முன்னோக்கு

ஐ.நா பொதுச் சபை உரையில் ட்ரம்ப் உலகிற்கு எதிராக போர் பிரகடனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார், செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025

கடந்த செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் ஒரு பாசிச உரையை நிகழ்த்தினார். இந்த உரையில் “அமெரிக்கா முதலில்” என்பது உலகத்தை ஒழுங்கமைக்கும் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அவர் உலகெங்கிலும் போரையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்வதுக்கு அச்சுறுத்தியதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளையிட்டு பெருமை பீற்றிக்கொண்டார்.

ட்ரம்ப், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு நேரத்தை எடுத்துக்கொண்டதோடு, அமெரிக்காவின் வெளிப்படையான கூட்டாளிகள் மற்றும் வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய குறுக்குவழிகளில் நீண்டகாலமாக இருந்துவரும் அரசுகள் இரண்டையும் தாக்கினார்.

சர்வதேச சட்டத்தின் மீதான தனது வெறுப்பையும் அவமதிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், வர்த்தகப் போர், படுகொலைகள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் அல்லது உலகளாவிய போர் மூலம் அதன் ஏகாதிபத்திய நலன்களை இரக்கமின்றி வலியுறுத்துவதற்கு வாஷிங்டன் எந்தத் தடைகளையும் ஏற்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

தேசிய காவல் படையினரால் வாஷிங்டன் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் போன்ற ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சியில் உள்ள முக்கிய கூறுகளை அவர் உலகத்திற்கு முன்மாதிரியாகக் குறிப்பிட்டார்.

மனிதகுலத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஐ.நா மற்றும் அதன் “உலகமயமாக்கல்” நிகழ்ச்சி நிரல்தான் காரணம் என்று ட்ரம்ப் ஐ.நா. வை குற்றம் சாட்டினார். ஏகாதிபத்திய யுத்தங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளால் உருவாக்கப்பட்ட அகதிகளுக்கு உதவுவதற்கான அதன் வரையறுக்கப்பட்ட திட்டங்கள் மூலம், ஐ.நா, “மேற்கத்திய நாடுகள் மீதான தாக்குதலுக்கு நிதியளிக்கிறது” என்றும் ஐ.நா. மன்றத்திலிருந்து வெள்ளை மேலாதிக்கவாத பெரிய மாற்றுக் கோட்பாட்டை திறம்பட விளக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“ஐ.நா படையெடுப்புகளை நிறுத்த வேண்டும், அவற்றை உருவாக்கக்கூடாது, அவற்றுக்கு நிதியளிக்கக்கூடாது,” என்று அவர் அறிவித்தார்.

குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதிலும், பசுமை இல்ல வாயு உமிழ்வு மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முயல்வதிலும், வரலாற்றில் “மிகப்பெரிய மோசடி செய்வதிலும்”, அமெரிக்காவின் பாரம்பரிய ஐரோப்பிய நட்பு நாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்.

“ஐரோப்பா கடுமையான சிக்கலில் உள்ளது. இதற்கு முன்பு யாரும் கண்டிராத சட்டவிரோத வெளிநாட்டினரின் படையால் அவர்கள் படையெடுக்கப்பட்டுள்ளனர். … குடியேற்றம் மற்றும் தற்கொலை ஆற்றல் கருத்துக்கள் இரண்டும் மேற்கு ஐரோப்பாவின் மரணமாக இருக்கும்,” என்று ட்ரம்ப் கூறினார்.

இஸ்ரேலை முழுமையாக ஆயுதபாணியாக்குவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கையும், மத்திய கிழக்கில் தனது களியாட்ட கடற்கரை குடியிருப்பு திட்டத்துடன் காஸாவில் முழுமையாக இன இனச்சுத்திகரிப்பைப் தொடர நெதன்யாகு ஆட்சியைத் தூண்டியதையும் கருத்தில் கொண்டு, ட்ரம்ப் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை அலட்சியமாக புறக்கணித்தார். இஸ்ரேல், காஸா மக்களை பட்டினி போட்டு குண்டுவீசித் தாக்கி, காஸா நகரத்தை தரைமட்டமாக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமித்தபோதும், ட்ரம்ப் ஹமாஸின் “அட்டூழியங்கள்” பற்றியே கடுமையாகப் பேசினார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய சட்டவிரோத போர் பற்றி அவர் பெருமையடித்துக் கொண்டார். அப்போது அமெரிக்கா முதலில் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்புவதாக பாசாங்கு செய்து தெஹ்ரானை ஒரு பொறியில் சிக்க வைத்தது, பின்னர் ஆரம்பகால இஸ்ரேலிய தாக்குதல்களை விரிவாக்கி, ஈரானிய சிவில் அணுசக்தி நிலையங்கள் மீது பாரிய தாக்குதல் அது நடத்தியது. “இன்று, ஈரானின் பெரும்பாலான இராணுவத் தளபதிகள் நம்முடன் இல்லை; அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று ட்ரம்ப் பெருமிதம் கொண்டார்.

தென் அமெரிக்காவில் வளர்ந்து வரும் சீன செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவதற்கான அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான வாஷிங்டனின் தயாரிப்புகளைத் தொடரவும் அமெரிக்க ஜனாதிபதி தனது ஐ.நா. உரையைப் பயன்படுத்தினார். சமீபத்திய வாரங்களில், அமெரிக்க இராணுவப் படைகள் வெனிசுலா கடற்கரையில் மூன்று படகுகளை வெடிக்கச் செய்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற முற்றிலும் ஆதாரமற்ற கூற்றின் அடிப்படையில் குறைந்தது 17 பேரைக் கொன்றன. ஆனால், அது உண்மையாக இருந்தாலும், எந்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கு உடனடியாக மரணதண்டனையை விதிக்க உரிமை கிடையாது.

ஆயினும்கூட, தனது அரசாங்கத்தின் குற்றவியல் வன்முறையைப் பறைசாற்றிக்கொண்டு, வெனிசுலாவிலிருந்து போதைப்பொருட்களை கொண்டு செல்பவர்களை நோக்கி உரையாற்றுவதாகக் கூறி, பொதுச் சபையின் முன் “நாங்கள் உங்களை இருப்பிலிருந்து அழிப்போம்” என்று அறிவித்தார்.

ட்ரம்ப், உக்ரேன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்புக்குப் பிறகும், ஐ.நா மற்றும் சமூக ஊடகப் பதிவுகளுக்கு முன்பும் வெளியிட்ட தனது கருத்துக்களில், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் அதிகரித்தார். அமெரிக்க மற்றும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன் போரின் தொடர்ச்சிக்கு புட்டின் மற்றும் ரஷ்யாவை குற்றம் சாட்டியதுடன், இன்னும் கூடுதலான ஆக்ரோஷமான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு மாஸ்கோவை அச்சுறுத்தியதும் மட்டுமல்லாமல், “ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், உக்ரேன் அனைத்தையும் அதன் அசல் வடிவத்தில் எதிர்த்துப் போராடி மீண்டும் வெல்லும் நிலையில் உள்ளது என்று நான் நினைக்கிறேன்” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்கு முன்னதாக, ஊடகங்கள் பெரும்பாலும் பிரான்ஸ், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளால் பாலஸ்தீன அரசை வரலாற்று ரீதியாக அங்கீகரிப்பதாகக் கூறப்படுவதில் கவனத்தை செலுத்தின.

ட்ரம்ப்பால் உரத்த குரலில் எதிர்க்கப்படும் இந்த சூழ்ச்சி, ஏகாதிபத்திய மையங்கள் மற்றும் மத்திய கிழக்கின் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மீது நடந்து வரும் இனப்படுகொலை ஏற்படுத்தி வரும் தீவிரமயமான தாக்கம் குறித்த அச்சத்தில் பிறந்தது. அத்துடன், பிரான்சில் மக்ரோன், இங்கிலாந்தில் ஸ்டார்மர் மற்றும் கனடாவில் கார்னே ஆகியோர், இடம்பெற்று வரும் இனப்படுகொலையில் தங்கள் ஆழமான மற்றும் தொடர்ச்சியான உடந்தையை மூடிமறைக்க மேற்கொண்ட ஒரு தீவிர முயற்சியை இது குறிக்கிறது.

ஐரோப்பிய சக்திகளால் ரஷ்யாவிற்கு எதிரான போர்வெறி அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் தீவிரப்படுத்திவரும் சூழலுக்கு இது சரியாக பொருந்துகிறது. ரஷ்ய போர் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் “மீண்டும்” நுழைந்தால் அவற்றை சுட்டு வீழ்த்துவதற்கான சூளுரைகளும் இதில் அடங்கும். இந்தக் கூற்றை மாஸ்கோ மறுக்கிறது.

ட்ரம்ப்பின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் ஒன்பது மாதங்களில், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய இலக்குகள் ஸ்தாபன அரசியலை இயக்குகின்றன. முதலாவதாக, உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மாஸ்கோவுடன் ஒரு சமரசத்தை எட்டுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளை அவர்களின் தலைக்கு மேல் மற்றும் அவர்களின் செலவில் சீர்குலைத்தல்; இரண்டாவதாக, இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரிப்பது, இதனால் அவர்கள் இராணுவ வலிமையைப் பாதுகாத்து, அமெரிக்காவைத் தவிர்த்து, தேவைப்பட்டால், அமெரிக்காவுக்கு எதிராகவும் தங்கள் ஏகாதிபத்திய நலன்களைத் தொடர முடியும் என்பதாகும்.

கடந்த மாதம் புதிய ஜேர்மன் சான்சலர் பிரெடெரிக் மெர்ஸ் “இன்று நாம் அறிந்த நலன்புரி அரசு இனியும் பொருளாதார ரீதியில் நிலைத்திருக்க முடியாது” என்று முன்னறிவித்ததைப் போல, ரஷ்யாவுடனான போருக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பாரிய தாக்குதலுக்கும் மீள்ஆயுதமயமாக்கல் அவசியமாக்கப்படுகிறது.

இவை சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கித் திரும்புவதையும், அதி வலதுசாரிகளை அதிகாரத்தின் தாழ்வாரங்களுக்குள் கொண்டு வருவதையும் அவசியமாக்குகின்றன. துல்லியமாக, அமெரிக்காவின் தன்னலக்குழு ட்ரம்பை நோக்கித் திரும்பியுள்ள அதே காரணங்களுக்காக, அதாவது சமூகத்தை இராணுவமயமாக்குவதும், போருக்கு விலை செலுத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளில் எஞ்சியிருப்பதை அழிப்பதும், பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்வதுக்கு இது அவசியமாகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் ஏற்கனவே மிகவும் முன்னேறி வருகின்றன. குறிப்பாக, தீவிர வலதுசாரிகள் ஊட்டி தீங்கு விளைவிக்கும் புலம்பெயர்ந்தோர்-விரோத பிரச்சாரத்தை ஆளும் வர்க்கம் ஊக்குவித்து வருவதும், பாலஸ்தீனியர்களின் தேசிய உரிமைகள் குறித்து இப்போது அக்கறை கொண்டதாக காட்டிக் கொள்ளும் அதே அரசாங்கங்கள், பல இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அவதூறு பரப்புவதன் மூலமும், ஒடுக்குவதன் மூலமும் இது தெளிவாகிறது.

ஐ.நாவின் முன் ட்ரம்பின் பாசிச ஆவேசப் பேச்சு, கூடியிருந்த அரசாங்கத் தலைவர்களையும், மூத்த இராஜதந்திரிகளையும் அதிர்ச்சியடையச் செய்தது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்பின் ஐ.நா பார்வையாளர்கள் சிரித்தனர், இந்த ஆண்டு அவர்கள் அமைதியாக இருந்தனர்,” என்று பிபிசி தலைப்பு செய்தி அறிவித்தது.

இது, ட்ரம்ப் சர்வ வல்லமை படைத்தவர் என்பதால் அல்ல. மாறாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தின் கோட்டையாகவும், இன்னும் உலக நிதியின் மையமாகவும், உலகளாவிய எதிர்ப் புரட்சியின் தலைமையாகவும் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி மற்றும் சீரழிவை ட்ரம்ப் வெளிப்படுத்துகிறார்.

உண்மை என்னவென்றால், இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக நாடுகளின் கழகம் செய்ததைப் போலவே, அதே அடிப்படை காரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டுவரும் போட்டி ஏகாதிபத்திய சக்திகள், முக்கியமான வளங்கள், சந்தைகள், உற்பத்தி வலையமைப்புகள் மற்றும் மூலோபாய பிரதேசங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக உலகை வன்முறையாக மறுபங்கீடு செய்ய முயல்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச கும்பல் ட்ரம்ப் தலைமையில், சட்டபூர்வமான எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் கைவிட்டு வருவதுடன், காட்டின் சட்டம் — வலிமை சரியானது— வன்முறையாக வலியுறுத்தப்படுகிறது. ட்ரம்ப் தானே ஐ.நா.வை அதன் இயலாமை மற்றும் பொருத்தமற்ற தன்மைக்காக கேலி செய்தார்.

முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஸ்தாபக அரசியல் என்ற அமைப்புமுறைக்குள், போரையும் ஒரு உலகளாவிய மோதலுக்குள் விரைவாக வீழ்ச்சியடைவதையும் எதிர்ப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. ரஷ்யா மற்றும் சீனாவின் தொழிலாளர்களை இரக்கமின்றி சுரண்டும் முதலாளித்துவ மீட்சிவாத ஆட்சிகளுக்கு புட்டினும், ஜி ஜிங்பிங்கும் தலைமை தாங்குகின்றனர். மேலும், வெகுஜனங்களின் இழப்பில் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு இணக்கத்தை அடைவதற்கும் பிற்போக்குத்தனமான இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் சாகசங்களுக்கும் இடையே இவர்கள் ஊசலாடுகின்றனர்.

லியோன் ட்ரொட்ஸ்கி கூர்மையாக விளக்கியதைப் போல, ஏகாதிபத்திய போர்கள் மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்க, தொழிலாள வர்க்கம் போர் வரைபடத்தை அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பார்க்க வேண்டும். முதலாளித்துவ சக்திகளை போருக்கு உந்தித் தள்ளும் அதே நிகழ்ச்சிப் போக்குகள்தான் சமூகப் புரட்சிக்கும் எரியூட்டுகின்றன. போர், சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களை ஒரு சோசலிச முன்னோக்குடன் உட்புகுத்துவதும், அவற்றை ஒரு புரட்சிகரத் தலைமையுடன் ஆயுதபாணியாக்குவதும் இன்றியமையாத பணியாகும். உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்தப் பணிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

Loading