ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு "மன்னர்கள் வேண்டாம்" போராட்டங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

டெட்ராய்டில் நடந்த “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

அக்டோபர் 18 அன்று, 7 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் பங்கேற்றதை, ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்த்தனர். 5 மில்லியன் பேர் பங்கேற்ற முந்தைய ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் ஆழமான எதிர்ப்பை எதிர்கொள்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

அமெரிக்காவின் பில்லியனர் பாசிச ஜனாதிபதிக்கு, இடதுசாரி எதிர்ப்பின் எழுச்சி சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு ட்ரம்ப் அளித்துவரும் ஆதரவு, அரசாங்க ஊழியர்களை அவர் பாரியளவில் பணிநீக்கம் செய்தல், ஓய்வூதியம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களில் வெட்டுக்கள், கெஸ்டாபோவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரின் (ICE) சோதனைகள் மற்றும் அமெரிக்க நகரங்களில் சட்டவிரோதமாக துருப்புக்களை நிலைநிறுத்துதல் ஆகியவற்றால், அமெரிக்க தொழிலாளர்கள் அதிகரித்தளவில் சீற்றமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் ட்ரம்பின் முழுமையான நிர்வாக அதிகாரம் மற்றும் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான சதித்திட்டம் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.

ஐரோப்பாவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது?

சமூக சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ் ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவ தன்னலக்குழுவுக்கு எதிரான தங்களின் சொந்த போராட்டங்களில், ஐரோப்பிய தொழிலாளர்கள் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச கூட்டாளியைக் கொண்டுள்ளனர்: அது, அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஆகும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், செல்வந்த தன்னலக்குழுவின் கைகளில் இருந்து அதிகாரத்தை பறித்து ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கும் சூழ்நிலை கனிந்துள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டங்கள் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (​​ICFI) முன்னோக்கை நிரூபிக்கின்றன. 1953 ஆம் ஆண்டில், மைக்கேல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான ஸ்டாலினிச-சார்பு ஓடுகாலிகளிடம் இருந்து பிரிந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, செவ்வியல் மார்க்சிசத்தின் அடிப்படை மூலோபாயக் கருத்துருக்களைப் பாதுகாத்தது. ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்டாலினிசம் ஆகிய இரண்டிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்கா உட்பட, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை வலியுறுத்தி வந்தது.

எண்ணிலடங்கா குட்டி-முதலாளித்துவ போக்குகளைப் போலவே, பப்லோவாதிகளும் அமெரிக்க தொழிலாளர்களை ஒதுக்கித் தள்ளினர். அவர்களைப் பொறுத்தவரை, புரட்சிகரப் போராட்டமானது, அமெரிக்காவிற்கு எதிராக ஸ்டாலினிசத்தின் தலைமையில் ஒரு “புரட்சிகர போரின்” வடிவத்தை எடுக்கும் என்று கணித்தனர். ஐரோப்பாவில், ஸ்டாலினிச அல்லது சமூக-ஜனநாயக தேசிய அதிகாரத்துவங்கள் அல்லது முன்னாள் காலனித்துவ நாடுகளில் உள்ள முதலாளித்துவ தேசியவாதிகளைத் தவிர, தொழிலாளர்களுக்குத் தலைமை தேவைப்படும் எந்த சூழ்நிலையையும் அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் “ஒரு பாசிச பரிசோதனையில் தனது விரல்களை கடுமையாக எரித்தது”. ஆதலால், எதிர்காலத்தில் அதிதீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு திரும்புவதற்கான “வாய்ப்புகள் குறைவாகவே” இருந்தன என்று மண்டேல் எழுதினார்.

இந்த வாதங்கள் தற்போதைய நிகழ்வுகளால் தகர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளர்கள், மக்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆட்சி செய்யும் ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவை எதிர்கொள்கின்றனர். மேற்கு ஐரோப்பாவின் 89 சதவீதமான மக்கள் உக்ரேனில் ரஷ்யா மீதான பேரை எதிர்க்கின்றனர். இந்த நிலையில், ரஷ்யா மீது நேரடிப் போருக்குத் தயாராகும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் ட்ரம்புடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்றன. அமெரிக்க முதலாளித்துவத்துடனான பொருளாதாரப் போட்டி இருந்து வருகின்ற போதிலும், இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவதற்காக, நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களால் சமூகச் செலவினங்களைக் வெட்டிக் குறைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை, இவர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

இந்த நோக்குநிலை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், அவர் இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கு 100 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியதால், பாரிய வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டு, பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதியங்களை வெட்டிக் குறைத்தார். இந்த வெட்டுக்கள் பிரெஞ்சு மக்களில் 91 சதவீதத்தினரால் நிராகரிக்கப்பட்டன. ஆனால், “பிரான்சுக்கு ஒரு மன்னர் தேவை” என்று அறிவித்த மக்ரோன், தொழிலாளர்களை நசுக்கி, பாரிய போராட்டங்களைத் தாக்க கலகத் தடுப்பு போலீசாரை அனுப்பி, தனது வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியிருந்தார்.

அமெரிக்காவில் “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள் குறித்து, ஐரோப்பிய “இடதுசாரிகள்” என்று முதலாளித்துவ ஊடகங்களால் குறிப்பிடப்படும் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்? சுருக்கமாகச் சொன்னால்: ஒன்றுமில்லை. பிரிட்டனில் முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின், ஸ்பெயினில் பொடெமோஸின் பப்லோ இக்லேசியாஸ், ஜேர்மனியில் சாரா வாகென்கினெக்ட் மற்றும் பிரான்சில் அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன் ஆகியோர், கடந்த ஜூன் அல்லது அக்டோபரில் இடம்பெற்ற “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள் குறித்து பகிரங்க அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.

அமெரிக்க நிகழ்வுகள் குறித்து அவர்கள் காட்டும் மௌனத்தை நாம் எவ்வாறு விளக்க முடியும்? “கிளர்ச்சிச் சட்டத்தைப்” பயன்படுத்தி எதிர்ப்பு போராட்டத்தை இராணுவ ரீதியாக ஒடுக்க உத்தரவிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்துவதன் அர்த்தம் சந்தேகத்திற்கு இடமின்றி மிகத் தெளிவாக உள்ளது. அதிதீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்காக அவர் இராணுவ-போலிஸ் இயந்திரத்தை அமைத்து வருகிறார். “பாசிச எதிர்ப்பு” (antifa) உணர்வை பயங்கரவாதமாக தடை செய்து, அமெரிக்கா முழுவதிலும் உள்ள நகரங்களை ஆக்கிரமிக்க அமெரிக்க துருப்புக்களை அனுப்பும் நடவடிக்கையின் சாராம்சம் இதுதான்.

நாஜிசத்தின் தோற்றத்திற்குக் சற்றும் குறையாமல், ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சியை எதிர்க்கவும் , தோற்கடிக்கவும் ஒரு சமரசமற்ற வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் பணி தொழிலாள வர்க்கத்தின் மீது சுமந்துள்ளது.

ஆனால், இது கோர்பின்கள், மெலன்சோன்கள் மற்றும் அவர்களைச் சுற்றி வரும் எண்ணற்ற நடுத்தர வர்க்கக் குழுக்கள் செய்ய விரும்புவதற்கு நேர்மாறானது. அவர்களது சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டம் ஒருபுறம் இருக்க, அவர்கள் எந்தப் போராட்டத்தையும் ஆதரிக்கவில்லை. மாறாக, இவர்கள் முதலாளித்துவ அரசின் நாடாளுமன்ற மற்றும் தொழிற்சங்க கட்டமைப்புகளுக்குள், தேசிய நிலப்பரப்பில் அரசியல் ரீதியாக அர்த்தமற்ற மற்றும் சக்தியற்ற “குடிமக்கள் புரட்சிக்கு” அழைப்பு விடுக்கின்றனர். நடைமுறையில், இது அவர்களை ஒன்றுமில்லாமல் செய்கிறது. இந்த முற்றிலும் இலாயக்கற்ற சொல்லாட்சித் திட்டத்தில் ஒரு அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கத்திற்கு எந்த சுயாதீனமான பங்கும் இல்லை. போலி இடதுசாரிகளின் பிரதிநிதிகள், மக்களுக்கு எதிரான ஐரோப்பிய தன்னலக்குழுவின் ஆட்சிக்கும், ஐரோப்பாவிலுள்ள ட்ரம்பின் அதிதீவிர வலதுசாரி சக சிந்தனையாளர்களான இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி முதல் ஸ்பெயினில் வோக்ஸ், ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி மற்றும் பிரான்சில் மரின் லு பென் வகையறாக்களுக்கும் ஊக்குவித்து, தகவமைத்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறாக, 2023 இல் பிரான்சில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்த போது, மெலோன்சோன், 2022 ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களித்த 8 மில்லியன், பெரும்பாலும் தொழிலாள வர்க்க வாக்காளர்களை அணிதிரட்ட அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் ஸ்டாலினிச மற்றும் பசுமைக் கட்சி கூட்டாளிகளுடன் ஒரு புதிய மக்கள் முன்னணியை (NFP) உருவாக்கினார். பின்னர் அது 2024 பாராளுமன்றத் தேர்தல்களில் மக்ரோனின் வேட்பாளர்களை அங்கீகரித்தது. கடந்த வாரம்தான், மக்ரோனின் கீழ் மற்றொரு செல்வாக்கற்ற சிறுபான்மை அரசாங்கத்தை ஸ்தாபிக்க சோசலிஸ்ட் கட்சி வாக்களித்தது.

சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுக்க ஆளும் வர்க்கம் இத்தகைய சக்திகளை நம்பியுள்ளது. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி சார்பு நாளேடான லு மொன்ட், “மன்னர்கள் வேண்டாம்” போராட்டம் “லேசானது,” முற்றிலும் குறியீட்டு ரீதியாகவும், சக்தியற்றதாகவும் இருந்தது என்று வெளிப்படையாக வலியுறுத்தியது. ஜனநாயகக் கட்சி, அமெரிக்க தொழிலாளர்களிடையே ட்ரம்ப் எதிர்ப்பு உணர்வை தளர்த்த முடியும் என்று அனுமானித்து, ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எந்தவொரு பயனுள்ள எதிர்ப்பும் எழக் கூடாது என்பதை, சிடுமூஞ்சித்தனமாக தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது.

“ஒரு வருடத்திற்கு முன்பு பெருமளவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை எதிர்கொண்டபோது, ​​அந்த நாளின் லேசான மனநிலையில், இயலாமையை ஒப்புக்கொள்வதற்கான ஒரு வடிவம் இருந்தது,” என்று லு மொன்ட் எழுதியது. போராட்டங்களில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் சீற்றத்துடனான நேர்காணல்களை மேற்கோள் காட்டி, அது வெளிப்படையாக “ட்ரம்பிசம் இங்கே நிலைத்திருக்க வேண்டும்” என்று கணித்தது. லு மொன்ட் தனது கட்டுரையை முடிக்கும்போது, “மன்னர் ட்ரம்ப்” என்று பொறிக்கப்பட்ட விமானத்தை முடிசூட்டிய ட்ரம்ப் ஓட்டிச்சென்று, போராட்டக்காரர்கள் மீது மலத்தை தெளிக்கும் வீடியோவை வெளியிட்டதை வேடிக்கையாகக் குறிப்பிட்டது.

யதார்த்தத்தில் “மன்னர்கள் வேண்டாம்” போராட்டம், அதிதீவிர வலதுசாரி சர்வாதிகாரத்திற்கு பாரிய எதிர்ப்பு இருப்பதைக் காட்டுகிறது. இந்த எதிர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலைத் அணிதிரட்டுவதற்கான ஒரு முன்னோக்குடன் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் கட்சியாகும். சோ.ச.க. தனது அறிக்கையில், “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களுக்குப் பிறகு: அடுத்து என்ன?“ என்பதை பின்வருமாறு விளக்கியது:

அமெரிக்கா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சமூக எதிர்ப்பு மற்றும் எதிர்ப்பின் மனோநிலை அதிகரித்து வருகிறது. அடுத்த போராட்டத்திற்காக செயலற்ற முறையில் காத்திருப்பது அல்ல, மாறாக சோசலிசத்திற்கான, தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான போராட்டத்தில், இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஒரு நெம்புகோலாக பயன்படுத்துவதே இப்போதைய பணியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பாகமாக ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு நனவான சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கும், மற்றும் மூலோபாய ரீதியில் இணைந்துள்ள மற்றும் உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்திக்குமான போராட்டங்களுடன் அமைப்புரீதியாக இணைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்வதற்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.

சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை, ஒரு சர்வதேசிய சோசலிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களில் வேரூன்றியுள்ள அளவிற்குத்தான் முன்னோக்கிச் செல்ல முடியும். முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சமூகத்தின் செல்வ வளத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும், ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்யாமல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது சாத்தியமற்றது.

ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் இந்த அழைப்பை ஏற்க வேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவம் தொழிலாளர்களின் கழுத்தை நெரிப்பதற்கு இரண்டு பிரதான பொய்களை நம்பியுள்ளது. முதலாவதாக, அமெரிக்காவில் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தை தொழிலாளர்களால் மேற்கொள்ள முடியாது, இரண்டாவதாக, ஐரோப்பிய தொழிலாளர்கள் ஸ்டாலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தில் இருந்து ஒருபோதும் விடுவித்துக் கொள்ள முடியாது என்பதாகும். “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களும், பெரும்பான்மையான அமெரிக்க இளைஞர்கள் சோசலிசத்தை ஆதரிப்பதாகக் காட்டும் கருத்துக் கணிப்புகளும் இந்தப் பொய்களை தகர்த்தெறிகின்றன.

முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச வெடிப்புகள் உருவாகி வருகின்றன. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை வழிநடத்த தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading