முன்னோக்கு

ட்ரம்பின் பாசிச சதித் திட்டத்தை எதிர்த்து எவ்வாறு போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஒரு நிருபரின் கேள்வியைக் கேட்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2025 [AP Photo/Alex Brandon]

சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்ட வாரத்திலிருந்து, ட்ரம்ப் நிர்வாகம் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அதன் சதித்திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

ட்ரம்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளில் ஒருவரான பாசிச மூலோபாயவாதி ஸ்டீபன் பானனால் ட்ரம்ப் ஆட்சியின் கொள்கை தெளிவாக வரையப்பட்டுள்ளது. “நாம் போருக்குச் செல்லப் போகிறோம் என்றால், போருக்குச் செல்வோம்” என்று அவர் அறிவித்தார். ட்ரம்ப் நிர்வாகம் மக்களுக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக, அரசியலமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது.

இந்தப் போர், சார்லி கிர்க்கை பகிரங்கமாக தெய்வமாக்கும் கட்டமைப்பிற்குள் நடத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, வெள்ளை மாளிகை ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அனைத்து விமர்சனங்களையும் தடை செய்வதற்கான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. தொழிலாளர்கள், ஆசிரியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட பலர், சார்லி கிர்க் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சித்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிர்க்கின் படுகொலையை அரசியல் ரீதியாக சுரண்டுவது குறித்து அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் திங்களன்று மிதமான மற்றும் நியாயமான கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, கடந்த புதன்கிழமை ABC/Disney தொலைக்காட்சி நிறுவனம், அவரது இரவு நேர நிகழ்ச்சியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. கிர்க்கின் படுகொலையின் அரசியல் சுரண்டல் குறித்து கிம்மல் திங்களன்று லேசான, துல்லியமான கருத்துக்களை வெளியிட்ட பிறகு. வெள்ளை மாளிகை மற்றும் அதை செயல்படுத்துபவர்களின் வெளிப்படையான உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. FCC யின் (கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம்) தலைவர் பிரெண்டன் கார், “இதை நாம் எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ மேற்கொள்வோம்” என்று ஒளிபரப்பாளர்களை அச்சுறுத்தினார். நெக்ஸ்டார் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள், தமது பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இணைப்புகளையும் இலாபங்களையும் பாதுகாப்பதுக்கு, அவசரமாக இந்த அச்சுறுத்தலுக்கு இணங்கின.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நேர்காணல்களில், கிம்மலின் இடைநீக்கம் “கடைசியாக கைவிடப்பட்ட காலணி அல்ல” என்று பிரெண்டன் கார் அறிவித்தார். மேலும், “ஊடக சுற்றுச்சூழல் அமைப்பில் நடைபெற்று வரும் ஒரு பெரிய மாற்றத்திற்கு” அழைப்பு விடுத்தார். அதே நாளில், ட்ரம்ப் தன்னைப் பற்றி “எதிர்மறையான செய்திகளை” ஒளிபரப்பும் ஒளிபரப்பாளர்களின் உரிமங்களை ஒழுங்குமுறை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.

இப்போது இன்றியமையாத கேள்வி என்னவென்றால், சர்வாதிகாரத்தை நோக்கிய இந்த உந்துதலைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலமைப்பைத் தூக்கியெறிவதற்கான ட்ரம்பின் முயற்சியின் அரசியல் உள்ளடக்கம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் வர்க்க மற்றும் பொருளாதார நலன்கள், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அதிகாரத்தைக் கொண்ட சமூக சக்தி, மற்றும் ட்ரம்புக்கு எதிரான போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய அரசியல் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றை அடையாளம் காண்பது அவசியமாகும்.

முதலாவதாக, தற்போது கட்டவிழ்ந்து வருவது, இராணுவம், பொலிஸ், துணை இராணுவப் படைகள் மற்றும் பாசிச கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு உந்துதலைக் காட்டிலும் குறைவானது அல்ல. ஆகவே, அனைத்து சுய-ஏமாற்றும் நம்பிக்கைகளையும் ஒதுக்கி வைப்பது அவசியமாகும். சார்லி கிர்க்கை மகிமைப்படுத்துவது என்பது அடிப்படையில் நாட்டின் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளை தூண்டிவிடுவதற்கு ஒரு தியாகி சின்னத்தை வழங்குவதாகும்.

உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்துள்ளதைப் போல, ட்ரம்பின் உள் வட்டத்தில் உள்ள ஹிட்லரின் அபிமானிகளான துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் போன்றவர்கள், நாஜி செயல்முறைகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். கிர்க் என்பவர் ட்ரம்ப் ஆட்சியின் “Horst Wessel” (நாஜிக்களின் கொலைகார புயல்வேக துருப்புக்களின் பெயர்) ஆவார். மேலும் கிர்க்கின் படுகொலை, மார்ச் 1933 இல் ஹிட்லர் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்காக ஜேர்மன் பாராளுமன்றக் கட்டிடத்தை கைப்பற்றுவதற்காக, அதனை எரித்த இழிவான தீ சம்பவத்துக்கு சமமானதாகும்.

ஜிம்மி கிம்மலின் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டிருப்பது நாஜி ஆட்சியின் தந்திரோபாயங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு நடவடிக்கையாகும். ஹிட்லரின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை அவமதிக்கும் என்று கருதப்பட்ட நகைச்சுவைகள் உட்பட எந்த வகையான பேச்சும், கடுமையான தண்டனைக்கு தகுதியான ஒரு குற்றவியல் குற்றமாக ஜேர்மனியில் கருதப்பட்டது. “ஹெய்ல் ஹிட்லர்” வணக்கம் நண்பர்களிடையே கூட கட்டாய வாழ்த்து வடிவமாக மாறியது.

இரண்டாவதாக, ட்ரம்ப் சொந்தமாக செயல்படவில்லை. அவரது தனிப்பட்ட குணங்கள் எவ்வளவுதான் கோரமானதாக இருந்தாலும், அவர் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த நிதிய தன்னலக்குழுவின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். இங்கேயும் நாஜி ஜேர்மனிக்கு இணையான காட்சிகள் உறைய வைக்கின்றன. முன்னணி ஜேர்மன் முதலாளிகளால் நாஜி இயக்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதார வளங்கள் இல்லாமல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்திருப்பது சாத்தியமாகியிருக்காது என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். பதவிக்கு வந்தவுடன், ஹிட்லரின் மிருகத்தனமான ஆட்சி ஜேர்மன் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்தது. மேலும், அவை ஹிட்லரின் சர்வாதிகாரத்தை ஆதரித்தன.

எதுவாக இருந்தாலும், ட்ரம்புக்கும் இன்றைய நிதிய-பெருநிறுவன செல்வந்த தன்னலக்குழுவிற்கும் இடையிலான கூட்டணி என்பது, நாஜி ஜேர்மனியில் நிலவியதை விட மிகவும் தீவிரமாக உள்ளது. இதை மிகைப்படுத்தாமல் ஒரு காதல் விவகாரம் என்றுகூட விவரிக்க முடியும். ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு மத்தியில், கடந்த வாரம் வெள்ளை மாளிகை இரவு விருந்தில் அவர் கொண்டாடப்பட்டார். அங்கு மெகா-மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் குழு அவரைப் புகழ்ந்து பாடியது. பிரிட்டனில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இந்த வாரம் இன்னும் ஆபாசமான காட்சிகள் அரங்கேற்றப்பட்டது. மூன்றாம் சார்ல்ஸ் மன்னருக்கு அருகில் அமர்ந்திருந்த ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஓபன் ஏஐ இன் சாம் ஆல்ட்மேன், மைக்ரோ சொப்டின் சத்ய நாதெல்லா, ஆல்பாபெட்டின் ரூத் போராட், பிளாக் ஸ்டோனின் ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன், சிட்டி குரூப்பின் ஜேன் ஃப்ரேசர், பிளாக் ரொக்கின் லாரி ஃபிங்க் மற்றும் அமெரிக்க வங்கயின் பிரையன் மொய்னிஹான் உள்ளிட்ட தன்னலக் குழுக்களின் ஒரு பரிவாரத்தை, அரசு விருந்தில் கலந்துகொள்ள வரவேற்றார்.

மூன்றாவதாக, ட்ரம்ப் மீது வெளிப்படுத்தப்படும் போற்றுதலுக்குப் பின்னால் இரக்கமற்ற பொருளாதார மற்றும் அரசியல் கணக்கீடுகள் உள்ளன. மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியினரிடம் அதிர்ச்சியூட்டும் வகையில் செல்வவளம் குவிந்திருப்பது, ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது. செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாப்பதும், தொழிலாள வர்க்கத்தை கட்டுப்பாடற்ற முறையில் சுரண்டுவதும் ஜனநாயகத்துடன் பொருந்தாது என்பதில் உறுதியாக நம்புகிறார்கள். ஆதலால், சர்வாதிகாரம் அவர்களின் விருப்பமான அரசியல் ஆட்சி வடிவமாக உள்ளது.

எவ்வாறிருப்பினும், அமெரிக்க ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பதை தூக்கியெறிவதை ஆதரிப்பதற்கான தன்னலக்குழுவின் காரணங்கள், முன்னெப்போதையும் விட அதிகமான பணக் குவியல்கள் மற்றும் தனிப்பட்ட செல்வத்தின் மீதான அவர்களின் அடக்க முடியாத ஆசைக்கு அப்பால் நீண்டுள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கம், முதலாளித்துவ அமைப்புமுறையின் இருத்தலியல் நெருக்கடி குறித்து நனவாக அறிந்திருக்கிறது மற்றும் அதைப் பற்றி தீவிரமாக பீதியடைந்துள்ளது. இப்போது 40 டிரில்லியனை டாலர்களை நெருங்கி வரும் அமெரிக்காவின் தேசியக் கடன் நீடிக்க முடியாதது என்பதை அவர்கள் அறிவார்கள்.

வாழ்க்கைத் தரங்கள் மீதும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையிலும் கூட ஒரு பாரிய தாக்குதல் அவசியம் என்று இந்த தன்னலக்குழுக்கள் உறுதியாக உள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களின் முற்போக்கான சகாப்தம், 1930களின் புதிய ஒப்பந்தம் (New Deal) மற்றும் 1960 களின் மாபெரும் சமூகம் (Great Society) வரை நீடித்த அனைத்து சமூக சீர்திருத்தங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவி போன்ற முக்கியமான திட்டங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். கோவிட், தட்டம்மை, சளி, போலியோ, கக்குவான் இருமல் மற்றும் பிற கொடிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை முடிவுக்குக் கொண்டுவரும் அளவிற்கு மருத்துவத்தின் மீதான போர், சிறுவர்கள் மற்றும் குழந்தை இறப்பை கணிசமாக அதிகரிப்பதையும் ஆயுட்காலத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பொதி வைக்கும் கிட்டங்கிகள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பிற பணியிடங்களில் காயம் மற்றும் மரணத்திற்கு எதிராக எந்த வகையான பாதுகாப்பையும் வழங்கும் விதிமுறைகளை துடைத்தெறிவது ஒரு முக்கிய நோக்கமாகும்.

முதலாளித்துவ உயரடுக்கின் அரசியல் கணக்கீடுகளில் இன்னுமொரு காரணி அமெரிக்க ஏகாதிபத்தியம் முகங்கொடுக்கும் புவிசார் அரசியல் நெருக்கடி ஆகும். அமெரிக்காவின் உலகப் பொருளாதார மற்றும் மூலோபாய நிலைமையில் நீடித்த சீரழிவு இன்றியமையாத பரிமாணங்களை எட்டியுள்ளது. சீனாவின் எழுச்சி மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தை சவால் செய்யும் நாடுகளின் கூட்டணியின் வளர்ச்சியை போரினால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். அமெரிக்காவின் இராணுவமயமாக்கல் முன்னெப்போதிலும் பார்க்க கூடுதலான செலவுகளைக் கோருகிறது. இது, சமூக செலவினங்களையும் மற்றும் ஊதியங்களை வெட்டுவதற்கான அழுத்தத்தையும் தீவிரப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக, போர்களைத் தயாரிப்பதற்கும், தொடங்குவதற்கும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கும் இது அவசியமாகிறது.

இவைதான், அமெரிக்க ஜனநாயகத்தின் வீழச்சிக்கு அடித்தளமான புறநிலைக் காரணிகளாகும். ட்ரம்பின் கொள்கைகள் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் ஆகும். இருப்பினும், இது அவரது ஆளுமையின் குறிப்பிட்ட நோயியல் பண்புகளையும், இந்த ஆட்சிக்கு அதன் குறிப்பாக சீரழிந்த தன்மையைக் கொடுக்கும் அவரது MAGA (அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு) குழுவின் பண்புகளையும் புறக்கணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால், கணக்கீட்டு புள்ளிவிவரங்கள் திடீரென ட்ரம்பை காட்சியில் இருந்து அகற்றினாலும், இது சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை நிறுத்தாது. ஜனநாயகம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர் தொடரும்.

ஜனநாயகத்தின் முறிவுக்கான இந்த புறநிலைக் காரணம், அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் இதற்கு இணையான செயல்முறைகள் நிகழ்கின்றன என்ற உண்மையால் உறுதிப்படுத்தப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் நவ-பாசிச கட்சிகள் வலுப்பெற்று வருகின்றன. சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல் ஒரு உலகளாவிய நிகழ்வுப்போக்காகும்.

நான்காவதாக, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ட்ரம்பின் போரின் மூலாதாரத்தை சரியாக அடையாளம் காண்பது என்பது, இன்றியமையாத அரசியல் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு தீவிரமான போராட்டத்திற்கும் தொடக்கப் புள்ளி ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்வதாகும். ட்ரம்பை எதிர்க்க ஜனநாயகக் கட்சியை நம்புவது தோல்வியை உறுதி செய்கிறது.

குடியரசுக் கட்சியினரைப் போலவே, ஜனநாயகக் கட்சியினரும் வோல் ஸ்ட்ரீட், பென்டகன் மற்றும் பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் ஒரு கட்சியாக உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அஞ்சுவது பாசிசத்தின் எழுச்சியை அல்ல. மாறாக முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களை அச்சுறுத்தும் கீழிருந்து எழும் ஒரு வெகுஜன இயக்கம் வெடிப்பதைப் பற்றியது. கிர்க்கின் பாசிச மகிமைப்படுத்தலுக்கும், ஜிம்மி கிம்மலின் இடைநீக்கம் மற்றும் ட்ரம்பின் முந்தைய சர்வாதிகார ஆணைகளுக்கு அதன் பலவீனமான பதிலுக்கும் ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனமான சரணடைதலை இது விளக்குகிறது.

அமெரிக்க செனட், அக்டோபர் 14 ஆம் தேதி, கிர்க்கின் பிறந்தநாளை “சார்லி கிர்க்கின் தேசிய நினைவு தினமாக” குறிக்கும் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக அங்கீகரித்தபோது, ​​ஜனநாயகக் கட்சியின் அடிபணிவு அம்பலமானது. எந்த ஜனநாயகக் கட்சியினரும், வெர்மான்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் உட்பட, இதை எதிர்க்க தைரியம் கொண்டிருக்கவில்லை. ஒரு இழிவான நபரின் கொலை எந்த முற்போக்கான நலன்களுக்கும் சேவை செய்யாது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே குழப்பத்தை விதைக்கிறது, மேலும் பிற்போக்குவாதிகளின் கைகளில் விளையாடுகிறது என்ற கொள்கை அடிப்படையில் இந்தப் படுகொலையை எதிர்ப்பது போதுமானதாகவும், அரசியல் ரீதியாகவும் சரியானதாகவும் இருந்திருக்கும்.

ஆனால் இனவெறி, யூத எதிர்ப்புவாதம், சிவில் உரிமைகளுக்கு எதிர்ப்பு, மற்றும் சர்வாதிகார வன்முறையை ஊக்குவித்தல் என நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட கிர்க்கை தேசிய நாயகன் அந்தஸ்துக்கு உயர்த்த அனுமதிப்பது அருவருப்பானது. ஆயினும் சாண்டர்ஸும் ஜனநாயகக் கட்சியினரும் இந்த புனிதப்படுத்தலில் இணைந்து கொண்டனர்.

அடுத்த நாள், கட்சியின் தலைமை உட்பட 90 ஜனநாயகக் கட்சியினர், “சார்ல்ஸ் கிர்க்கின் வாழ்க்கையையும் மரபையும் கௌரவிப்பது” என்ற தீர்மானத்தை நிறைவேற்ற சபையில் குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தனர். இந்த பாசிச ஆத்திரமூட்டாளரை “சுதந்திரம்” மற்றும் “குடிமைப் பேச்சு” ஆகியவற்றிற்கான தியாகி என்றும், “வாழ்க்கை, சுதந்திரம், வரையறுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் தனிப்பட்ட பொறுப்பு” ஆகியவற்றின் “கடுமையான பாதுகாவலர்” என்றும் இவர்கள் பாராட்டினர்.

ஐந்தாவதாக, ட்ரம்பை தோற்கடிப்பதற்கான போராட்டத்தின் வளர்ச்சி, பல மில்லியன் வலிமையான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது சரியான அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்டு, ட்ரம்பை தோற்கடித்து அவரை பதவியில் இருந்து விரட்டியடிக்கும் பலம்வாய்ந்த சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும்.

இந்த மூலோபாயத்தின் முக்கிய கூறுகள்:

1) ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களிடமிருந்து, அதாவது அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), பேர்ணி சாண்டர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் ஆபாசமாக கூச்சலிடுவது ட்ரம்ப்பைத் தடுத்து நிறுத்திவிடும் என்று நம்பும் எண்ணற்ற நடுத்தர வர்க்க அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் மற்றும் அமைப்புரீதியான சுயாதீனம் அவசியமாகும். இவர்கள், தங்கள் வெறித்தனமான வாய்வீச்சுகள் மூலம் ட்ரம்பை எதிர்த்துப் போராட ஜனநாயகக் கட்சியை ஊக்குவிக்கலாம் என்று நம்பும் விரக்தியடைந்த தாராளவாதிகளின் வழிமுறைகளை கொண்டிருக்கிறார்கள்.

2) ட்ரம்ப்பின் ஆட்சிக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, அதன் பரந்த தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியை அணிதிரட்டக்கூடிய ஒரு புதிய அமைப்பு வடிவத்தை உருவாக்குதல். சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த புதிய அமைப்பு வடிவம் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களைக் கொண்டுள்ளது. ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம், பள்ளி மற்றும் சுற்றுப்புறத்திலும் இவை நிறுவப்பட வேண்டும்.

இந்தக் குழுக்கள், பாசிச ட்ரம்ப்பின் அரசாங்கம், அதற்கு ஜனநாயகக் கட்சியினரின் உடந்தை, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பரந்த தாக்குதலுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும், மாணவர் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தி, தொழில்துறை, தளவாடங்கள், போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் துரித உணவகங்கள், சமூக சேவைகள், சட்டப் பாதுகாப்பு, கல்வி, கலை மற்றும் கலாச்சாரம், பொழுதுபோக்கு, மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு, அறிவியல், கணினி தொழில்நுட்பம், நிரலாக்கம் மற்றும் பிற உயர்சிறப்பு வாய்ந்த தொழில்கள் ஆகியவற்றை எதிர்ப்பின் மையங்களாக மாற்ற வேண்டும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியை முறியடிக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இந்த அதிகாரத்துவங்கள், பெருநிறுவனங்களுக்கான தொழில்துறை பொலிஸாக செயல்பட்டு, எந்தவொரு தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் தடுக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த அதிகாரத்துவ ஒட்டுண்ணிகளின் அதிகாரத்திலிருந்து பட்டறை தளம் மற்றும் வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும். அங்கு மூலோபாயம், கொள்கை மற்றும் நடவடிக்கை போன்ற அனைத்து விஷயங்களிலும் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக முறையில் முடிவுகளை எடுக்க முடியும்.

அனைத்து வேலையிடங்களிலும் பரவியுள்ள சாமானிய தொழிலாளர் குழுக்கள், நாடெங்கிலும் ஜனநாயகத்தின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட, ஒருங்கிணைந்த சமூக அதிகாரத்தின் புதிய மையங்களை உருவாக்கும். அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கம், நம்பிக்கையை ஊக்குவிக்கவும், போராட்டத்தின் அனைத்து வேறுபட்ட கூறுகளையும் ஒன்றிணைத்து, முதலாளித்துவ தன்னலக்குழுவால் வழிநடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படும் வெறுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பாரிய சமூக இயக்கமாக மாற முடியும்.

3) தொழிலாள வர்க்கத்தால் வழிநடத்தப்படும் இந்த இயக்கத்திற்கு, சமூகப்-பொருளாதார யதார்த்தங்களை துல்லியமாக பிரதிபலிக்கும் மற்றும் மக்களின் மிகப்பெரும்பான்மையினரின் நலன்களுக்கு ஏற்ப ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. முதலாளித்துவ செல்வந்த தன்னலக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளன. முதலாளித்துவத்தின் மீது தொழிலாள வர்க்கம் போர்ப் பிரகடனம் செய்வதே இதற்கு அவசியமான பதிலடியாக இருக்கும். இதன் விளைவாக, சமூகத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்பு ஏற்பட வேண்டும். இது முக்கிய தொழில்கள், வங்கிகள், பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றின் பொது உடமையையும், ஜனநாயகக் கட்டுப்பாட்டையும் தொழிலாள வர்க்கத்தால் நிறுவப்படுவதை உள்ளடக்கிறது. அனைத்திற்கும் மேலாக, ஏறத்தாழ 900 பில்லியனர்களிடம் குவிந்துள்ள செல்வவளத்தின் அருவருப்பான மட்டங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 400 பணக்கார அமெரிக்கர்கள் மட்டும் 6.6 ட்ரில்லியன் டாலர் செல்வவளத்தைக் கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான வளர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இவ்வளவு பணமும் அதிகாரமும் குவிந்திருப்பது ஜனநாயகத்தைக் கொல்லும் ஒரு சமூக தீமையாகும்.

4) இந்த மூலோபாயத்தின் மிக முக்கியமான கூறுபாடு — முந்தைய அனைத்துக் கூறுகளை செயல்படுத்துவதும் உணர்ந்து கொள்வதும் இதன் மீது சார்ந்துள்ளது— சர்வதேசியவாதமாகும். அமெரிக்காவில் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் உலகத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு அணிவகுக்கப்படாவிட்டால் அவர்களால் எந்த பயனுள்ள போராட்டத்தையும் நடத்த முடியாது. பாசிசத்தின் அச்சுறுத்தல் ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காகும். ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் ட்ரம்ப் மற்றும் ஹிட்லர் பற்றிய அதன் சொந்த பதிப்பைக் கொண்டுள்ளது. பாசிசம் பயன்படுத்தும் இனவெறி மற்றும் இன வெறுப்புகளின் மூலத்தில் உள்ள அசல் தீமையான தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான, காலாவதியான மற்றும் சுய அழிவு சித்தாந்தத்தை அமெரிக்க தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். ட்ரம்ப் புலம்பெயர்ந்தோர் மீது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக, சர்வாதிகாரத்திற்கான தனது உந்துதலைத் தொடங்கினார் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. அவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது அரசியலமைப்பு தூக்கியெறியப்பட்டதற்கான முதல் கட்டம் மட்டுமே. நகரங்களில் சுற்றித் திரிந்து வரும் முகமூடி அணிந்த குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவர்கள், தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் எதிராக ட்ரம்ப் கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ள பாசிச துணை இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ளனர்.

அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச ஐக்கியத்துக்காக மேற்கொண்டுவரும் போராட்டம், அமெரிக்க ஏகாதிபத்தியம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பை பிரிக்க முடியாத விளைவாகக் கொண்டுள்ளது. சியோனிச ஆட்சியால் நடத்தப்பட்டுவரும் காஸா இனப்படுகொலை, பெருமளவிற்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருவதானது, முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் மீதான பாரிய படுகொலையானது, முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் தங்கள் “சொந்த” நாடுகளில் தொழிலாளர்களுக்கு எதிராக என்ன திணிக்க தயாராக உள்ளனர் என்பதற்கான ஒரு முன்னறிவிப்பாகும்.

நாடு கடத்தும் குற்றவியல் மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கைக்கு எதிராக, புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்த சர்வதேசியவாத மூலோபாயத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது. அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள பிறப்புரிமை குடியுரிமை கோட்பாடு சமரசம் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள், “பூர்வீகவாசிகள்” மற்றும் “வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு” இடையிலான நயவஞ்சகமான மற்றும் கொடூரமான வேறுபாட்டை நிராகரிக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் சுங்கவரிகள் எதிர்க்கப்பட வேண்டும். உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பு சகாப்தத்தில், முற்றிலும் பிற்போக்குத்தனமான தேசியவாத பொருளாதாரத்தை ஆதரிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கம் அதன் வேலைகளையும் நலன்களையும் பாதுகாக்க முடியாது. இது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் கழுத்தை நெரிக்கிறது. உலகளாவிய அணுவாயுத யுத்தத்திற்கான பயங்கரமான பாதையில் மனிதகுலத்தை இட்டுச் செல்லும் தேசிய எல்லைகளை ஒழிக்கக் கோருவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை முன்னெடுக்க முடியும்.

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கி சர்வாதிகாரத்திற்கான தனது உந்துதலைத் தொடங்குவதற்கு முன்னரே, சோசலிச சமத்துவக் கட்சி சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்குவதற்கான அழைப்பை விடுத்தது. இந்த முயற்சி நிரூபணமானது மட்டுமல்ல. அதன் வளர்ச்சி எரியும் அவசரத்தை அடைந்துள்ளது.

5) ட்ரம்பை தோற்கடிப்பதற்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாசிசம் மற்றும் போரைத் தடுப்பதற்கும் அவசியமான மூலோபாயம், அமைப்பு மற்றும் நடவடிக்கை ஆகியன தன்னிச்சையாக வெளிப்படாது. இந்த வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும். ஆனால், இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் தேவையான உறுதிப்பாடு அவநம்பிக்கை மற்றும் மனச்சோர்வுடன் பொருந்தாது. இந்த மனநிலைகள் முடக்குதலுக்கு வழிவகுக்கும். மேலும், அவநம்பிக்கை என்பது யதார்த்தத்தின் மேலோட்டமான மற்றும் தவறான மதிப்பீட்டுடன் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த அரசாங்கம் என்ற கட்டுக்கதையை வளர்த்து வரும் ஜனநாயகக் கட்சியினர், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் அனைத்தும் எதுவும் செய்ய முடியாது என்று வலியுறுத்தி வருகின்றன. இது ஒரு பொய். இங்கே பற்றாக்குறையாக இருப்பது பாரிய வெகுஜன எதிர்ப்பு அல்ல. மாறாக, ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதற்கும் ஒழுங்கமைப்பதற்குமான ஒரு அரசியல் மூலோபாயமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலைத்திட்டத்தை, ட்ரம்ப் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் சீரழிந்த செல்வந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டத்திற்கான அடிப்படையாக முன்வைக்கிறது. எமது வேலைத்திட்டம் அவநம்பிக்கையாளர்கள், ஐயுறவுவாதிகள் மற்றும் விரக்தியடைந்தவர்களுக்கானது அல்ல. மாறாக தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில் வல்லுனர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் உள்ள போராளிகளுக்கானது. இது இழப்பதற்கான நேரமல்ல.

இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுமாறும், தன்னலக் குழுக்களின் சதித் திட்டங்களை தோற்கடித்து, பாசிசம், இனப்படுகொலை மற்றும் போர் இல்லாத ஒரு சோசலிச எதிர்காலத்திற்காகப் போராடுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading