முன்னோக்கு

ட்ரம்ப் இராணுவச் சட்டத்தைத் தயாரித்து, போர்ட்லேண்ட் மற்றும் சிக்காகோ மீது படையெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அக்டோபர் 5, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வேர்ஜீனியாவின் நோர்ஃபோக்கில் உள்ள கடற்படை தளத்தில் USS ஹாரி எஸ் ட்ரூமன் போர்க் கப்பலில் இருந்து உரையாற்றுகிறார். இதனை முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் கைதட்டி பாராட்டுகிறார் [AP Photo/Alex Brandon]

கடந்த வாரயிறுதியில், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி, போர்ட்லாந்து மற்றும் சிக்காகோவில் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

போர்ட்லேண்டில், ட்ரம்ப் ஒரு அசாதாரண மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான படையெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னர் லொஸ் ஏஞ்சல்ஸில் நிலைகொண்டிருந்த நூற்றுக்கணக்கான கலிபோர்னியா தேசிய காவல்படை துருப்புக்களை ஓரிகான் மாநிலத்தின் மிகப்பெரிய நகரத்திற்கு அனுப்பினார்.

கடந்த சனிக்கிழமை இரவு 100 க்கும் மேற்பட்ட கலிபோர்னியா படையினர்கள் போர்ட்லேண்டிற்கு வந்தடைந்தனர். மீதமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். இரு மாநிலங்களின் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களான ஓரிகானின் டினா கோடெக் மற்றும் கலிபோர்னியாவின் கவின் நியூசோம் ஆகியோர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சமூக ஊடகப் பதிவில் ஆளுநர் நியூசோம், போர்ட்லேண்டிற்கு கலிபோர்னியாவின் தேசிய காவல் படையினரை அனுப்பியிருப்பதானது, “அமெரிக்க ஜனாதிபதி சட்டத்தையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அமெரிக்கா இராணுவச் சட்டத்தின் விளிம்பில் உள்ளது” என்று அறிவித்தார்.

போர்ட்லேண்டில் உள்ள கூட்டாட்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் ஆளுநர் கோடெக், ஒரேகான் தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்புவதை எதிர்த்தார். ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் நியமித்த நீதிபதி கரின் இம்மர்குட், இந்த நடவடிக்கையைத் தடுக்கும் 31 பக்க உத்தரவை பிறப்பித்து, அரசியலமைப்பின் 10 வது திருத்தத்தின் கீழ் ஓரிகான் மாநிலத்திற்கு இறையாண்மை உரிமைகள் உள்ளன என்று தீர்ப்பளித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில் கடுமையான மொழியில், போர்ட்லேண்ட் இடதுசாரி பாசிச எதிர்ப்பு பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டதாகக் கூறி, ஓரிகான் மாநில தேசிய காவல்படையை மத்திய கூட்டாட்சியின் படைகளாக ஆக்குவதற்கான ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி “உண்மைகளுடன் இணைக்கப்படவில்லை” என்று நீதிபதி எழுதினார். “குறிப்பாக, சிவில் விவகாரங்களில் இராணுவ ஊடுருவல் வடிவத்தில், இந்த நாடு அரசாங்கத்தின் அத்துமீறலை எதிர்க்கும் நீண்டகால மற்றும் அடித்தள பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றுப் பாரம்பரியம் ஒரு எளிய முன்மொழிவாகக் குறைகிறது: இது அரசியலமைப்புச் சட்டத்தின் நாடு, இராணுவச் சட்டத்தை கொண்டுள்ள நாடல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, கலிபோர்னியாவிலிருந்தும் அல்லது பிற இடங்களிலிருந்தும் துருப்புக்கள் போர்ட்லேண்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு எதிராக நீதிபதி இம்மர்குட் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இது அவரது முந்தைய தீர்ப்புக்கு “நேரடி முரண்பாடு” என்று அழைத்தார்.

இதற்கு இணையான படையெடுப்பு சிக்காகோவில் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத், டெக்சாஸ் தேசிய காவல்படையின் 400 உறுப்பினர்களை இல்லினாய்ஸுக்கும், “ஒரிகான் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற இடங்களுக்கும்” அனுப்ப உத்தரவிட்டார். ட்ரம்ப் ஏற்கனவே இல்லினாய்ஸ் தேசிய காவல்படையின் 300 படையினர்களை, மத்திய கூட்டாட்சி படைகளாக ஆக்கி, நகரத்திற்கு வெளியே உள்ள பிராட்வியூவின் புறநகரில் உள்ள குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) தடுப்பு மையத்தைப் பாதுகாப்பதற்காக அனுப்பியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை முகவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் வாகனங்களுடன் பிராட்வியூ தடுப்பு மையத்துக்குள் நுழைவதைத் தடுக்க முயன்றதாக கூறி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒரு அமெரிக்க குடிமகளான ஒரு பெண்ணை காயப்படுத்தினர், பின்னர் அவர் FBI ஆல் கைது செய்யப்பட்டார். ட்ரம்ப், மில்லர், நோம் மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை முகவர்களின் ஒவ்வொரு அறிக்கைகளையும் போலவே, சிக்காகோ சம்பவம் குறித்த இந்தக் கணக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி பொய்களின் ஒரு தொகுப்பாக உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அந்தப் பெண் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறியது, இருப்பினும் அரசாங்கம் தாக்கல் செய்த குற்றவியல் குற்றச்சாட்டுகள் அத்தகைய கூற்றை முன்வைக்கவில்லை.

வெள்ளை மாளிகை உள்நாட்டுப் போரின் மொழியில் பேசுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிச வேலைத்திட்டத்தின் பிரதான சிற்பிகளில் ஒருவரான வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், நீதிபதி இம்மர்குட்டின் தீர்ப்பை “சட்டபூர்வமான கிளர்ச்சி” என்று அறிவித்ததன் மூலமாக, “ஜனாதிபதி ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியே ஒழிய, ஓரிகான் நீதிபதி அல்ல” என்று பதிலளித்தார். மேலும் மில்லர், “பெரிய பொய்யின்” நாஜிக்களின் கொள்கையைப் பின்பற்றி, “உள்ளூர் தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரில், போர்ட்லேண்ட் மற்றும் ஓரிகான் மாநில சட்ட அமலாக்கப் பிரிவுகள், இடைவிடாத பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ICE அதிகாரிகளுக்கு உதவ மறுத்துவிட்டன” என்று எழுதினார்.

மில்லர் வெளியிட்ட ஒரு தனிப் பதிவில், “இந்த நாட்டில் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சி நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோரால் பாதுகாக்கப்படும் இடதுசாரி பயங்கரவாதத்தின் பெரிய மற்றும் வளர்ந்து வரும் இயக்கம் உள்ளது. ஆதலால், சட்டபூர்வமான அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதே ஒரே தீர்வு” என்று அறிவித்தார். இது ட்ரம்ப் 1807 ஆம் ஆண்டு கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தி போர்ட்லேண்ட் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பிற நகரங்களுக்கு எதிராக மத்திய கூட்டாட்சியின் துருப்புக்களை அனுப்ப முடியும் என்பதற்கான வெளிப்படையான அச்சுறுத்தலாகும்.

செயலூக்கமுள்ள இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் செயலூக்கமான விவாதங்கள் நடந்து வருகின்றன. மில்லரின் உயர்மட்ட உதவியாளர் அந்தோனி சாலிஸ்பரி மற்றும் “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்செத்தின் ஆலோசகர் பேட்ரிக் வீவர் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலில், போர்ட்லேண்டிற்கு உயரடுக்கு 82வது வான்வழிப் பிரிவை அனுப்பும் திட்டங்கள் குறித்து மினசோட்டா ஸ்டார்-ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையின்படி, ஹெக்செத் “அங்கு துருப்புக்களுடன் பிரச்சனை ஏற்பட்டால், அதாவது படுகொலை ஒன்று இடம்பெற்றால், ஹெக்ஸெத் உச்ச தலைவரின் பாதுகாப்பை விரும்புவதாக” வீவர் கூறினார்.

இந்த தாக்குதலின் அளவுக்கும், ஜனநாயகக் கட்சியால் பதிலடியாக முன்மொழியப்படுவதற்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் தொடர்பு உள்ளது. ஆளுனர் நியூசம் உடனடி இராணுவச் சட்டம் பற்றிப் பேசுகிறார். அதே நேரத்தில், பிரிட்ஸ்கர் வெள்ளிக்கிழமை ஒரு உரையை நிகழ்த்தினார், அதில் அவர் ட்ரம்ப் மீது “தேசத்துரோக வார்த்தைகளை” சுமத்தி, அவை “தேசத்துரோக நடவடிக்கைகளுக்கு” வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினார். ஆனால் ஜனநாயகக் கட்சியினர் இதற்கு எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை.

இந்த சம்பவங்களால் முன்வைக்கப்படும் மையப் பிரச்சினை என்பது, இந்த குற்றவியல் நிர்வாகத்தை அகற்றுவதாக இருக்கிறது. ஆனால், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்காக, ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸை பதவி நீக்கம் செய்யக் கோருவதுக்கு ஒரு முக்கிய ஜனநாயகக் கட்சிக்காரர் கூட அழைப்பு விடுக்கவில்லை.

உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரின் அறிக்கைகளானது, நடந்து கொண்டிருக்கும் அரசாங்க பணிநிறுத்த முடக்கம் சம்பந்தப்பட்டவை அனைத்தும் வரவு-செலவுத் திட்டம் மீதான ஒரு வழமையான மோதல் போலவும், ஒரு இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதியின் முயற்சியின் பாகமாக அல்ல என்பது போலவும் கருதுகின்றன. செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் கடந்த வார இறுதியில், “இது. எளிமையானது. குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்தை மீண்டும் செயற்பட வைத்து, மக்களின் சுகாதாரப் பராமரிப்பை மிகவும் மலிவு விலையில் வழங்க முடியும்” என்று அறிவித்தார். பிரதிநிதிகளின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், சக் ஷூமரை எதிரொலித்து, “ஜனநாயகக் கட்சியினர் அன்றாட அமெரிக்கர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பைப் பாதுகாக்க தொடர்ந்து எழுந்து நிற்கிறார்கள்” என்று அறிவித்தார்.

செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரரான ஜோஷ் ஹாவ்லியை ஒபாமா பராமரிப்பு வரிச் சலுகைகளில் சில நீட்டிப்புகளுக்கு அழைப்பு விடுத்ததற்காகப் பாராட்டி, “குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி சொல்வது சரிதான். ... பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பைக் காப்பாற்றுவோம்” என்று ட்வீட் செய்தார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு நாடு மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று சாண்டர்ஸ் கூறினார். இத்தகைய அறிக்கையை வெளியிட்ட பின்னர் சாண்டர்ஸ் செய்ததற்குப் பதிலாக எதையும் முன்மொழிவது மெத்தனத்தை விட அதிகமாகும். அதுதான் ஒத்துழைப்பு.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பாரிய போராட்டத்தின் மூலமாக இந்த அசாதாரண நெருக்கடியில் தலையிடுவது இன்றியமையாததாகும்.

அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான நகர்வுகள் மிகப்பெரியளவில் அதிகரித்து வருவதுக்கு எதிர்ப்பு உள்ளது. அக்டோபர் 18 அன்று, இங்கு “மன்னர்கள் இல்லை” என்ற பதாகையின் கீழ் ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்களில் 2,100 க்கும் மேற்பட்ட தனித்தனி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜூன் 14 அன்று நடந்த முந்தைய “மன்னர்கள் இல்லை” போராட்டங்களில் 5 முதல் 11 மில்லியன் மக்கள் ஈடுபட்டிருந்தனர் — சில அளவுகோல்களின்படி, இவை அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய அரசியல் போராட்டங்களாகும்.

இந்தப் போராட்டங்கள், சர்வாதிகாரம் மற்றும் தன்னலக்குழுவின் ஆட்சிக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஆழமான விரோதப் போக்கை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இங்கு இல்லாதது, மிகவும் முக்கியமான விஷயம், ஒரு நனவான அரசியல் முன்னோக்காகும்.

சோசலிச சமத்துவக் கட்சி கடந்த செப்டம்பர் 19 அன்று வெளியிட்ட அறிக்கையில், “கட்டவிழ்ந்து வருவது இராணுவம், பொலிஸ், துணைப்படை படைகள் மற்றும் பாசிசக் குண்டர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு உந்துதல் என்பதைக் காட்டிலும் குறைவானது என்று கருதுபவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் அனைத்து நம்பிக்கைகளையும் ஒதுக்கி வைக்க வேண்டியது அவசியமாகும்” என்று எழுதியது.

ட்ரம்ப் நிர்வாகம் ஒரு ஆத்திரமூட்டலையும் ஒரு பரந்த அளவிலான இராணுவ விரிவாக்கத்திற்கான ஒரு சாக்குப்போக்கையும் நாடுகிறது. போர்ட்லேண்ட் மற்றும் சிக்காகோவில் இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள், ட்ரம்ப் நிர்வாகத்தின் பிரகடனமான “உள்ளே இருக்கும் எதிரிக்கு எதிரான போரின்” ஒரு பகுதியாகும். கடந்த செப்டம்பர் 30 அன்று குவாண்டிகோவில் நடந்த ட்ரம்பின் இராணுவ ஜெனரல்களின் கூட்டத்திற்குப் பின்னர் இவை வந்துள்ளன. அங்கு அவர் அமெரிக்காவின் நகரங்கள் உள்நாட்டுப் போருக்கான “பயிற்சி மைதானங்களாக” சேவையாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

ட்ரம்ப் அமெரிக்க முதலாளித்துவ தன்னலக் குழுவுக்காக பேசுகிறார் மற்றும் அதனைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். அமெரிக்க ஆளும் வர்க்கம், சர்வாதிகாரத்தை மட்டுமே தனது செல்வத்தையும் அதன் அமைப்புமுறையையும் பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறையாகக் கருதும் ஒரு அரசியல் மாஃபியாவிடம் அதிகாரத்தை ஒப்படைத்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் சமூகப் பாதுகாப்பு ஊனமுற்றோர் நலன்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் மிகப்பெரிய தாக்குதலைத் தயாரித்து வருவதாகவும், தகுதிக்கான அளவுகோலாக வயதை நீக்குவதாகவும், சுமார் 750,000 முதியோர் மற்றும் ஊனமுற்ற அமெரிக்கர்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்த அச்சுறுத்துவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவ உதவி மற்றும் உணவு உதவிக்கான வெட்டுக்களுடன் இணைந்து, இந்த நடவடிக்கைகள் மில்லியன் கணக்கானவர்களை வேண்டுமென்றே வறுமையில் ஆழ்த்துகின்றன. 

உலகிற்கு எதிரான ட்ரம்பின் பொருளாதாரப் போர், ரஷ்யா மற்றும் சீனாவுடன் பகிரங்க இராணுவ மோதலுடன் பின்தொடருகிறது. உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பினது தாக்குதல்களை ஆதரிக்கும் அதே வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை நலன்களையே ஜனநாயகக் கட்சியினரும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு வேலையிடத்திலும், பள்ளியிலும் மற்றும் அண்டை பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒருங்கிணைந்த, வெகுஜன எதிர்ப்புக்கான அடித்தளமாக அபிவிருத்தி செய்வதுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்தக் சாமானிய தொழிலாளர் குழுக்களானது, ட்ரம்பின் சர்வாதிகாரம், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் உடந்தை மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு எதிரான ஒற்றை இயக்கமாக தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் குறிப்பாக, தொழில்துறை, சேவை, பொதுத்துறை, சுகாதாரம், தளவாடங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து ஒன்றிணைக்க வேண்டும்.

இந்த சாமானிய தொழிலாளர் குழுக்களானது, அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை, வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பது, பணிநீக்கங்கள், வரவுசெலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்ப்பது ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம் அதன் மிக சக்திவாய்ந்த ஆயுதமான அதன் சர்வதேச ஐக்கியத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.

ஒரு உலகளாவிய இயக்கத்தின் பாகமாக எல்லைகள் மற்றும் தொழில்துறைகளைக் கடந்து தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்ற சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி தலைமை தாங்குகிறது. இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவிலான படுகொலை அதன் இரண்டாம் ஆண்டை நெருங்கி வருகின்ற நிலையில், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிராக ஐரோப்பாவில் நடந்து வரும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் பரவியுள்ள இளைஞர்களின் போராட்ட அலை உட்பட உலகெங்கிலும் அதிகரித்து வரும் எதிர்ப்பின் பல வெளிப்பாடுகள் உள்ளன.

சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ட்ரம்பின் உந்துதலை எதிர்க்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் தனியார் இலாபத்திற்காக அல்ல, மனித தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்காக சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை உணரும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading