மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நவீன சகாப்தத்தின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றான காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒட்டுமொத்த உலகின் கண்களுக்கு முன்னால், ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியாலும் ஆயுதபாணியாக்கப்பட்டு, நிதியுதவிகள் அளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் இஸ்ரேலிய அரசாங்கம், பாரிய படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு மற்றும் வேண்டுமென்றே பட்டினி போடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. 20,000 குழந்தைகள் உட்பட குறைந்தது 67,000 பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒட்டுமொத்த மக்களும் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட இந்த இனப்படுகொலையைத் தொடங்குவதற்காக, இஸ்ரேல் அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல்களை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்திக் கொண்டது. சில ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகள், சிறிய ஆயுதங்களுடன், கவச வாகனங்கள் அல்லது விமானங்கள் இல்லாமல், இஸ்ரேலிய எல்லையை எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் கடந்தனர். உலகின் மிக அதிநவீன உளவுத்துறை வலைப் பின்னல்களை கொண்டிருக்கும் இஸ்ரேல், சில ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளால் முற்றிலும் ஆச்சரியத்திற்கு உள்ளானது என்று கூறுவது ஒரு வெறுக்கத்தக்க கட்டுக் கதையாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகள் (வெளிநாட்டுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளை இஸ்ரேல் படுகொலை செய்ததில்) இஸ்ரேலிய உளவுத்துறையானது, இப் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், இயக்கத்திலும் ஊடுருவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. உண்மையில், 2023 அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகான சில மாதங்களுக்குள், இஸ்ரேல் ஹமாஸ் மீதான முழு அளவிலான போர் திட்டத்தையும் வைத்திருந்ததாகவும், ஆனால் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள அதன் துருப்புக்களை வேண்டுமென்றே திரும்பப் பெறுவதற்கு திட்டமிட்டதாகவும் பத்திரிகை அறிக்கைகள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.
75 ஆண்டுகால கொடூரமான ஒடுக்குமுறையின் திட்டமிட்ட விளைவாக, பாலஸ்தீன பிரச்சினைக்கு “இறுதித் தீர்வை” நடைமுறைப்படுத்துவதே, இனப்படுகொலைக்கு வழிவகுத்தது. இது முழு உலகிற்கும் முன்பாக சியோனிசத்தின் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய அரசு தன்னை ஏகாதிபத்தியத்தின் ஒரு கொலைகார கருவியாகக் நிரூபித்துள்ளது.
இஸ்ரேலால் நடத்தப்பட்டு வந்தாலும், இனப்படுகொலை உலக ஏகாதிபத்தியத்தின் கூட்டு நடவடிக்கையாக இருந்து வருகிறது. வாஷிங்டனில் இருந்து இலண்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் வரை ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசாங்கமும், ஒட்டுமொத்த செய்தி ஊடகத்துடன் சேர்ந்து, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலை நியாயப்படுத்தி வருகின்றன. இந்த இனப்படுகொலையில் கொடூரமான இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதில் சட்டவிரோதமாக காஸாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் எந்தவொரு பாரிய படுகொலை நடவடிக்கையும் நியாயப்படுத்தப்பட்டது. அதேவேளையில், பாலஸ்தீனியர்களின் எதிர்ப்புக்கான எந்தவொரு முயற்சியும் “பயங்கரவாதம்” என்று அரக்கத்தனமாக முத்திரை குத்தப்பட்டது.
இஸ்ரேலிய அரசுக்கு எதிரான எதிர்ப்பை “யூத எதிர்ப்புவாதம்” என்று அவதூறு செய்யப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்த வார்த்தையை தலைகீழான சொற்பதம் என்று குறிப்பிட்டது. அதில் “ஒரு வார்த்தை அதன் உண்மையான மற்றும் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தத்திற்கு நேர் எதிரான முறையில் மற்றும் சூழலில் பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டது. இது ஜனநாயக உரிமைகள் மீதான மிருகத்தனமான மற்றும் அதிகரித்து வரும் தாக்குதலுக்கான கட்டமைப்பாக மாறி, இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு குற்றமாக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை யூதர்கள் மீதான வெறுப்புடன் சமன்படுத்தும் முயற்சி, எப்படியிருந்தாலும், உலகெங்கிலும் உள்ள யூத மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஆற்றிய முக்கிய பங்கால் மறுக்கப்படுகிறது.
இஸ்ரேலின் முக்கிய ஆயுத விநியோகஸ்தராக இருந்து வரும் அமெரிக்கா, படுகொலைக்கு எரிபொருளாக வரம்பற்ற அளவு கொடிய இராணுவ உபகரணங்களை அனுப்புகிறது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற அனைத்து நாடுகளும் இரத்தக்களரியில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றன. மேலும், அவர்கள் அனைவரும் இஸ்ரேலிய அரசாங்கப் பத்திரங்களை பில்லியன் கணக்கான டாலர்களுக்கு வாங்கி, ஆயுதம் ஏந்திய கொலைகார இராணுவ எந்திரத்திற்கு நிதியளிக்க உதவியுள்ளனர்.
இந்தக் குற்றங்களுக்கு முக்கிய வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் உதவி வருகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கான கைது ஆணை நிலுவையில் இருந்தபோதிலும், கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் இருந்து தனது நடவடிக்கைகளை தொடருவதுக்கு பாதுகாப்புடன் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ரஷ்யா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்ட ஏகாதிபத்திய போரின் உலகளாவிய வெடிப்பின் பாகமாக, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான அவர்களின் உந்துதலின் ஒரு மையக் கூறுபாடாக ஏகாதிபத்தியவாதிகள் இனப்படுகொலையை ஆதரிக்கின்றனர். இனப்படுகொலைக்கான அவர்களின் ஆதரவு, சந்தைகள், மூலப்பொருட்கள், உழைப்பு மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கிற்கான அணுகலைப் பெறுவதற்கு எந்தவொரு மற்றும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
இந்த ஏகாதிபத்திய சூறையாடல், ட்ரம்பின் “சமாதான” திட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இது அமெரிக்காவின் வருங்கால ஃபியூரர் (நாஜித் தலைவர் - Führer) மற்றும் இதுவரை குற்றம் சாட்டப்படாத போர்க் குற்றவாளியான டோனி பிளேயரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒரு நவ-காலனித்துவ பாதுகாவலரை உருவாக்குவதன் மூலமாக, பாலஸ்தீனியர்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்க முன்மொழிகிறது. இந்த ஏற்பாட்டை ஏற்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை ஹமாஸ் பின்பற்றினால், மத்திய கிழக்கு வழியாக அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக வழித்தடத்திற்கு வழிவகுக்கும் வகையில் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் மறுத்தால், மீதமுள்ள பாலஸ்தீனியர்களை பெருமளவில் படுகொலை செய்வதுக்கு இஸ்ரேலுக்கு பச்சைக்கொடியை காட்டுவார்கள்.
இந்த நிகழ்ச்சிப்போக்கில், குறிப்பாக மத்திய கிழக்கின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் ஒரு மோசமான பாத்திரம் வகித்து வருகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாறும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க எந்த வடிவிலான தேசியவாதமும் இலாயக்கற்றிருப்பதை காட்டியுள்ளது. இந்த அரசாங்கங்களின் இழிவான பாத்திரம், பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமையை முற்றிலுமாக நிராகரிக்கும் ட்ரம்ப் ஊக்குவித்த “சமாதான” திட்டத்தைத் தழுவுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையானது, உலகெங்கிலும் பாரிய எதிர்ப்பையும் வெறுப்பையும் தூண்டிவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முதல் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா வரை ஒவ்வொரு கண்டத்திலும் கோடிக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். மத்திய கிழக்கை பாலஸ்தீனியர்களின் எலும்புகள் மீது ஒரு அமெரிக்க நிலமாக மாற்றுவதற்கான ட்ரம்பின் திட்டமும், சுமுத் மனிதாபிமான உதவிப் படகுகளை இஸ்ரேல் வன்முறையாக கைப்பற்றியதும், ஒரு புதிய மற்றும் பரந்த எதிர்ப்பு அலையை தூண்டியுள்ளது.
சமீபத்திய நாட்களில், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கொலம்பியா மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தெருக்களில் மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். இத்தாலியில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுவதுக்கு மறுத்த துறைமுகத் தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட நடவடிக்கை, 2 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களின் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தையும் ரோமில் ஒரு மில்லியன் மக்களின் ஆர்ப்பாட்டத்தையும் தூண்டியது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் மெலோனி அரசாங்கத்திற்கு விடுக்கும் அழைப்புகளாக இன்னும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த நடவடிக்கைகள் இனப்படுகொலையை நிறுத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மகத்தான ஆற்றலை சுட்டிக்காட்டுகின்றன.
ஒருங்கிணைந்த வேலைநிறுத்த ஒரு நாள் நடவடிக்கை, ட்ரம்பின் நெருங்கிய ஐரோப்பிய கூட்டாளியை உலுக்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, உலகளாவிய தொழில்துறை மற்றும் அரசியல் இயக்கம் ஏகாதிபத்திய போர் இயந்திரத்தை முற்றிலுமாக நிறுத்த முடியும். தொழிலாளர்களின் ஒரு பாரிய, சர்வதேச இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வரவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கான உந்துதலை - காஸாவிலிருந்து ஈரான், ரஷ்யா மற்றும் இறுதியில் சீனாவை இலக்காகக் கொண்ட ஒரு பரந்த போர் வரை - விரிவுபடுத்துவதைத் தடுக்கவும் முடியாது.
இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பின் வளர்ச்சியை, கடந்த இரண்டு ஆண்டுகளின் அரசியல் படிப்பினைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் வழிநடத்த வேண்டும். ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கங்களுக்கு விடுக்கப்படும் அனைத்து முறையீடுகளும், ஒட்டுமொத்தமாக திவாலாகிவிடும் என்பதே மையப் படிப்பினையாகும். இவை இனப்படுகொலையை நிறுத்துவதற்கான கருவிகள் அல்ல, மாறாக அதன் குற்றவாளிகள் மற்றும் அதனை செயல்படுத்துபவர்கள் ஆவர்.
இரண்டு அரசுத் தீர்வு என்ற முன்னோக்கு தோல்வியடைந்துள்ளது. மத்திய கிழக்கின் அனைத்து மக்களையும் ஐக்கியப்படுத்துவது மட்டுமே ஒரு சாத்தியமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இஸ்ரேலிய அரசு தன்னை ஒரு வரலாற்று அரக்கனாக, மனச்சோர்வு மற்றும் சீரழிவின் ஆதாரமாக வெளிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் சியோனிசத்தின் நச்சு சித்தாந்தத்தையும் அரசியலையும் நிராகரிக்க வேண்டும், “யூத அரசு” என்ற பிற்போக்குத்தனமான மோசமான கற்பனையை நிராகரிக்க வேண்டும். மேலும், மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச கூட்டமைப்புக்கான போராட்டத்தில் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக பாடுபட வேண்டும்.
இனப்படுகொலை தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பின்னர், அக்டோபர் 24, 2023 அன்று வழங்கிய ஒரு விரிவுரையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு விளக்கினார்:
இறுதிப் பகுப்பாய்வில், பாலஸ்தீன மக்களின் விடுதலை என்பது, சியோனிச ஆட்சிக்கும், துரோக அரபு மற்றும் ஈரானிய முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் எதிராக, அரபு மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மத்திய கிழக்கிலும், யதார்த்தத்தில் முழு உலகிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தால் பதிலீடு செய்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.
இது பிரமாண்டமான பணியாக இருக்கிறது. ஆனால், உலக வரலாற்றின் தற்போதைய கட்டம், உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடி மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியல் ஆகியவற்றின் சரியான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரே முன்னோக்கு இது மட்டுமேயாகும். காஸாவிலும் உக்ரேனிலும் இடம்பெற்றுவரும் போர்கள் என்பது, ஒரு வரலாற்று சகாப்தத்தில் தேசிய வேலைத்திட்டங்களின் பேரழிவுகரமான பாத்திரம் மற்றும் விளைவுகளின் துன்பவியலான எடுத்துக்காட்டுகளாகும். அதன் இன்றியமையாத மற்றும் வரையறுக்கும் பண்புகளாக இருப்பது, உலகப் பொருளாதாரத்தின் முதன்மைத்தன்மையும், முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட தன்மையுமாகும். எனவே, தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை ஒரு சர்வதேச மூலோபாயத்தின் மீது அடித்தளமிட வேண்டியது அவசியமாகும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகளாவிய தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சிக்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் மெத்தனத்தையும் செயலற்ற தன்மையையும் விதைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதல், அமெரிக்க தொழிலாள வர்க்கத்துடன் நேருக்கு நேர் மோதலுக்குள் கொண்டு வருகிறது. பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன் மீள் இராணுவமயமாக்கலுக்கு பணம் செலுத்த சிக்கன நடவடிக்கைகளுக்கான அவரது கோரிக்கைகளுக்கு பாரிய எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், ஒரு நிலையான அரசாங்கத்தை அவரால் அமைக்க முடியவில்லை. இங்கிலாந்தில் பிரதமர் ஸ்டார்மருக்கும் ஜேர்மனியில் சான்சிலர் மெர்ஸுக்கும் எந்த விதமான மக்கள் ஆதரவும் கிடையாது.
சர்வதேச அளவில், கென்யா, நேபாளம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மொரோக்கோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் - “தலைமுறை Z” தலைமையில் - பிரபலமான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
புரட்சிகர வழிகளில் இந்த எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்கள் சமூக ஜனநாயக, ஸ்டாலினிச மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டிலிருந்தும், எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் சிதறடிக்கவும் பாடுபடும் அவர்களின் போலி-இடது பாதுகாவலர்களிடமிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச தாக்குதலை ஒருங்கிணைக்கவும் வழிநடத்தவும் வர்க்கப் போராட்டத்தின் புதிய, ஜனநாயக அமைப்புகளைக் கட்டியெழுப்புவது என்பது இதற்கு அவசியமாகும்.
சியோனிசத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் அனைத்து எதிர்ப்பாளர்களும், மற்றும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்:
- இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் அனைத்து ஆயுதங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்;
- இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளையும் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
- இனப்படுகொலையை மேற்கொள்வதுக்கு இஸ்ரேலுக்கு உதவிய அனைத்து அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் பிற பெருநிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடுக்க வேண்டும்.
- போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேலிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
- இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரசு அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் அனைத்து ஆர்ப்பாட்ட எதிர்ப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
- கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக, தடையின்றி வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் ஏற்கனவே அபிவிருத்தி அடைந்து வரும் பரந்த இயக்கத்தின் முன்னிலையில் இருக்க வேண்டும். இஸ்ரேலுக்கு மரண ஆயுதங்களை வழங்கிவரும் அதே அரசாங்கங்கள், தன்னலக்குழு ஆட்சி, பாரிய வறுமை மற்றும் உலகப் போருக்கான உந்துதலுக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நிறுவி வருகின்றன.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை, முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று ரீதியான முட்டுச்சந்தை அம்பலப்படுத்தியுள்ளது. இனப்படுகொலையை “இயல்பாக்குவது” என்பது எந்தவொரு முற்போக்கான பாத்திரத்தையும் முற்றாக இழந்துவிட்ட முதலாளித்துவ அமைப்பு முறையின் விளைபொருளாகும். இது பாசிசத்தை இயல்பாக்குதல், இராணுவ-போலிஸ் சர்வாதிகாரத்தை இயல்பாக்குதல், உலகப் போர் மற்றும் தன்னலக்குழு ஆட்சியை இயல்பாக்குதல் ஆகியவற்றுடன் இணைந்து செல்கிறது.
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவமே தொழிலாள வர்க்கத்தை வழிநடத்த வேண்டிய ஒரேயொரு முன்னோக்காகும். ஒடுக்கப்பட்டவர்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக உலக அளவில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக, அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.
இந்தப் போராட்டத்தை வழிநடத்த ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத பணியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும், தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவுவதற்கும், தனியார் இலாபத்திற்காக அல்ல, மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உலகப் பொருளாதாரத்தை சோசலிச ரீதியில் மறுஒழுங்கு செய்வதற்கும், அனைத்து எல்லைகளையும் தாண்டி தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்துவதிற்கு போராடுகின்றன.