மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து கடந்த மாதத்தில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளும், —ஒரு பாசிச ஆத்திரமூட்டல்காரரை “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு” இயக்கத்தின் ஒரு தியாகியாக மாற்றுவது, “உள்ளே இருக்கும் எதிரி” என்றழைக்கப்படுபவருக்கு எதிராக தேசிய காவல் படையை அணிதிரட்டுவது மற்றும் கிளர்ச்சிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிப்படையான தயாரிப்புகள்— எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி, நடந்து கொண்டிருப்பது ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் நிர்வாகத்தால் திட்டமிட்ட சதி என்பதை நிரூபித்துள்ளன. மக்களின் கண்களில் இருந்து கண்மூடித்தனங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. அதிகமான அமெரிக்கர்கள், “நான் இனி இந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை” என்று கூறுகிறார்கள். ஆப்ரகாம் லிங்கனின் நிலம், ட்ரம்ப் மற்றும் அவரது திமிர்பிடித்த சத்ராப்களால் ஒரு வருங்கால ஃபியூரரின் (நாஜித் தலைவர் - Führer) நிலமாக மாற்றப்பட்டு வருகிறது.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் “பாசிச எதிர்ப்பாளர்கள் குறித்த வட்டமேசை” கூட்டமாகக் கூறப்படும் ஒரு கூட்டத்தைக் கூட்டியபோது, இந்த சதி ஒரு திகிலூட்டும் புதிய கட்டத்திற்குள் நுழைந்தது.
உண்மையில், இது அதிதீவிர வலதுசாரி அரசியல் வெறியர்களின் கூட்டமாக இருந்தது. அங்கு, நவ-நாஜிக்கள், கிறிஸ்தவ தேசியவாதிகள், இனவாதிகள், மற்றும் ஹிட்லரின் பிரியர்கள் இருந்தனர். அரசியல் எதிர்ப்புக்கு எதிரான முழுமையான போருக்கான சமிக்ஞையாகத் தெளிவாகக் கருதப்படும் வகையில், இவர்கள் ட்ரம்பால் ஒன்று கூட்டப்பட்டிருந்தனர். இடம்பெற்ற முழு “கலந்துரையாடலிலும்” அச்சுறுத்தல் மற்றும் உடனடி வன்முறையின் சூழல் நிலவியது.
அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற எதுவும் இதுவரை நடந்ததில்லை. பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாசிச-எதிர்ப்பை “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தவும், மக்களுக்கு எதிராக அரசின் ஒடுக்குமுறை இயந்திரங்களை கட்டவிழ்த்துவிடவும், ஒரு சதித்திட்டத்தின் தலைமையகமாக வெள்ளை மாளிகை மாறிள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, துணை அட்டர்னி ஜெனரல் டோட் பிளாஞ்ச், மூத்த ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் மற்றும் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோருடன், “பத்திரிகையாளர்கள்” என்று வேடமிட்ட நவ-நாஜி கிளர்ச்சியாளர்களின் குழுவும் இருந்தது. இவர்களில் மிகவும் வெறுக்கத்தக்கவர் ஜாக் போஸோபீக் ஆவர். இவர் ஒரு நவ நாஜி ஆவார். தெற்கு வறுமை சட்ட மையமானது, இவரை “பல ஆண்டுகளாக வெள்ளை மேலாதிக்கவாதிகள், புதிய பாசிஸ்டுகள் மற்றும் யூத எதிர்ப்பாளர்களுடன் ஒத்துழைத்து வருவதாக” விவரித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில், ட்ரம்ப் “பேச்சு சுதந்திரத்தை நாங்கள் ஒழித்துவிட்டோம்” என்று அறிவித்தார். மேலும் ட்ரம்ப், வரவிருக்கும் அக்டோபர் 18 அன்று நடைபெறவிருக்கும் “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றுவரும் போராட்டங்களை, ஒரு பரந்த “இடதுசாரி பயங்கரவாத வலையமைப்பால்” இயக்கப்படும் “பணம் செலுத்தப்பட்ட நடவடிக்கைகள்” என்று கண்டனம் செய்தார். அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள், CODEPINK மற்றும் பிற குழுக்களை “பாசிச எதிர்ப்பின்” கூட்டாளிகள் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு பாசிச பிரமுகர்கள் குறிப்பிட்டனர். ஜனநாயக கட்சி ஆளுநர்கள் மற்றும் மேயர்கள் “சட்டவிரோதமாக” செயல்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், அவர்களை கைது செய்ய அழைப்பு விடுத்தார். மேலும், ஒரு மாஃபியா முதலாளியின் பாணியில், இது தொடர்பாக “மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“பாசிச எதிர்ப்பு வலையமைப்பு” என்று கூறப்படும் அமைப்பு “ISIS அல்லது ஹிஸ்புல்லாவைப் போலவே அதி நவீனமானது” என்று நோயெம் கூறினார். அதே நேரத்தில் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி “அவற்றை செங்கல் செங்கல்லாகப் பிரித்து,” “முழு அமைப்பையும் மேலிருந்து கீழாக அழிப்பதுக்கு” சபதம் செய்தார். வெள்ளை மாளிகையில் கூடியிருந்த அனைவரும் “பாசிச எதிர்ப்பு” அமைப்பை ஒரு “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக” அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இது அரசியல் அடக்குமுறை மற்றும் வன்முறையை, கொலை மற்றும் பாரிய படுகொலை வரை அனுமதிக்கும்.
ஆனால், “பாசிச எதிர்ப்பு” என்பது ஒரு அமைப்பே அல்ல. அதற்கு மத்திய தலைமை இல்லை, உறுப்பினர் பட்டியல்கள் இல்லை, ஒரு கட்டமைப்பு இல்லை. ட்ரம்ப் நிர்வாகம் “பாசிச எதிர்ப்பு” மீது போர் பிரகடனத்தை அறிவிக்கும்போது, இதன் அர்த்தம் இதுதான்: பாசிச-எதிர்ப்பு மீதான ஒரு போர் என்பது, சர்வாதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் குற்றமாக்கும் போராகும்.
“பாசிச எதிர்ப்பு” அமைப்பை ஒரு “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக” முத்திரை குத்தலாமா என்பது குறித்த விவாதத்தின் போது, ட்ரம்ப் நேரடியாக நவ நாஜி ஜாக் போசோபிக்கை நோக்கி திரும்பி, “அது நடக்கிறதா என்று நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். 2020 ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஒரு முக்கிய நபராக சேவையாற்றிய பாசிச பிரச்சாரகர், இதற்கு உறுதியான உற்சாகத்துடன் பதிலளித்தார்.
ஸ்டீவ் பானனின் முன்னுரை மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுருக்கமான விளக்கத்துடன், “மனிதமற்றவர்கள்: கம்யூனிஸ்ட் புரட்சிகளின் ரகசிய வரலாறு (மற்றும் அவற்றை எவ்வாறு நசுக்குவது)” என்ற தனது புத்தகத்தில், நவ நாஜி ஜாக் போசோபிக் கடந்த 250 ஆண்டுகளின் அனைத்து புரட்சிகர இயக்கங்களையும் மனிதாபிமானமற்ற அரக்கர்களின் படைப்புகளாக சித்தரித்தார்.
“இடதுசாரிகள் பொறாமையிலிருந்து செயல்படுகிறார்கள்,” என்று நவ நாஜி ஜாக் போசோபிக் எழுதுகிறார். “ஏழைகளை கொள்ளையடிப்பதற்கும் சுடுவதற்கும் கூட்டமாக கையாளுபவர்களுடன் நியாயப்படுத்த எந்த வழி முறையும் இல்லை”. “மனிதநேயமற்றவர்களிடம்” நியாயப்படுத்துவது சாத்தியமில்லை என்றால், அவர்களை வேறு வழிகளில் கையாள வேண்டும். “மனிதநேயமற்றவர்களிடமிருந்து அப்பாவிகளைப் பாதுகாக்க ஜனநாயகம் ஒருபோதும் செயல்படவில்லை, அவர்கள் செய்யாத விதிகளின்படி விளையாடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது” என்று அவர் எழுதினார்.
இது ட்ரம்பின் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறைக்கான ஒரு வெளிப்படையான அழைப்பாகும். போசோபியெக்கின் மொழி நாஜிக்களின் சொற் களஞ்சியத்திலிருந்து நேரடியாக உயர்த்தப்பட்டது. அவரது “மனிதாபிமானமற்றவர்கள்” என்பது யூதர்கள், ஸ்லாவியர்கள் மற்றும் பிற மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் “கருணையற்ற மனிதர்கள்” (Untermenschen) என்ற நாஜி வார்த்தையின் நெருக்கமான மொழிபெயர்ப்பாகும். 1942 ஆம் ஆண்டில், நாஜிக்களின் கொலைப்படையான SSன் தலைவர் ஹென்ரிச் ஹிம்லர் “கீழ்நிலை மனிதர்கள்” என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிடுவதை மேற்பார்வையிட்டார். இது, சில மக்கள்தொகைகளை “பகுதியளவு மட்டுமே மனிதர்களாக” இருக்கும் “உயிரியல் உயிரினங்கள்” என்று அறிவித்தது.
ஹிம்லரின் “கீழ்நிலை மனிதர்களைப்” போலவே, நவ நாஜி போசோபிக்கின் “மனிதாபிமானமற்றவர்களும்” அழித்தொழிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள். “எமக்குத் தேவையானது எதிரிகளின் பட்டியல்கள்” - ஊடகங்கள், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் எதிரிகளை வேட்டையாடுவதற்கான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்களுடன் சேர்ந்து. “கலாச்சார மார்க்சிஸ்டுகள் பயத்தில் நடுங்கட்டும்”... என்று அவர் எழுதினார். கடந்த ஆண்டு பழமைவாதிகளின் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC), பானனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட ஜாக் பொசோபிக், “ஜனநாயகத்தின் முடிவு வருக. அதை முற்றிலுமாக தூக்கியெறிய நாங்கள் இங்கே இருக்கிறோம். ஜனவரி 6 ஆம் தேதி நாங்கள் அங்கு செல்லவில்லை, ஆனால் அதை அகற்ற நாங்கள் முயற்சிப்போம்” என்று சூளுரைத்தார்.
வெள்ளை மாளிகை நிகழ்வின் போது போசோபிக் ட்ரம்பிடம், “ஜேர்மனியில் வைமர் குடியரசில்” இருந்தே, அதாவது ஹிட்லரின் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே, “பாசிச எதிர்ப்பு” இருந்து வருகிறது என்றும் கூறினார். இந்த கருப்பொருள், கலந்து கொண்ட மற்றவர்களால் ஊக்குவிக்கப்பட்டது. ஆண்டி ந்கோ உட்பட, அவரது புத்தகமான முகமூடி இல்லாமல் என்பதில், “சமகால மேற்கத்திய சமூகத்தில் பழுப்பு நிற சட்டைகள் நன்கு நினைவில் இருந்தாலும், ஜேர்மனியின் போர்களுக்கு இடையிலான ஆண்டுகளில் தீவிர இடதுசாரி துணை இராணுவத்தினரின் வரலாறு நினைவிலிருந்து மறைந்து விட்டது” என்று புகார் கூறினார். (பழுப்பு நிற சட்டைகள் என்பது ஜேர்மனியில் நாஜிக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு வன்முறை துணை இராணுவக் குழுவாகும்)
வெள்ளை மாளிகை பாசிசக் கூட்டம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரட்கர்ஸ் பல்கலைக்கழக வரலாற்றாசிரியரும் பாசிச எதிர்ப்பு நூலின் ஆசிரியருமான மார்க் பிரே, புதன்கிழமை இரவு நெவார்க்கில் இருந்து ஸ்பெயினுக்கு ஒரு விமானத்தில் ஏறுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டார். பல்கலைக்கழக வளாகங்களில் பழமைவாத அரசியலை ஆதரிக்கும் டர்னிங் பாயிண்ட் USA ஆர்வலர்களிடமிருந்து மரண அச்சுறுத்தல்களைப் பெற்று, நவ நாஜி ஜாக் போசோபியெக்கால் “உள்நாட்டு பயங்கரவாத பேராசிரியர்” என்று முத்திரை குத்தப்பட்ட மார்க் பிரே, தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயன்றார்.
விமான நிலையத்தின் பாதுகாப்பு கடவைகள் வழியாக கடந்து சென்ற பிறகு, மார்க் பிரேயின் முன்பதிவுகள் “ரத்து செய்யப்பட்டுவிட்டன” என்று வாயிலில் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மார்க் பிரே, “கடைசி நொடியில் யாரோ ஒருவர் என் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் விமானத்தை ரத்து செய்துள்ளார். நாங்கள் எங்கள் விமானத்தில் ஏறும் பாஸ்களைப் பெற்றோம். நாங்கள் எங்கள் பைகளைச் சரிபார்த்தோம். பாதுகாப்புப் பிரிவை கடந்து சென்றோம். பின்னர் வாசலில் எங்கள் முன்பதிவு காணாமல் போனது” என்று அவர் எழுதினார்.
இந்த ரத்துக்கான ஒரே விளக்கம், ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள அல்லது அதைச் சுற்றியுள்ள யாரோ ஒருவர், மார்க் பிரே அமெரிக்காவை விட்டு வெளியேறி, அவரது உயிருக்கு எதிரான அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிப்பதை தடுக்கவும், மேலும் அவர் பின்பற்றப்பட்டு குறிவைக்கப்படுகிறார் என்ற செய்தியை அனுப்பவும் முயன்றுள்ளார்.
அரசியல் அடக்குமுறை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை வன்முறையில் தூக்கியெறிவதற்கான அவர்களின் அழைப்புகளை ஜனாதிபதி அங்கீகரித்த வெள்ளை மாளிகைக்கு பாசிஸ்டுகளை அழைத்திருப்பது ஒரு போராட்ட அலையைத் தூண்டியிருக்கும் என்று ஒருவர் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வெள்ளை மாளிகையில் பாசிஸ்டுகளின் பகிரங்க அரவணைப்பு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தில் இருந்து ஏறத்தாழ ஒட்டுமொத்த அலட்சியத்தை சந்தித்துள்ளது. பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் அல்லது வெர்மான்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் உட்பட எந்தவொரு முன்னணி ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்ப் நிர்வாக மாளிகையில் நவ-நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் ஒன்று கூடுவது குறித்து ஒற்றை அறிக்கையை கூட வெளியிடவில்லை.
முக்கிய தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் இதற்கு எந்த செய்தியையும் வெளியிடவில்லை. நாட்டின் தலைநகரை உள்ளடக்கிய முக்கிய செய்திப் பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட், அதன் வலைத்தளத்தின் முதல் பக்கத்தில் எதையும் வெளியிடவில்லை. ஜனநாயகக் கட்சியின் பிரதான ஊடகமான நியூயோர்க் டைம்ஸ், ட்ரம்பின் “பேச்சுச் சுதந்திரத்தை பறித்துவிட்டார்” என்ற கூற்றை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு சுருக்கமான அறிக்கையை மட்டுமே வெளியிட்டது. இதில், பங்கேற்பாளர்கள் செய்த பாசிச அச்சுறுத்தல்கள் மற்றும் பிரகடனங்கள் பற்றிய எந்தவொரு குறிப்பையும் அது தவிர்த்துக் கொண்டது.
ஜனநாயகக் கட்சியிலும் அதைச் சுற்றியும் செயல்படும் பல்வேறு அமைப்புகளும் இது தொடர்பாக நீடித்த மௌனத்தை கடைப்பிடிக்கின்றனர். அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் (DSA) தொடர்புடைய ஒரு அங்கமான ஜாகோபின் பத்திரிகை, வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பாசிசவாதிகளின் கூட்டம், கிளர்ச்சிச் சட்டத்தை பிரயோகிப்பது அல்லது மார்க் பிரேக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது விமானப் பயணத்தை இரத்து செய்தது குறித்து எதையும் வெளியிடவில்லை.
“பாசிச எதிர்ப்பு” குறித்து வெள்ளை மாளிகை கூட்டத்தில் வெளிப்படையாக அச்சுறுத்தப்பட்ட ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (DSA), கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஒரு சுருக்கமான சார்பு அறிக்கையை வெளியிட்டது. “பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான எங்கள் அடிப்படை உரிமையை DSA உறுதிப்படுத்துகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கூட்டாளிகளால் நாங்கள் மிரட்டப்பட மாட்டோம், மேலும் ஜனநாயகத்திற்கான எங்கள் போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம்” என்று DSA குறிப்பிட்டது.
DSA, “அவர்கள் மிரட்டப்பட மாட்டார்கள்” என்று கூறுகிறது. ஆனால், வெள்ளை மாளிகையின் நேரடி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக அவர்கள் சொல்ல வேண்டியது அவ்வளவுதான் என்றால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. அனைத்திற்கும் மேலாக, பிரச்சினை, DSA இன் “அடிப்படை உரிமைகள்” மட்டுமல்ல, மாறாக அரசியலமைப்பை தூக்கியெறிந்து ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதும் ஆகும். அதன் பிரகடனப்படுத்தப்பட்ட “ஜனநாயகத்திற்கான போராட்டம்” எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை அந்த அமைப்பு எங்கும் விளக்கவில்லை. ஏனென்றால், DSA க்கு பதில் எப்போதுமே ஒன்றுதான்: அதன் மௌனம் மற்றும் செயலற்ற தன்மை மூலம், ட்ரம்பின் சதித்திட்டத்தை செயல்படுத்தும் ஜனநாயகக் கட்சிக்கான எதிர்ப்பை அடிபணியச் செய்வதாகும்.
ட்ரம்பின் சர்வாதிகார திட்டநிரலுக்கு பாரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது. அக்டோபர் 18 அன்று வரவிருக்கும் “மன்னர்கள் வேண்டாம்” என்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க மில்லியன் கணக்கானவர்கள் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்களில் ஏற்கனவே 2,100 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள், முக்கிய நகரங்களுக்கு துருப்புக்களை அனுப்புதல் மற்றும் கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான அதன் திட்டங்கள் ஆகியவை தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.
ஒடுக்குமுறைக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்காக, ட்ரம்ப் நிர்வாகம் வன்முறை சம்பவங்களைத் தூண்டிவிட முயலும் என்று நம்புவதற்கு ஒவ்வொரு காரணமும் உள்ளது. அமைதியான போராட்டங்களாகத் திட்டமிடப்பட்டவற்றில் பங்கேற்கத் திட்டமிடுபவர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் ஆத்திரமூட்டுபவர்களால் வைக்கப்படும் பொறிகளில் விழுவதைத் தவிர்க்க வேண்டும்.
இருப்பினும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆழ்ந்த உறுதியால் உந்துதல் பெற்ற போராட்டங்கள், முக்கியமான அரசியல் மற்றும் மூலோபாய உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும்.
முதலாவதாகவும் முக்கியமாகவும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதி ஆய்வில், ட்ரம்ப் ஒரு அரசியல் அமைப்புமுறையை உருவாக்க முனைந்து வருகிறார். அதில், தொழிலாளர்கள் தங்கள் மிக அடிப்படையான சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் இழக்கிறார்கள். அவரது நிர்வாகத்தின் வேலைத்திட்டம் இப்போது அதன் இரண்டாவது வாரத்தில் உள்ள அரசாங்க பணிநிறுத்தத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிப்பதற்கும், சமூக நலத் திட்டங்களை வெட்டிக் குறைப்பதற்கும், மில்லியன் கணக்கான மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் ஓய்வூதியங்களை மறுக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறார். அமெரிக்க நகரங்களில் துருப்புக்களை குவித்துவரும் அதே அரசாங்கம், தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த ஒவ்வொரு ஆதாயத்திற்கும் எதிராக ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கு தலைமை தாங்கி வருகிறது.
இரண்டாவதாக, ட்ரம்ப் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தனிநபராக செயல்படவில்லை. அவர் அமெரிக்க முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு ஆதரவாகப் பேசுகிறார் மற்றும் செயல்பட்டு வருகிறார். இந்த தன்னலக் குழுவானது, அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் ஜனநாயக வழிவகைகள் மூலம் இனியும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் உணவருந்தி ட்ரம்பைப் புகழ்ந்து பேசிய பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுக்கள், 1933 இல் ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டு வந்து அவரது சர்வாதிகாரத்தை ஆதரிக்க ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற பிரிவுகளை வழிநடத்திய அதே நலன்களால் தூண்டப்படுகிறார்கள்.
முதலாளித்துவ அமைப்புமுறைக்கு, உரிமை திட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரங்களில் ஒரு பாரிய குறைப்பு தேவைப்படுகிறது என்பதில் பெரும் பில்லியனர்கள் உறுதியாக உள்ளனர். அனைத்திற்கும் மேலாக, அவர்கள் தங்கள் பூகோள பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அகற்ற விரும்புகிறார்கள். இந்த பாசிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
மூன்றாவதாக, ஜனநாயகக் கட்சி இந்த உந்துதலை எதிர்க்க எதுவும் செய்யாது. அதற்கு என்ன தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், அது நிதிய-பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கருவியாக இருப்பதுடன், ட்ரம்பின் அடிப்படை இலக்குகளான முதலாளித்துவ செல்வவளத்தைப் பாதுகாப்பதுக்காக, போர் தொடுத்தல், மற்றும் அடிமட்டத்தில் இருந்து எழுந்துவரும் எந்தவொரு இயக்கத்தையும் ஒடுக்குவது ஆகியவற்றை ஜனநாயகக் கட்சி பகிர்ந்து கொள்கிறது. அதன் மெளனமும் உடந்தையும் அதன் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களையே அகற்றுவதுக்கு அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை இட்டே அது அஞ்சி நடுங்குகிறது.
மேலே வரையறுக்கப்பட்டுள்ளபடி நிலைமையை அங்கீகரிப்பதில் இருந்து, அது பின்வருமாறு கூறுகிறது:
நான்காவதாக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சர்வாதிகாரத்திற்குள் இறங்குவதைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாக தேவைப்படுகிறது. உற்பத்தி பொருளாதார நிகழ்முறையில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்துவரும் இந்த வர்க்கம் கோடிக்கணக்கில் உள்ளது. மேலும் இது, தன்னலக்குழுக்களை மண்டியிடச் செய்து, அதிகாரத்தையும் செல்வத்தையும் பெருமளவில் மற்றும் ஜனநாயக ரீதியாகப் பகிர்ந்தளிக்க கட்டாயப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, பரந்த அமெரிக்க தொழிலாள வர்க்கமானது, உலகளாவிய அளவில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதை சாத்தியமாக்கும் ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
அக்டோபர் 18 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ட்ரம்பின் சர்வாதிகார மற்றும் பாசிச வெறியாட்டத்திற்கு எதிரான ஒரு எதிர்-தாக்குதலின் தொடக்கத்தைக் குறிக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஒவ்வொரு வேலையிடத்திலும், தொழிற்சாலைகளிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் மற்றும் பாடசாலைகளிலும், தொழிலாளர்களும் மாணவர் இளைஞர்களும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பை கலந்துரையாடவும், ஒழுங்கமைக்கவும் ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் ஆட்சியால் இலக்கு வைக்கப்பட்டுள்ள அத்தனை அரசியல் அமைப்புகளும் தனிநபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி தனது பங்கிற்கு, வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயம் சம்பந்தமான வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ட்ரம்பின் அரசாங்கத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாக்கும்.
தொழிற்சாலைகள் மற்றும் எல்லைகளைக் கடந்து இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்க சாமானிய தொழிலாளர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) ஸ்தாபிப்பதன் ஊடாக போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்முயற்சியை சோசலிச சமத்துவக் கட்சி எடுத்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்த மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்திற்கான போராட்டம், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினால் (IYSSE) முன்னெடுக்கப்படுகிறது.
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை அதன் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும், நிதிய தன்னலக்குழுவின் சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும், மற்றும் பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்ய வேண்டும். இந்த வழியில்தான் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்குள் சரிவதை நிறுத்த முடியும்.