பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் "பாலஸ்தீனிய அரசை" அங்கீகரித்துள்ளன: ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் நாற்றம்கண்ட வெளிப்பாடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதர ஐரோப்பிய நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஐ.நா பொதுச் சபை தொடங்குவதற்கு முன்னதாக இதனை பின்தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு “இரு-அரசு தீர்வு” என்ற பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் இந்த அங்கீகாரம் ஒரு இழிவான மோசடியாகும். ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட ஆதரவுடன் செயற்பட்டுவரும் சியோனிச ஆட்சி, காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் அதன் இனப்படுகொலையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் சூழ்நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்திய சக்திகள் பாலஸ்தீனியர்கள் நனைந்துள்ள இரத்தத்தில் தங்களை கழுவ முயற்சிக்கின்றன.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றுகிறார். செப்டம்பர் 22, 2025, திங்கட்கிழமை [AP Photo/Angelina Katsanis]

காஸாவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளதால் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், கனேடிய பிரதமர் மார்க் கார்னே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் தங்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.

அக்டோபர் 2023 முதல், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் உண்மையான எண்ணிக்கையை இந்த அறிக்கைகள் முற்றிலும் குறைத்து மதிப்பிடுகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். உண்மையான இறப்பு எண்ணிக்கை நூறாயிரக்கணக்கில் உள்ளது. காஸா பகுதியில் திட்டமிட்டு பட்டினி போடும் கொள்கையைத் தொடர்கின்ற இஸ்ரேல், அங்கு ஒரு பஞ்சத்தை உருவாக்கி வருகிறது. மேலும் காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள காஸா நகரில் இருந்து ஒரு மில்லியன் மக்களை இஸ்ரேல் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது. பாலஸ்தீனியர்கள் திரும்பி வருவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.

கடந்த வாரம், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையில் இஸ்ரேல் குற்றவாளி என்று ஐ.நா சிறப்பு ஆணையம் கண்டறிந்தது. 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கான மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கான 1948 உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து செயல்களில் நான்கை சியோனிச ஆட்சி மேற்கொண்டதாக அது குறிப்பிட்டது: குறிப்பாக, படுகொலை, கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவித்தல், பாலஸ்தீனியர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை வேண்டுமென்றே திணித்தல் மற்றும் பிறப்புகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திணித்தல் ஆகியவைகளாகும்.

மேற்குக் கரையில், குடியேற்றப்பட்ட பாசிசவாதிகள் பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிவலது அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் திட்டமிட்டு தங்கள் இருப்பை விரிவுபடுத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் குடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளனர். கோடை காலத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாரிய ஒப்பந்தம், ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசின் உத்தேச தலைநகரான கிழக்கு ஜெருசலேமில் இருந்து மேற்குக் கரையை முழுமையாக துண்டிக்கிறது. அது போலவே, ஏகாதிபத்திய சக்திகளின் நேரடி கருவியாக மட்டுமே உயிர்பிழைத்துவரும் வெறுப்புக்குள்ளான பாலஸ்தீனிய அதிகார சபையின் அதிகாரம், ரமல்லா மற்றும் வேறு சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த யதார்த்தத்தை தங்கள் அறிக்கைகளில் இருந்து மறைத்துவிட்டு, பல்வேறு அரசாங்கத் தலைவர்கள் தங்கள் அறிவிப்பை மத்திய கிழக்கில் சமாதானத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு “வரலாற்று” நடவடிக்கை என்று கூறினர். அவர்கள் அனைவரும் பிளேக் போன்ற இனப்படுகொலை என்ற வார்த்தையைத் தவிர்த்துக் கொண்டனர்.

நேற்று மாலையில் நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்தும் மாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதைப் பின்பற்றுவார் என்று கருதப்படுகிறது.

பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் நியூ கலிடோனியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், (மையத்தில்) பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, (இடது) மற்றும் வெளிநாட்டுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் மானுவல் வால்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பிரான்ஸ், ஜூலை 12 [AP Photo/Tom Nicholson]

கடந்த ஜூலை மாதம், முன்னதாக நடைபெற்ற கூட்டத்தின் விளைபொருளாக உள்ள இந்த மாநாடு, நியூ யோர்க் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதுடன், இரண்டு அரசு தீர்வை நோக்கி “உறுதியான, காலவரையற்ற மற்றும் மாற்ற முடியாத” நடவடிக்கைகளுக்கு ஆதரவையும் வலியுறுத்தியது. செப்டம்பர் 12 அன்று, ஐ.நா. பொதுச் சபை இந்த அறிக்கையை ஆதரிக்க பெரும்பான்மையாக வாக்களித்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

முழு மேற்குக் கரையையும் இணைப்பதை நியாயப்படுத்த பிரிட்டன், கனடா மற்றும் பிரான்சின் சூழ்ச்சிகளை இஸ்ரேல் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த திங்களன்று இந்த அறிவிப்புகளுக்கு பதிலிளித்த நெதன்யாகு “ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீனிய அரசும் இருக்காது” என்று வலியுறுத்தினார். பாசிச நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மேற்குக் கரையை இணைப்பது ஒரு அவசியமான பதில் நடவடிக்கை என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக வெளிவந்த அறிக்கைகளும், இந்த வாரம் வெளிவரவிருக்கும் அறிக்கைகளும், சில ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை காஸா இனப்படுகொலையில் தங்கள் உடந்தையை மூடிமறைப்பதிற்காக சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட இந்த அனைத்து அரசாங்கங்களும் காஸா மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முழுவதிலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை வழங்கியுள்ளன. அதே நேரத்தில், உள்நாட்டில் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்களை இரக்கமின்றி அடக்கியும் வருகின்றன.

பிரான்சுடன் சேர்ந்து நியூ யோர்க் பிரகடனத்தை வரைந்த சர்வாதிகார சவூதி முடியாட்சியால் வழிநடத்தப்படும் அரபு ஆட்சிகளைப் பொறுத்தவரை, இஸ்ரேல் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களையும் படுகொலை செய்வதைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை. இவர்கள், சியோனிச ஆட்சியுடன் சமரசம் செய்யக் காத்திருக்கும் அதே வேளையில், அரசியல் மூடிமறைப்பை நாடுகிறார்கள். மேலும் இவர்கள், ஈரானை ஓரங்கட்டி வாஷிங்டனின் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம், முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் மறுஒழுங்கமைக்கும் முயற்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்காளிகளாக சேவை செய்கிறார்கள்.

இந்தப் பிரகடனமானது, காஸாவில் போர் நிறுத்தம், அதை அமுல்படுத்த ஐ.நா ஆதரவிலான ஒரு குழுவை நிலைநிறுத்துதல், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றுவதை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் “வன்முறையையும்” “பயங்கரவாதத்தையும்” நிறுத்துதல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கிறது. மேலும், இரு அரசு தீர்வுக்கான அதன் உறுதிப்பாட்டை இஸ்ரேல் வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீன அதிகாரசபை இறுதியில் காஸா மீது இறையாண்மையைப் பெற வேண்டும் என்றும் இது முன்மொழிகிறது.

1990 களின் ஆரம்பத்தில். ஒஸ்லோ உடன்படிக்கைகள் முடிவுக்கு வந்ததில் இருந்து ஏகாதிபத்திய சக்திகளால் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய முன்மொழிவுகள், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் கைகளில் அழித்தொழிப்பை எதிர்கொள்ளும் பாலஸ்தீனிய மக்களுக்கு எதையும் வழங்கவில்லை. கடந்த திங்களன்று, பாலஸ்தீனத்தை பிரதமர் ஸ்டார்மர் அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடிய பிரிட்டனின் மத்திய கிழக்கு அமைச்சர் ஹேமிஷ் ஃபால்கோனர் கூறியது போல், “அங்கீகாரம் என்பது... மனிதநேய உதவி நாளைக்கு உடனே வரும் என்று அர்த்தமல்ல” என்று குறிப்பிட்டார்.

பாலஸ்தீனிய “அரசுக்கு” அழைப்பு விடுத்த ஏகாதிபத்திய சக்திகள் நெதன்யாகுவின் அரசாங்கத்தால் பின்பற்றப்படும் இனப்படுகொலை வேலைத் திட்டத்திற்கான தங்கள் ஆதரவை மூடிமறைக்க அவ்வாறு செய்கின்றன என்பதில் கனடா பிரதமர் கார்னே வெளியிட்ட அறிக்கை எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த அறிக்கை, ஹமாஸை முக்கிய பொறுப்பாக்குவதன் மூலமும், “இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் பரவியுள்ள ஹமாஸ் பயங்கரவாதத்தின் பரவலான அச்சுறுத்தல்” இரு-அரசு தீர்வுக்கான முக்கிய தடையாக இருப்பதை வலியுறுத்துவதன் மூலமும் தொடங்கியது.

இதையடுத்து, “அதிவேகமாக குடியேற்றக் கட்டுமானம்” மற்றும் மேற்குக் கரையை பிளவுபடுத்துவதற்கான “E1 குடியேற்றத் திட்டம்” போன்ற நடவடிக்கைகள் குறித்து நெதன்யாகுவின் பாசிச அரசாங்கம் எவ்வாறு இரண்டையும் முன்னெடுத்து வருகிறது என்பதைக் குறிப்பிடாமல், கட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. நான்காவது மற்றும் கடைசிப் புள்ளியில் மட்டுமே கார்னே “காஸாவில் மனிதநேய பேரழிவுக்கு இஸ்ரேல் அரசாங்கத்தின் பங்களிப்பு” என்று குறிப்பிட்டார்.

கார்னேயின் அறிக்கையின் முடிவு, ஏதோவொரு வடிவிலான பாலஸ்தீனிய அரசு உருவாக்கப்பட்டாலும் கூட, அது ஏகாதிபத்திய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பாதுகாப்புப் பகுதியாக இருக்கும், அதன் மக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, முற்றிலும் பற்கள் வரை ஆயுதமேந்திய ஒரு சியோனிச ஆட்சியின் கருணையில் விடப்படுவார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. “ஹமாஸ் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிப்பதுடன், முழுமையாக நிராயுதபாணிகளாக்கப்பட்டு, பாலஸ்தீனத்தின் எதிர்கால நிர்வாகத்தில் எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்பது கட்டாயமாகும்” என்று கார்னே அறிவித்தார். “பாலஸ்தீன அதிகார சபை கனடாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மிகவும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து நேரடி உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. இதில், அதன் நிர்வாகத்தை அடிப்படையில் சீர்திருத்துவது, 2026 இல் ஹமாஸ் எந்தப் பங்கையும் வகிக்க முடியாத பொதுத் தேர்தல்களை நடத்துவது மற்றும் பாலஸ்தீன அரசை இராணுவமற்றதாக்குவது” ஆகியவை அடங்கும்.

ஆனால், ஏகாதிபத்தியத்தால் கட்டளையிடப்பட்ட “பாலஸ்தீன அரசு” என்ற முன்மொழிவு கூட அமெரிக்காவிற்கும் அதன் இஸ்ரேலிய தாக்குதல் நாய்க்கும் மிகவும் வலுவாக இருந்தது. இந்த இரு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. நெதன்யாகுவும் அவரது பாசிச அரசாங்கமும் “மனித விலங்குகள்” என்று அழைத்த பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கத்தை இன்னமும் மறைக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டமான காஸாவை “மத்திய கிழக்கின் கேளிக்கை தளமாக” ஆக்கும் தொலைநோக்குப் பார்வையை, பாலஸ்தீனியர்களின் சடலங்கள் மீது நிறுவ அவர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளில், ஜேர்மனியும் இத்தாலியும் ஒரு பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதை நிராகரித்துள்ளன. ஐரோப்பாவை இராணுவரீதியில் மேலாதிக்கம் செலுத்தவும், உலகை இராணுவ ரீதியாக மறுபங்கீடு செய்வதில் அதன் பங்கைக் கைப்பற்றவும் அசுர வேகத்தில் மீள் ஆயுதபாணியாகி வரும் ஜேர்மன் ஏகாதிபத்தியம், பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதில் ஆழமாக உடந்தையாக இருந்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜி ஆட்சி 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களை நிர்மூலமாக்க ஒழுங்கமைத்த இனப்படுகொலையை பேர்லின் சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலமாகவும், அனைத்து விமர்சனங்களையும் “யூத எதிர்ப்புவாதம்” என்று தடை செய்வதன் மூலமாகவும், இன்னொரு இனப்படுகொலையை ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஆதரித்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், “ஜேர்மனியைப் பொறுத்தவரை, பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்பது செயல்முறையின் முடிவில்தான் வருகிறது” என்று சிடுமூஞ்சித்தனமாக வலியுறுத்தினார்.

ஏகாதிபத்தியவாதிகள் எவ்வளவுதான் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காஸா இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வந்து, பாலஸ்தீன மக்களின் உரிமைகளையும் இருப்பையும் ஒருபோதும் பாதுகாக்க மாட்டார்கள். இஸ்ரேலுக்கு ஏகாதிபத்தியவாதிகளின் இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவை நிறுத்துவதற்கும், பாலஸ்தீனியர்களுக்கு தடையற்ற உதவிகள் மற்றும் மருத்துவ பராமரிப்பை வழங்குவதற்கும், இனப்படுகொலை மற்றும் போருக்கு மூல காரணமான ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தன அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரள்வு அவசர அவசியமாகும்.

Loading