முன்னோக்கு

சர்வாதிகார நடவடிக்கை: ட்ரம்ப் கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறார். இது, அவரது தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்கா முழுவதும் இராணுவத்தை நிலை நிறுத்துவதுக்கு அவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் ஒரு நடவடிக்கையாகும். இந்தத் திட்டம் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தற்போதைய சதித்திட்டத்தில் ஒரு முக்கியமான அதிகரிப்பைக் குறிக்கிறது.

பெயரிடப்படாத மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கூற்றுப்படி, “ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவதை தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்” என்ற தலைப்பின் கீழ் NBC நியூஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டது. “சமீபத்தில் நிர்வாகத்திற்குள் இடம்பெற்ற விவாதத்தில், இந்தச் சட்டம் எவ்வாறு, எப்போது செயல்படுத்தப்படலாம் என்பதை ஆராய்வதற்கு மாறியுள்ளது” என்று NBC நியூஸ் குறிப்பிட்டது. இரண்டு வெள்ளை மாளிகை வட்டாரங்களின்படி, நிர்வாக அதிகாரிகள் “சட்டப் பாதுகாப்புகளையும், இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான பல்வேறு விருப்பங்களையும் வரைவதற்கு” சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் வெறுமனே சட்டத்தைப் பயன்படுத்துவதை “ஆராய்கிறது” என்ற கூற்று ஒரு வெளிப்படையான பொய்யாகும். உண்மையில், இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை “உடனடியானதல்ல” என்று ஒரு வெள்ளை மாளிகை அதிகாரியை மேற்கோள் காட்டி NBC நியூஸ் மேற்கோள் காட்டியது. உண்மையில், ட்ரம்ப் நிர்வாகம் திட்டவட்டமான நடவடிக்கைகள் தொடர்பாக இச்சட்டத்தை செயல்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. இதில் பாரிய கைதுகள், எதிர்த் தரப்புக்களை வன்முறையாக அடக்குதல் மற்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள நகரங்களில் மத்திய கூட்டாட்சி துருப்புக்களை நிலைநிறுத்துதல் ஆகியவை அடங்கும்.

கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு வெள்ளை மாளிகை அறிக்கை மேலதிக ஆதாரங்களை வழங்கியுள்ளது. இந்த அறிக்கை, “ஜனநாயகக் கட்சியின் தவறான நிர்வாகத்தால் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க நகரங்களில் சட்டம் ஒழுங்கை மீட்க ட்ரம்ப் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது” என்று குறிப்பிடுகிறது. மேலும் “வன்முறை கலவரக்காரர்கள் மத்திய கூட்டாட்சி சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தாக்கும் போது, ஜனாதிபதி ட்ரம்ப் காத்திருக்க மாட்டார். அமெரிக்க நகரங்களை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் அதே நேரத்தில், மத்திய கூட்டாட்சி சொத்துக்கள் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாக்க நிர்வாகம் செயல்படும்” என்று அறிக்கை கூறுகிறது.

நிகழ்வுகளின் காலவரிசை, ட்ரம்ப் ஒரு அட்டவணைக்கு வெளியே செயல்படுகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. கடந்த திங்களன்று, “தேவைப்பட்டால்” இந்த சட்டத்தை செயல்படுத்துவேன் என்று கூறிய ட்ரம்ப், “நீதிமன்றங்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினாலும், அல்லது ஆளுநர்கள் அல்லது மேயர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினாலும், நிச்சயமாக நான் அதைச் செய்வேன்” என்று தெரிவித்தார். வெள்ளை மாளிகை உதவியாளர் ஸ்டீபன் மில்லர், ஒரேகான் மாநிலத்துக்கு தேசிய காவல் படையினர்களை நிலைநிறுத்துவதற்கு எதிரான மத்திய கூட்டாட்சி நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு “கிளர்ச்சி” என்று அழைத்தார்.

கடந்த புதன் கிழமையன்று, ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பின் பொதுவான வார்த்தையான பாசிச எதிர்ப்பாளர்களை நசுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தீவிர வலதுசாரி மற்றும் பாசிச ஊடக பிரமுகர்களுடன் நேற்று வெள்ளை மாளிகையில் ஒரு அசாதாரண “வட்டமேசை” கூட்டத்தை ட்ரம்ப் நடத்தினார். இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் மற்றும் சிக்காகோ மேயர் பிராண்டன் ஜோன்சனை கைது செய்யப் போவதாக ட்ரம்ப் தனது அச்சுறுத்தலை மீண்டும் வலியுறுத்தினார்.

ஊடகங்களில் அரிதாகவே செய்தியாக வந்திருந்த ஒரு பாசிசக் காட்சியில், அதிதீவிர வலதுசாரி பிரச்சாரகர் ஜாக் போசோபிக், “பாசிச எதிர்ப்பாளர்களை” எதிர்கொண்டதற்காகவும், அதன் “பல்வேறு வடிவங்களை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு” முன்பு ஜேர்மனியில் இருந்த வைமர் குடியரசு காலம் வரை (வெய்மர் குடியரசு என்பது 1918 முதல், நாஜி ஜேர்மனியின் தொடக்கமான 1933 வரையிலான ஜேர்மன் அரசாங்கமாகும்) கண்டறிந்ததற்காகவும் ட்ரம்பைப் பாராட்டியபோது, இது புதிய ஆழங்களை எட்டியது. வைமர் குடியரசைக் குறிப்பிட்டு, போசோபிக், ஹிட்லருக்கு எதிரான பாசிச எதிர்ப்புக்கும், ட்ரம்ப் சர்வாதிகாரத்திற்கு எதிரான தற்போதைய எதிர்ப்புக்கும் இடையே ஒரு நேரடி வரலாற்று இணையை வரைந்து, பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பு எப்போதும் இருந்து வந்தது என்று புலம்பினார்.

வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட வலதுசாரி ஊடக பிரமுகர்கள், ஜனநாயகக் கட்சியின் ஒரு கன்னையான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டு கட்சியை (DSA) ஒரு பரந்த “பாசிச எதிர்ப்பு வலையமைப்பின் பாகமாக” முத்திரை குத்தும் அளவுக்கு சென்றனர். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோம் “பாசிச எதிர்ப்பாளர்களை” “ISIS, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ்” உடன் சமப்படுத்தினார். அதே நேரத்தில், அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி “முழு அமைப்பையும் மேலிருந்து கீழாக அழிப்பதாக” சபதம் செய்தார். அதாவது, “பாசிச எதிர்ப்பாளர்களின்” ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட எவரும் கைது செய்யப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும்.

இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கிளர்ச்சிச் சட்டம் பயன்படுத்தப்படும். 1807 சட்டம், அமெரிக்காவிற்குள் இராணுவத்தை நிறுத்திக் கொண்டு, “கிளர்ச்சி” மற்றும் “கலகங்களை” அடக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. 1878 ஆம் ஆண்டு போஸ் கொமிடேட்டஸ் சட்டத்தின் கீழ், உள்நாட்டு சட்ட அமலாக்கத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவது பொதுவாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதில் கிளர்ச்சிச் சட்டம் முக்கிய விதிவிலக்காக உள்ளது.

அமெரிக்க வரலாற்றில், 1861 ஆம் ஆண்டில் சம்டர் கோட்டை மீதான கூட்டமைப்பு படையினரின் தாக்குதலுக்குப் பிறகு ஆபிரகாம் லிங்கன் இதைக் கோரியதைத் தவிர, கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது பிற்போக்குத்தனமான ஒடுக்குமுறையின் நிகழ்வுகளுடன் தொடர்புடையது. 1831 ஆம் ஆண்டில், நேட் டர்னரின் அடிமை கிளர்ச்சியை நசுக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் இதைப் பயன்படுத்தினார்.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு, கிளர்ச்சிச் சட்டம் தொழிலாளர் இயக்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதமாக மாறியது: 1877 இன் பெரிய இரயில் பாதை வேலைநிறுத்தம், 1894 இன் புல்மேன் வேலைநிறுத்தம், கொலராடோ மற்றும் மேற்கு வேர்ஜீனியாவில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் வாஷிங்டனில் வேலையில்லாத படையினர்களின் 1932 போனஸ் இராணுவ அணிவகுப்புக்கு எதிராக கிளர்ச்சிச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

இன்று, மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ளவும், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு சாக்குப்போக்காகவும் நாடு தழுவிய அளவில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிளர்ச்சிச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆட்கொணர்வு மனுவை நிறுத்தி வைப்பதைத் தாண்டி, அமெரிக்க சட்டம் முழுவதிலும் கிளர்ச்சிச் சட்டத்தை விட வேறு எந்த “சட்டபூர்வமான” அதிகாரமும் பரந்ததாக இல்லை. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது என்பது, நகர்ப்புறங்கள் அல்லது முழு மாநிலங்களின் சட்டப்பூர்வ மற்றும் நடைமுறை கட்டுப்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என்பதாகும்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால், நகர்ப்புறப் பகுதிகள் அல்லது முழு மாநிலங்களின் மீதும் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டை நடைமுறையில் வைத்துக் கொள்ளலாம். இது, உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தை அடிப்படையில் மாற்றும் நடவடிக்கையாகும். போர்ட்லேண்ட் மற்றும் சிக்காகோவில் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம், ட்ரம்ப் தலைமைத் தளபதியாக இருந்து இந்த மாநிலங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவார்.

ஒரு நடைமுறை விடயமாக, போர்ட்லேண்ட் அல்லது சிக்காகோவில் இந்த் சட்டம் செயல்படுத்தப்பட்டால், இராணுவம் கைதுகளை நடத்தும், சோதனைச் சாவடிகளை அமைக்கும் மற்றும் அரசின் எதிரிகளாகக் கருதப்படுபவர்களைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்யும். இந்த கிளர்ச்சிச் சட்டம் மத்திய கூட்டாட்சி நீதித்துறை அமைப்பை மீறுவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கவில்லை என்றாலும், ட்ரம்ப் சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க மாட்டார்.

ட்ரம்பின் தயாரிப்புகளுக்கு பெருநிறுவன ஊடகங்களின் பதில் மௌனம் மற்றும் உடந்தையாக உள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி, வெள்ளை மாளிகை கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்த சட்டபூர்வ நியாயங்களை வரைகிறது என்று NBC செய்தி அறிக்கை வெளியாகி 24 மணி நேரத்திற்குப் பின்னர், நியூயோர்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் இந்த அச்சுறுத்தல் பற்றி எந்த குறிப்பும் இல்லை. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் CNN ஆகியவை மத்திய கூட்டாட்சி கட்டளையின் கீழ் 500 தேசிய காவல் படையினர்கள் சிக்காகோவிற்கு வந்திறங்கியபோதும், அந்த செய்தியை மறைத்தன அல்லது புறக்கணித்தன.

ஜனநாயகக் கட்சி அதிகாரிகளிடையே, இதற்கான பதில் குறைவான மழுப்பலாகவோ அல்லது கோழைத்தனமாகவோ உள்ளது. மத்திய கூட்டாட்சி இராணுவ நிலைநிறுத்தல்களின் மையத்தில் உள்ள இல்லினாய்ஸ் மாநில ஆளுநர் ஜே.பி.பிரிட்ஸ்கர், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் 2026 இடைக்கால தேர்தல்கள் மற்றும் 2028 ஜனாதிபதித் தேர்தல்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று எச்சரித்தார். மேலும் நிர்வாகத்தின் தந்திரோபாயங்களை நாஜிக்களின் தந்திரோபாயங்களுடன் ஒப்பிட்டார். ஆயினும் இந்த அறிக்கைகள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன.

செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் மற்றும் பிரதிநிதிகள் சபை சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை, ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான நகர்வுகள் குறித்து எதுவும் கூறவில்லை. ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி அதிகாரிகளையே அச்சுறுத்தி இலக்கு வைக்கும் போது ஒரு முழுமையான மௌனத்தை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

செனட்டர் பெர்னி சாண்டர்ஸும் முடிந்தவரை இதுபற்றி குறைவாகவே கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை, ட்ரம்ப் “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைக் கைது செய்வதாக அச்சுறுத்துகிறார், இந்த நாட்டை சர்வாதிகாரத்திற்கு நகர்த்துகிறார்” என்று ஒரு மேலோட்டமான அறிக்கையை வெளியிட்ட சாண்டர்ஸ், “எங்கள் வாழ்க்கை முறையை அழிக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சாண்டர்ஸ் குறிப்பிட்டார். ஆனால், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதை தடுக்க சாண்டர்ஸ் அல்லது ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியினரும் உண்மையில் என்ன செய்தார்கள்? இதற்கு அவர் எதையும் முன்வைக்கவில்லை.

இந்த அபிவிருத்திகளை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவது என்பது ஒரு அரசியல் நடவடிக்கையாகும். அரசியல் ஸ்தாபனத்திலும் ஜனநாயகக் கட்சியிலும் ட்ரம்பின் போக்கு பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஏனெனில், முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாக அவர்கள் அதை முற்றிலும் ஆதரிக்கிறார்கள், அல்லது எந்தவொரு தீவிர எதிர்ப்பிற்கும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டல் தேவைப்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதையிட்டுத்தான் சர்வாதிகாரத்தை விடவும் அவர்கள் இதற்கு அச்சப்படுகிறார்கள்.

தொழிற்சங்க எந்திரத்தைப் பொறுத்தவரை, நூறாயிரக்கணக்கான மத்திய கூட்டாட்சி தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் வேலைகள் மற்றும் சமூகத் திட்டங்களின் மீது பாரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அவர்கள் எதனையும் முன்மொழியவில்லை. “உங்கள் வேலையைச் செய்யுங்கள், சிறிது சமரசம் தேவைப்படும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்” என்று அறிவித்த தேசிய கூட்டாட்சி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி எர்வின், தொழிலாள வர்க்கத்தின் மீதான வரலாற்றுத் தாக்குதலை சதித்திட்ட ஆட்சியுடன் இரு கட்சி ஒத்துழைப்புக்கான வேண்டுகோளாகக் குறைத்துக் கொண்டார்.

அமெரிக்க மக்களிடையே ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பரந்த மற்றும் அதிகரித்து வரும் எதிர்ப்பு உள்ளது. அமெரிக்க நகரங்களுக்கு துருப்புக்களை அனுப்புவதையும், அரசியல் எதிர்ப்பை குற்றமாக்குவதையும் கணிசமான பெரும்பான்மையினர் நிராகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அக்டோபர் 18 அன்று, வரவிருக்கும் “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க மில்லியன் கணக்கானவர்கள் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்களில் ஏற்கனவே 2,100 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த எழுச்சி பெற்று வரும் பாரிய எதிர்ப்பின் அளவைக் கண்டு ட்ரம்ப் தெளிவாக திகிலடைந்துள்ளார். மேலும், சர்வாதிகாரத்திற்கான அவரது கால அட்டவணையை விரைவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய காரணியாக இது அமைந்துள்ளது.

கண்மூடித்தனங்களை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி வெளியிடும் ஒவ்வொரு எச்சரிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரம்ப் நிர்வாகமானது, அமெரிக்காவில் ஜனநாயகம் இருந்து வருகிறது என்ற போலித்தனத்தை ஒவ்வொரு நாளும் தகர்த்து வருகிறது. முதலாளித்துவத்தை சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே நிலைநிறுத்த முடியும். இது கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால், அமெரிக்க ஜனநாயகம் ஒரு சத்தத்துடன் இறந்தது அல்ல, ஆனால் ஒரு முணுமுணுப்புடன் இறந்தது என்று கூறப்படும்.

ட்ரம்ப் சொந்தமாக செயல்படவில்லை. தீர்க்க முடியாத முரண்பாடுகளின் சுமையின் கீழ் முதலாளித்துவத்தின் முறிவின் உருவகமாக அவர் இருக்கிறார். அவரது அரசாங்கம் முதலாளித்துவ தன்னலக்குழுவை அதன் மிகவும் அலங்காரமற்ற வடிவத்தில் பிரதிநிதித்துவம் செய்கிறது. இப்போது பயன்படுத்தப்படும் வழிமுறைகள் முதலாளித்துவ சமூகத்தின் உயரத்திற்கு உயர்த்தப்பட்ட குற்றவியல் பாதாள உலகத்தின் வழிமுறைகளாகும்.

சர்வாதிகாரத்திற்குள் இறங்குவதைத் தடுப்பதற்கு, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் அமைப்புரீதியான சக்தியாக தலையிட வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் சக தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், பணிநீக்கங்கள் மற்றும் வெட்டுக்களை எதிர்க்கவும் மற்றும் அமெரிக்க நகரங்களில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும் ஒவ்வொரு வேலையிடத்திலும், பள்ளியிலும் மற்றும் அண்டை பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்கத் தொடங்க வேண்டும். இந்தக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தி, அவற்றின் போராட்டங்களை சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலுடன் இணைக்கும் எதிர்ப்பின் மையங்களாக மாற வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்துறைகளைக் கடந்து மற்றும் எல்லைகளைக் கடந்து இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்க சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்பவும் விரிவுபடுத்தவும் போராடுகிறது. இந்த உலகளாவிய கூட்டணி, மனிதகுலத்தை சர்வாதிகாரம், போர் மற்றும் வறுமையை நோக்கி நகர்த்தி வரும் முதலாளித்துவ தன்னலக்குழு என்ற பொதுவான எதிரிக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.

பணிநீக்கங்கள், சமூகத் திட்டங்களை அழித்தல் மற்றும் சமூகத்தை இராணுவமயமாக்குதல் ஆகியவற்றின் மீதான வளர்ந்து வரும் கோபம், ட்ரம்பை உருவாக்கிய முழு அமைப்பு முறைக்கும் எதிரான ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: அது, பில்லியனர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல், பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவை அகற்றுதல் மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்ல, சமூகத் தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைத்தல் ஆகியவைகளாகும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது ஆகும்.

Loading