மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற இஸ்ரேலிய சியோனிச ஆட்சி, காஸாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதில் இருந்து சுமுட் படகுகள் அணியை சட்டவிரோதமாகத் தடுத்ததானது, உலகளாவிய சீற்ற அலையை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கடந்த புதன்கிழமை பிற்பகுதியில் 42 படகுகளைக் கொண்ட தொடரணியை இடைமறிக்கத் தொடங்கியதிலிருந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜென்டினா மற்றும் துருக்கி உள்ளிட்ட பல ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. கடந்த வெள்ளிக்கிழமை, இத்தாலிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGIL) அழைப்பு விடுத்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இத்தாலிய தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இஸ்ரேல் கடல் கடற் கொள்ளையர்களுக்குச் சமமானதைச் செய்வதற்கு ஏகாதிபத்தியவாதிகளால் அனுமதிக்கப்பட்டது. அழித்தொழிப்பு போரை எதிர்கொண்டுவரும் பாலஸ்தீனியர்களுக்கு உதவிய “குற்றத்திற்காக” படகுகளில் கொண்டு செல்லப்பட்ட ஏராளமான உதவிகளை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றியதுடன், 400 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்தது. உதவிப் படகுகள் அணிக்கு துணைக்கு போவதாக நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த, இத்தாலிய மற்றும் ஸ்பானிய கடற்படைகளின் கப்பல்கள், உண்மையில் காஸாவிலிருந்து படகுகளை திசைதிருப்பவும், கவனமாக முறையில் அவற்றை பின்வாங்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதுடன், இஸ்ரேலிய இராணுவத்தின் அழுக்கு வேலைகளை எளிதாக்க கடலில் நிறுத்தப்பட்டன.
இஸ்ரேல் நிகழ்த்திய இந்தப் புதிய போர்க் குற்றத்திற்கான எதிர்வினை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய மையங்களில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளியை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இஸ்ரேல் திட்டமிட்டு மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவி மறுத்து வருகிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய இராணுவம் தினமும் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வது, பெரும்பான்மையான மக்களிடையே வெறுப்பைத் தூண்டுகிறது. இதற்கிடையில், ஏகாதிபத்தியவாதிகள் இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை தொடர்ந்து வழங்குவதன் மூலமும், உதவிப் படகுகள் அணிக்கு ஆதரவாக வெடித்த தன்னிச்சையான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் காஸாவில் பஞ்சத்தை ஆதரித்து வருகின்றனர்.
இத்தாலியிலுள்ள மிலானில் இடம்பெற்ற ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் 100,000 பேர் வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஜெனோவா மற்றும் லிவோர்னோவில் துறைமுகங்கள் முற்றுகையிடப்பட்டன. இத்தாலிய அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை “சட்டவிரோதமானது” என்று கருதினர். அதி தீவிர வலதுசாரி துணைப் பிரதம மந்திரி மாட்டியோ சால்வினி, “சட்டவிரோத வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்பவர்கள் சேதங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
கடந்த வியாழக்கிழமை பார்சிலோனாவில் 15,000 பேர் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் வன்முறையில் தாக்கினர். அதே நாளில், இத்தாலியின் போலோக்னாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஒரு ஆயுத நிறுவனத்திற்கான அணுகலைத் தடுக்க முயன்றதற்காக பிரான்சின் மார்சேயில் 100 க்கும் மேற்பட்டோர்களை பொலிசார் கைது செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை, கிரேக்கத்தின் பிரேயஸ் துறைமுகத்திலிருந்து வேலையை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள், தாம் “போர் இயந்திரத்தில் பற்களாக” இருக்க மாட்டோம் என்று மறுத்து தொழிற்சங்க அறிக்கையில் அறிவித்தனர்.
காஸாவில் மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்கள் நிகழ்த்தப்படுவதைக் கண்டு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திகிலடைந்துள்ளனர். கடந்த ஆறு வாரங்களில், இஸ்ரேலிய இராணுவத்தின் தரைவழித் தாக்குதலின் போது சுமார் 446,000 பாலஸ்தீனியர்கள் காஸா நகரத்திலிருந்து இன ரீதியாக சுத்திகரிக்கப்பட்டனர். இது ஒரு நாளைக்கு 10,000 க்கும் மேற்பட்டோர் சுத்திகரிக்கப்பட்டனர் என்று நோர்வே அகதிகள் கவுன்சில் (NRC) தெரிவித்துள்ளது.
காஸா நகரில், லட்சக்கணக்கான மக்கள் குண்டு வீச்சுக்கள், ட்ரோன்கள் மற்றும் தரைப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். ஒரு உதவியும் இல்லாமல், பாதுகாப்பான வழிகளும் இல்லாமல் நகர வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கை தண்ணீருக்கும் ரொட்டிக்குமான போராட்டமாக மாறிவிட்டது என்று NRC இயக்குனர் ஜோன் எகிலேண்ட் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
அக்டோபர் 2023 இல் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, காஸா பகுதி முழுவதும் 65,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையானது, இந்த எண்ணிக்கையைவிட மிக அதிகமாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய யூதர்களுக்கு எதிரான நாஜி படுகொலையின் மிருகத்தனத்துடன் ஒப்பிடக்கூடிய விதத்தில் சியோனிச ஆட்சியின் கொடூரமான குற்றம், ஆரம்பத்திலிருந்தே ஏகாதிபத்திய சக்திகளின் தீவிர ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் தலைமையின் கீழ், இஸ்ரேலுக்கு ஏராளமான ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. இந்த இராணுவ உபகரணங்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்மூடித்தனமாக படுகொலை செய்யவும், 2007 முதல் தடையின்றி விதிக்கப்பட்ட காஸாவின் குற்றவியல் கடற்படை முற்றுகையை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “சமாதானத் திட்டம்”, காஸாவில் காலனித்துவ பாணி நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் இனப்படுகொலையில் ஏகாதிபத்திய சக்திகளின் உடந்தையை தொடருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்ப், பாலஸ்தீனியர்களின் உரிமைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள ஹமாஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கால அவகாசம் உள்ளது அல்லது “அனைத்து நரகங்களும்” வெடிக்கும் என்று கூறினார்.
இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இனப்படுகொலையை அதிகரிக்க, போர்க் குற்றவாளியான நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டத் தயாராகி வருகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னணி ஆலோசகர்கள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மத்திய கிழக்கு முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பொருளாதார வழித்தடத்தின் (இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் என்று அழைக்கப்படும்) முக்கிய பகுதியாக காஸா செயல்படுவதுக்கு, அதன் குடிமக்களை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர். இனப்படுகொலையை நிறுத்த எதுவும் செய்யாத ஆட்சியாளர்களான அரபு ஆட்சிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஏற்பாடானது, சீனா, ரஷ்யா மற்றும் ஈரானை புறக்கணிப்பதன் மூலம், சவால் செய்யப்படாத பிராந்திய மேலாதிக்கத்தின் இலக்கை அடைய அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இந்த வர்த்தக பாதையின் பாதுகாப்பு உதவும்.
மத்திய கிழக்கு முழுவதும் தங்கள் நலன்களைப் பின்தொடர்வதற்காக காஸா இனப்படுகொலையை ஏகாதிபத்திய சக்திகள் அனுமதிக்க தயாராக இருப்பதானது, அனைத்து முக்கிய அதிகாரங்களிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள் உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவதை காட்டுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் தேசிய போட்டியாளர்களின் இழப்பில் பாரிய செல்வத்தை குவிப்பதை முன்னுரிமை அளிக்கும் நிதி தன்னலக்குழுவிற்கு மட்டுமே பொறுப்புக்கூற வேண்டிய ஆட்சிகளே இவைகளாகும்.
கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்ததைப் போலவே, உலகின் ஒரு புதிய மறுபங்கீடு தீவிரமடைகையில், நிதி தன்னலக் குழுக்களும் அவர்களின் அரசாங்க செய்தித் தொடர்பாளர்களும் மூலப்பொருட்கள், சந்தைகள், சுரண்டல்கள், உழைப்பு மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கை அணுகுவதற்கு எதையும் நாடுவார்கள். இதில், அணு ஆயுதங்களுடன் நடத்தப்படும் மூன்றாம் உலகப் போரில் மனிதகுலத்தின் உயிர் வாழ்க்கையை பணயம் வைப்பதும் அடங்கும்.
சுமுட் படகுகள் அணியை தடுப்பதற்கு எதிரான உலகளாவிய சீற்றம், குறிப்பாக இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பாத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், தொழிலாள வர்க்கம் முதலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்ப்பு அரசியலின் திவாலான மூலோபாயத்துடன் அதை பிணைத்து வைத்துள்ள அனைத்து சமூக ஜனநாயக, ஸ்டாலினிச மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும், அதன் அரசியல் சுயாதீனத்தை நிறுவ வேண்டும். ஏகாதிபத்திய சக்திகளுக்கு விடுக்கும் தார்மீக முறையீடுகளால் அதன் பாதையை ஒருபோதும் மாற்ற முடியாது. கடந்த ஜூன் மாதம் ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ், “இஸ்ரேல் நம் அனைவருக்கும் இழிவான வேலையைச் செய்கிறது” என்று ஒப்புக்கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது போன்ற ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் போதுமானவை அல்ல. தொழிலாளர்களுக்குத் தேவைப்படுவது அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கக்கூடிய புதிய அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்கள் ஆகும். இந்தக் குழுக்கள் ஏகாதிபத்தியப் போரையும் இனப்படுகொலை இயந்திரத்தையும் நிறுத்தக்கூடிய ஒரு பாரிய இயக்கத்தைத் திட்டமிட்டு வழிநடத்தும். அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் உள்ள பிற தொழிலாளர்களுடன் சேர்ந்து, தளவாடங்கள், போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள தொழிலாளர்களும் பின்வரும் கோரிக்கைகளுடன் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்:
- இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
- இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகம் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும்.
- இனப்படுகொலையில் இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் பிற நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்.
- போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும்.
- காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- காஸாவிற்கான உடனடி மற்றும் தடையின்றி அணுகுவதற்கு, கிடைக்கக்கூடிய அனைத்து தரைவழிப் பாதைகள் வழியாகவும் உதவிகள் வழங்கப்படுவதுடன், 18 ஆண்டுகளாக நீடித்து வரும் கடல் முற்றுகை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள், சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் வேலை அழிப்புக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஏற்கனவே உருவாகி வரும் பரந்த இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். சியோனிச ஆட்சிக்கு மரண ஆயுதங்களை வழங்கிவரும் அதே குற்றவியல் அரசாங்கங்கள், தன்னலக்குழு ஆட்சி, இராணுவ மறுசீரமைப்பு மற்றும் உலகப் போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கு, உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நிறுவி வருகின்றன.
இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்திற்கு, நிதி தன்னலக்குழுவை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், காஸாவில் அதன் மிகவும் பயங்கரமான வெளிப்பாட்டைக் காணும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு மூல காரணமாக இருந்துவரும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும் உறுதிபூண்டுள்ள ஒரு இயக்கம் அவசியம் தேவைப்படுகிறது. இதன் பொருள், சமூகத்தின் சோசலிச மாற்றத்தை செயல்படுத்த தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதாகும்.