜனநாயகக் கட்சியின் தகவமைப்பின் எடுத்துக்காட்டாக உள்ளது: “கிர்க் சரியான வழியில் அரசியலை நடைமுறையில் கொண்டிருந்தார்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சிவில் உரிமைகள் சட்டத்திற்கு கிர்க்கின் எதிர்ப்பு, அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் மீதான “யூத கட்டுப்பாடு” என்று கூறப்படுவதை அவர் கண்டித்தல், ஜனநாயகத்தின் மீதான அவரது அவமதிப்பு மற்றும் யூதர்களும் மற்றவர்களும், வெள்ளையர்களை புலம்பெயர்தோர்களின் அலையால் மூழ்கடிக்க முயல்வதாகக் கூறும் நவ-நாஜிக்களின் “மாபெரும் மாற்றீடு” கோட்பாட்டை (Great Replacement theory) அவர் ஊக்குவிப்பது குறித்து ஸ்தாபன ஊடகங்கள் ஒரு வஞ்சகமான மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.
“அடிமைத்தனம் எவ்வளவு மோசமானது” என்பதை வலியுறுத்தியதற்காகவும், அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆப்ரகாம் லிங்கனின் யூனியன் படைகளுக்கு எதிராக போரிட்ட கூட்டமைப்பு படைகளின் ஜெனரல்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டதை எடுத்துக்காட்டியதற்காகவும், ஸ்மித்சோனியன் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீதான தாக்குதலுடன் ட்ரம்ப் நிர்வாகம் கிர்க்கிற்கு புனிதர் பட்டம் வழங்கியது. கிர்க்கில், ஆளும் வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகள், தாங்கள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஒரு அடையாளத்தைக் கண்டறிந்துள்ளன: அது, நவீன கால தன்னலக்குழுவின் சேவையில் அடிமைத்தன சித்தாந்தத்தின் மறுமலர்ச்சியாகும்.
வெள்ளை மாளிகை மற்றும் அதன் முன்னணி பிரச்சாரகர்களிடமிருந்து வெளிப்படும் போலீஸ் அரசு சர்வாதிகாரத்தின் மொழிக்கு, நவீன அமெரிக்க வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லை. பேச்சு சுதந்திரம் மற்றும் தேவாலயத்தில் இருந்து அரசைப் பிரித்தல் என்பதில் இருந்து பிறப்புரிமை குடியுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதம் வரையில், மிக அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. ட்ரம்ப் நிர்வாகம் கூட்டமைப்பின் கொடியை அசைத்து, உள்நாட்டுப் போரை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கத்தை பிரகடனம் செய்து வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வாய்வீச்சின் வன்முறை, மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் கிர்க்கைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் கூட, அவர் ஆதரிக்கும் அனைத்தையும் வெறுக்கிறார்கள். பாசிசத்தை சட்டபூர்வமாக்குவதற்கான வெள்ளை மாளிகையின் முயற்சிக்கு ஆத்திரமடைந்த எதிர்ப்பு, வார்த்தைகளால் மட்டுமல்ல, நடைமுறையிலும் நியாயப்படுத்தும் முயற்சிக்கு சீற்றமான எதிர்ப்பு வெளிப்படுவது தவிர்க்க முடியாதது. ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதலை எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக இந்த எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு, அடிப்படை சமூக மற்றும் அரசியல் காரணங்கள் பற்றிய ஒரு தெளிவான புரிதல் தேவைப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வார்த்தைகளையும் செயல்களையும் வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளரின் பாசிச ஆளுமைக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. இறுதி ஆய்வில், ட்ரம்ப் ஒரு முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுக்களின் பிரதிநிதியாக உள்ளார். அதன் கொள்கைகளும் நடவடிக்கைகளும் அமெரிக்க முதலாளித்துவம் முகங்கொடுக்கும் குறுக்குவெட்டு நெருக்கடிகளுக்கு ஒரு விடையிறுப்பாக உள்ளன.
அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நிலை பெருகிய முறையில் நிலைநிறுத்த முடியாததாகி வருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட 40 ட்ரில்லியன் டாலர்கள் பொதுக் கடனைக் கொண்டுள்ளது. பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலரின் உலகளாவிய அந்தஸ்துக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை ஆகியவை அதிகரித்து வரும் உலகளாவிய போரின் கூறுகளாகும். இதில் சீனாவுடனான மோதலுக்கான முன்னேறிய தயாரிப்புகளும் அடங்கும். தயாரிக்கப்பட்டு வரும் ஏகாதிபத்திய வன்முறையின் அளவு ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் இயைந்திருக்கவில்லை.
மிக முக்கியமாக, ஆளும் உயரடுக்கு அமெரிக்காவிற்குள்ளேயே எதிர்ப்பு வளர்ந்து வருவதைப் பற்றி அஞ்சுகிறது. சமூக சமத்துவமின்மையின் அதீத மற்றும் வரலாற்று ரீதியில் முன்னொருபோதும் இல்லாத வளர்ச்சி பிரமாண்டமான சமூக மற்றும் அரசியல் கோபத்தை உருவாக்கியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், அமெரிக்க பில்லியனர்களின் கைகளில் 6.6 டிரில்லியன் டாலர்கள் குவிந்துள்ளன. அவர்களில் ஒருவரான ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன் கடந்த வாரம் ஒரே நாளில் தனது சொத்து மதிப்பை, 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளார்.
