மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நவ-நாஜி ட்ரம்ப்பின் கூட்டாளியான ஸ்டீவ் பானன், கடந்த வியாழக்கிழமை தி எகனாமிஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி ட்ரம்ப் “குறைந்தபட்சம்” ஒரு பதவிக் காலமாவது பதவியில் இருப்பார் என்றும், அவரது அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு (MAGA) இயக்கத்தின் தலைவர்கள் அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மீறும் “ஒரு திட்டத்தை” கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்த சட்ட திருத்தம், ஒரு ஜனாதிபதியை இரண்டு பதவிக் காலங்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறுகிறது.
தி எகனாமிஸ்ட் இணையத் தளத்தில் வெளிவந்த 40 நிமிட நேர்காணலில், பானனும் அவரது உரையாசிரியர்களான தலைமை ஆசிரியர் ஜானி மின்டன் பெடோஸ் மற்றும் துணை ஆசிரியர் எட்வர்ட் கார் இருவரும், அக்டோபர் 18 அன்று, அமெரிக்கா எங்கிலும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீதிகளுக்கு கொண்டு வந்த பாரிய “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களை புறக்கணித்தனர். பரவலாக மக்களால் வெறுக்கப்படும் சர்வாதிகாரி 2028 ஆம் ஆண்டிலும் அதற்கு அப்பாலும் மூன்றாவது முறையாக நீடிப்பது “அமெரிக்க மக்களின் விருப்பம்” என்று பானன் கூறினார்.
வெள்ளை மாளிகையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரம்பும் அவரது சக சதிகாரர்களும் தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை பானனின் அறிக்கைகள் ஒப்புக்கொள்கிறது. அவர்கள் அரசியலமைப்பை தூக்கியெறிந்து ஜனாதிபதி சர்வாதிகாரத்தை திணிக்க சதி செய்து வருகின்றனர். ஆயினும்கூட, இந்த நேர்காணல் ஜனநாயகக் கட்சியிடமிருந்தோ அல்லது ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பிரதான ஊடகங்களிடமிருந்தோ எந்த தீவிரமான பதிலையும் பெறவில்லை.
இணையத்தில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலின் ஒரு பகுதி கீழே உள்ளது:
பானன்: சரி, அவர் மூன்றாவது முறையாகவும் பதவியேற்கப் போகிறார், எனவே 28லும் ட்ரம்ப் தான். ட்ரம்ப் 28 இல் ஜனாதிபதியாகப் போகிறார், மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜானி மின்டன் பெடோஸ்: எனவே 22 வது திருத்தம் என்னவாகிறது?
பானன்: இதற்கு பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. பொருத்தமான நேரத்தில், திட்டம் என்ன என்பதை நாங்கள் முன்வைப்போம். ஆனால், ஒரு திட்டம் உள்ளது. மேலும் 28 இல் ஜனாதிபதி ட்ரம்ப் ஜனாதிபதியாக இருப்பார். 28 இல் கிடைப்பதை விட 16 இலும் மற்றும் 24 இலும் அதிகமான வாய்ப்புகளை நாம் பெற்றோம். ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பார். மேலும், அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பது நாட்டிற்குத் தேவையானது.நாங்கள் தொடங்கியதை முடிக்க வேண்டும். அதை முடிக்கும் விதத்தில், ட்ரம்ப் செய்ய வேண்டும். ட்ரம்ப் ஒரு வாகனம். இது உங்களை பைத்தியம் பிடிக்க வைக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் தெய்வீக அருளின் வாகனம் ... குறைந்தது ஒரு பதவிக் காலத்திற்காவது அவர் எமக்குத் தேவை, அவர் அதை 28 இல் பெறுவார்.
அவர் உள்நாட்டுப் போரைப் பற்றிப் பேசுகிறார் என்பதை பானன் தெளிவுபடுத்தினார். “இது இனி விவாதம் அல்ல. இந்த மக்களுக்கு நீங்கள் நியாயப்படுத்த முடியாது... நாம் அரசியல் போரில் ஈடுபட்டுள்ளோம். இறுதியில் நாம் தான் பொறுப்பு” என்று அவர் கூறினார்.
தனது கதாநாயகனான அடால்ஃப் ஹிட்லரின் நாடகப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு, “நிறுவனங்களைக் கைப்பற்றிய பின்னர் அவற்றை களையெடுப்பதே உத்தி” என்று பானன் கூறினார். 1923 ஆம் ஆண்டு “மூனிச் பீர் ஹால் ஆட்சிக் கவிழ்ப்பு” தோல்வியடைந்த பிறகு, ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் தீர்க்கமான பிரிவுகளின் ஆதரவுடன், வைமர் குடியரசின் நிறுவனங்கள் மூலம் தான் ஆட்சிக்கு வருவேன் என்று ஹிட்லர் தீர்மானித்தார். 1933 ஜனவரியில், நெருக்கடியில் சிக்கிய ஆளும் வர்க்கம் இனியும் ஜனநாயக வழிமுறைகளைக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து, தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு நாஜிக்களை நோக்கித் திரும்பியபோது, இதுதான் நடந்தது.
ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனத்தாலும் உடந்தையாலும் சாத்தியமாக்கப்பட்ட, ஜனவரி 6, 2021 அன்று தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பின் இலக்குகளை ட்ரம்ப் செயல்படுத்தி வருகிறார். ஜனவரி 6 க்குப் பிறகு, ஒரு “வலுவான குடியரசுக் கட்சிக்கு” அழைப்பு விடுத்த ஜோ பைடென், ட்ரம்ப் மற்றும் அவரது சக சதிகாரர்கள் மீது வழக்குத் தொடர தீவிரமாக எதுவும் செய்யவில்லை. 2024 தேர்தலுக்கு முன்னதாக, பைடென், கமலா ஹாரிஸ் மற்றும் பிற முன்னணி ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் ஒரு பாசிஸ்ட் என்றும் ஒரு சர்வாதிகாரத்தை திணிப்பார் என்றும் எச்சரித்தனர். ஆனால், இப்போது ட்ரம்ப் அதைச் செய்து வருவதால், ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து இதுபோன்ற அனைத்துப் பேச்சுகளும் கைவிடப்பட்டுள்ளன.
இந்த நேர்காணலில், ட்ரம்ப் “பெரு நிறுவனவாதத்தை” முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாகவும், முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதன் மூலமாகவும் தொழிலாளர்கள் மற்றும் “சிறிய மனிதனின்” நலன்களுக்காக ஆட்சி செய்கிறார் என்ற அபத்தமான கூற்றை பானன் முன்வைத்தார். அமெரிக்காவில் நிதியியல் தன்னலக்குழுவின் வெளிப்படையான பிரதிநிதியாக இருக்கும் பல பில்லியனர்கள் குண்டர்கள் பற்றி இது கூறப்பட்டது. கிரிப்டோ நிதி பரிவர்த்தனையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பில்லியனர் சாங்பெங் ஜாவோவை ட்ரம்ப் மன்னித்த ஒரு நாள் கழித்து இந்த நேர்காணல் வெளியிடப்பட்டது. ட்ரம்பின் மகன்களுடன் விரிவான வணிக உறவுகளைக் கொண்ட ஜாவோ, பைடென் நிர்வாகத்தின் போது பணமோசடி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை —அமெரிக்காவின் ஜனநாயகப் புரட்சிகளின் மரபை அவர் தகர்த்ததன் வெளிப்பாடு— இடித்து ஒரு பெரிய களியாட்ட அரங்கத்தை கட்டுவதுக்கு டரம்ப் ஏற்பாடு செய்த வேளையிலேயே இந்த நேர்காணலும் இடம்பெற்றது. இந்த மார்-ஏ-லாகோ பாணி அரக்கத்தனத்திற்கு மெட்டா, அமேசான், ஆப்பிள், கேட்டர்பில்லர், காம்காஸ்ட், கூகிள், லாக்ஹீட் மார்ட்டின், மைக்ரோ சொப்ட், பாலன்டிர், யூனியன் பசிபிக், லுட்னிக் குடும்பம், ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் (பிளாக் ஸ்டோன்) மற்றும் விங்க் லெவோஸ் சகோதரர்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நன்கொடையாளர்களால் பணம் செலுத்தப்படுகிறது.
பிரிட்டனில் செய்தி ஊடக ஸ்தாபனத்தின் கோட்டையாக விளங்கும் தி எகனாமிஸ்ட், பானனுக்கு அவரது பாசிச இழிவுகளை உமிழ்வதற்கு ஒரு தளத்தை வழங்கியது என்ற உண்மையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர் நேர்காணலை நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் பானனின் பதவி உயர்வு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. நேர்காணல் முழுவதிலும் அவர்கள் நவ-நாஜி வாய்வீச்சாளருக்கு மகத்தான மரியாதையைக் கொடுத்தனர்.
இந்த வெளியீடு அதன் தற்போதைய இதழை “வரவிருக்கும் கடன் அவசரநிலை” மற்றும் “அரசாங்கங்கள் முடங்கப் போகின்றன” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அறிக்கைக்கு அர்ப்பணிக்கிறது. இது, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உரிமை சமூக திட்டங்கள் மீது பாரிய தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று வாதிடுவதுடன், ஓய்வு பெற்றவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று புகார் கூறுகிறது. பேட்டியின் ஒரு கட்டத்தில், பானன், “முதலாளித்துவத்தை மீட்பதற்கான ஒரு போரில் இருக்கிறோம்” என்று அறிவித்து, தி எகனாமிஸ்ட் பத்திரிகையை உயர்த்தி, “இந்த இதழில், நாங்கள் நிதியியல் பிரளயத்தை நோக்கி செல்கிறோம் என்று நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள்” என்று கூறினார்.
சர்வதேச அளவில், ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் மற்றும் பானனின் வாய்வீச்சுக்களின் பின்னணியில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போர் பற்றிய உண்மையான நிகழ்ச்சி நிரல் உள்ளடங்கியுள்ளது. இந்தக் கொள்கைகள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது. சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே இவற்றை செயல்படுத்த முடியும்.
அவரது நேர்காணலில், இங்கிலாந்தில் நைஜல் ஃபராஜின் சீர்திருத்தக் கட்சி, பிரான்சில் லு பென்னின் தேசிய பேரணிக் கட்சி, ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி, ஸ்பெயினில் வோக்ஸ் மற்றும் மெலோனியின் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி ஆகியவற்றை மேற்கோளிட்டு, ஒரு சர்வதேச அலையின் பாகமாக, பானன் தனது “ஜனரஞ்சக, தேசியவாத” (அதாவது பாசிச) இயக்கங்களை மேற்கோள் காட்டினார்.
பாசிச எதிர்ப்புரட்சியின் ஒரு மாபெரும் மூலோபாயவாதி என்று தன்னைத்தானே கற்பனை செய்து கொள்ளும் பானன், தனது திட்டத்தை ஒரு முக்கியமான அனுமானத்தின் அடிப்படையில், அதாவது ஜனநாயகக் கட்சி உச்ச நீதிமன்றத்தில் செயலற்ற சட்ட மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதற்கும், வாய்மொழி மறுப்பை முணுமுணுப்பதற்கும் அப்பால், அரசியலமைப்பை நிலைநிறுத்த எதுவும் செய்யாது என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தார். ஜனநாயகக் கட்சியினர் மீது அழுத்தம் வரும்போது, ட்ரம்பின் முன் அவர்கள் வெட்கமின்றி மண்டியிடுவார்கள்.
இந்த அனுமானம் முற்றிலும் சரியானது. கடந்த வெள்ளிக்கிழமை, பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், பானனின் கருத்துக்கள் “ஆபத்தான சர்வாதிகார பேச்சு” என்றும், “சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது” மற்றும் “நமது அரசியலமைப்பின் வரம்புகளை சோதிக்கிறது” என்ற ட்ரம்பின் பாணியின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் முணுமுணுத்தார். செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் பானனின் அறிக்கைகள் “உணர்ச்சியை உறைய வைப்பதாகவும்”, MAGA இயக்கம் “அரசியலமைப்பு பாதுகாப்புகளை அரிக்கிறது” என்பதற்கான ஆதாரம் என்றும் கூறினார்.
பானன் மீது வழக்குத் தொடரவும், கைது செய்யவும் அல்லது அவரது சக சதிகாரர்களின் அடையாளங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று இவர்கள் கோரவும் இல்லை. எப்போதும் போல, சர்வாதிகாரத்திற்கான உந்துதலைத் தடுக்க பாரிய நடவடிக்கைக்கு அவர்கள் எந்த அழைப்பும் விடுக்கவில்லை.
கடந்த ஞாயிறன்று தி எகனாமிஸ்ட் பேட்டி ஸ்தாபக செய்தி ஊடகத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. “தேசத்தை எதிர்கொள்” என்ற ஞாயிற்றுக்கிழமை பேச்சு நிகழ்ச்சியில் தோன்றிய ஜெஃப்ரிஸ், பானனின் அறிக்கைகள் அல்லது ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. தொகுப்பாளர் மார்கரெட் பிரென்னனும் அவற்றைப் பற்றி கேட்கவும் இல்லை.
ஜனநாயகக் கட்சியினரின் எந்தப் பிரிவும், அதன் “முற்போக்கான” பிரிவு என்றழைக்கப்படுவது உட்பட, ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கான உந்துதலைத் தடுக்க ஒரு விரலையும் உயர்த்தப் போவதில்லை. கடந்த வாரம், தனது சிடுமூஞ்சித்தனமான சந்தர்ப்பவாதத்திற்கு எல்லையே இல்லாத பெர்னி சாண்டர்ஸ், ட்ரம்ப்பின் ஆதரவாளர் டிம் டில்லனின் பொட்காஸ்டில் தோன்றி, புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்பின் போரை ஆதரித்தார். எல்லையைப் பாதுகாப்பதில் பைடெனை விட “ட்ரம்ப் சிறப்பாகச் செயல்படுகிறார்” என்று கூறினார்.
ஜனநாயக உரிமைகள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் அலட்சியம் ஏற்கனவே 2000 ஆம் ஆண்டிலேயே நிரூபிக்கப்பட்டது. மக்கள் வாக்குகளில் தோல்வியடைந்த ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிற்கு வெள்ளை மாளிகையை வழங்குவதற்காக, புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திய அல் கோர், உச்ச நீதிமன்றத்தில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையினரால் தேர்தல் திருடப்பட்டதை ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத்தளம், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எந்த தீவிரமான ஆதரவும் இல்லை என்பதை இது காட்டுகிறது என்று எழுதியது.
அரசியலமைப்பிற்கு முரணான, அதாவது சட்டவிரோத வழிமுறைகள் மூலமாக ட்ரம்ப் அதிகாரத்தில் இருப்பார் என்ற பானனின் அறிவிப்பு, ஜனநாயகம் மற்றும் அதன் பாரம்பரிய அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளில் இருந்து முறித்துக் கொள்வதைக் குறிக்கிறது. ஆனால், இந்த உண்மையிலிருந்து ஒரு முக்கியமான அரசியல் முடிவு வருகிறது: ட்ரம்ப் சட்டத்தை மீறி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக இருந்தால், இதன் அர்த்தம், தேர்தல் நிகழ்ச்சிப் போக்கின் எல்லைகளுக்கு வெளியே, பாரிய நடவடிக்கை மூலமாக மட்டுமே அவரை பதவியில் இருந்து அகற்றுவது சாத்தியமாகும் என்பதாகும். ஒருவேளை திரு. பானன் தனது குற்றவியல் மூலோபாயத்தின் உட்குறிப்புக்கள் பற்றி இறுதிவரை சிந்தித்திருக்க மாட்டார். ஆனால், தொழிலாள வர்க்கம் புரட்சியை நாடுவதை அவர் சட்டபூர்வமாக்குகிறார் என்ற உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது.
வெள்ளை மாளிகையில் பானன் மற்றும் அவரது கூட்டாளிகளின் சதி, 1776 ஆம் ஆண்டில் ஜெபர்சன் சுதந்திர பிரகடனத்தில் கற்பனை செய்திருந்த சூழ்நிலைக்கு அரசியல் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளது:
வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை தேடுதல் ஆகிய இலக்குகளை எந்தவொரு அரசாங்க வடிவமும் அழிக்கும்போது, அதை மாற்றவோ அல்லது ஒழிக்கவோ, புதிய அரசாங்கத்தை நிறுவவோ, அத்தகைய கொள்கைகளின் அடிப்படையில் அதன் அடித்தளத்தை அமைத்து, அதன் அதிகாரங்களை அத்தகைய வடிவத்தில் ஒழுங்கமைக்க, அது அவர்களின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்த மிகவும் சாத்தியமானதாகத் தோன்றும்.
சமகால சொற்களில், சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான சமூக சக்தியாக அணிதிரட்டுவதைச் சார்ந்துள்ளது. ஜனநாயகத்துடன் பொருந்தாத முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களின் கைகளில் இருந்து தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை பறிக்க வேண்டும். மக்களில் மிகப் பெரும்பான்மையினரை உள்ளடக்கிய தொழிலாள வர்க்கத்தின் “பாதுகாப்பும் மகிழ்ச்சியும்” சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்குவதைக் கோருகிறது.
ஜனநாயகக் கட்சியில் இருந்து முற்றிலுமாக முறித்துக் கொள்வதே இந்தப் போராட்டத்திற்கான முன் நிபந்தனையாகும். ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, பெருநிறுவன தன்னலக்குழுவின் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிய வைப்பது ஆபத்தானது. தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு இயக்கமும், தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து முதலாளித்துவ அமைப்புமுறையின் அடித் தளங்களை சவால் செய்யும் என்று ஜனநாயகக் கட்சியினர் பீதியடைந்துள்ளனர். பாசிச ஆட்சியின் வாய்ப்பை விட இது மிக அதிகம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
அக்டோபர் 18 ஆர்ப்பாட்டங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிக்கு மக்களிடையே நிலவும் ஆழ்ந்த குரோதப் போக்கைக் குறிப்பிட்டது. “எவ்வாறிருப்பினும், சர்வாதிகாரத்தை நிறுத்த கோபமும் சீற்றமும் மட்டும் போதுமானதாக இல்லை. இந்தப் போராட்டத்தை வழிநடத்துவதற்கான ஒரு தெளிவான வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயம் அவசியமானது, அது மிகவும் முக்கியமானது” என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது,
அக்டோபர் 18 இல் இருந்து, ட்ரம்ப் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு எதிரான அவரது போரை முடுக்கிவிட்டுள்ளார். சிக்காகோ, நியூ யோர்க் மற்றும் பிற நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்க, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) கெஸ்டாபோவை கட்டவிழ்த்து விட்டதோடு, நாடு முழுவதும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கும் கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அவர், இலத்தீன் அமெரிக்க கடற்கரையில் படகுகள் மீது சட்டவிரோதமாக குண்டுவீச்சு நடத்தி வருகிறார் மற்றும் வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த ஒரு விமானம்தாங்கி கப்பல் தாக்குதல் அணியை அனுப்பியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைந்து, ஒவ்வொரு பணியிடத்திலும், தொழிற்சாலையிலும், சுற்றுப்புறத்திலும் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கவும், ஒன்றிணைந்து செயல்படவும், தொழிலாளர்களின் குழுக்களை கூட்டாக ஒழுங்கமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இந்தப் போராட்டம் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஆல் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் குழுக்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை போருக்கு எதிரான போராட்டத்துடனும், வேலைகள், ஊதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவத்துக்கான போராட்டத்துடனும் இணைக்க வேண்டும்.
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்தும், சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்தும் பிரிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நிதி தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஜனநாயக தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப் பயன்பாடுகளாக மாற்றுவதும் அவசியமாகும். ஒரு சிலரின் கைகளில் குவிந்துள்ள அளப்பரிய செல்வம் தனியார் இலாபத்திற்காக அல்லாமல், மனித தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்காக போராட விரும்பும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
