முன்னோக்கு

2030 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பாதுகாப்பு திட்ட வரைபடம், சர்வாதிகாரம் மற்றும் உலகப் போருக்கு அடித்தளம் அமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மத்தியதரைக் கடலில் செயல்படும் தடம் கண்டறியும் ஏவுகணை கப்பல் USS கேப் செயிண்ட் ஜோர்ஜ் (CG 71) இலிருந்து ஒரு டோமாஹாக் நில தாக்குதல் ஏவுகணை (TLAM) ஏவப்படுகிறது. மார்ச் 23, 2003 [AP Photo/Intelligence Specialist 1st Kenneth Moll/U.S. Navy ]

சமீபத்திய நாட்களின் நிகழ்வுகள் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய இராணுவ விரிவாக்கத்திலும், மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்புகளிலும் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன. கடந்த வியாழனன்று, புரூசெல்ஸில் ஐரோப்பிய கவுன்சிலின் கூட்டங்களும், வெள்ளிக்கிழமை இலண்டனில் நடந்த “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” என்றழைக்கப்படுவதும் சாதாரண இராஜதந்திர கூட்டங்கள் அல்ல, மாறாக உண்மையான போர் உச்சி மாநாடுகளாகும். அவர்கள் ஒன்றாக ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள், உக்ரேனுக்கு மேலும் இராணுவ உதவிகள் மற்றும் முழு ஐரோப்பா கண்டத்தையும் இராணுவமயமாக்குவதற்கான ஐந்தாண்டு திட்டத்தை அமைக்கும் “2030 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பாதுகாப்பு திட்ட வரைபடம்” ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளித்தனர்.

அதே நேரத்தில், வாஷிங்டன் அதன் நேரடி தலையீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கான முக்கிய கட்டுப்பாடுகளை ட்ரம்ப் நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் கியேவ் ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக சென்று தாக்க முடிந்தது. உக்ரேன், கடந்த செவ்வாயன்று ரஷ்யாவில் உள்ள ஒரு நகரமான பிரையன்ஸ்கில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ராக்கெட் எரிபொருள் உந்துசக்தியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தாக்க இங்கிலாந்து வழங்கிய Storm Shadow ஏவுகணையைப் பயன்படுத்தியது. உக்ரேனிய பொது ஊழியர்கள் “வெற்றிகரமான தாக்குதல்” என்று இதனை கொண்டாடினர். இத்தகைய நடவடிக்கைகள் நேட்டோ சக்திகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வெளிப்படையான மோதலைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது. இது, விரைவாக ஒரு அணுஆயுத பரிமாற்ற யுத்தமாக மாறக்கூடும்.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் வேண்டுமென்றே மோதலை தீவிரப்படுத்தி வருகின்றன. வாஷிங்டன் மற்றும் இலண்டன் இரண்டுமே ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயிலுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த பொருளாதாரப் போரை இறுக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இரட்டை பயன்பாட்டு பொருட்கள் மீதான ஏற்றுமதி தடைகளை விரிவுபடுத்துவதற்கும், ஐரோப்பிய மூலதனச் சந்தைகளில் ரஷ்யாவின் அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களில் இருந்து ரஷ்யாவின் “shadow fleet” ன் 117 கப்பல்களை தடை செய்வதற்கும், ரஷ்ய இராஜதந்திரிகள் மீது புதிய பயண மற்றும் நிதி வரம்புகளை திணிப்பதற்கும் பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாடு தீர்மானித்துள்ளது. 2027 க்குள், ரஷ்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி, முன்பு திட்டமிடப்பட்டதை விட ஒரு வருடம் முன்னதாக முற்றிலும் தடைசெய்யப்படும்.

ரஷ்ய மத்திய வங்கியின் முடக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து, உக்ரேனுக்கான ஆயுதங்களுக்கு நிதியளிப்பதற்காக மீண்டும் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் இன்னும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. பெல்ஜியம் இதற்கு சட்டபூர்வ ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும், ஐரோப்பிய கவுன்சில் “கூடிய விரைவில் ஒரு முன்மொழிவை முன்வைக்க” ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. இது, சர்வதேச திருட்டுச் செயலைத் தவிர வேறில்லை. அதாவது, ஒரு ஏகாதிபத்திய பறிமுதல் நடவடிக்கையாகும். இது, பூமியில் உள்ள ஒவ்வொரு நாடுகளும், மேற்கத்திய நலன்களுடன் முரண்பட்டால் அதன் இருப்புக்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை சமிக்ஞை செய்கின்றன.

உக்ரேன் தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் பிரகடனம், 2022 முதல் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 177.5 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது என்றும், “2026–2027 ஆம் ஆண்டிற்கான உக்ரேனின் அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுதிபூண்டுள்ளது” என்றும் பெருமை பீற்றிக் கொள்கிறது. மேலும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் தொடர்ந்து உக்ரேனுக்கு வழங்கப்படும்.

உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட “பாதுகாப்பு தயார்நிலை திட்ட வரைபடம் 2030” ன் (Defence Readiness Roadmap 2030) இந்தப் பணம் எந்த நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது. இது பின்வரும் அறிக்கையுடன் தொடங்குகிறது:

பாதுகாப்பு தயார்நிலை என்பது நவீன போருக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதையும் பெறுவதையும் உள்ளடக்கியது. இதன் பொருள் ஐரோப்பாவிற்கு ஒரு பாதுகாப்பு தொழில்துறை தளம் இருப்பதை உறுதி செய்வதாகும். இது, அதற்கு ஒரு மூலோபாய அனுகூலத்தையும் தேவையான சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மேலும் இது, நெருக்கடியான காலங்களில் அதி நவீன கண்டுபிடிப்புகளையும் வேகமான, பாரிய உற்பத்தியையும் வழங்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.

இது ஒரு ஐரோப்பிய போர் பொருளாதாரத்திற்கான ஒரு வரைபடமாகும். அதாவது, பாரிய ஆயுதமயமாக்கலுக்காக தொழில்துறை, நிதி மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைந்து அணிதிரட்டுவதாகும். மேலும், “இன்றைய அதிகரிக்கும் அபாயங்களை பிரதிபலிக்கும் வகையில், முயற்சிகளை விரைவுபடுத்தவும், அதிகரிக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது” என்று இந்த திட்ட வரைபடம் கூறுகிறது.

ரஷ்யா முக்கிய எதிரியாக அடையாளம் காணப்பட்டு, “எதிர்காலத்தில் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆவணத்தின் நோக்கம் உலகளாவியதாக உள்ளது:

“ஐரோப்பாவின் தயார்நிலை 360 டிகிரி அணுகுமுறையுடன் கூடிய பரந்த உலகளாவிய சூழலில் வேரூன்றியிருக்க வேண்டும். … காஸா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து ஆபிரிக்காவில் பல இரகசிய அல்லது வெளிப்படையான மோதல்கள் வரை, ஆசிய-பசிபிக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் முதல் ஆர்க்டிக் வரை, உலகின் பிற பகுதிகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது” என்று இந்த ஆவணம் கூறுகிறது.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவில் இருந்து சுயாதீனமாக அதன் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை தொடர, உலகளாவிய போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதாகும். அது, “பாரம்பரிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள் உலகின் பிற பிராந்தியங்களை நோக்கி தங்கள் கவனத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று வெளிப்படையாக குறிப்பிடுவதுடன், “ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைப்பாடும் திறன்களும் கட்டாயம் ... மாறிவரும் போரின் தன்மைக்கு ஏற்ப, நாளைய போர்க் களங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்” என்று முடிவு செய்துள்ளது.

இந்த திட்ட வரைபடமானது, 1930களின் மறு ஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு இணையான அளவிலான இலக்குகளை நிர்ணயிக்கிறது. இது, 2021 இல் 218 பில்லியன் யூரோவிலிருந்து 2025 இல் 392 பில்லியன் யூரோவாக ஐரோப்பிய பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரித்ததைக் கொண்டாடுவதுடன், மேலும் இதனை முடுக்கிவிடுவதற்கு அழைப்பு விடுக்கிறது. “ஐரோப்பாவை மீண்டும் ஆயுதமயமாக்குங்கள்” என்ற திட்டத்தின் கீழ், ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கை (SAFE) நிறுவனம் போன்ற புதிய நிதி வழிமுறைகள் மூலம், ஆயுதங்களுக்காக 800 பில்லியன் யூரோக்கள் வரை திரட்டப்படும். கடந்த ஜூன் மாதம், நேட்டோ உச்சிமாநாட்டில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு, 2035 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீத பாதுகாப்பு செலவின இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் கூடுதலாக 288 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும்.

இந்த வானைத் தொடுமளவிலான பிரமாண்டமான தொகைகளுக்கு கொடூரமான சிக்கன நடவடிக்கைகள், சமூக வேலைத்திட்டங்களை அழித்தல் மற்றும் பொது நிதியை சூறையாடுதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே நிதியளிக்க முடியும். “பாதுகாப்புத் தயார்நிலை” என்பது பணம் மற்றும் ஆயுதங்கள் மட்டுமல்ல, போருக்காக முழுக் கண்டத்தையும் மறுஒழுங்கமைக்க வேண்டும் என்று இந்த திட்ட ஆவணம் விளக்குகிறது. “ஐரோப்பிய ஒன்றியம் தழுவிய இராணுவ நடமாட்டப் பகுதியை நோக்கி” என்ற பிரிவின் கீழ் இது பின்வருமாறு முன்மொழிகிறது:

2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இராணுவ நடமாட்டப் பகுதி ஒன்று இணக்கமான விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் அமைக்கப்படும், மேலும் நேட்டோவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், ஐரோப்பிய யூனியன் முழுவதும் துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நில வழித்தடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ஆதரவு கூறுகளின் வலையமைப்பைக் கொண்டிருக்கும்.

ஐரோப்பாவை ஒரு ஒற்றை போர்க் களமாக மாற்றுவதே இதன் குறிக்கோளாகும். அதாவது, துருப்புக்களும் ஆயுத கவச வாகனங்களும் பால்டிக் பெருங்கடலில் இருந்து கருங்கடலுக்கு சுதந்திரமாக நகரக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த தளவாட மண்டலமாக இவற்றை மாற்றுவதாகும். பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு இராணுவத் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்களின் இயக்கத்தையும், போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக படையினர்களை நிலைநிறுத்துவதை நடைமுறைப்படுத்துவதற்கும் ஹாம்பர்க்கில் நடந்த Red Storm Bravo போன்ற பயிற்சிகள், இந்த இராணுவமயமாக்கலின் உள்நாட்டு பரிமாணத்தை முன்கூட்டியே எதிர்பார்க்கின்றன: அதாவது, உள்நாட்டில் எழும் எதிர்ப்பை ஒடுக்குவதாகும்.

இந்த மாற்றத்தில், ஜேர்மனி முன்னணியில் நிற்கிறது. பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியின் ஆதரவுடன், ஆளும் கூட்டணி மீள் ஆயுதமயமாக்கலுக்கான ஒரு ட்ரில்லியன் யூரோ கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 2025 பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் மொத்தம் 86.5 பில்லியன் யூரோக்களாக உள்ளது. இது, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். மேலும் 2029 ஆம் ஆண்டில் 150 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக இது உயரும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 3.5 சதவீதமாகும். உள்கட்டமைப்பு “இராணுவ தயார்நிலை” செலவுகள் சேர்க்கப்பட்டால், போர் தொடர்பான மொத்த செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை எட்டும். அதாவது, இது ஆண்டுதோறும் சுமார் 215 பில்லியன் யூரோக்களை எட்டும்.

பல்லாயிரக்கணக்கான புதிய இராணுவ மற்றும் சிவிலியன் பதவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டாய இராணுவ சேவை மீண்டும் நிலைநிறுத்தப்படும். போர் விமானங்கள், போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், புதிய டாங்கிகள், கவச வாகனங்கள், போர்க் கப்பல்கள், ட்ரோன்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஒரு பிரத்யேக விண்வெளி கட்டளை தளங்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. சான்சலர் பிரெடெரிக் மெர்ஸ், ஜேர்மனியை “ஐரோப்பாவின் வலிமையான மரபுசார் இராணுவமாக” ஆக்குவதற்கான தனது இலக்கை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்தக் கொள்கைகள், 1930 களில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தயாரிப்புகளை நினைவூட்டுகின்றன. அப்போது மீள் ஆயுதமயமாக்கல் மற்றும் உலக அதிகாரத்திற்கான உந்துதலுக்கு ஒரு பாசிச ஆட்சியை நிறுவுவது, ஜனநாயக உரிமைகளை அழிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவது ஆகியவை தேவைப்பட்டன. அதே தர்க்கம் இன்று மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஐரோப்பா எங்கிலும், ஆளும் உயரடுக்குகள் சமூக கோபத்தை ஒடுக்குவதற்கும், போருக்குத் தயாரிப்பு செய்வதற்கும் பிரிட்டனில் பராஜ், பிரான்சில் லு பென், இத்தாலியில் மெலோனி மற்றும் ஜேர்மனியில் AfD ஆகிய பாசிசவாத சக்திகளை வளர்த்து வருகின்றன.

புறநிலை போக்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் ஆயுதத் தொழிற்துறையை ஒரு ஐக்கியப்பட்ட போர் எந்திரத்திற்குள் ஒருங்கிணைப்பது, சர்வாதிகார ஆட்சியை நோக்கிய திருப்பத்துடன் கைகோர்த்து செல்கிறது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை குற்றமாக்குதல், மற்றும் பொலிஸ் படைகளை இராணுவமயமாக்குதல் ஆகிய அனைத்தும் பாரிய எதிர்ப்பு குறித்த ஆளும் வர்க்கத்தின் அச்சத்தை பிரதிபலிக்கின்றன.

ஏகாதிபத்தியத்தை போருக்கு உந்தித் தள்ளும் அதே முரண்பாடுகள்—எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான நெருக்கடி— புரட்சிகர எழுச்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன. மீள் ஆயுதமயமாக்கலுக்கு நிதியளிப்பதற்காக செல்வ வளத்தை பெருமளவில் மறு ஒதுக்கீடு செய்தல், வாழ்க்கைத் தரங்களை அழித்தல், மற்றும் வளர்ந்து வரும் அழிவுகரமான அணுஆயுத ஆபத்து ஆகியவை, தொழிலாள வர்க்கம் முழுவதிலும் எதிர்ப்பைத் தூண்டும்.

அமெரிக்காவில் ட்ரம்பின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிராக, அக்டோபர் 18 அன்று இடம்பெற்ற “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கு கொண்டனர். ஐரோப்பாவில், கிரீஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரான்சின் பிற இடங்களிலும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்துள்ளன. இவை வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பார்ந்த உலகளாவிய மீளெழுச்சியின் அறிகுறிகளாகும்.

ஆனால், தன்னிச்சையான எதிர்ப்புகள் மட்டும் போதாது. போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை அவற்றின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு நனவான அரசியல் வேலைத்திட்டத்துடன் இது ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அதன் 2016 “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அறிக்கையில், இன்று எரியும் அவசரத்தை பெறும் கொள்கைகளை பின்வருமாறு முன்வைத்தது:

  • போருக்கு எதிரான போராட்டம், சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின்னால் மக்கள் தொகையில் உள்ள அனைத்து முற்போக்கான கூறுபாடுகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும்.
  • புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமான பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குமான போராட்டத்தைத் தவிர, போருக்கு எதிரான எந்த தீவிர போராட்டமும் இருக்க முடியாது.
  • ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அவசியமான, முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும், முற்றிலும் மற்றும் ஐயத்திற்கிடமின்றி சுயாதீனமாகவும், அவற்றுக்கு விரோதமாகவும் இருக்க வேண்டும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டும் வகையில், சர்வதேச ரீதியாக இருக்க வேண்டும்.

ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்கொள்ளும் பணி தெளிவாக உள்ளது: அது, ஒவ்வொரு பணியிடத்திலும் சுற்றுப்புறத்திலும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குதல், எல்லைகளைக் கடந்து அவர்களின் போராட்டங்களை ஒன்றிணைத்தல் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு நனவான புரட்சிகர தலைமையை, குறிப்பாக ICFI இன் பிரிவுகளாக சோசலிச சமத்துவக் கட்சிகளை கட்டியெழுப்புதல் அவசியமாகும். முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து, அதற்குப் பதிலாக ஒரு சோசலிச உலகக் கூட்டமைப்பின் பாகமாக, —பூமியின் வளங்கள் இலாபத்திற்காக அல்ல, மனித தேவைக்காக பகுத்தறிவுடனும் ஜனநாயக ரீதியாகவும் பயன்படுத்தப்படும்— ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு வருவதன் மூலமாக மட்டுமே, மனிதகுலம் உலகப் போர் பேரழிவைத் தடுக்க முடியும்.

Loading