அமெரிக்க தன்னலக்குழு முற்றுகையின் கீழ் இருப்பதாக தன்னை உணர்கிறது. இது, புரட்சியின் அச்சுறுத்தலையும் அதன் செல்வத்திற்கு இருத்தலியல் அச்சுறுத்தலையும் ஒவ்வொரு மூலையிலும் உணர்கிறது. எனவே “தீவிர இடது”, மார்க்சியம் மற்றும் சோசலிசம் மீதான வெறித்தனமான கண்டனங்கள் இன்னும் அதிகமாக வருகின்றன.
இடைவிடாத பிரச்சாரம் இருந்தபோதிலும், கம்யூனிச எதிர்ப்பு ஒரு அரசு மதமாக உயர்த்தப்பட்டதும், சோசலிச அரசியலை உத்தியோகபூர்வ வாழ்க்கையில் இருந்தும், செய்தி ஊடகத்தில் இருந்தும் திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த போதிலும், கிட்டத்தட்ட 40 சதவிகிதமான மக்கள் சோசலிசம் பற்றிய சாதகமான பார்வையை வெளிப்படுத்துகின்றனர் என்று சமீபத்திய காலூப் கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது. 2021 இல் 60 சதவீதமாக இருந்த முதலாளித்துவத்திற்கான ஆதரவு இன்று வெறும் 54 சதவீதமாக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்களிடையே அதிருப்தி குவிந்துள்ளது, அவர்கள் கடந்து செல்லும் அனுபவங்களால் தீவிரமயமாக்கப்பட்டு வருகிறார்கள்.
சோசலிச சமத்துவக் கட்சி செப்டம்பர் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல, தொழிலாள வர்க்கம் “அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் செயல்திறன்மிக்க மிகப் பெரிய சக்தியாக” உள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களில், உலகளாவிய தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்தின் பரந்த விரிவாக்கம் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 2 பில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. மனிதகுலம் இப்போது முன்னெப்போதையும் விட நகரமயமாக்கப்பட்டுள்ளது, பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
இது, ட்ரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகளின் நடவடிக்கைகளை குறைந்த ஆபத்தானதாக ஆக்கவில்லை. பிரமாண்டமான வளங்களைக் கொண்டுள்ள தன்னலக்குழு, அமெரிக்க சமூகத்தில் நீடிக்கும் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் பின்தங்கிய நிலையை சுரண்ட முயல்கிறது. இந்த ஆளும் வர்க்கத்தின் சார்பாக செயல்படும் அரசாங்கத்தில் உள்ள பாசிஸ்டுக்கள், வன்முறையையும் தங்கள் செல்வத்தையும், அதிகாரத்தையும் பாதுகாக்க தேவையான எந்த வழிவகைகளையும் பயன்படுத்த முற்றிலும் உறுதியாக உள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் திவால்நிலை மற்றும் அதன் அரசியல் உடந்தையில்தான் இவர்களின் முக்கிய அனுகூலம் தங்கியுள்ளது. ஒரு அரசியல் குண்டரான ட்ரம்ப், மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்புவதுக்கும், அவரது சர்வாதிகார சதித்திட்டத்தை செயல்படுத்துவதுக்கும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகனின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பில் தங்கியிருந்தார்.
ட்ரம்ப்பும் அவரது கூட்டாளிகளும் உள்நாட்டுப் போரை திட்டமிட்டு வருகின்ற அதே வேளையில், “இரு கட்சி உறவுகளுக்கான” கோரிக்கைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் ஜனநாயகக் கட்சியினர் அடிபணியச் செய்கிறார்கள். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலைத் தவிர வேறு எதற்கும் அவர்கள் அஞ்சுவதில்லை. இது ட்ரம்பை மட்டுமல்ல, அவர்கள் பாதுகாக்கும் முழு முதலாளித்துவ ஒழுங்கையும் அச்சுறுத்துகிறது.
உத்தியோகபூர்வ அரசியலின் ஒட்டுமொத்த பொறியில் இருந்தும் விடுபடும் ஒரு நனவான அரசியல் இயக்கத்தை தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்புவதே தீர்க்கமான பணி என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இதன் பொருள், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிடியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புக்களில் இருந்தும் முறித்துக் கொள்வதாகும். அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு தடையாக செயல்பட்டுவரும் பெருநிறுவன தொழிற்சங்க எந்திரங்கள், தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சியினருக்கான ஆதரவை நோக்கி அல்லது ட்ரம்பின் வர்த்தகப் போர் வாய்வீச்சின் தேசியவாத விஷத்தை நோக்கித் திசைதிருப்பி வருகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு பணியிடத்திலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்ப போராடி வருகிறது. இந்தக் குழுக்கள் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்லாமல், மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அமைப்பின் மையங்களாகச் செயல்படுகின்றது.
இது, பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் சமூக அடித்தளமான முதலாளித்துவ தன்னலக்குழுவை நேரடியாக இலக்கு வைக்கும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், பிரமாண்டமான பெருநிறுவனங்களை பொதுப் பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கும் மற்றும் உற்பத்தி மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்கும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே சமூகம் தனியார் இலாபத்திற்காக அன்றி, மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மறுஒழுங்கமைக்கப்பட முடியும். இந்த அடிப்படையில் அணிதிரட்டப்படும் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் ஒரே உண்மையான அடித்தளத்தை வழங்குகிறது.