பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிரான பெரும் போராட்டங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமையன்று, பிலிப்பைன்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் ஊழலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டங்களில் அணிதிரண்டனர். வெள்ளக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களைச் சுற்றியுள்ள பரவலான ஊழல்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களால் பில்லியன் கணக்கான டாலர்கள் திருடப்பட்டு வருவது போன்ற சமீபத்திய வெளிப்பாடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தப் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு வடிவம் பெற்றன.

மணிலாவின் கிழக்கே உள்ள மண்டலுயோங்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள EDSA மக்கள் சக்தி நினைவுச்சின்னத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசாங்க ஊழலுக்கு எதிராகப் பேரணி நடத்துகின்றனர். செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை [AP Photo/Basilio Sepe]

இந்த எதிர்ப்பு போராட்டங்கள், இரண்டு தசாப்தங்களில் பிலிப்பைன்ஸில் காணப்பட்ட மிகப் பெரிய போராட்டங்களாகும். மணிலாவில் ஒரு லட்சம் பேர்வரை ஆர்ப்பாட்டம் செய்தனர். நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டங்களில் அணிதிரண்டனர். ஊழலைக் கண்டித்து சமூக அமைதியின்மை ஏற்பட்டபோது இந்த எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. இதில் இந்தோனேசியாவில் நடந்த பாரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேபாளத்தில் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த கலவரங்கள் ஆகியவைகளும் அடங்கும்.

2025 ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மிக மோசமான ஆண்டுகளில் ஒன்றாகும். ஜூலை மாதம் ஏற்பட்ட சூறாவளி வெள்ளத்தில் 31 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான மழைப்பொழிவு மிகவும் பேரழிவை ஏற்படுத்தியது. ஒரு மணி நேரத்தில் 4.8 அங்குலம் பெய்த மழை, 2009 இல் சூறாவளி கெட்சானா (ஒன்டோய்) ஏற்படுத்திய சாதனையை விட அதிகமாக இருந்தது. வெள்ளம் பாய்வதற்கான வடிகாலின் திறனையும் மீறி கியூசான் நகரில் பரவலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மழைக்காலங்களில் ஏற்படும் சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பேரழிவு சேதங்கள், 2ம் உலகப் போருக்குப் பிந்தைய நகரமயமாக்கலின் வரலாறு முழுவதும் பிலிப்பைன்ஸைப் பாதித்துள்ளன. நகர்ப்புற ஏழைகளாக பரந்த, அடர்த்தியான நெரிசல்களில் வாழும் மக்கள், மிக மோசமான நிலத்தில் கட்டப்பட்ட அவர்களின் வீடுகள், முற்றிலும் திட்டமிடப்படாத மற்றும் குறைந்த நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பொது உள்கட்டமைப்பு அமைப்புடன் இணைந்து, ஆண்டுதோறும் வெள்ளம் மற்றும் துயரத்தின் சுழற்சியை இவை உருவாக்கி வருன்றன.

மணிலா மற்றும் புலாக்கனில் வசிக்கும் ஏராளமான வறிய மக்கள் வெள்ளத்தில் ஆண்டுதோறும் இறக்கின்றனர். இவர்களின் வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன, மனித கழிவுகளால் மாசுபட்ட தேங்கி நிற்கும் வெள்ள நீர் வழியாக சிறுவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். எலிகளின் சிறுநீரினால் பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் என்ற நோய், நகர்ப்புற ஏழைகளின் சமூகங்கள் முழுவதும் பரவி வருகிறது.

பெருமளவிலான வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டுப்படியாகாத அரிசி விலைகள் ஆகியவை, வரலாற்று ரீதியாக நாட்டில் பரவலான சமூக அமைதியின்மையை உருவாக்கிவரும் இரண்டு தொடர்ச்சியான பிரச்சினைகளாக உள்ளன. 1972 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் ஏற்பட்ட சமூக கோபத்தை அடக்குவதற்காகவே, அந்த ஆண்டு செப்டம்பரில் பெர்டினாண்ட் மார்கோஸ் சீனியர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்படும் மனித துயரங்கள் என்பன, அடிப்படையில் ஊழலால் அல்ல, முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்டவை. பெருநகர மணிலாவின் திட்டமிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத காரணத்தினால், எந்தவொரு பொது வீட்டுவசதி அமைப்புமுறையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. கால்வாய்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் கழிவுநீர் அல்லது வடிகால்கள் இல்லாத பரந்த குடிசைப் பகுதிகளின் உருவாக்கம், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களின் இலாப வெறி கொண்ட ஊக வணிகம், ஃபோர்ப்ஸ் பார்க்கின் பகுதியின் தனியார் மாளிகைகளுக்கும், மரிகினாவின் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளுக்கும் இடையிலான சமூக சமத்துவமின்மையின் பிரமாண்டமான இடைவெளி - ஆகிய அனைத்தும் முதலாளித்துவத்தின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட துயரத்தின் மீதான கோபம்தான் பிலிப்பைன்ஸில் எதிர்ப்பு போராட்டங்களுக்கு எரிபொருளாக உள்ளது. ஆனால், இந்தப் போராட்டங்கள் ஊழலை இலக்காக கொண்ட கட்சிகளின் பதாகைகளுக்குப் பின்னால் அணிதிரட்டப்பட்டுள்ளன. ட்ரம்ப்பின் சுங்கவரி விதிப்பின் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார பேரழிவு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் போர் அபாயம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த நான்கு மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் பிலிப்பைன்ஸில் எழுந்திருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அரசியல் கொந்தளிப்புடன் பிணைந்துள்ளது.

அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவுகளின் காலனித்துவ மரபை பிலிப்பைன்ஸ் கொண்டிருக்கிறது. சீனாவுக்கு எதிராக வாஷிங்டனின் போருக்குத் தயாராகும் வகையில், பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் தலைமையின் கீழ் பிலிப்பைன்ஸ் போர் முன்னரங்கில் வைக்கப்பட்டுள்ளதால், பிலிப்பைன்ஸில் இந்த நிலையற்ற தன்மை கூர்மையாக வெளிப்படுத்தப்படுகிறது. பிலிப்பைன்ஸ் உயரடுக்கில் பதட்டங்கள் இரண்டு மேலாதிக்க பிரிவுகளாக உருவாகியுள்ளன: சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலுடன் ஆழமாக ஒருங்கிணைந்துள்ள மார்கோஸ் முகாம், மற்றும் சீனாவிடம் இருந்து அதிக பொருளாதார முதலீட்டைப் பெறுவதற்காக அமெரிக்காவுடனான பிலிப்பைன்ஸ் உறவுகளை மிதப்படுத்த முயலும் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்ட்டின் முகாம்.

இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான நில அதிர்வு பதட்டங்கள் ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து தொடர்ச்சியான பூகம்பங்களை உருவாக்கியுள்ளன. மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் பேரில் ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது செய்யப்பட்டு நெதர்லாந்திலுள்ள ஹேக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். துணை ஜனாதிபதியாக இருந்த அவரது மகள் சாரா டுடெர்ட்டே, பிரதிநிதி சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அரசியலமைப்புக்கு முரணான காரணங்களால் செனட்டில் அவரது பதவி நீக்க குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இடைக்காலத் தேர்தலில் கணிசமான பின்னடைவை மார்கோஸ் முகாம் சந்தித்த நிலையில், மார்கோஸ் தனது முழு அமைச்சரவையிலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்யத் தொடங்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, டூடெர்ட்டே முகாம், சமூக ஊடகங்கள் மூலம், மார்கோஸ் நிர்வாகத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்த முயன்றது. இந்த தாக்குதல்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், ஊழல் குற்றச்சாட்டுகளை ஒரு அரசியல் ஆயுதமாகக் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியாக கொண்டிருக்கும் வகையில், வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் அரசாங்க நிதியைத் திருடுவதற்காக, லஞ்சங்கள், மோசடிகள் மற்றும் சதித்திட்டங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று மார்கோஸ் ஜூலை 28 அன்று, தனது தேசபக்த உரையின் போது அறிவித்தார்.

நாட்டின் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் பிரமுகரின் மகனும், செல்வந்த வாரிசுமான மார்கோஸ், குற்றவாளிகள் வெட்கப்பட வேண்டும் என்றும், “நீங்கள் உருவாக்கிய கடன்களையும், நீங்கள் பையில் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் வாரிசாகப் பெறும் எங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் வெட்கப்படுங்கள்!” என்று அறிவித்தார். மார்கோஸ் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடும் வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டங்களைச் சுற்றியுள்ள ஊழல் குறித்து விசாரணையைத் தொடங்கினார். டூடெர்டேவின் கூட்டாளிகளால் தலைமையேற்ற செனட் புளூ ரிப்பன் கமிட்டி, அதற்கு இணையான விசாரணையைத் தொடங்கியது. இதன் விளைவாக ஒரு அரசியல் இரத்தக்களரி ஏற்பட்டது.

இந்த விசாரணைகள் மிகப்பெரிய ஊழல் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன என்பதை, பிலிப்பைன்ஸ் வரலாறு மற்றும் அரசியலை நன்கு அறிந்த எவரும் முற்றிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த தசாப்தத்தில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகை “பேய் திட்டங்கள்” என்று அழைக்கப்படும் நடைபெறாத உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தப் பணம், ஒப்பந்ததாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை (DPWH) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாரிய லஞ்சங்களுடன் ஒப்பந்தக்காரர்களால் வசூலிக்கப்பட்ட பணம் ஆகும்.

இந்த குற்றச்சாட்டுகள் மார்கோஸ் மற்றும் டுடெர்ட்டேவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளன. மேலும், அரசியல் சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் எந்த திசையில் என்பது இன்னும் தெரியவில்லை. DPWH இன் செயலாளர் ராஜினாமா செய்தார். பெரும்பான்மை டுடேர்டே சார்பு முகாமுக்கு தலைமை தாங்கிய செனட் தலைவர் பிரான்சிஸ் எஸ்குடெரோ, செப்டம்பர் 8 அன்று லிபரல் கட்சி மற்றும் மார்கோஸுக்கு விசுவாசமான சக்திகளின் புதிய பெரும்பான்மை முகாமால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எஸ்குடெரோ பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம், ப்ளூ ரிப்பன் விசாரணையின் கட்டுப்பாடு சென் பிங் லாக்சனுக்கு வழங்கப்பட்டது. ஒரு தீவிர வலதுசாரி நபரான பிங் லாக்சன், வாஷிங்டனுடன் மார்கோஸின் நோக்கத்தை பகிர்ந்து கொண்டார். மார்கோஸுக்கு விசுவாசமானவரும், இறுதியில் தோல்வியுற்ற சாரா டுடெர்ட்டே மீதான பதவி நீக்க விசாரணைக்கு பொறுப்பானவருமான பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மார்ட்டின் ரோமுல்டெஸ், செப்டம்பர் 17 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் சாக்குப்போக்கின் பின்னால் நடத்தப்படும் இந்த அரசியல் போர் இன்னமும் தீர்க்கப்படவில்லை.

அக்கினோ குடும்பத்தின் நீண்டகால அரசியல் வாகனமாகவும், அரை நூற்றாண்டு காலமாக மார்கோஸின் போட்டியாளராகவும் இருந்த லிபரல் கட்சி, மார்கோஸுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி வருகிறது. டுடெர்ட்டே பிரிவுக்கு எதிரான ஒரு தந்திரோபாய கூட்டணியாக ஜனாதிபதிக்கு, லிபரல் கட்சி தனது வெளிப்படையான ஆதரவை வழங்கினாலும், உண்மையில் அது அடிப்படையில் வாஷிங்டன் மீதான அவர்களின் பகிரப்பட்ட நோக்குநிலையால் இயக்கப்படுகிறது.

ஊழல் குறித்த போராட்டங்கள் செப்டம்பர் 12 அன்று வளாகங்களில், குறிப்பாக பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகமான டிலிமானில் வெடித்தன. பெர்டினாண்ட் மார்கோஸ் சீனியரின் இராணுவச் சட்டத்தின் 53 வது ஆண்டு நிறைவான செப்டம்பர் 21 அன்று, ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று பல கூட்டணிகள் அறிவிப்புகளை வெளியிட்டன. அபுசாடோ நெட்வொர்க் கூட்டணியில் உள்ள தௌம்பயன் அயாவ் சா மக்னகாவ் என்பது, (தமா நா என அழைக்கப்படும் திருடர்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர்களின் வலையமைப்பை எதிர்க்கும் மக்கள்), ஸ்டாலினிச அமைப்பான பயானுடன் தொடர்புடைய பல்வேறு குழுக்களின் கூட்டணியாகும். தலைநகர் மணிலாவில் உள்ள லுனெட்டா பிளாசாவில் ஒரு பேரணிக்கு தலைமை தாங்குவதாக அவர்கள் அறிவித்தனர். அந்த பேரணியில் 80,000 பேர் கலந்து கொண்டனர். உயரடுக்கின் எந்தப் பிரிவிற்கும் ஆதரவாக “ஸ்திரமின்மையை” ஆதரிக்க மாட்டோம் என்று தமா நா கூறியிருந்தாலும், சாரா டுடெர்ட்டே மீதான பதவி நீக்க குற்றச்சாட்டுகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான மேல்முறையீட்டைத் தாக்கல் செய்வது உட்பட, டுடெர்ட்டேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அது சுமத்தியுள்ளது.

போலி இடது அக்பயன் கட்சி மற்றும் அதன் கூட்டணியான லிபரல் கட்சியுடன் தொடர்புடைய ஒரு தனி அமைப்புக் குழு, அதே நாளில் பெருநகர மணிலாவில் உள்ள எட்சா அவென்யூவில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30,000 பேர் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு போராட்டங்கள் அமைதியாக இருக்கும் வரை தான், நிகழ்வுகளை ஆதரிப்பதாக சில நாட்களுக்கு முன்பு மார்கோஸ் அறிவித்தார். இது அரசியல் தோரணையை விட அதிகம்; மார்கோஸுக்கு எதிரான சில கோஷங்கள் மற்றும் பதாகைகள் இருந்தபோதிலும், பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் தலைவர்களின் இறுதி நோக்குநிலை, டுடேர்ட்டின் சக்திகளுக்கு எதிரான ஒரு கூட்டணியை நோக்கியே உள்ளது.

பிலிப்பைன்ஸ் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்புகளின் உடைவில் இருந்து 1990 களில் உருவாக்கப்பட்ட பயானும், அக்பயான் கட்சியும் நீண்ட காலமாகவே ஒருவருக்கொருவர் அரசியல் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவுக்கு விரோதமான பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் பிரிவுகள் மீதான அவர்களின் பொதுவான நோக்குநிலையின் காரணமாக, அவை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமான இணக்கத்திற்கு வருகின்றன.

நெதர்லாந்தின் ஹேக்கில் இருந்து டுடெர்டே திரும்ப வேண்டும் என்று கோரி அவரது ஆதரவு சக்திகள் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஆனால் இந்த நிகழ்வுகள் ஊழல் எதிர்ப்பு பேரணிகளால் சிறியதாக பின்தள்ளப்ட்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டங்களின் அரசியல் நிலைப்பாடு குறிப்பிடத்தக்க வகையில் மத்தியதர வர்க்க குணாம்சத்தைக் கொண்டிருந்தது. பெனிக்னோ அக்வினோ III (2010-2016) நிர்வாகத்தின் கீழ் லிபரல் கட்சியின் பழைய, வெற்று முழக்கமான “ஊழல் செய்பவர்கள் இல்லை என்றால், ஏழைகள் இருக்க மாட்டார்கள்” என்பது இவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழலை சபிப்பதற்காக மேடை மற்றும் ஒலிவாங்கி வழங்கப்பட்டது.

மணிலா, செபு, பாக்கோலோட், பாகுயோ மற்றும் நாடெங்கிலும் உள்ள பல நகரங்களின் தெருக்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் பெரும்பாலோர் முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் மீதான நோக்குநிலையால் போராட்டங்களில் ஈர்க்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு எரியூட்டும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்து வரும் சமூக கோபம் உள்ளது. அவர்கள் அதை உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் விரோதத்தின் இறுதி இலக்கு முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட சமூக சமத்துவமின்மை மற்றும் துயரமாகும்.

ஆனால், ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பதாகை ஒரு அரசியல் முட்டுச்சந்தாகும். அது அரசியல்ரீதியில் உருவமற்ற தன்மையுடையதுடன், அதிவலது கட்சிகள் உட்பட, பரந்த அளவிலான முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு குடையாக சேவையாற்றி வருகிறது.

இலங்கையில் ஜே.வி.பி. ஊழலுக்கு எதிரான ஒரு தளத்தின் அடிப்படையில், பாரம்பரிய அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் எதிரான மிகப்பெரிய பொதுமக்களின் விரோதத்தை சுரண்டிக்கொண்டு, கடந்த ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்து சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டங்களை அமல்படுத்தியது.

இந்த மாதம் நேபாளத்தில் அரசாங்கத்தை வீழ்த்திய பாரிய எதிர்ப்பு போராட்டங்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் ஒரு செயற்கையான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு நடுத்தர வர்க்க எதிர்ப்புத் தலைவர்களுடன் இணைந்து இராணுவம் சுரண்டிக்கொண்டது.

ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழிமுறையாக, அடிப்படையில் அருவெறுப்பான செல்வந்தர்களுக்கும், ஏழ்மையான மக்களுக்கும் இடையிலான பரந்த சமூக இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவது அவசியமாகும். இதற்கு கிராமப்புற ஏழைகளை அதிகாரத்திற்கான போராட்டத்தில் வழிநடத்துவதற்கும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுவடிவமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading