மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதனன்று, மிகத் தீவிரமாக ஆரம்பித்த காஸா நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் புதிய மட்டத்தை எட்டியுள்ளது. சியோனிச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத கடைசியாக உள்ள காஸா நகர்ப்புறப் பகுதியின் தெருக்களில், உருண்டுவரும் டாங்கிகளுடன் வான்வழித் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) பாலஸ்தீன மக்களை அழித்து, உள்கட்டமைப்பு மற்றும் காஸாவில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டமைப்பையும் அழித்து, ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இடைவிடாத பீரங்கிகள் மற்றும் விமானப் படைகளின் ஆதரவுடன் இஸ்ரேலிய தரைப்படைகள் காஸா நகரத்தின் மையப்பகுதியை வெற்றிகரமாக ஊடுருவிச் சென்றுள்ளன. நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அடர்த்தியான குடியிருப்பு பகுதிகள் வழியாக முறையாக முன்னேறி வரும் நிலையில், சமீபத்திய பயங்கரவாத அலை கட்டவிழ்த்துவிடப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் விவரித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ், நியூயோர்க் டைம்ஸ், அல் ஜசீரா மற்றும் பிபிசி ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளி மற்றும் புகைப்பட சான்றுகள், ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வசித்துவந்த ஷேக் ரத்வான் பகுதியில், நெடுவரிசையில் டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் நுழைவதைக் காட்டுகின்றன. இப்போது, இந்தப் பகுதி இடிபாடுகளாகவும் தூசிகளாவும் மாறிவிட்டன.
உள்ளூர்வாசியான வாஹித் அபு ரமலான் ராய்ட்டர்ஸிடம், “நாங்கள் இரவை இருளில் கழித்தோம், சுற்றிலும் குண்டுகள் மற்றும் அலறல் சத்தங்கள். விடிந்தபோது, டாங்கிகள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன, புகை மண்டலத்திலிருந்து வெளிவந்த காற்றை சுவாசிப்பது கடினமாக இருந்தது. மேலும், தப்பி ஓடிய எனது அண்டை வீட்டார் தஞ்சம் புகுந்திருந்த வீடு சில நொடிகளில் அழிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
ஏவுகணைகள் “பல உயரமான கட்டிடங்களை அழித்தன” என்றும், “அழிக்கப்பட்ட வீடுகளில் இருந்து உடல்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ்கள் ஒரு தாக்குதலில் இருந்து இன்னொரு தாக்குதல் இடம்பெற்ற இடங்களுக்கு விரைந்தன” என்றும், குடியிருப்பாளர்களின் பயனற்ற முயற்சிகளை நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை விவரித்தது.
குண்டுவீச்சில் இருந்து உயிர் தப்பிய சாமியா ஜமாலுடன் அல் ஜசீரா பேசியபோது, “முழுக் குடும்பங்களும் உள்ளே இருந்தபோது கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இராணுவம் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது” என்று தெரிவித்தார்.
“முழு வெற்றி” என்ற இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களில், புதன்கிழமை காஸா பகுதியில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மரணங்களில் முப்பத்தேழு பேர் காஸா நகரில் ஷேக் ரத்வானில் உள்ள ஒரு பள்ளியை அழித்த ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து கொல்லப்பட்டனர். அங்கு டசின் கணக்கான இடம்பெயர்ந்த பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் அல் ஜசீராவிடம், “நாங்கள் காலை தொழுகையை முடித்தபோது ஏவுகணைகள் தாக்கின. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் - எல்லோரும் உதவிக்காக அலறிக் கொண்டிருந்தனர். கூடாரங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் குறைந்தது 12 சடலங்களை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்.
அல்-அஹ்லி மருத்துவமனை மற்றும் டஃப் சுற்றுப்புறத்தின் வளாகத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் இந்தப் படுகொலை வெளிப்பட்டது. அதே நேரத்தில் நகரின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இடம்பெற்ற இரவு நேர குண்டுத் தாக்குதலில் முழுக் குடும்பங்களும் கொல்லப்பட்டன. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் இந்தக் கொடூரமான சம்பவங்களை விவரித்தனர்: “மருத்துவமனையின் தளத்தை இரத்த வெள்ளம் மூடியிருந்தது, காயமடைந்தவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயன்ற பலரும் கொல்லப்பட்டனர்.”
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட இறந்தவர்களில் டசின் கணக்கானவர்களை பட்டியலிட்டு பெயரிட்டுள்ளது. டெல் அவிவில் உள்ள காட்டுமிராண்டிகளுக்கு மருத்துவ நிலையங்களை இலக்கு வைப்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் அட்டூழியங்கள் பற்றிய செய்திகளை உலகிற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களும் அவ்வாறே உள்ளது.
அக்டோபர் 2023 இல் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து 65,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கையில், அழிப்பின் சமீபத்திய காட்சிகள் வெளி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் கண்காணிப்பு அமைப்புகளும் இந்தப் புள்ளி விவரங்களை துல்லியமானவை என்று அங்கீகரித்தாலும், இறப்பு எண்ணிக்கை 200,000 மக்களைத் தாண்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படாமலும் கணக்கிடப்படாமலும் உள்ளனர்.
பொது மக்களின் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதோடு சேர்ந்து, இந்த உயிரிழப்புகள் காஸாவின் மக்கள்தொகையில் 90 சதவீதத்தினரை நிரந்தர இடம்பெயர்வுக்கு தள்ளியுள்ளன. பஞ்சம் மற்றும் மருத்துவ வசதியின்மை சமீபத்திய வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை பறித்துள்ளது.
இந்த திட்டமிட்ட பேரழிவுக்கு மத்தியில், இஸ்ரேல் காஸா நகரத்திலிருந்து ஒரு புதிய தற்காலிக வெளியேற்றப் பாதையைத் திறப்பதாக அறிவித்தது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் நகரத்தின் “இறுதி ஆக்கிரமிப்பு” என்று அழைப்பதற்கு முன்பு, பொதுமக்கள் தப்பி ஓட அனுமதிக்க 48 மணிநேரம் “அவகாசத்தை” இஸ்ரேல் அறிவித்தது.
இஸ்ரேலால் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் மற்றொரு அளவுகோல், “தெளிவான பாதைகள்” மற்றும் மனிதாபிமான வழித்தடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து முக்கிய தெற்கு நெடுஞ்சாலைகளிலும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுகின்றன. இவை, விரக்தியடைந்த காஸா மக்களை டாங்கிகள், ஸ்னைப்பர்கள் மற்றும் எங்கிருக்கின்றன என்று தெரியாத கண்ணிவெடிகள் போன்ற சிக்கலில் சிக்க வைக்கின்றன.
“துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டபோது நாங்கள் வெளியேற முயற்சித்தோம். ஆனால், குண்டுகள் கடலோர சாலையில் சென்ற எங்கள் மீது வீசப்பட்டன” என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறினார். “நாம் திரும்பி வந்தால், இறந்துவிடுகிறோம். நாம் முன்னோக்கிச் சென்றால், நாங்கள் இன்னும் இறக்கக்கூடும்.” இஸ்ரேலிய இராணுவம் ஏற்கனவே 350,000 மக்கள் காஸா நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இன்னும் அரை மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளையும் உறவினர்களையும் விட்டு வெளியேற இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் முற்றுகை மற்றும் குண்டு வீச்சுக்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர் என்றும் கூறுகிறது.
அல் ஜசீராவிடம் தெரிவித்த காஸா பள்ளி ஆசிரியரின் வார்த்தைகளில் கூறுவதானால்: “மீண்டும் அகதியாக மாறுவதை விட எனது சுற்றுப்புறத்தில் இறப்பதை நான் விரும்புகிறேன்.”
ABC நியூஸ் மற்றும் பல சர்வதேச ஊடகங்களின் நேரடி அறிக்கைகளின்படி, தரைவழித் தாக்குதல் அதன் அளவிலும், துப்பாக்கிச் சூட்டிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடம்பெற்றது. குறைந்தது மூன்று கவசப் படைகள் “காஸா நகரின் மையப்பகுதியில்” செயல்படுகின்றன. முழு சுற்றுப்புறங்களிலும் புகை மற்றும் நெருப்பு மூண்டது. அதே நேரத்தில், ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இஸ்ரேலால் “பயங்கரவாத தளங்கள்” என்று குறிக்கப்பட்ட பகுதிகளைத் தாக்கின.
ABC நியூஸ் பேட்டி கண்ட இராணுவத் தளபதிகள், நகர மையத்தைச் சுற்றி டாங்கிகள் அணிவகுத்து நின்றதையும், இஸ்ரேலிய ஊடகங்கள் நகராட்சி அரசாங்க வளாகங்களின் இடிபாடுகளுக்குள் சிறப்புப் படைகள் நுழைந்ததைக் கொண்டாடியதையும் உறுதிப்படுத்தினர், “ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிப்பதைத்” தவிர, பின்வாங்குவது குறித்து எந்தத் திட்டங்களும் அங்கு கலந்துரையாடப்படவில்லை. மேலும், “காஸா எரிந்து” கொண்டிருக்கிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.
உலக மக்களுக்கு 23 மாதங்களாகத் தெளிவாகத் தெரிந்த இஸ்ரேலின் மிகப்பெரிய குற்றத்தை, இறுதியாக புதன்கிழமை அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் அங்கீகரித்தார். அவர் இஸ்ரேல் “காஸாவில் இனப்படுகொலை செய்து வருகிறது” என்று செனட் தளத்தில் முதல் தடவையாக அறிவித்தார்.
இனப்படுகொலை மற்றும் அதிகரித்து வரும் சட்ட மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சாண்டர்ஸ் மேற்கோள் காட்டினார். அந்த அறிக்கை, இஸ்ரேலிய தாக்குதலை, வேண்டுமென்றே மக்களை அழித்து இடம்பெயரச் செய்யும் கொள்கையாக இவற்றை ஆவணப்படுத்துகின்றன. “நோக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது, முடிவு மறுக்க முடியாதது” என்று சாண்டர்ஸ் கூறினார்.
சாண்டர்ஸின் அறிக்கை, யூத பாரம்பரியத்தைச் சேர்ந்த வெர்மான்ட் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி பெக்கா பாலிண்ட் போன்றவர்களால் எதிரொலிக்கப்பட்டது. “போரின் துயரமான உயிரிழப்புகளை விட துன்பம் அதிகமாக உள்ளது; இந்த சூழ்நிலையில், நெதன்யாகு நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு அழிப்பதாகத் தோன்றுகிறது” என்று அவர் எழுதினார்.
“தோன்றுகிறது” என்ற வார்த்தையின் பயன்பாடு அத்தகைய போலித்தனமான அறிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதற்கிடையில், பைடென் மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்கள் இரண்டாலும் வழிநடத்தப்பட்டுவரும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை நிறைவு செய்வதற்காக சியோனிச இராணுவம் நகர்ந்து வருகின்ற நிலையில், சாண்டர்ஸ் மற்றும் பிற ஜனநாயகக் கட்சி அதிகாரிகளிடம் இருந்து இந்த வார்த்தைகள் வருகின்றன.
ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வான் ஹோலன் மற்றும் மெர்க்லி வெளியிட்ட காஸா பற்றிய அறிக்கைகளைப் போலவே, இந்த அறிக்கைகளும் பாலஸ்தீனம் பூமியில் இருந்து துடைத்தெறியப்பட்டு வருகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவினர் தமது முகத்தைக் காப்பாற்ற கடைசி நிமிடத்தில் மேற்கொண்டுவரும் பதினொன்றாவது மணி நேர முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜெருசலேமில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, பாலஸ்தீனியர்களை “காட்டுமிராண்டி விலங்குகள்” என்று வர்ணித்தார். இது, இரண்டாம் உலகப் போரில் யூதர்களை நாஜிக்கள் அழிக்கும்போது எதிரொலித்த மொழியாகும்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய திட்டங்கள், அனைத்து பாலஸ்தீனியர்களையும் காஸாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்பதாகும். அதைத் தொடர்ந்து சமூகத்தின் உயரடுக்குகளுக்கான சுற்றுலா மற்றும் பெருநிறுவன மேம்பாட்டிற்காக இப் பிராந்தியத்தை புனரமைத்து தனியார்மயமாக்குவது ஆகும்.
கசிந்த வெளியுறவுத் துறை ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றும் CNBC மற்றும் CNN போன்ற ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்ட “காஸா களியாட்டு நகரத்” திட்டம், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்களை இடமாற்றம் செய்தல், டிஜிட்டல் “தன்னார்வ” மீள்குடியேற்ற பரிமாற்றங்கள் மற்றும் பாலஸ்தீனிய சமூகத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் “செயற்கை நுண்ணறிவு உந்துதல் கொண்ட ஸ்மார்ட் நகரங்களை” நிர்மாணித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய ஒரு கோரமான விளம்பர வீடியோவில், டொனால்ட் ட்ரம்ப் இடிபாடுகளில் கடற்கரையோர உல்லாச விடுதிகளை கட்டுவது பற்றி பெருமையாகப் பேசினார். அகதிகள் திரும்புவதுக்கு அனுமதிக்க மறுப்பது, காப்பகங்களைத் தொடர்ந்து அழிப்பது மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்களுக்கு காஸாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பது ஆகியவை 21 ஆம் நூற்றாண்டில், உலக முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலத்தின் எதிர்காலத்தை முன்னறிவிக்கும் ஒரு கொடூரமான குற்றத்தின் அறிகுறிகளாகும்.