முன்னோக்கு

அரசாங்க பணி முடக்கத்தின் உண்மையான பிரச்சினை: ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டனில் அரசாங்க முடக்கத்தின் முதல் நாளில், கேபிடல் மீது உள்ள அமெரிக்கக் கொடி அதிகாலை ஒளியில் ஒளிர்கிறது, புதன்கிழமை, அக்டோபர் 1, 2025 [AP Photo/J. Scott Applewhite]

முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஒரு பிரதிநிதியாக செயல்பட்டுவரும் ட்ரம்ப் நிர்வாகம், பாரிய பணிநீக்கங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்கள் உள்ளடங்கலாக தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னொருபோதும் இல்லாத தாக்குதலை நடைமுறைப்படுத்த, இந்த வார அரசாங்க பணி முடக்கத்தை பயன்படுத்தி வருகிறது. இதன் மையத்தில் ஒரு இராணுவ-போலிஸ் சர்வாதிகாரம் நிறுவப்படுகிறது.

இந்த நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் தலையிட்டு, அதன் மகத்தான சமூக சக்தியைத் திரட்டி, ட்ரம்ப் நிர்வாகத்தை பதவியில் இருந்து வெளியேற்றி, அதன் குற்றவியல் சதித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தை ஜனநாயகக் கட்சி வரையறை செய்யவோ அல்லது அதற்கு அடிபணியச் செய்யவோ அனுமதிக்க முடியாது. ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் தற்போதைய அரசியலமைப்பு சதித் திட்டங்களுக்கு எதிராக எந்தவொரு பாரிய அணிதிரள்வையும் எதிர்த்து வருகிறது.

பொலிஸ்-அரசு வன்முறை மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத ஒடுக்குமுறை எந்திரத்தைத் தவிர, மற்ற அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 750,000 மத்திய கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம். ட்ரம்ப் நிர்வாகம் ஒவ்வொரு துறையையும் “நடைமுறையில் குறைப்புகளை” (RIFs) ஏற்படுத்த தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதாவது, பாரிய பணி நீக்கங்கள், குறிப்பாக “ஜனாதிபதியின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகாததாகக்” கருதப்படும் திட்டங்களை இது குறிவைக்கிறது. ட்ரம்பின் வரவு-செலவுத் திட்ட இயக்குனர் ரஸ் வோட், கடந்த புதன்கிழமை குடியரசுக் கட்சியினருடனான ஒரு அழைப்பில், இந்த பணிநீக்கங்கள் “ஓரிரு நாட்களில்” தொடங்கும் என்று தெரிவித்தார்.

இதன் விளைவுகள் நேரடியாக பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மாறாக அரசாங்கத்தால் வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

ட்ரம்பின் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்கான ஹெரிடேஜ் அறக்கட்டளையின் திட்டமான 2025 ஆம் ஆண்டு திட்டப்படி, ரஸ் வோட் இணைந்து எழுதிய கொள்கைகளை செயல்படுத்துவதே அவரது மூலோபாயமாகும். இந்தத் திட்டத்தில், ஜனாதிபதிக்கு அரசாங்க செலவினங்களை நிர்ணயிக்கும் “உரிமையை” வழங்குவதன் மூலம், நிர்வாக அதிகாரத்தை பரந்தளவில் விரிவாக்குவதும், இதன் மூலம் “பொது நிதிக் கட்டுப்பாடுகளை” நிர்வகிக்கும் காங்கிரஸின் அரசியலமைப்பு அதிகாரத்தை அழிப்பதும் இதில் உள்ளடங்குகிறது.

தற்போதைய நடவடிக்கைகள், ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து ஏற்கனவே நடந்து வரும் தாக்குதலின் பாரிய அதிகரிப்பாகும். ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, 200,000-300,000 மத்திய கூட்டாட்சி வேலைகளை துடைத்தெறிந்துள்ளது. அதே நேரத்தில் பொது சுகாதாரத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மற்றும் பணியிட பாதுகாப்பு விதிமுறைகளை அகற்றியுள்ளது. மேலும் கல்வித் துறையை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருகிவரும் வரும் கடனையும், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம், பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் (WIC), உணவு முத்திரைகள் மற்றும் ஏழைகளுக்கான பிற முக்கிய உதவித் திட்டங்களை இலக்காகக் கொண்டு, பத்து மில்லியன்கணக்கான மக்கள் நம்பியிருக்கும் முக்கிய சமூகத் திட்டங்களான மருத்துவம், மருத்துவ உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய திட்டங்களைக் வெட்டிக் குறைக்கத் தயாராகி வருகிறது.

