மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரிட்டனுக்கான இரண்டாவது அரசுமுறை விஜயமானது, செல்வம், அதிகாரம் மற்றும் சலுகைகளின் ஒரு கோரமான காட்சியாக இருந்தது. பிரிட்டனின் அரச குடும்பம், இராணுவம் மற்றும் அரசாங்கம் ஆகியன, அமெரிக்காவின் வருங்கால சர்வாதிகாரி, நிதி மற்றும் பெருநிறுவன செல்வந்த தன்னலக்குழுவின் முன்னணி பிரதிநிதிகளைக் கொண்ட அவரது பரிவாரங்கள் மீது பணிவுடன் நடந்து கொண்டன.
வின்ட்சர் கோட்டையில் இடம்பெற்ற ஆடம்பர விழா, இன்றைய உலகளாவிய பிரபுத்துவத்தின் அதிகாரத்தைக் காட்டும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா வழங்கிய சூழலைப் பயன்படுத்தி, உலக ஆட்சியாளர்களாக தங்கள் நிலையை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொண்டனர்.
உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய வின்ட்சர் கோட்டை மைதானத்தின் வழியாக குதிரை வண்டி சவாரிகள் மற்றும் அதன் வரலாற்றுப் பொக்கிஷங்களைச் சுற்றிப் பார்த்ததன் மூலம், ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இரண்டு நாட்கள் அரச வாழ்க்கையின் மாயாஜால பதிப்பை அனுபவித்தனர். எட்டாம் ஹென்றி அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கொண்ட செயிண்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் உள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கல்லறையில் ட்ரம்ப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆனால், கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஒரு அரசு விருந்தின் முக்கிய நிகழ்வானது ஒரு முன்னோட்டம் மட்டுமே. இந்த ஆடம்பரமான இரவு விருந்தில் 160 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 50 மீட்டர் நீளமுள்ள மேற்கு இந்திய மரத்தின் வலுவான, இளஞ்சிவப்பு நிறத்திலான மஹோகனி மேசையில் தங்கம், வெள்ளி மற்றும் படிக அலங்காரங்கள், மட்பாண்டங்கள், உண்பதற்கு பயன்படுத்தப்படும் கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள் மற்றும் மேசையில் வைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்காவிற்கு தகுதியான மலர் காட்சியின் கீழ் அமர்ந்து அவர்கள் முனுகிக் கொண்டிருந்தனர்.
இந்த மேசையை அலங்காரம் செய்ய மட்டும் ஒரு வாரம் ஆனது. 19 பகுதிகளாக உணவு பரிமாறும் சேவை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு சேவை நிலையத்திலும், ஒரு இளம் உதவியாளர், ஒரு உணவு பரிமாறுபவர், ஒரு சேவகன், ஒரு துணை உணவு பரிமாற்றாளர் மற்றும் ஒரு மதுபான பரிமாற்றாளர் இருந்தனர்.
சார்ல்ஸ், கமிலா மற்றும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோருடன் தொழிற்கட்சி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படெனோக், வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி மற்றும் உள்துறை செயலர் யெவெட் கூப்பர் ஆகியோர் ட்ரம்பை வரவேற்றனர்.
எவ்வாறாயினும், விருந்தினர் பட்டியலில் ட்ரம்பின் சொந்த தன்னலக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக, பெரும் தொழில்நுட்ப அதிபர்களான என்விடியாவின் ஜென்சன் ஹுவாங், ஆப்பிளின் டிம் குக், ஓபன்ஏஐயின் சாம் ஆல்ட்மேன், மைக்ரோ சொப்டின் சத்யா நாதெல்லா, பாலன்டிரின் அலெக்ஸ் கார்ப், ஆர்ம் ஹோல்டிங்ஸின் ரெனே ஹாஸ் மற்றும் ஆல்பாபெட்டின் ரூத் போர்ட், பிளாக்ஸ்டோனின் ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன், சிட்டிகுரூப்பின் ஜேன் ஃப்ரேசர், பிளாக் ரொக்கின் லாரி ஃபிங்க் மற்றும் அமெரிக்க வங்கியின் பிரையன் மொய்னிஹான் ஆகியோர் இருந்தனர்.
விருந்துக்கு அழைக்கப்பட்ட இதர பில்லியனர்கள் மற்றும் பல மில்லியனர்களில் ஊடக முகவர் ரூபர்ட் முர்டோக், லொக்ஹீட் மார்ட்டின் ஜேம்ஸ் டாய்க்லெட், நியூகோர் ஸ்டீலின் லியோன் டோபாலியன், போயிங் நிறுவனத்தின் கெல்லி ஓர்ட்பேர்க் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸின் மார்க் பெனியோஃப் ஆகியோர் அடங்குவர்.
பிரிட்டன் நிறுவனங்களில் இருந்து, அஸ்ட்ராஜெனெகாவின் பாஸ்கல் சோரியட், GSK வின் எம்மா வால்ம்ஸ்லி, ரோல்ஸ் ரோய்ஸின் துஃபான் எர்ஜின்பில்ஜிக், நேஷனல் கிரிட் பிஎல்சியின் பவுலா ரெனால்ட்ஸ் மற்றும் BAE சிஸ்டம்ஸின் சார்லஸ் உட்பர்ன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த பில்லியனர்கள் கொண்டிருக்கும் செல்வத்தின் அளவைக் குறிக்கும் வகையில், மேசையில் இருந்த இரண்டு டசின் பணக்காரர்களின் ஒட்டுமொத்த தனிப்பட்ட செல்வ மதிப்பு 274 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது, ஒரு நபரின் சராசரி தொகை 11.4 பில்லியன் டாலர்கள். இது, பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபரின் சராசரி செல்வவளத்தை விட 67,000 மடங்குகள் அதிகமாகும். இவர்கள் ஒன்றாக, 17.7 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இது பிரிட்டனில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த மதிப்பையும் விட அதிகமாகும்.
அரச குடும்பம், அதன் விருந்தினர்களுடன் ஒப்பிடும்போது ஏழ்மையாக இருந்தது. இந்த இரண்டு டசின் பேர்களின் தனிப்பட்ட செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அரச குடும்பம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் “வரலாற்றைக்” கொண்டு வருகிறார்கள்: பல நூற்றாண்டு கால ஆட்சியும் ஆடம்பரமும் கொண்ட பாரம்பரியம், புதிய நிதி மற்றும் பெருநிறுவன பிரபுத்துவத்தை ஆழமாக கவர்ச்சிகரமானதாகக் காண்கிறது.
இதுதான் ட்ரம்ப், தனது ஸ்கொட்லாந்து தாயின் மூலம் —ஒரு உறுதியான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்— தனது பிரிட்டன் வேர்களைப் பற்றிய அவரது சூடான நினைவுகளையும், அமெரிக்காவைத் தவிர இங்கிலாந்து மட்டுமே தனக்குப் பிடித்த நாடு என்ற உணர்வையும் அவருக்கு தூண்டியது.
பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியிலிருந்து அமெரிக்கா தன்னை விடுவித்துக் கொண்ட சுதந்திரப் போரை ஒரு துயரமான தவறான புரிதல் என்று சித்தரிப்பதன் மூலம் மன்னர் சார்ல்ஸ் ஒரு பகட்டான உரையையும் நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு 250 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டதிலிருந்து “நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம்” என்பதைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்ட அவர், “எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வாஷிங்டனோ அல்லது மூன்றாம் ஜோர்ஜ் மன்னரோ கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதது” என்று பாராட்டினார்.
ட்ரம்ப் தற்போது காலத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி திருப்ப முற்படுகிறார். அவர், 1776 புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் மூலம் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகப் பெற்ற அனைத்து ஜனநாயக மற்றும் சமூக ஆதாயங்களையும் துடைத்தெறிய முயன்று வருகிறார். சமீபத்தில் “கட்டுப்பாட்டை இழந்த” மற்றும் “விழித்தெழுந்த” உயரடுக்கு “அடிமைத்தனம் எவ்வளவு மோசமாக இருந்தது” என்பதில் ஆவேசமாக இருப்பதாக அவர் புகார் அளித்துள்ளார்.
ட்ரம்ப், ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசின் மாதிரியில், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து, இரட்டை முடியாட்சியை விரும்பியதன் மூலம், முடியாட்சியைத் தூக்கி எறிவது ஒரு பயங்கரமான தவறு என்று ஒப்புக்கொள்வதற்கு நீண்ட தூரம் செல்லலாம். அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் “மன்னர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
வின்ட்சர் கோட்டையில் நடந்த நிகழ்ச்சி, இந்த ஆழமான ஜனநாயக உணர்வுக்கு வெளிப்படையான மறுப்பாக இருந்தது. ட்ரம்பின் பிரிட்டிஷ் பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தன்னலக்குழுக்களுடன் சேர்ந்து, ஐரோப்பாவின் மிகப் பழமையான சமூக ஜனநாயகக் கட்சிகளில் ஒன்றான தொழிற் கட்சியின் பங்கேற்புடன் ரொட்டியை உடைப்பது அரசியல் சீரழிவின் அடையாள தருணமாகும் ——மனிதகுல வரலாற்றில் அழுகி நாற்றம்கண்ட அனைத்தும் இங்கே ஒன்றிணைந்துள்ளது.
உலகின் மேலாதிக்க சக்தியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பொறாமையுடன் பார்க்கும் அதே வேளையில், பல தசாப்தங்களாக இங்கிலாந்தின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பிரபுத்துவ ஆணவம் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் மரபுகளையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேராசை கொண்ட, இரத்தத்தில் நனைந்த உதாரணத்தையும் விருப்பத்துடன் திரும்பிப் பார்க்கிறது. அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான அவர்களின் மோகம் அவர்களை ஒன்றிணைக்கிறது.
எனவே, ட்ரம்பின் அரசுமுறை விஜயம் என்பது, அடிமைப்படுத்தும் வணிகத் தலைவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு முன்னால், அமெரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தத்துடன் முடிவடைந்தது பொருத்தமானதாக இருந்தது.
இது, இங்கிலாந்துக்கு அவர் “வழங்கிய” சான்று என்று பிரதமர் ஸ்டார்மர் கூறினார். ஆனால், இந்த விவகாரத்தை பார்த்த தொழிலாளர்களும் இளைஞர்களும் முற்றிலும் வேறுபட்ட ஒன்றைக் கண்டிருப்பார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் இதயத்தில் உள்ள ஜனநாயகக் கொள்கையை ஆபிரகாம் லிங்கன் சுருக்கமாகக் கூறிய கிட்டத்தட்ட 162 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற நிகழ்ச்சி, அதன் முற்றிலும் எதிர்த் துருவக் காட்சியை வெளிப்படுத்திக் காட்டியது: இது, தன்னலக்குழுவால், தனலக்குழுவிற்காக. தன்னலக்குழுவின் அரசாங்கம். அல்லது, பிரிட்டிஷ் முடியாட்சியின் குறிக்கோள் போல, “கடவுளும் என் உரிமையும்” (”Dieu et mon droit”) என்று இவர்கள் கூறுவார்கள்.
இந்த நிலைமைகள் சமூக உறவுகளுக்கு ஒரு வெடிக்கும் தன்மையை அளிக்கின்றன. உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒரு ஒட்டுண்ணித்தனமான ஆளும் வர்க்கத்தின் ஆட்சி, சமூக செல்வத்தின் மீதான அதன் ஏகபோகமயமாக்கல், ஒரு சமூகப் பேரழிவை உருவாக்கி வருகிறது.
முன்னொருபோதும் இல்லாத வகையில், செல்வ வளத்தை உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து செல்வத்தை திருடுவதன் பின்னணியில், அதை அனுபவிக்கும் செல்வந்தர்களால் போர்களும் இனப்படுகொலைகளும் நடைபெறுகின்றன. இதன் விளைவாக, “ஒரு துருவத்தில் செல்வக் குவிப்பு” என்றும், எதிர் துருவத்தில் “துன்பம், உழைப்பின் வேதனை, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனச் சீரழிவு” என்றும் கார்ல் மார்க்ஸ் விவரித்தார்.
இவை எதுவுமே ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை. அமெரிக்காவில் ட்ரம்ப் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபித்தமை, ஜனநாயக உரிமைகள் மீதான தொழிற் கட்சி அரசாங்கத்தின் முன்னொருபோதும் இல்லாத தாக்குதலால் பிரிட்டனில் எதிரொலிக்கிறது. இதில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்காகவும் மற்றும் காஸாவில் நடந்து வரும் ஒரு இனப்படுகொலையை எதிர்த்ததற்காகவும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அரசியல் யதார்த்தங்கள், முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினைச் சுற்றி ஈர்க்கும் இங்கிலாந்தில் உள்ள அனைத்து போலி இடது போக்குகளின் இயலாமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவர்கள் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு மாற்றாக தொழிற்கட்சியின் பழைய தேசிய சீர்திருத்தவாத திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை இப்போது தொழிலாள வர்க்கம் உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்த மிருகத்தனமான முதலாளித்துவ தாக்குதலை “கருணை”, “நியாயம்” மற்றும் சிறிய சீர்திருத்தங்களுக்கான அழைப்புக்களுடன் எதிர்க்க முடியும் என்று கூறுவது, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அரசியல் யதார்த்தத்திற்கு நிராயுதபாணிகளாக்குகிறது. தன்னலக்குழு ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்பது, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தொடர முடியும்.
ட்ரம்பும் மன்னர் சார்ல்ஸும் அட்லாண்டிக் கடந்த ஒற்றுமை என்ற பெயரில் அமெரிக்காவின் சுதந்திரப் போரின் புரட்சிகர மரபுகள் மீது துப்புகின்றனர். ஆனால், பொது ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, பிரிட்டன் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கம் வழிநடத்தும் சோசலிசப் புரட்சிதான், இரு மக்களின் தலைவிதிகளையும் உண்மையிலேயே மீண்டும் ஐக்கியப்படுத்தும்.