மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (துருக்கி), 2025 ஜூன் 13–15 தேதிகளில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியது. கட்சியின் அதிகாரப்பூர்வ உருவாக்க செயல்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. கட்சியின் காங்கிரஸில் ஒருமனதாக பின்வரும் மூன்று தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன: அவை, “கொள்கை அறிக்கை” (அதிகாரப்பூர்வ வேலைத்திட்டம்), “சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் சர்வதேச அடித்தளங்கள்” மற்றும் “அரசியலமைப்பு” ஆகியவையாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் “கொள்கை அறிக்கையின்” முதலாவது பகுதியை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். அடுத்த பகுதிகள் விரைவில் தொடர்ந்து வெளியிடப்படும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் உலகப் பணிகள்
சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (Sosyalist Eşitlik Partisi – Dördüncü Enternasyonal), 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்டிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள், இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர எழுச்சிகளின் அத்தியாவசிய அனுபவங்களையும், உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்காக மார்க்சிஸ்டுகள் நடத்திய போராட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. சோசலிசப் புரட்சி என்பது, நனவான அரசியல் போராட்டத்தில் வெகுஜனங்கள் வலுக்கட்டாயமாக நுழைவதைக் குறிக்கிறது. இது, உலக வரலாற்றில் மனித சமூக அமைப்பு வடிவத்தின் மிகப் பெரிய மற்றும் மிகவும் முற்போக்கான மாற்றத்தைக் குறிக்கிறது – குறிப்பாக, வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தையும், மனிதர்கள் மனிதர்களால் சுரண்டப்படுவதையும் முடிவுக்குக் கொண்டு வருகிறது. இவ்வளவு மகத்தான ஒரு மாற்றம் என்பது ஒரு முழு வரலாற்று சகாப்தத்தின் பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள், 1914ம் ஆண்டில், முதலாம் உலகப் போர் வெடித்ததில் தொடங்கி, அதன் பின்னர் 1917 அக்டோபர் புரட்சியில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தால் அரசு அதிகாரம் கைப்பற்றப்பட்டதன் மூலம் தொடங்கிய சகாப்தங்களின் அனுபவங்களிலிருந்தும், அவை அவசியம் என்று கருதியும் பெறப்பட்டவை ஆகும்.
2. சோசலிச சமத்துவக் கட்சியுடன் ஐக்கியம் கொண்டுள்ள நான்காம் அகிலம், சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவுக்கும், ஸ்டாலின் மற்றும் அவரது அடியாட்களின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியால் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கும் எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான மார்க்சிச சர்வதேசியவாதிகள் நடத்திய சமரசமற்ற போராட்டத்தில் இருந்து உருவானது. இறுதியில், 1991 இல், சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு இட்டுச் சென்ற அந்த காட்டிக்கொடுப்பின் அரசியல் மூலாதாரம், ஸ்டாலினிச ஆட்சியால் சர்வதேசியவாதத்திற்கு பதிலாக தேசியவாதத்தை பிரதியீடு செய்வதில் இருந்தது. ஸ்டாலினிச அதிகாரத்துவமானது, அக்டோபர் புரட்சியின் விளைபொருளாக இருக்கவில்லை, மாறாக ஆரம்பகால முதலாளித்துவ எதிர்ப்புரட்சியின் விளைபொருளாக இருந்தது. ட்ரொட்ஸ்கி எடுத்துக்காட்டியதைப் போல, அதிகாரத்துவம் “தொழிலாளர் அரசில் உலக முதலாளித்துவத்தின் கருவியாக” இருந்தது. சீனா, சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஸ்டாலினிஸ்டுகள் அளப்பரியளவில் செல்வந்த தட்டுக்களாக மாற்றப்பட்டதன் மூலம், ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு தெளிவாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
3. சோசலிசப் புரட்சி என்பது சர்வதேச அளவிலானது. ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல, “சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, அது சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறு, சோசலிசப் புரட்சி ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; அது நமது முழுக் கிரகத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியிலும் மட்டுமே நிறைவடைகிறது.” சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தையும், அதன் அரசியல் அடையாளத்தையும் முதன்மையாக வரையறுக்கும் நான்காம் அகிலத்தின் இந்த அடிப்படைக் கொள்கை, “தனி நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்டாலினிச “கோட்பாட்டிற்கு” எதிரான போராட்டத்தில் உருவாக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் உள்ளதைப் போலவே, துருக்கியிலும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் உலக நிலைமைகளின் பகுப்பாய்விலிருந்து தொடர வேண்டும்.
முதலாம் உலகப் போர் வெடித்தவுடன் தேசிய வேலைத்திட்டங்களின் சகாப்தம் முடிவடைந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகப் பொருளாதாரத்தின் பிரமாண்டமான வளர்ச்சியையும், அதன் உலகளாவிய ஒருங்கிணைப்பையும் கருத்தில் கொண்டு, உலகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மற்றும் முதலாளித்துவங்களுக்கு இடையிலான போட்டிகளின் அவசரநிலைகள் ஆகியவை, தேசிய வாழ்க்கையின் பிரதான தீர்மானக் காரணிகளாக உள்ளன. எனவே, ட்ரொட்ஸ்கி விளக்கியது போல, “பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை உலக நோக்குநிலையிலிருந்து மட்டுமே வரவேண்டும், வரவும் முடியும், அதற்கு நேர்மாறாக அல்ல”.
4. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அல்லது ஒரு முன்னேறிய அல்லது குறைந்த வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்கள் எங்கெல்லாம் முதலில் வெடித்தாலும், சமூக மோதல்கள் தவிர்க்கவியலாமல் உலகளாவிய பரிமாணங்களை எடுக்கும். சோசலிசப் புரட்சி ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் முடிக்கப்படப் போவதில்லை, முடிக்கப்படவும் முடியாது. ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் முன்னறிவித்ததைப் போல, அது உலக அரங்கில் நிறைவடையும்.
5. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம், நவீன முதலாளித்துவ சமூகத்தில் முன்னணி மற்றும் தீர்க்கமான சர்வதேச புரட்சிகர சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது. சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்திற்காக துருக்கிய தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதே சோசலிச சமத்துவக் கட்சியின் மையப் பணியாகும். இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில், துருக்கியில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைத்து அணிதிரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி பாடுபடுகிறது. இதன் மூலம், உண்மையான ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமுதாயத்தை வளர்ப்பதற்கான புறநிலை முன்நிபந்தனைகளை இது உருவாக்கும்.
6. இந்த நோக்கங்களை ஒரு சர்வதேச மூலோபாயத்தின் கட்டமைப்பிற்குள் மட்டுமே அடைய முடியும். அதன் இலக்கு, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் உலகளாவிய ஐக்கியமும் மற்றும் ஒரு ஐக்கிய உலக சோசலிச அரசுகளை உருவாக்குவதும் ஆகும். மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் உலகக் கட்சியின் புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்ப நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து துருக்கிய சோசலிச சமத்துவக் கட்சி நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் பதவி என்ற குறிக்கோளுக்கு எதிராகவும், மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளால் வரையப்பட்ட செயற்கை எல்லைகளுக்கு எதிராகவும், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் மற்றும் மத்திய கிழக்கின் முன்னோக்கை இது முன்வைக்கிறது.
முதலாளித்துவத்தின் நெருக்கடி
7. முதலாளித்துவமும், அதன் பொருளாதார அடித்தளங்களின் மீது அபிவிருத்தி அடையும் ஏகாதிபத்திய அமைப்புமுறையும், நவீன உலகில் மனித வறுமை, சுரண்டல், வன்முறை மற்றும் துன்பங்களுக்கு முக்கிய காரணமாகும். ஒரு சமூகப்-பொருளாதார அமைப்பு முறையாக, முதலாளித்துவம் நீண்ட காலத்திற்கு முன்பே அதன் வரலாற்று ரீதியாக முற்போக்கான பங்கை இழந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் இரத்தக்களரியான வரலாறு —அதன் இரண்டு உலகப் போர்கள், எண்ணற்ற “உள்ளூர்” மோதல்கள், நாஜிசத்தின் கொடுங்கனவு மற்றும் இராணுவ-போலிஸ் சர்வாதிகாரத்தின் பிற வடிவங்கள், இனப்படுகொலை மற்றும் இனப்படுகொலைகளின் வெடிப்புகள் ஆகியவை— முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. முதலாளித்துவத்தால் தூண்டப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன்களை எட்டுகிறது. இந்த எண்ணிக்கையில் முழுக் கண்டங்களின் மக்களும், அதனுடன் தொடர்புடைய அனைத்து துன்பங்களுடனும், இடைவிடாத வறுமைக்கு உட்படுத்தப்படுவது சேர்க்கப்படவில்லை.
8. தற்போதுள்ள உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான அளவும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண முன்னேற்றங்களும் வறுமையை ஒழிப்பதற்கு மட்டுமின்றி, பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்வதற்கும் போதுமானதாக உள்ளன. சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் தற்போதுள்ள உற்பத்தி சக்திகள் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டின் மூலமாகவும், பூமியில் உயிர்கள் மற்றும் வளங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலமாகவும்தான் மனிதகுலம் இந்த அளவிலான செழிப்பை அடைய முடியும். முன்னெப்போதும் இல்லாத அளவில், பொருட் செல்வங்களுக்கு மத்தியில் கலாச்சாரம் மலர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், மாறாக, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து வருகின்றன. எதிர்காலத்திற்கான முன்னோக்கு மற்றும் நம்பிக்கையை இழந்த மனித கலாச்சாரம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. என்ன இருக்கிறது, என்ன இருக்க வேண்டும் என்பதற்கு இடையிலான முரண்பாட்டுக்கு மூல காரணம், உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமை மற்றும் உலகத்தை போட்டி தேசிய அரசுகளாக பகுத்தறிவற்ற முறையில் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய பொருளாதார அமைப்பு முறையாகும்.
9. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், கடுமையான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், உற்பத்திக் சாதனங்களின் தனியார் உடமையின் தடையை, முதலாளித்துவ சந்தையின் அராஜகத்தை, இலாப அமைப்பு முறைமையின் பொருளாதார கட்டாயங்களை, இறுதியாக ஆனால் முக்கியமாக, ஆளும் வர்க்கத்தின் தீராத பேராசை மற்றும் பண வெறித்தனம் ஆகியவற்றுக்கு எதிராக இயங்குகின்றன. 2008 நெருக்கடிக்குப் பின்னர், உலகப் பொருளாதார அமைப்பு முறையின் அஸ்திவாரங்களை உலுக்கிய பல பில்லியன் டாலர் திவால்நிலைகள் மற்றும் COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு உலகளாவிய நிதிச் சந்தைகளில் டிரில்லியன் கணக்கான டாலர்களை கொட்டியதற்கு மத்தியில், முதலாளித்துவ சந்தை என்பது வளங்களை தவறாமல் ஒதுக்குபவர் மற்றும் சமூகத் தேவைகளை மிகவும் புத்திசாலித்தனமாக தீர்ப்பவர் என்ற கூற்றை முற்றிலும் மதிப்பிழக்க செய்துள்ளது. “சட்டபூர்வமான” நிதி பரிவர்த்தனைகளுக்கும், குற்றவியல் மோசடிக்கும் இடையிலான எல்லைக் கோடுகள் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததாக இருக்கும் அளவிற்கு சுருங்கிவிட்டன. உண்மையான மதிப்பை உற்பத்தி செய்வதிலிருந்தும், உருவாக்குவதிலிருந்தும் தனிப்பட்ட செல்வச் சேகரிப்பு செயல்முறையை பிரிப்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் பொதுவான அழுகிய தன்மையின் வெளிப்பாடாகும். ஊக வணிகம் மற்றும் நிதிமயமாக்கலால் உந்தப்பட்ட பங்குச் சந்தைகளின் பாரிய பணவீக்கம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது. உலக மக்கள்தொகையில் ஏழ்மையான பாதியை விட. ஒரு சிலர் அதிகளவான செல்வத்தை குவித்து வைத்திருக்கின்றனர்.
10. உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமை மற்றும் உலகை போட்டி தேசிய-அரசுகளாக பிளவுபடுத்துவதன் அடிப்படையில் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையினால் மனிதகுலத்திற்கு ஏற்படும் கொடிய விளைவுகள், கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் வியத்தகு முறையில் வெளிப்பட்டன. முதலாம் உலகப் போரைப் போலவே, இந்த தொற்றுநோய், உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான முரண்பாடுகளை தீவிரப்படுத்தி, துரிதப்படுத்திய ஒரு “தூண்டுதல் நிகழ்வாகும்”. உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளின் விளைவாக, சுகாதார நெருக்கடி தவிர்க்கவியலாமல் ஒரு உலகளாவிய சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது. சமூகத்தின் பிரதான வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கம், சமரசத்திற்கு இடமின்றி எதிரெதிர் நலன்களைக் கொண்டுள்ளன என்பது அதிகரித்தளவில் தெளிவாகி வருகின்ற நிலையில், உலகளாவிய தொற்றுநோய் ஒரு உலகளாவிய வர்க்கப் போராட்டமாக மாறியுள்ளது.
11. இந்த தொற்றுநோய்க்கு திறமையற்ற, ஒழுங்கற்ற மற்றும் மனிதாபிமானமற்ற பிரதிபலிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்களின் திறமையின்மை, குற்றவியல் தன்மை, முதலாளித்துவம் மற்றும் ஆளும் உயரடுக்கின் அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. பெருந்தொற்றின் பரவலால் ஏற்படும் அளவிட முடியாத சுகாதார ஆபத்து இருந்து வருகின்ற போதிலும், பெரும்பாலும் இது தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆளும் வர்க்கம் பெருந்தொற்றின் பொருளாதார தாக்கத்திலேயே, கிட்டத்தட்ட பிரத்தியேகமாக கவனம் செலுத்தியது. அதாவது, இந்த நோய் பங்குச் சந்தையையும் சமூகத்தின் 1 முதல் 5 சதவிகித பணக்காரர்களின் தனிப்பட்ட செல்வத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்தியது. உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆளும் வர்க்கங்களும் தங்களது இலாபத்தை அதிகரிப்பதிலும், தங்களின் நலன்களை மேம்படுத்துவதிலும் கவனத்தை செலுத்தியதே ஒழிய, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், மில்லியன் கணக்கான மக்களின் மரணங்களைத் தடுப்பதிலும் அல்ல. கோவிட்-19 இன் நீண்டகால விளைவுகளால் மில்லியன் கணக்கானவர்கள் இறந்து, பில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் தொற்றுநோயின் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளுக்கு பலியாகியது.
12. சீனாவில் பூச்சிய-கோவிட் கொள்கை இந்த நோயைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய தொற்றுநோயை, அதன் இயல்பிலேயே, உலகளாவிய அடிப்படையில் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும். இந்த தொற்றுநோயை, உலகளாவிய தீர்வை அமைப்பதுக்கு மறுத்த, தனியார் இலாபத்திற்கும் போட்டி தேசிய அரசுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்கும் வாழ்க்கையை அடிபணியச் செய்த முதலாளித்துவத்தால் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. மாறாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே தீர்வை அடைய முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு உலகளாவிய ஒழிப்பு மூலோபாயத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இந்தப் போராட்டத்தின் பாகமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் குறித்த உலகளாவிய தொழிலாளர் விசாரணையை கட்சி ஆதரிக்கிறது.
13. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முழு ஆற்றலையும் மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்துவதற்கு, சுகாதார பில்லியனர்களின் செல்வவளம் தேசியமயமாக்கப்பட வேண்டும், தடுப்பூசிகள் காப்புரிமை இல்லாததாகவும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும், மற்றும் மருந்து நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்படும் பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
14. இலாப அமைப்புமுறைக்கும் மனிதகுலத்தின் உயிர்வாழ்வுக்கும் இடையிலான சமரசமற்ற மோதல், ஒரு நேரடி அர்த்தத்தில், புவி வெப்பமயமாதல் மற்றும் இயற்கைச் சூழலின் நெருக்கடியில் அதன் மிகவும் தீங்கு விளைவிக்கும் வெளிப்பாட்டைக் காண்கிறது. இந்த நெருக்கடிக்கான காரணம், முதலாளித்துவ ஊடகங்களால் தவறாகக் கூறப்படுவது போல், மக்கள்தொகை வளர்ச்சியுடன் இல்லை. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் —மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் வளர்ச்சி மிக முக்கியமானது— விளைவும் அல்ல, மாறாக, பகுத்தறிவற்ற மற்றும் காலாவதியான பொருளாதார ஒழுங்கால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதன் விளை பொருளாக உருவாகியுள்ளன. இலாப அமைப்பு முறையின் கட்டமைப்பிற்குள் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பெருகிய முறையில் முக்கியமான பிரச்சினைக்கு உண்மையான தீர்வைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்பதை முதலாளித்துவ அரசியல்வாதிகள் —சுற்றுச்சூழல் குறித்து அக்கறை கொண்டவர்கள் கூட— மறுக்கக்கூடிய ஒரு “சிரமமான உண்மை” ஆகும். அனைத்து அறிவியல் ஆதாரங்களும் பேரழிவைத் தடுக்க தேவையான பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க உலகப் பொருளாதாரத்தின் சோசலிச மறுசீரமைப்பைத் —இங்கு, பிரபஞ்ச சூழல் இனி இலாப நோக்கத்திற்கோ அல்லது அழிவுகரமான தேசியவாத நலன்களுக்கோ பிணைக் கைதியாக வைக்கப்பட மாட்டாது — தவிர வேறு எதுவும் சாதிக்காது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
15. பெருகிவரும் பொருளாதார நெருக்கடிக்கும், தொழிலாள வர்க்கத்தின் சீரழிந்து வரும் சமூக நிலைக்குமான தீர்வு, முதலாளித்துவத்தை சீர்திருத்துவதில் இல்லை, ஏனெனில் அது சீர்திருத்தத்திற்கும் அப்பாற்பட்டு மீளமுடியாதுள்ளது. இந்த நெருக்கடி, ஒரு முறையான மற்றும் வரலாற்று தன்மையைக் கொண்டுள்ளது. நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவத்திற்கு வழிவகுத்ததுபோல, முதலாளித்துவமும் சோசலிசத்திற்கு வழிவிட வேண்டியுள்ளது. முக்கிய தொழில்துறை, நிதி, தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வளங்கள் முதலாளித்துவ சந்தை மற்றும் தனியார் உடைமையின் எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டு, சமூகத்திற்கு மாற்றப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். முதலாளித்துவ மதிப்பு விதியின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை ஒழுங்கமைப்பது என்பது, சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஜனநாயக பொருளாதார திட்டமிடலின் அடிப்படையில், அதன் சோசலிச மறுஒழுங்கமைப்பினால் பிரதியீடு செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
தொடரும்...