ஒரு பாசிச இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள வர்க்க உள்ளடக்கம் இதுதான். அரசாங்க பணி முடக்கத்துக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்சேத் ஆகியோர் குவாண்டிகோவில் இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்களின் கூட்டத்தைக் கூட்டினர். அங்கு ட்ரம்பும் ஹெக்செத்தும் படை அதிகாரிகளின் விசுவாசத்தைக் கோரினர். அத்துடன், அமெரிக்க நகரங்கள் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் வன்முறைக்கான “பயிற்சி தளங்களாக” சேவையாற்ற வேண்டும் என்று அறிவித்தனர்.

“உள்ளே இருக்கும் எதிரி மீதான கண்டனங்கள்”, அமெரிக்க நகரங்கள் மீதான ட்ரம்பின் போர்ப் பிரகடனம், மற்றும் “தீவிர இடதுகள்” மீதான அவதூறு ஆகியவை, முதலாளித்துவ தன்னலக்குழுவின் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பாரிய எதிர்ப்பைத் தூண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சி பிரச்சினைகளை அப்படியே முன்வைக்க முற்றிலும் இலாயக்கற்று இருப்பதுடன் இதனை விரும்பவில்லை. செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் மற்றும் பிரதிநிதிகளின் சபையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் புதன்கிழமை, “செலவுகளைக் குறைக்கும் மற்றும் குடியரசுக் கட்சியின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் உள்ள நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், அரசாங்கத்தை புதுப்பிக்க, இரு கட்சி தீர்வைக் காண ஜனநாயகக் கட்சியினர் தயாராக உள்ளனர். ஆனால் எங்களுக்கு நம்பகமான கூட்டாளி தேவை” என்று பணிவுடன் அறிவித்தனர்.

ஜனநாயகக் கட்சியினரை “உள்நாட்டு தீவிரவாதிகளின்” ஒரு கட்சி என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் பேசி வருகின்ற நிலையிலும் கூட, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புடன் சில இணக்கங்களை மேற்கொள்ள தொடர்ந்து நாடுகின்றனர். மேலும், இந்தப் பிரச்சினையை சுகாதாரம் தொடர்பான மோதல் போல முன்வைப்பது அபத்தமானது. இந்த பணி முடக்கம், பாரிய பணிநீக்கங்களைச் செய்வதற்கும் சர்வாதிகாரத்திற்கான கட்டமைப்பை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த நெருக்கடியை ஒரு வழமையான வரவு-செலவுத் திட்ட தகராறாகக் கருதுவதன் மூலம், அவர்கள் நேரடியாக ட்ரம்பின் கைகளில் விளையாடி வருகின்றனர். இது அவர்களுக்கும் நன்றாக தெரியும்.

ஜனநாயகக் கட்சியின் சார்பாக பேசிய நியூ யோர்க் டைம்ஸ், புதன்கிழமை பிற்பகல் ஒரு தலையங்க கட்டுரையை வெளியிட்டது. “பணி முடக்கத்தின் உண்மையான அபாயங்களை அடையாளம் காண்பதற்காக, இரண்டு கட்சிகளும் சண்டையிடுவது என்னவென்றால், அமெரிக்கர்கள் மலிவு விலையில் சுகாதார பாதுகாப்பு சேவையைப் பெற வேண்டுமா என்பதுதான்” என்று டைம்ஸ் கூறியது.

அமெரிக்க நகரங்களை ஆக்கிரமிப்பதற்கும், எதிர்ப்பை குற்றமாக்குவதற்கும் மற்றும் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான ட்ரம்பின் நகர்வுகள் குறித்து எந்தக் குறிப்பையும் டைம்ஸ் தவிர்த்துக் கொண்டது. இது ஒரு புலம்பல் முறையீட்டோடு முடிந்தது: “இப்போது ஒரு பணிநிறுத்தத்தை தவிர்க்க மிகவும் தாமதமாகிவிட்டது, ஜனாதிபதியும் காங்கிரசும் அரசாங்கத்தை விரைவில் மீண்டும் திறப்பது கடமையாகும், அடுத்த ஆண்டு அமெரிக்கர்கள் மருத்துவ காப்பீட்டிற்காக அதிகமாக பணம் செலுத்துவதைத் தடுக்க இவர்கள் உறுதியளிக்க வேண்டும்” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர்களை, 1930 களில் இருந்த ஜேர்மனிக்கு கொண்டு சென்றிருந்தால், உலகளாவிய நலன்புரி திட்டங்களுக்கு உறுதியளிப்பது ஹிட்லரின் “கடமை” என்று அவர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள்! அனைத்திற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியினர் சுகாதாரம் தொடர்பாக ட்ரம்புடன் “சண்டையிடுகிறார்கள்” என்ற கூற்று ஒரு பொய்யாகும். 

ஜனநாயகக் கட்சியினர் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் தொடர்பாக “சண்டையிடுவது” ஒருபுறம் இருக்கட்டும், “பேச்சுவார்த்தை நடத்தவில்லை”. அவர்களின் உண்மையான மற்றும் ஒரேயொரு அக்கறை, திரைக்குப் பின்னால் உள்ள கலந்துரையாடல்களின் பொருள், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர் ஆகும். வர்க்கக் கொள்கையின் இன்றியமையாத பிரச்சினைகளில், வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியான ஜனநாயகக் கட்சியினரும் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் உடன்பாட்டில் உள்ளன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அசாதாரணமான, குற்றவியல் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவரை அதிகாரத்தில் இருந்து எவ்வாறு அகற்றுவது என்பதே அடிப்படைக் கேள்வியாகும். 2019 இல் ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கு குற்றஞ்சாட்டியது என்பது, அது அவரது பாசிச அச்சுறுத்தல்களுக்காக அல்ல, மாறாக உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதில் தாமதம் காரணமாக இருந்தது. 1974 ஆம் ஆண்டு ரிச்சர்ட் நிக்சன் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணமான வாட்டர்கேட் நெருக்கடியை குழந்தை விளையாட்டு போல தோற்றமளிக்கும் வகையில், இன்று ஜனநாயகக் கட்சியிடமிருந்து பதவி நீக்கத் தீர்மானம் குறித்த பரிந்துரைகள் கூட இல்லை. இதுவே ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு ஜனநாயகக் கட்சி உடந்தையாக இருக்கும் செயலாகும்.

தொழிற்சங்க எந்திரம், அதன் பங்கிற்கு, அதன் சொந்த சுயாதீனமான கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. அதன் தலைவர்களின் குறிப்பிட்ட விசுவாசத்தைப் பொறுத்து, அது ஜனநாயகக் கட்சி அல்லது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு இணைப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையுடன் பணி முடக்கத்துக்கு பதிலளித்த AFL-CIO தொழிற் சங்கத் தலைவர் லிஸ் ஷுலர், ட்ரம்ப் “பொறுப்பான நிர்வாகத்தை விட குழப்பத்தையும் வலியையும் தேர்ந்தெடுத்ததற்காக” அவரை விமர்சித்தார். ட்ரம்பின் “நிர்வாகத்திற்கு தொழிலாளர் இயக்கம் அனுப்பும் செய்தி தெளிவாக உள்ளது: வேலைக்குச் செல்லுங்கள். அரசாங்கத்துக்கு நிதியளியுங்கள். சுகாதார நெருக்கடியை சரிசெய்யுங்கள். உழைக்கும் மக்களை முதன்மையாக வைத்திருங்கள்” என்று அவர் அறிவித்தார். ட்ரம்ப் அமெரிக்க நகரங்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்த அச்சுறுத்தும் நிலையில், ஷுலர் அவரை “வேலைக்குச் செல்லுங்கள்” என்று மன்றாடுகிறார்!

அரசாங்க ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு (AFGE) மற்றும் அமெரிக்க மாநில, மாவட்ட மற்றும் நகராட்சி ஊழியர் கூட்டமைப்பு (AFSCME) என்பன, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் “சட்டவிரோதமானவை”, “ஒழுக்கக்கேடானவை” மற்றும் “மனசாட்சிக்கு புறம்பானவை” என்று அறிவி்த்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக ... வழக்குத் தாக்கல் செய்வதாக அறிவித்தன. தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் “சாத்தியமான அனைத்தையும் செய்யும்” என்று AFSCME கூட்டமைப்பின் தலைவர் லீ சாண்டர்ஸ் கூறினார். ஆனால், இதில் தொழிலாளர்களின் உண்மையான நடவடிக்கை எதுவும் உள்ளடங்கவில்லை.

தொழிற்சங்க எந்திரத்தைப் பொறுத்தவரை, அதன் அடிப்படைக் கொள்கையும் நம்பிக்கையும் என்னவென்றால், சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தொழிலாளர்கள் எதுவும் செய்யக்கூடாது என்பதாகும். இந்த எந்திரம் ஒரு தொழில்துறை பொலிஸ் படையாக செயல்பட்டு வருகிறது. அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் தடுப்பதன் மூலம், பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் கட்டளைகளை செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ட்ரம்ப் இராணுவ சர்வாதிகாரத்தையும், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு போரையும் திணிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதால், தொழிலாள வர்க்கம் செயலற்ற முறையில் இருக்க முடியாது! சோசலிச சமத்துவக் கட்சி, அரசாங்க பணி முடக்கம் மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்துக்கு பாரிய, கூட்டு நடவடிக்கை மூலமாக பதிலளிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

பணி முடக்கத்தின் போது, ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சிகளைப் பொருட்படுத்தாமல், ட்ரம்ப் அதிகாரத்தில் நீடிப்பார். மேலும் அவரது நிர்வாகத்தை தூக்கிப்பிடிக்கும் அனைத்துக் குற்றவாளிகளும் பெருவணிகத்தின் சார்பாக தொடர்ந்து ஆட்சி செய்வார்கள். பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள்.

தொழிலாள வர்க்கமானது, முன்னொருபோதும் இல்லாத இந்த நெருக்கடியில் அதன் சொந்த வேலைத்திட்டத்தின் மூலம் தலையீடு செய்ய வேண்டும். இதற்கு அமைப்பு தேவை. சோசலிச சமத்துவக் கட்சி செப்டம்பர் 19 அன்று வெளியிட்ட, “ட்ரம்பின் பாசிச சதித் திட்டத்தை எதிர்த்து எவ்வாறு போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்” என்ற அறிக்கையில் விளக்கியதைப் போல, தொழிலாள வர்க்க மூலோபாயத்தின் ஒரு மையக் கூறு பின்வருமாறு இருக்க வேண்டும்:

ட்ரம்ப்பின் ஆட்சிக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, அதன் பரந்த தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியை அணிதிரட்டக்கூடிய ஒரு புதிய அமைப்பு வடிவத்தை உருவாக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த புதிய அமைப்பு வடிவம் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களைக் கொண்டுள்ளது. ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம், பள்ளி மற்றும் சுற்றுப்புறத்திலும் இவை நிறுவப்பட வேண்டும்.

இந்தக் குழுக்கள், பாசிச ட்ரம்ப்பின் அரசாங்கம், அதற்கு ஜனநாயகக் கட்சியினரின் உடந்தை, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பரந்த தாக்குதலுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும், மாணவர் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தி, தொழில்துறை, தளவாடங்கள், போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் துரித உணவகங்கள், சமூக சேவைகள், சட்டப் பாதுகாப்பு, கல்வி, கலை மற்றும் கலாச்சாரம், பொழுதுபோக்கு, மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு, அறிவியல், கணினி தொழில்நுட்பம், நிரலாக்கம் மற்றும் பிற உயர்சிறப்பு வாய்ந்த தொழில்கள் ஆகியவற்றை எதிர்ப்பின் மையங்களாக மாற்ற வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு சக்திவாய்ந்த பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்கியுள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியை உடைப்பதற்கும், தொழிலாளர்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட சமூக அதிகாரத்தின் புதிய மையங்களை உருவாக்குவதற்கும், சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது இன்றியமையாததாகும். இதுவே முன்னோக்கிய பாதையாகும்: சர்வாதிகாரம், போர் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading