முன்னோக்கு

"ட்ரொட்ஸ்கியின் மரணத்தினால், தொழிலாள வர்க்கம் ஒப்பற்ற மேதைமை கொண்ட ஒரு மூலோபாயவாதியை இழந்தது"

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 85வது ஆண்டு நினைவு தினத்தில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஆகஸ்ட் 16, சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளமும் மெஹ்ரிங் நூலகமும், அடலார் (பிரின்சஸ் தீவுகள்) நகராட்சியுடன் இணைந்து, துருக்கியின் புயுக்கடா தீவில் “லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 85 ஆம் ஆண்டு நிறைவு: வரலாற்று முக்கியத்துவமும் நீடித்த விளைவுகளும்” என்ற தலைப்பில் ஒரு நினைவு நிகழ்வை நடத்தின. இந்த நிகழ்வில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்துடனான இணையவழி நேர்காணல் இடம்பெற்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியத்துடன் செயல்பட்டு வரும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் ஒரு முன்னணி உறுப்பினரான உலாஸ் அடெசி (Ulaş Ateşçi) இந்த நேர்காணலை செய்திருந்தார். வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த உரையாடலின் பதிப்பு சிறிது திருத்தப்பட்டுள்ளது.

உலாஸ் அடெசி (UA): லியோன் ட்ரொட்ஸ்கி 85 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 20, 1940 அன்று படுகொலை செய்யப்பட்டார். உங்கள் எழுத்துக்களில் 20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அரசியல் ரீதியாக விளைந்த படுகொலை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

டேவிட் நோர்த் (DN): ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, உலக வரலாற்றில் அவரது இடம், அவர் எதை பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் அடையாளம் கண்ட சமூகப் போராட்டங்கள் ஆகியவற்றைப்பற்றி ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். லியோன் ட்ரொட்ஸ்கி தொழிலாளர் வர்க்கத்தின் சோசலிசத்திற்கான புரட்சிகர இயக்கத்தின் உருவகமாக இருந்தார். அவரது படுகொலை உலகளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான குற்றவியல் தாக்குதலின் உச்சக்கட்டமாக இருந்தது. நாசிசமும் ஸ்டாலினிசமும், அக்டோபர் புரட்சிக்கு எதிராக பிற்போக்கு ரீதியாக வெளிப்பட்ட இரு வேறுபட்ட வடிவங்களாக இருந்தன. ட்ரொட்ஸ்கி அந்த மகத்தான புரட்சியின் உருவமாக இருந்தார். இது மனிதகுலத்தின் சமூக, அரசியல் மற்றும் அறிவுசார் வளர்ச்சியின் உச்சக்கட்டமாக இருந்தது. இது, அறிவொளிக்காலம் மற்றும் மறுமலர்ச்சிக் காலம் வரைத் தேடிச் செல்லக்கூடியது. 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையானது, சோசலிச கலாச்சாரத்தின் மலர்ச்சியை அழித்த ஒரு இனப்படுகொலை அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்டமாக இருந்தது. அவரது படுகொலை அரசியல் ரீதியாகவும், புத்திஜீவித ரீதியாகவும் ஈடுசெய்ய முடியாத ஒரு மனிதரை உலக அரங்கில் இருந்து அகற்றியது.

நான் ஒரு ஒப்புமையைப் பயன்படுத்த முடிந்தால்: நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் இல்லாமல், மொஸார்ட், பாக், பீத்தோவன் ஆகியோர் தங்கள் படைப்பாற்றல் அல்லது அறிவியலின் உச்சத்தில் இருந்தபோது வன்முறையில் அகற்றப்பட்டிருந்தால், இசையையும் விஞ்ஞானத்தையும் கற்பனை செய்து பாருங்கள். அரசியல் துறையில், ட்ரொட்ஸ்கி, அந்த அளவிலான ஒரு நிலையை வகித்திருந்தார். அவரது மரணத்தினால், ஒப்பற்ற மேதைமை கொண்ட ஒரு மூலோபாயவாதியை தொழிலாள வர்க்கம் இழந்தது. அவர் இறந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது மரணத்தின் விளைவுகளையும், 1930 கள் மற்றும் 1940 களில், ஐரோப்பாவில் ரஷ்ய புரட்சியாளர்களின் தலைமுறை அழிக்கப்பட்டதன் விளைவுகளையும், நாம் இன்னும் அனுபவித்து வருகிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மனிதகுலத்தின் நெருக்கடி என்பது தலைமை நெருக்கடி என்று ட்ரொட்ஸ்கி கூறினார். அந்த நெருக்கடி என்பது போல்ஷெவிக் புரட்சியின் அழிவினாலும், மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஆகியோரின் படைப்புகளில் மூலங்களைக் கொண்டிருந்த மாபெரும் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய சோசலிச கலாச்சாரத்தின் அழிவின் ஒரு விளைபொருளாகவும் இருந்தது. ஆகவே, அவரது படுகொலை கடந்த நூற்றாண்டின் மிகவும் பின்விளைவுமிக்க அரசியல் படுகொலை என்று நாம் கூறும்போது, நான் அதை இந்த அர்த்தத்தில்தான் அர்த்தப்படுத்துகிறேன்: இந்தப் படுகொலையின் அரசியல் எதிரொலிகள் இன்றுவரை நம்முடன் உள்ளன. இந்தப் படுகொலையை நினைவு கூருகையில், ட்ரொட்ஸ்கியும் லெனினும் போராடி கட்டியெழுப்பிய தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு நம்மை நாமே மீள அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். மேலும், 1917 ஆம் ஆண்டில் முதலாளித்துவத்தின் நெருக்கடியின் கோரிக்கைகளுக்கு எழுச்சியுடன் பதிலளிக்கும் திறன் கொண்டது என்பதை அந்த தலைமை நிரூபித்தது. ஆகவே, ட்ரொட்ஸ்கியின் படுகொலை கடுமையான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது என்று நான் எழுதியபோது நான் என்ன சொன்னேன் என்பதை விளக்க இதுவே சிறந்த வழியாக இருக்கலாம்.

1920 இல் பெட்ரோகிராட்டில் புரட்சிகர தொழிலாளர்கள் கூட்டத்தில் லெனின் உரையாற்றுகிறார். ட்ரொட்ஸ்கி வலதுபுறத்தில் இருக்கிறார்.

UA: ட்ரொட்ஸ்கியைக் கொல்ல வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏன் ஏற்பட்டது? இது வெறுமனே ஒரு பழைய அரசியல் எதிரிக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா, அல்லது ஸ்டாலினுக்கு ட்ரொட்ஸ்கியைக் கண்டு அஞ்சுவதற்கு உண்மையிலேயே காரணம் இருந்ததா?

DN: இது நிச்சயமாக ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஸ்டாலின் ஒரு அரசியல் குற்றவாளி. அவர் தனது அரசியல் எதிரிகளை மட்டும் படுகொலை செய்யவில்லை. அவர்களுடைய குடும்பங்களை, நண்பர்களை, கூட்டாளிகளை அழித்தொழித்தார். ஆனால் அரசியல் அர்த்தத்தில், ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான முடிவு, உலக அளவிலும், சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயும் ட்ரொட்ஸ்கி செலுத்திய அரசியல் செல்வாக்கு குறித்து ஸ்டாலின் கொண்டிருந்த ஆழ்ந்த அச்சத்தால் மேற்கொள்ளப்பட்டது. 

ஸ்டாலின், அக்டோபர் புரட்சியில் பங்கேற்றிருந்தார் என்பது உண்மைதான். அவர் ஒரு நெருக்கடியின் தாக்கத்தை, மக்களுடைய பொது நனவில் நேரடியாகக் கண்டு அனுபவித்திருந்தார். முதலாம் உலகப் போருக்கு மத்தியில் எழுந்த 1917 ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தில் இருந்து, இதேபோன்ற பரிமாணங்களைக் கொண்ட ஒரு நெருக்கடி தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு மிகப்பெரும் தீவிரமயமாக்கலை உருவாக்கக் கூடும், அதில் ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடு ஆழமாக உருமாற்றம் அடையும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். ட்ரொட்ஸ்கி வெறுமனே தனிமைப்படுத்தப்பட்டு, உதவியின்றி இருக்கும் ஒரு நாடுகடத்தப்பட்டவர் என்பதை ஸ்டாலின் ஒருபோதும் நம்பவில்லை. இன்று பல குட்டி-முதலாளித்துவ கல்வியாளர்கள் அதை எழுதலாம், ஆனால் அது அரசியல் யதார்த்தம் அல்ல.

1940 ஆம் ஆண்டு ட்ராட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கி, பேரழிவு விரிவடைந்து கொண்டிருந்தது. ஸ்டாலினின் கொள்கைகளின் பேரழிவுகரமான விளைவுகள், ஐரோப்பா முழுவதும், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயினில் அவர் செய்த காட்டிக்கொடுப்புகள், சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்புக்கு அவர் பாதை அமைத்துக் கொடுத்திருந்தார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு சிறிது காலம் மட்டுமே இருந்தது. அக்டோபர் புரட்சியின் அனுபவத்தைச் சந்தித்திருந்த ஸ்டாலின், போர் நெருங்கி வருகின்ற நிலையில், சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே அது தோற்றுவிக்கவிருக்கும் நெருக்கடியுடன், குறிப்பாக உடனடி பேரழிவின் ஒரு உள்ளடக்கத்தில், ட்ரொட்ஸ்கிக்கான ஒடுக்கப்பட்ட அனைத்து ஆதரவும் திடீரென வெளிப்படலாம் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 1918 மற்றும் 1921 க்கு இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில், ஏகாதிபத்திய இராணுவங்களைத் தோற்கடித்த ஒரு புத்திசாலித்தனமான மூலோபாயவாதியான செம்படையின் ஸ்தாபகர் மற்றும் தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி அப்போதும் தொழிலாள வர்க்கத்தின் நனவில் வாழ்ந்து கொண்டிருந்தார். புகழ்பெற்ற சோசலிச எழுத்தாளர் விக்டர் சேர்ஜ், இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யா என்ற அவரது புத்தகத்தில், ஒரு போரின் முதல் அதிர்ச்சிகள் சோவியத் ஒன்றியத்தில் மில்லியன் கணக்கான மக்கள் உடனடியாக “வெற்றியின் ஒழுங்கமைப்பாளர்” லியோன் ட்ரொட்ஸ்கியைப் பற்றி சிந்திக்க இட்டுச் செல்லும் என்று கூறினார். அதனால் தான் ஸ்டாலின், தானே தலைமை தாங்கிய பிற்போக்குத்தன அதிகாரத்துவ ஆட்சிக் காக, ட்ராட்ஸ்கியை படுகொலையை செய்வது அரசியல் ரீதியாக அவசியம் என்று கருதினார்.

