மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கி.பி 98-ல், வரலாற்றாசிரியர் டாசிடஸ், ரோமப் பேரரசின் துருப்புகளால் பிரிட்டன் அழிக்கப்பட்டதை விவரித்து, “அவர்கள் ஒரு பாலைவனத்தை உருவாக்கி, அதை சமாதானம் என்று அழைக்கிறார்கள்” என்று எழுதினார். ஏறத்தாழ 2,000ம் ஆண்டுகளுக்குப் பின்னர், இதே கசப்பான வார்த்தைகள், இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய புரவலர்களால் காஸாவில் வாழும் பாலஸ்தீனிய மக்கள் மீது திணிக்கப்பட்ட, மிருகத்தனமான விதிமுறைகளுக்கு பொருந்துகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸாவுக்கான “சமாதான ஒப்பந்தம்” என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனியர்களின் உரிமைகளை நசுக்கும் ஒரு ஏகாதிபத்திய பாதுகாப்பு பகுதியை உருவாக்குவதுடன், எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டை வலுப்படுத்துகிறது. இது, இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ட்ரம்ப் ஆற்றிய உரையிலும், அதைத் தொடர்ந்து கடந்த திங்களன்று எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி நடத்திய இனப் படுகொலையாளிகளின் கூட்டத்திலும் அம்பலப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு ஆரவாரமான உரையில், ட்ரம்ப் ஒரு மாஃபியா தலைவரான டான் டோனி சோப்ரானோவின் சொற்பொழிவு போன்று பேசினார். அமெரிக்க ஆயுதங்கள் “சமாதானத்தை” கொண்டுவரும் சக்தியைப் பற்றி இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் தற்பெருமையுடன் பேசினார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தேடப்படும் போர்க் குற்றவாளியான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். மேலும், அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் “ஒரு புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்” தொடங்கிவிட்டதாக அவர் சூளுரைத்தார்.
நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலை வன்முறையை அவர் நேர்மறையாகக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். மேலும், நெதன்யாகு எனக்கு பல முறை ஆயுதங்களைக் கேட்டு அழைப்பார் என்றும், அமெரிக்கா “இஸ்ரேல் வலிமையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாற இவ்வளவு ஆயுதங்களை வழங்கியது. அதுதான் அமைதிக்கு வழிவகுத்தது” என்றும் அவர் கூறினார். “நாங்கள் உங்களுக்கு எல்லா ஆயுதங்களையும் கொடுத்தோம், நீங்கள் அவற்றை நன்றாகப் பயன்படுத்தினீர்கள்” என்று ட்ரம்ப் மேலும் கூறினார்.
சியோனிச ஆட்சியாளர்கள் ஆயுதங்களை மிகவும் “நன்றாக” பயன்படுத்தினர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அவர்கள் குறைந்தபட்சம் 67,000ம் மக்களைக் கொன்று தள்ளினர். ஆனால், உண்மையில் பல பத்தாயிரக்கணக்கானவர்கள் இந்த ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டனர். பாலஸ்தீனியர்களை ஒழிப்பதற்கான வெளிப்படையான நோக்கம், ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் எண்ணற்ற அறிக்கைகள் மூலமாகவும், நெதன்யாகு மற்றும் பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று அழைத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டதன் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. லெபனான் மீது ஒரு மாத கால குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் அல்லது ஊனமுற்றனர். அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரையில் அதிதீவிர வலதுசாரி குடியேற்றவாசிகளாலும், இஸ்ரேலிய இராணுவத்தினாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
ஒரு எதிர்க்கட்சி இஸ்ரேலிய அரசியல்வாதி ஒருவர் பாராளுமன்றத்தில் “பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க” வேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கையுடன் ஒரு காகிதத்தை உயர்த்தியபோது, ட்ரம்பின் குண்டர் பாணியிலான செயல் முழுமையடைந்தது. அந்த அரசியல்வாதி சபையிலிருந்து விரைவாக வெளியேற்றப்பட்டதை, “அது மிகவும் திறமையான செயல்” என்று ட்ரம்ப் தனது பிரதிபலிப்புடன் பதிலளித்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட இந்த தீர்வு, காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு எந்த உரிமைகளையும் அங்கீகரிக்கவில்லை. ஒரு “பாலஸ்தீனிய அரசுக்கு”, ஒரு அர்த்தமற்ற வாய்மொழி உறுதிப்பாட்டையும் கூட அங்கீகரிக்கவில்லை. சியோனிச ஆட்சி, எல்லைகள் மீது கட்டுப்பாட்டையும், அது தேர்ந்தெடுக்கும் நேரத்தில் இரத்தக்களரி தாக்குதல்களை நடத்தும் திறனையும் கொண்ட ஒரு நிரந்தர ஆக்கிரமிப்புப் படையை பாலஸ்தீனத்தில் தக்க வைத்துக் கொள்ளும். 1978 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் முதல் 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ வரையும் மற்றும் கடந்த நவம்பரில் இனப்படுகொலையில் “இடைநிறுத்தம்” உட்பட, கடந்த ஐந்து தசாப்தங்களாக திட்டமிட்டு போர்நிறுத்தத்தை மீறிய இஸ்ரேலின் சாதனை, இந்த வாய்ப்பு வெறும் கற்பனை அல்ல என்பதை நிரூபிக்கிறது. இது காலத்தின் ஒரு விஷயம் மட்டுமே.
மத்திய கிழக்கில் “சமாதானம்” குறித்து ட்ரம்ப், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் வாய்வீச்சுக்கள் என்பன இரட்டிப்பான மோசடியாகும். முதலாவதாக, இரண்டு வருடமாக இடம்பெற்றுவரும் இனப்படுகொலையில் இருந்து தப்பிப்பிழைத்த பாலஸ்தீனியர்கள் இடிபாடுகளில் வாழுவதுக்கு விடப்பட்டுள்ளனர். நகரத்தின் முக்கால்வாசி கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கிய பின்னர், காஸா நகரத்திற்குத் திரும்பும் 300,000 க்கும் அதிகமான பாலஸ்தீனயர்கள் இடிபாடுகளின் குவியல்களை எதிர்கொள்கின்றனர்.
அமெரிக்க பியூரர் (நாஜித் தலைவர் - Führer) ட்ரம்ப் தலைமையிலான மற்றும் குற்றம் சாட்டப்படாத போர்க் குற்றவாளியான டோனி பிளேயரின் ஆதரவுடன் ஓர்வெல்லிய “அமைதி வாரியத்தின்” கீழ், காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது. அவர்கள் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவர்களின் சியோனிச தாக்குதல் நாயின் விருப்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். இவர்கள், சுற்றி வளைக்கப்பட்ட காஸாவின் எல்லைகளை கண்காணிப்பதுடன், எந்த நேரத்திலும் குடியிருப்பாளர்களை இனரீதியாக சுத்திகரிக்க அல்லது அவர்கள் விரும்பும் போது படுகொலை செய்ய சுதந்திரமாக இருப்பர்.
காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இரக்கமற்ற அடக்குமுறையை மேற்பார்வையிடும் ட்ரம்பின் நோக்கத்திற்கும், அவரது “சர்வாதிகார நடவடிக்கையின்” ஒரு பகுதியாக, முக்கிய அமெரிக்க நகரங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மிருகத்தனமான அரசு அடக்குமுறையைப் பயன்படுத்துவதற்கும் இடையிலான ஒற்றுமையை மறுக்க முடியாதது. வெளிநாடுகளில் கட்டுப்பாடற்ற ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் உள்நாட்டில் சர்வாதிகாரத்திற்கான உந்துதலுடன் எவ்வாறு விருப்பத்துடன் கைகோர்த்துச் செல்கிறது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த உடன்படிக்கை பிராந்தியம் முழுவதிலும் “சமாதானத்திற்கு” களம் அமைக்கவில்லை, மாறாக கொள்ளை மற்றும் ஏகாதிபத்திய வெற்றிக்கான இன்னும் கூடுதலான இரத்தக்களரி போர்களுக்கு களம் அமைக்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் உட்பட வளைகுடா நாடுகள், ஈரானிய முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இஸ்ரேலுடன் அமெரிக்கா தலைமையிலான ஒரு கூட்டணியில் தங்களை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் காஸா இனப்படுகொலையானது, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டு, தெஹ்ரானில் “ஆட்சி மாற்றத்தின்” முக்கியத்துவத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தினார். “நாங்கள் மத்திய கிழக்கிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் ஒரு பெரிய சுமையை நீக்கியுள்ளோம்,” என்று அவர் கைதட்டலுக்கு மத்தியில் பெருமை பீற்றிக்கொண்டார்.
உலகின் சந்தைகள் மற்றும் வளங்களை மறுபங்கீடு செய்வதற்கான பெரும் சக்திகளிடையே வேகமாக அதிகரித்து வரும் மோதலில் சீனா மற்றும் ரஷ்யாவை ஓரங்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா வர்த்தக வழித்தடத்தின் அபிவிருத்திக்கு காஸா முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. எகிப்தில் கையெழுத்திடப்பட்ட விழாவிற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் - இவர்கள் அனைவரும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள்— அநாகரீகமாக முறையில் விரைந்து வருவது, காஸாவின் “புனரமைப்பு” என்ற பதாகையின் கீழ் வரவிருக்கும் மோதல்களில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தங்கள் பாத்திரங்களை வகிக்க இருக்கின்றனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த உடன்பாடு நீண்ட காலத்திற்கு நீடித்தாலும், பாலஸ்தீனியர்கள் மற்றும் இப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளுக்கு தீர்வு காண்பதற்கு இது எந்த அடிப்படையையும் வழங்கவில்லை. தற்போதைய இஸ்ரேலிய அரசு ஏகாதிபத்திய ஆதரவுடன் கூடிய படுகொலைகள் மற்றும் பாலஸ்தீனம் மற்றும் சிரியாவின் நிலங்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததன் மூலம் உருவாக்கப்பட்டதால், “இரண்டு அரசு தீர்வு” என்ற கருத்து அபத்தமானது. யூத மக்களுக்கு ஒரு புகலிடமாக ஒரு தேசிய தாயகத்தைப் பெறுவதில் திவாலான சியோனிச மூலோபாயத்தின் தோல்வி, உலகெங்கிலும் அதிகரித்து வரும் யூதர்கள் உட்பட அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. சியோனிச அரசை இனப்படுகொலையின் மூலமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு காவற்படை புறக்காவல் நிலையமாகவும் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ஏகாதிபத்திய சக்திகளாலும் அரபு சர்வாதிகாரிகளாலும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாலஸ்தீன அரசும் அது எழுதப்பட்ட காகிதத்திற்கும் மதிப்புள்ளதாக இருக்காது. இது காஸாவை “இராணுவமயமாக்கி” தனது தனிப்பட்ட கட்டளையின் கீழ், ஒரு அமெரிக்க பாதுகாவலரின் கீழ் வைப்பதாக ட்ரம்ப் அளித்த வாக்குறுதியிலிருந்து சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்குக் கரையில், இஸ்ரேலிய குடியேற்றங்களின் விரிவாக்கம் பாலஸ்தீனிய அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தை பாலஸ்தீனத்தின் முன்மொழியப்பட்ட தலைநகரான கிழக்கு ஜெருசலேமில் இருந்து துண்டித்துள்ளது.
கடந்த திங்களன்று இடம்பெற்ற கையெழுத்திடும் நிகழ்ச்சி, இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மீதும், தங்களை எதிர்ப்பாளர்களாக அல்லது குறைந்தபட்சம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மாற்றீடுகளாக காட்டிக் கொள்ள முற்பட்ட அனைத்து முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மீதும், இதைவிட பேரழிவுகரமான குற்றச்சாட்டை வழங்கியிருக்க முடியாது. இறுதியில், அவர்கள் அனைவரும் ஏகாதிபத்தியத்துடன் இணக்கமாக இருப்பதற்கு ஆதரவாக பாலஸ்தீனியர்களின் உரிமைகளைத் தியாகம் செய்தனர். காஸா இனப்படுகொலையை சாத்தியமாக்கி இவர்கள் ட்ரம்ப் ஊக்குவித்த இழிவான ஒப்பந்தத்தைப் பாராட்டினர்.
இந்த இழிவான ஒப்பந்தத்தில் அமெரிக்கா சார்பாக ட்ரம்ப் கையெழுத்திட்டார், துருக்கி, எகிப்து மற்றும் கத்தார் தலைவர்களும் இதில் இணைந்து கொண்டனர். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்ததை பாசாங்குத்தனமாக விமர்சித்த துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அரசாங்கம், இனப்படுகொலை முழுவதும் சியோனிச ஆட்சிக்கு அஜர்பைஜானில் இருந்து எண்ணெய் விநியோகத்தைத் தொடர்ந்து செய்து வந்தது. மேலும், அமெரிக்க ஆதரவுடன் அசாத் ஆட்சியை கவிழ்த்ததன் மூலம் சிரியாவில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியது. ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை அணுகுவதற்கான வாக்குறுதியுடன் கட்டார் வாங்கப்பட்டதுடன், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் நிதி நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் முதலீட்டில் இதர வளைகுடா நாடுகளுடன் அது பங்கெடுத்து கொண்டது.
மத்திய கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் தீர்க்கப்படாமல் உள்ள ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் எதையும், அது அரபு, ஈரானிய, துருக்கிய அல்லது சியோனிசமாக இருந்தாலும் சரி, தேசிய வேலைத்திட்டங்களால் தீர்க்க முடியாது. பாலஸ்தீனியர்கள் இப்போது எதிர்கொண்டுள்ள அவநம்பிக்கையான அவல நிலையும், அத்துடன் சியோனிசம் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தை சூழ்ச்சி செய்து இட்டுச் சென்ற முட்டுச்சந்தையும், இந்த நிலைப்பாட்டின் சரியான தன்மையை அவர்களின் சொந்த வழிகளில் துன்பகரமான முறையில் உறுதிப்படுத்துகின்றன.
பல தசாப்தங்களாக அரபு அரசாங்கங்களால் புனிதப்படுத்தப்பட்டு, பாலஸ்தீனிய தேசியவாத இயக்கங்களால் பாராட்டப்பட்ட எண்ணற்ற “சமாதான” ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும், இஸ்ரேலிய பாரிய படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறைக்கான அடித்தளத்தை மட்டுமே உருவாக்கியுள்ளன.
முன்னேறிய நாடுகளில் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லாததால் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை அவர்கள் இழந்துள்ளனர் என்பதுதான் பாலஸ்தீனியர்களின் துயரம் ஆகும். மத்திய கிழக்கில் நீண்டகாலமாக துன்பப்படும் வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அடைவதற்கும், அமைதியான சகவாழ்வுக்கான ஒரு உண்மையான அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்குமான ஒரே வழி நிரந்தரப் புரட்சி முன்னோக்கிற்கான போராட்டமாகும்.
அரபு, யூத, ஈரானிய, துருக்கிய மற்றும் குர்திஷ் தொழிலாளர்கள் இந்தப் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும், ஒரு உலக சோசலிச கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கில் ஐக்கிய சோசலிச அரசுகளை தோற்றுவிப்பதற்கும் ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில், அவர்களின் கூட்டாளிகள் ஏகாதிபத்திய-சார்பு மற்றும் ஊழல் நிறைந்த சியோனிச மற்றும் அரபு ஆளும் வர்க்கங்களில் காண முடியாது மாறாக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் காணப்பட முடியும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் தினசரி பத்தரிகையான உலக சோசலிச வலைத்தளமும் போராடி வருகின்ற புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, இனப்படுகொலை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் அனைத்து வகையான காலனித்துவ பாணி ஒடுக்குமுறைக்கும் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் தொழில்துறை இயக்கமாக இந்தக் கூட்டணியை உருவாக்குவது சாத்தியமாகும்.