ரஷ்ய புரட்சியைத் தொடர்ந்து இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது, லியோன் ட்ரொட்ஸ்கி செம்படையினருடன் பேசுகிறார்

ஆனால், ட்ரொட்ஸ்கியைக் கண்டு அஞ்சிய ஒரே பிற்போக்குத் தலைவர் ஸ்டாலின் மட்டுமல்ல. 1940ல் ஹிட்லருக்கும் பிரெஞ்சு தூதர் கூலண்ட்ருக்கும் இடையே ஒரு நன்கறியப்பட்ட கலந்துரையாடல் நடந்தது. கூலண்டர் சுருக்கமாக ஹிட்லரிடம், “பிரான்சில் உங்கள் இராணுவ வெற்றிகள் இருந்தபோதிலும், வளர்ந்துவரும் போரில், ட்ரொட்ஸ்கிதான் உண்மையான வெற்றியாளராக இருக்கக்கூடும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று கேட்டார். இதைக் கேட்ட ஹிட்லர் அதிர்ச்சியடைந்து, “எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் ஏன் என்னை போரை நோக்கி தள்ளினீர்கள்? ஏன் சமரசம் செய்யவில்லை?” என்று பதிலளித்தார். இந்த உரையாடலை ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் வாசித்த ட்ரொட்ஸ்கி, “காட்டுமிராண்டித்தனத்தின் பிற்போக்குத்தனமான பிரதிநிதிகளாக, இந்த கனவான்கள் புரட்சியின் வருகையை கண்டு அஞ்சுகிறார்கள்; அந்தப் புரட்சிக்கு அவர்கள் என் பெயரைச் சூட்டுகிறார்கள்” என்று கூறினார். ட்ரொட்ஸ்கியின் படுகொலையானது, ஸ்டாலினிச ஆட்சி மற்றும் உலகளாவிய பின்தங்கிய சக்திகள், சோசலிசப் புரட்சியின் அச்சத்தைத் தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். அதுவே ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கான உண்மையான காரணம் ஆகும்.

UA: ட்ரொட்ஸ்கியின் படுகொலை சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்ற ஒரு அரசியல் இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக இருந்தது. ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் ஹிட்லரின் முகவர்கள் என்ற பொய்களால் நியாயப்படுத்தப்பட்டனர். இன்று, ஸ்டாலினிச மற்றும் போலி-இடது அமைப்புகள் இந்தப் பொய்களை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. இது குறித்து உங்களால் கருத்து தெரிவிக்க முடியுமா?

DN: சரி, இத்தகைய பொய்களைத் திரும்பத் திரும்ப கூறுபவர்கள் வெறுமனே தங்களை பொய்யர்களாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினால் செய்யப்பட்ட குற்றங்கள் மிகப் பெருமளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ட்ரொட்ஸ்கிக்கும் போல்ஷிவிக் கட்சியின் ஒட்டுமொத்த தலைமைக்கும் எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் மோசடித் தன்மைபற்றி மிகவும் விரிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அவற்றைத் திரும்பத் திரும்பக் கூறுவது, இந்தப் பொய்களைப் பயன்படுத்துபவர்களை நாஜிக்கள் நடத்திய யூத இனப்படுகொலையை மறுப்பவர்களின் அதே வகையறாக்களுக்குள் நிறுத்துகிறது. 

போல்ஷிவிக் புரட்சியில் எஞ்சியிருந்த ஒட்டுமொத்த தலைமையும் கிட்டத்தட்ட பாசிசத்தின் முகவர்களாக இருந்ததாகவும், ஹிட்லர் ஆட்சியின் கருவிகளாக இருந்ததாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். ஆனால் 1939 இல், சோசலிச சோவியத் ஒன்றியத்தின் தொழிலாள வர்க்கம் மற்றும் புத்திஜீவிகளுக்கு எதிராக அவர் தனது பயங்கரவாதத்தை நடத்திய பிறகு, ஸ்டாலின்தான் ஹிட்லருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  உண்மையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, 1941 ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்தின் மீது நாஜிக்கள் படையெடுக்கும் வரை, மேற்கு ஐரோப்பாவில் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் ஹிட்லரின் ஆட்சியைப் பற்றி அவதூறாகப் பேச அனுமதிக்கப்படவில்லை.

கிரெம்ளினில் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஸ்டாலினும் ரிப்பன்ட்ராப்பும், ஆகஸ்ட் 23, 1939 [Photo by Bundesarchiv, Bild 183-H27337 / CC BY-SA 3.0]

ஸ்டாலினிசத்தின் விளைவு சோவியத் ஒன்றியத்தின் அழிவாக இருக்கும் என்றும், அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்சி செய்யும் என்றும் ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார். அது இறுதியாக 1991 இல் நடந்தது. ஆகவே, ஸ்டாலினின் பொய்களை திரும்பத் திரும்ப கூறுவது, அவரது பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தை ஆதரிப்பவர்களால் மட்டுமே அரசியல்ரீதியாக செய்யப்பட முடியும். அவர்கள் பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளும், ட்ரொட்ஸ்கி போராடிய சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு அடிப்படையில் விரோதமானவர்களும் ஆவர்.

ஒருவர், நிச்சயமாக, கோட்பாட்டுரீதியாக புத்திஜீவிகளுடன் நியாயமான கலந்துரையாடலையும், ரஷ்யப் புரட்சியின் வரலாறு, அதன் வரலாற்று சிக்கல்கள் குறித்து தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பரந்த கலந்துரையாடலையும் நடத்த முடியும். ஆனால், அத்தகைய அனைத்துக் கலந்துரையாடல்களும் உண்மை மற்றும் உண்மையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய கலந்துரையாடல்களில், அருவருப்பான பொய்களைப் பரப்புபவர்களுக்கும், பாரிய படுகொலைகளை நியாயப்படுத்துபவர்களுக்கும், ஸ்டாலினை ஒரு அரசியல் வீரராக புகழ்பவர்களுக்கும் இடமில்லை. உண்மையில், இந்த நபர்கள் சோசலிச முகாமில் இல்லை, மாறாக பிற்போக்குத்தன தேசியவாத முகாமில், உண்மையில் புட்டின் மற்றும் ரஷ்ய தேசியவாதிகளின் முகாமில் உள்ளனர். இவர்கள் தங்களை அக்டோபர் புரட்சியில் அடித்தளமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, 1917ல் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்பட்ட ஜாரிசத்தின் பிற்போக்குத்தன பாரம்பரியங்களில் அடித்தளத்தைக் கொண்டுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மாஸ்கோவில் நடந்த ஐக்கிய ரஷ்யா கட்சி மாநாட்டில் உரையாற்றுகிறார், சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024 [AP Photo/Sergei Bobylev]

UA: 1940 மே 24 அன்று, ட்ரொட்ஸ்கி மீது முதல் படுகொலை முயற்சி நடந்தது. அந்தத் தாக்குதல் குறித்தும் ட்ரொட்ஸ்கியின் பதில் நடவடிக்கை குறித்தும் கூற முடியுமா?

DN: 1940 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி மாலை, ஓவியர் டேவிட் அல்பாரோ சிகிரோஸ் (Alfaro Siqueiros) தலைமையிலான ஸ்டாலினிச கொலைகாரக் கும்பல், மெக்சிகோவின் கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் இல்லத்திற்குள் நுழைவதுக்கு, அதிகாலையில் பணியில் இருந்த காவலரான ராபர்ட் ஷெல்டன் ஹார்ட் என்ற அமெரிக்கரால் அனுமதிக்கப்பட்டனர்.

உண்மையில் ஹார்ட் ஒரு ஸ்டாலினிச முகவர் என்பது பின்னர் தெரியவந்தது. அவர் ட்ரொட்ஸ்கியின் இல்லத்தின் கதவைத் திறந்தவுடன், இந்தக் கும்பல் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் தீவைத்துச் சேதப்படுத்தும் ஆயுதங்களுடன் வீட்டு வளாகத்திற்கு ஊடாக ட்ரொட்ஸ்கியின் படுக்கையறைக்குள் நுழைந்து, இயந்திரத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். அசாதாரணமாக, ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவியும் தூக்கத்திலிருந்து விழித்தவுடன், உடனே படுக்கையிலிருந்து உருண்டு கீழே விழுந்தனர். இயந்திரத் துப்பாக்கிகள் சற்றே மேல்நோக்கி இருந்ததால், குண்டுகள் படுக்கையிலும் சுவரிலும் பாய்ந்தன. இருட்டில், அவர்களால் எப்படியோ, அதிசயமாக உயிர் தப்பிய ட்ரொட்ஸ்கியை கொல்ல முடியவில்லை. இந்த தாக்குதலின் போது, ட்ரொட்ஸ்கியின் 14 வயது பேரன் சேவா வோல்கோவ் கால்விரலில் காயமடைந்தார். ஆனால் அது பெரும் காயம் அல்ல. பின்னர், கொலைகாரர்கள் அங்கிருந்து பின்வாங்கி தப்பிச் சென்றனர். 

1940 மே 24 ஆம் தேதியிலான தாக்குதலுக்குப் பிறகு, மெக்சிகோவின் கோயோகான் பகுதியில் உள்ள ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில் அவரது படுக்கையறை குண்டுத் துளைகளால் நிறைந்திருந்தது.

ட்ரொட்ஸ்கி உடனடியாக தனது அறையை விட்டு வெளியேறினார். ட்ரொட்ஸ்கியின் வாழ்வில் அவர் தாக்குதலுக்கு உள்ளாவது இது முதல் முறை அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் முன்பே அனுபவம் பெற்றவராக இருந்ததால், உடனே தனது பாதுகாப்பு காவலர்களைத் தேடத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அவரது காவலர்கள் அனைவரும் அனுபவமற்றவர்கள்; இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய ஒருவரான ட்ரொட்ஸ்கியின் காவலர் கேப்டன் ஹரோல்ட் ராபின்ஸ், பின்னர் என்னிடம் கூறுகையில், ட்ரொட்ஸ்கி காவலர்களைக் கண்டதும், அவர்களின் எதிர்வினை அல்லது பதில் நடவடிக்கை இல்லாததால் தான் வெளிப்படையாக ஏமாற்றமடைந்ததாகக் கூறினார்.

ஷெல்டன் ஹார்ட் காணாமல் போய்விட்டார் என்பதை அவர்கள் விரைவிலேயே புரிந்து கொண்டனர். அவர் கடத்தப்பட்டாரா அல்லது தன்னிச்சையாகப் போனாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதாவது, அவர் இந்த சதியில் பங்கெடுத்துக் கொண்டாரா அல்லது வெறுமனே அதற்கு பலியாகிவிட்டாரா என்பது தெளிவாக இல்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது பங்கு குறித்த சந்தேகங்கள் இருந்தபோதிலும், அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதுதான் ஆரம்ப முடிவாக இருந்தது. ஆயினும், அவர் ஒரு முகவராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் விலக்கப்படவில்லை என்று ட்ரொட்ஸ்கி கூறினார். அதற்குப் பிந்தைய தகவல்கள், குறிப்பாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் வெளிவந்த ஆவணங்கள், ஹார்ட் ஒரு GPU முகவர் என்றும், படுகொலை சதித் திட்டத்தில் பங்கெடுத்திருந்தார் என்றும் உறுதியாக நிரூபித்தன.

இங்கேயும், இந்தக் காலகட்டத்தை கவனத்தில் கொள்வது அவசியம். மே 1940ல் இடம்பெற்ற தாக்குதல், பிரான்ஸ் மீதான நாஜி படையெடுப்பின் பின்னணியில் நடந்தது. மேலும், பொதுமக்களின் கருத்து, தீவிரமடைந்துவரும் போரின் கவனத்தில் இருக்கும் என்றும், ட்ரொட்ஸ்கியின் படுகொலை சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தாது என்றும் ஸ்டாலின் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தப் படுகொலை முயற்சிக்குப் பிறகு, ட்ரொட்ஸ்கி ஆரம்பத்தில் தனது பெரும்பாலான நேரத்தை, இந்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவதற்கு அர்ப்பணித்திருந்தார். அவர் “ஸ்டாலின் என் மரணத்தைத் தேடுகிறார்” என்ற தலைப்பில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர், “நான் இந்தப் பூமியில் விதியின்படி அல்ல, மாறாக விதிக்கு விதிவிலக்காக வாழ்கிறேன்” என்று எழுதினார்.

ஸ்டாலினிஸ்டுகளும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகள் மற்றும் கோட்பாடற்ற கூறுபாடுகளில் இருந்த அவர்களது ஆதரவாளர்களும், உண்மையில் ட்ரொட்ஸ்கி தானே அத்தாக்குதலை ஒழுங்கமைத்திருந்தார் என்றும், அது ஒரு நிஜமான படுகொலை முயற்சி அல்ல என்ற வாதத்தையும் முன்னெடுக்க முயன்றனர். ட்ரொட்ஸ்கி இந்தப் பொய்யை விரிவாக அம்பலப்படுத்தினார். நிச்சயமாக, ஆகஸ்ட் 20 அன்று என்ன நடந்தது என்பது அந்தப் பொய்யின் அளவை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. உலகெங்கிலுமான வெவ்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள், அதாவது ஸ்டாலினிச கட்சிகள், உண்மையில் சோவியத் அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த மட்டத்திற்கு இருந்தன என்பதை அம்பலப்படுத்தி, “GPUவும் கம்யூனிச அகிலமும்” என்ற மற்றொரு கட்டுரையையும் அவர் எழுதினார்.

ட்ரொட்ஸ்கி மீது இன்னொரு படுகொலை முயற்சி நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். 1976 இல், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டது குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக நான் மெக்சிகோவில் இருந்தபோது, ட்ரொட்ஸ்கியை அறிந்திருந்த ஒரு பத்திரிகையாளர், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவருடன் நடத்திய ஒரு உரையாடலை நினைவு கூர்ந்தார். அதில், “என் மீது மற்றொரு கொலை முயற்சி நடக்கும். எனக்குத் தெரிந்த யாரோ அல்லது எனது இல்லத்தை அணுகக்கூடிய ஒருவரால் இது மேற்கொள்ளப்படும்” என்று ட்ரொட்ஸ்கி கூறினார். அந்த பத்திரிகையாளர் ட்ரொட்ஸ்கியை மிகவும் நேசித்தார், அவரை மிகவும் மதித்தார், மேலும் ட்ரொட்ஸ்கி அவரிடம் இதைச் சொன்னபோது மிகவும் மனச்சோர்வடைந்தார். ஆனால் ட்ரொட்ஸ்கி புன்னகைத்தபடியே கூறினார், “நல்லது, உங்களுக்குத் தெரியும், என்ன நடந்தாலும், நான் அப்போதும் வெல்வேன். ஏன் தெரியுமா?” பத்திரிகையாளர் ஏன் என்று கேட்டார், ட்ரொட்ஸ்கி அவருக்கு அருகில் வந்து, அவரது காதில் “ஏனென்றால் நான் ஸ்டாலினை விட மிகவும் புத்திசாலி” என்று கிசுகிசுத்தார்.

நிச்சயமாக, ட்ரொட்ஸ்கி உண்மையில் சொல்லிக் கொண்டிருந்தது என்னவென்றால், அவர் போராடிய அரசியல் முன்னோக்கில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்டாலின் என்னதான் தற்காலிக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவர் முன்னோக்கு அற்றவராக இருந்தார். புரட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி ஏற்கனவே பயன்படுத்திய ஒரு உருவகத்தைப் இங்கே பயன்படுத்தினால், ஸ்டாலின் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி வீசப்படுவார்.

UA: ட்ரொட்ஸ்கியின் படுகொலை தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறதே? இந்த மதிப்பீட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா, அல்லது இது தடுக்கப்பட்டிருக்க முடியுமா?

DN: இது ஒரு சிக்கலான கேள்வி, தவிர்க்க முடியாதது என்று நீங்கள் எதை அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு பற்றி ஒருவர் பேசுகிறார் என்றால், நிச்சயமாக அங்கே தவிர்க்க முடியாத விடயங்கள் உள்ளன. முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாதது. புரட்சியும் எதிர்ப்புரட்சியும் தவிர்க்கவியலாமல் அந்த அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்தே எழுகின்றன. போரும், போருக்கு எதிரான போராட்டமும் தவிர்க்கவியலாமல் உலக முதலாளித்துவத்தின் புவிசார் அரசியலில் இருந்து எழுகின்றன. ஆனால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், நிச்சயமாக, ஒருவர் “தவிர்க்க முடியாதது” என்ற வார்த்தையை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ட்ரொட்ஸ்கி முன்கணித்திருந்ததைப் போல, அவர் மீது ஒரு கொலை முயற்சி நடப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. சோவியத் அதிகாரத்துவம் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்ய முயலும் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறுவது தவிர்க்க முடியாததா? இல்லை, அது இல்லை. மே 24, 1940 அன்று இடம்பெற்ற கொலை முயற்சி வெற்றி பெறவில்லை. மேலும், ஆகஸ்ட் 20, 1940 அன்று இடம்பெற்ற அந்த முயற்சி வெற்றி பெறுவது தவிர்க்க முடியாதது அல்ல. மிக அடிப்படையான பாதுகாப்பின் தோல்வியால்தான் அது வெற்றி பெற்றது.

1940 ஆம் ஆண்டு ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்ய மெர்க்கேடர் பயன்படுத்திய கூரான பனிக்கோடரியை மெக்சிகன் போலீசார் வைத்திருக்கிறார்கள்.

கொலைகாரன் ரமோன் மெர்க்கடேர் ஒரு முகவரால் ட்ரொட்ஸ்கியின் வீட்டிற்குள் ஊடுருவியிருந்தான். அவன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிற்பகல், கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் இல்லத்துக்கு வந்தான். அன்று ஒரு வெயில் நிறைந்த நாள், அவன் ஒரு மழைக்கோட்டை அணிந்திருந்தான். ட்ரொட்ஸ்கி மூன்று நாட்களுக்கு முன்புதான் மெர்கேடரைச் சந்தித்து, இந்த நபர் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அவர் மீண்டும் ஒருபோதும் மெர்கேடரைப் பார்க்க விரும்பவில்லை என்று கூட அறிவித்திருந்தார். ஆனால், அவரது பாதுகாவலர்கள் இதற்கு எந்த எதிர்வினையும் காட்டவில்லை. குறிப்பாக, கோயோகானில் ட்ரொட்ஸ்கியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஜோசப் ஹான்சனே ஒரு ஸ்டாலினிச முகவராக இருந்தார் என்பதை நாங்கள் பின்னர் கண்டுபிடிக்க நேர்ந்தது. மெர்க்கேடர் மழைக்கோட்டை அணிந்து வந்தபோது, அவனை யாரும் சோதனையிடவில்லை. அவனது மழைக் கோட்டுக்குள், ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி, ஒரு பனிக்கோடாரி மற்றும் ஒரு கத்தி இருந்தது. இந்த மழைக்கோட்டை அவனிடமிருந்து பறித்திருந்தால் இந்தப் படுகொலை நடந்திருக்காது. அது மட்டும் அல்ல, தாக்குதல் நடந்த இடத்தில் ட்ரொட்ஸ்கியுடன் அவரது படிப்பகத்துக்குள் தனியாக நுழைய மெர்க்கேடருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனவே, அன்றைய தினம் படுகொலை இடம்பெறுவது தவிர்க்க முடியாமல் இருந்தது அல்ல. அதைத் தடுத்திருக்க முடியும். அந்த அனுபவத்திலிருந்து சில படிப்பினைகளைப் பெற வேண்டும், அவற்றைப் பெற நாம் முயன்றிருக்கிறோம். அரசியல் ரீதியான பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாத பிரச்சினை. ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்ற பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எந்த அரசியல் கட்சியும் அதைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, ட்ரொட்ஸ்கியின் உயிர் மீதான முயற்சிகள் தவிர்க்க முடியாதவை என்றாலும், அவற்றின் வெற்றி தவிர்க்க முடியாதது அல்ல என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமாகும்.

நாங்கள் மார்க்சிஸ்டுகள், விதிவசவாதிகள் அல்ல. வரலாற்று விதிகள் உள்ளன. ஆனால், அந்த வரலாற்று விதிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு இட்டுச் செல்வதில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலைமையைப் புரிந்துகொள்வதற்கு அது முக்கியமானது. ஒரு அர்த்தத்தில், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி என்பன இனப்படுகொலை, பாசிசம் மற்றும் அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், அது சோசலிசப் புரட்சிக்கும் இட்டுச் செல்கிறது. ஆகவே உண்மையில் கேள்வி என்னவென்றால், இந்தப் போக்குகளில் எது ஆதிக்கம் செலுத்தும், அழிவை நோக்கிய போக்குகளா அல்லது புரட்சியை நோக்கிய போக்குகளா? என்பதுதான் தீர்க்கமான கேள்வியாகும்.

இது அரசியல் தலைமைத்துவம் குறித்த முக்கியமான கேள்விக்கு நம்மைக் கொண்டு வருகிறது. மார்க்சிஸ்டுகள் என்ற வகையில், மனிதகுலத்தை அழிவால் அச்சுறுத்தும் போக்குகள். ஒரு சோசலிசப் புரட்சிக்கான சாத்தியத்தையும் உருவாக்குகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அர்த்தத்தில், நாங்கள் வரலாற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். புரட்சி சாத்தியம். அதன் வெற்றி சாத்தியம். ஆனால் நாங்கள் மெத்தனமாக இல்லை. நாம் போராடாவிட்டால், தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், சரியான அரசியல் வேலைத்திட்டம் இல்லாவிட்டால், சரியான வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்க முடியாவிட்டால், பேரழிவின் ஆபத்து மிகப்பெரியது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் நாங்கள் புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப போராடி வருகிறோம்.

UA: நீங்கள் இப்போது 55 ஆண்டுகளாக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளீர்கள். பல தசாப்த கால அரசியல் பிற்போக்குத்தனத்தின் முன்னால் உங்கள் நம்பிக்கையையும் உறுதியையும் எவ்வாறு பராமரித்து வருகிறீர்கள்?

DN: மார்க்சிசத்தின் மாபெரும் அனுகூலம் என்னவெனில், அது புறநிலை யதார்த்தத்தை உணர்வுபூர்வமாக அல்லாமல் விஞ்ஞானபூர்வமாக அணுகி பகுப்பாய்வு செய்கிறது. தோற்றத்தின் வடிவங்கள் முரண்பாடானவை என்பதையும், எதிர்வினையின் ஆதிக்கம் போல் தோன்றுவது புரட்சிக்கான சாத்தியத்தையும் கொண்டுள்ளது என்பதையும் அது புரிந்துகொள்கிறது.

1971 இல் நான் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்த போது, சோவியத் ஒன்றியம் சர்வ வல்லமை வாய்ந்ததாக பலரால் பார்க்கப்பட்ட ஒரு காலமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மில்லியன் கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருந்தன. எனினும், அவற்றின் செல்வாக்கு ஏற்றுக்கொள்ள முடியாத, நிரூபிக்கப்பட்ட பொய்யான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு ஆகட்டும் அல்லது சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஆகட்டும், நடந்துள்ள அனைத்துமே ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை ஊர்ஜிதம் செய்துள்ளன. எங்கள் முன்னோக்கு சரியானது;  அது புறநிலை நிலைமையை சரியாக பகுப்பாய்வு செய்துள்ளது. 

இந்த முன்னேற்றங்களின் முதன்மை பயனாளிகள் அரசியல் பிற்போக்கு சக்திகளாக இருந்த போதிலும், பிற நிகழ்ச்சிப் போக்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே அற்புதமாக நடந்து கொண்டிருப்பதால் புரட்சிகள் ஏற்படுவதில்லை. மக்கள் விஷயங்களை மாற்றவும், இருப்பதை விட மேலும் சிறப்பாக விஷயங்களை வைத்திருக்கவும் விரும்பி முடிவு செய்கிறார்கள். புரட்சிகள் பிறந்த நாள் விழாக்களைப் போல தங்களை அறிவிப்பதில்லை. இங்கு ஒவ்வொருவரும் ஒரு அழைப்பைப் பெற்று பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வரச் சொல்கிறார்கள். புரட்சிகள் எப்போதும் எதிர்பாராதவை. அவை எப்போதும் சாத்தியமற்றதாகத் தோன்றுகின்றன, ஏனென்றால் அவை வழக்கமான எதிர்வினை, ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், அதன் மிகத் தீவிரமான வளர்ச்சி நிலையை எட்டிய தருணத்தில் இவை நிகழ்கின்றன. 1789 ஆம் ஆண்டு பிரான்சில் அது உண்மையாக இருந்தது, 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவிலும் அது நிச்சயமாக உண்மையாக இருந்தது.

1917 அக்டோபர் புரட்சியின் போது பெட்ரோகிராட் சிப்பாய்களின் சோவியத்தின் ஒரு அமர்வு

தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக நிலைமை, நமது காலத்தின் பிரமாண்டமான சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் பிரச்சினைகளை சமாளிக்க முதலாளித்துவம் முற்றிலும் இலாயக்கற்றது என்பதை மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சொல்லின் ஒவ்வொரு அர்த்தத்திலும் முதலாளித்துவம் திவாலாகி விட்ட ஒரு அமைப்புமுறையாகும். அணுஆயுதப் போர் என்பது மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு சாத்தியமான மாற்றீடு என்றோ, அல்லது இனப்படுகொலையைப் பயன்படுத்துவது மனிதகுலத்தின் பரந்த பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்படப் போகிறது என்றோ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது, ஆனால் அந்த எதிர்ப்பு சரியான அரசியல் முன்னோக்குடன் தொடர்பு கொள்வது அவசியமாகும். நாம் வரலாற்றில் மாபெரும் புரட்சிகர வெடிப்புகளின் விளிம்பில் இருக்கிறோம். இந்தப் புறநிலைப் போக்குகளின் சக்தியை அங்கீகரிப்பதே நம்பிக்கையின் அடிப்படை என்று நான் நினைக்கிறேன்.

நான் ஏற்கனவே கூறியது போல, வரலாறு நமக்கு புரட்சியை பிறந்த நாள் பரிசாக தருவதில்லை. நாம் புறச்சூழலில் இருந்து அதன் புரட்சிகர ஆற்றலை கறந்தெடுத்து அதன்படி செயல்பட வேண்டும். இதுதான் தீர்க்கமான கேள்வியாகும். பெருந்திரளான மக்கள் கடந்து வந்துள்ள அனுபவங்கள் —அவர்கள் சமூக ஜனநாயகம், ஸ்டாலினிசம், முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவற்றின் திவால்நிலையைக் கண்ணுற்றுள்ளனர்— இப்போது ஒருவேளை, அவர்கள் சமூகப் புரட்சியின் உண்மையான தத்துவம் மற்றும் நடைமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

அவர்கள் மீண்டும் ஒருமுறை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியிடமிருந்தும், அதன் சமகால வெளிப்பாடான 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சியம், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்திலிருந்தும் தங்கள் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வார்கள்.

நான் அந்த முன்னோக்கை நம்புகிறேன். அதனால் தான் நானும் எனது தோழர்களும் அடுத்த வளர்ச்சிக் காலகட்டத்தில், தொழிலாள வர்க்கம் சமூகப் புரட்சியை நோக்கி ஆழமான மாற்றத்தைக் காணும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம். நான் நினைப்பது என்னவென்றால், அது வெகு தொலைவில் இல்லை. எதிர்காலத்தில், நாம் இன்னொரு கொண்டாட்டத்தை புயுகடாவில் நடத்துவோம், அது அந்த நிலைமைகளின் கீழ் இருக்கும், அதில் இந்த முன்னோக்கு நனவாக்கத்தின் மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கும்.

Loading