மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் கரீபியன் கடலில் பிரமாண்டமான கடற்படையை அணிதிரட்டி வரும் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மற்றும் சட்டவிரோத போரை வெளிப்படையாக தயாரித்து வருகிறது.
ட்ரம்பின் உத்தரவின் பேரில், மத்திய தரைக்கடல் கடலில் இருந்து கரீபியன் கடற் பகுதிக்கு உலகின் மிகப் பெரிய விமானந்தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மீண்டும் நிலைகொள்ள வைப்பதாக யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். வியாழக்கிழமை நடந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, இதில் இரண்டு அமெரிக்க B-1 குண்டுவீச்சு விமானங்கள் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு வெட்கக்கேடான படை நடவடிக்கையில் ஈடுபட்டன.
இது, கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் சிறிய படகுகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து நிகழ்ந்தது. இதில், அமெரிக்க இராணுவப் படைகள் 10 சிறிய மீன்பிடி படகுகளை அழித்து, குறைந்தது 43 பேரைக் கொன்றன. வெனிசுவேலா நாட்டின் கடற்கரையிலிருந்து ஆறு மைல்கள் தொலைவில் உள்ள தீவு நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கடற்கரையில், இந்த தாக்குதலில் காணாமல் போனவர்களின் சிதைந்த உடல்கள், பயங்கரமான தீக்காயங்களுடன் கரையொதுங்கத் தொடங்கியுள்ளன.
விமானம் தாங்கிக் கப்பலும் அதனுடன் இணைந்த கப்பல்களும், ஒரு விமானத் தாக்குதல் குழுவை உருவாக்கி, மத்தியதரைக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து வெனிசுவேலாவின் கடற்கரை பகுதியில் நிலைநிறுத்த சுமார் ஒரு வாரம் ஆகும். ஆனால், வெனிசுவேலாவிற்குள் உள்ள இலக்குகள் மீதான விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற தாக்குதல்கள் எந்த நேரத்திலும் தொடங்கக்கூடும். ஏனெனில், இந்தப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும், அமெரிக்கா தரை வழித் தாக்குதல்களுக்கு தனது கவனத்தை திருப்பும் என்றும் ட்ரம்ப் பெருமிதம் கொண்டார்.
வெனிசுவேலா கடல்பகுதியில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்க கடற்படைப் பிரிவில் 70 போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் கொண்ட ஒரு விமானம் தாங்கிக் கப்பல், மேலும் 30 சாய்வு-சுழற்சி விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் கொண்ட ஒரு ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல் மற்றும் கிட்டத்தட்ட 2,000ம் தாக்குதல் தரையிறங்கும் படையின் முன்னணி கடற்படையினர், இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணை கப்பல், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட நாசகாரி கப்பல்கள் மற்றும் பிற ஆதரவுக் கப்பல்கள் ஆகியவை நிலை கொண்டிருக்கும்.
இது போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு படை அல்ல என்று சொல்லத் தேவையில்லை. 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும், புவியியல் ரீதியாக ஈராக்கை விட இரண்டு மடங்கு பெரிய, மற்றும் புவியியல் ரீதியாக ஆப்கானிஸ்தானை விட ஒன்றரை மடங்கு பெரிய நாடான வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதே இதன் ஒரே நோக்கமாக உள்ளது. ஏறக்குறைய நாட்டின் தெற்கிலுள்ள பாதிப் பகுதி, வெப்பமண்டல காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது, அமேசான் ஆற்றுப் படுகையின் ஒரு பகுதியாகும், இது முக்கியமாக பிரேசிலின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
வலதுசாரி பிரிட்டிஷ் செய்தித்தாளான டெய்லி டெலிகிராப்பில் வெளியான ஒரு செய்தி, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலோ மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ட்ரம்பின் தாக்குதலுடன் பின்வருமாறு தொடர்புபடுத்தியுள்ளது:
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நெருக்கமான சில வட்டாரங்கள், ஒரு படையெடுப்பு கடற்படையை ஒன்று சேர்ப்பது, குடியேற்றம் என்ற தனிக் கொள்கை தலைவலியைத் தீர்க்க திரு. ட்ரம்பிற்கு உதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய, ஜேர்மன் மற்றும் இத்தாலிய பிரஜைகளை சிறையில் அடைக்க கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட அன்னிய எதிரிகள் சட்டத்தை மீண்டும் புதுப்பித்து, வெனிசுலா நாட்டினரை மொத்தமாக தடுத்து வைத்து, நாடு கடத்துவதற்கு போரை அறிவிப்பது உதவும். 17 ஆம் நூற்றாண்டின் சட்டத்தின் கீழ் [உண்மையில் 18 ஆம் நூற்றாண்டு], அறிவிக்கப்பட்ட போர் காலங்களில் அல்லது ஒரு எதிரி அரசாங்கம் “படையெடுப்பு அல்லது கொள்ளையடிக்கும் ஊடுருவலை” மேற்கொண்டால், ஜனாதிபதி அந்த எதிரி நாட்டின் குடிமக்களை குறிவைக்கலாம்.
ஜனாதிபதி, தனது இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில், போர்க்காலச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினார். ஆனால் பின்னர் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. வெனிசுவேலாவுக்கு எதிரான தக்குதலின் இரண்டு முக்கிய கட்டமைப்பாளர்களாக வெளியுறவுத்துறை செயலாளரான மார்கோ ரூபியோ மற்றும், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ட்ரம்பின் “மூளையாகக்” கருதப்பட்டுவரும் ஸ்டீபன் மில்லர் இருக்கின்றனர். வெனிசுவேலா மற்றும் போதைப்பொருள் கடத்தல் படகுகள் ட்ரம்பின் மிகப்பெரிய வெறித்தனங்களின் சிக்கலான கலவையாக மாறுகின்றன: அவை, தேசிய பாதுகாப்பு, குடியேற்றம் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஆகியவைகளாகும்.
வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு முழு அளவிலான போர் ஏற்பட்டால், அமெரிக்காவிற்குள் வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரின் சட்டபூர்வ நிலைப்பாடு திடீரென மாறும். ட்ரம்ப் ஏற்கனவே அன்னிய எதிரிகள் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். இருப்பினும், இது நீதிமன்றங்களால் சில வழிகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை போன்ற வேறு எந்த சட்டப்பூர்வ பரிசீலனைகளையும் பொருட்படுத்தாமல், வெனிசுவேலா குடியுரிமை பெற்றவர் உடனடியாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தற்போது அமெரிக்காவில் பல மில்லியன் வெனிசுவேலா புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களைத் தடுத்து வைக்க ஏராளமான குடியேற்ற முகவர்கள், பொலீசார் மற்றும் துருப்புக்கள் தேவைப்படும். மேலும் பாரிய வதை முகாம்களில் மட்டுமே அவர்களை தங்க வைக்க முடியும்.
கடந்த வாரயிறுதியில் தி அட்லாண்டிக் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய பென்டகனின் தெற்கு கட்டளைத் தளபதியான அட்மிரல் ஆல்வின் ஹோல்சிக்கும், யுத்த அமைச்சர் ஹெக்செத்துக்கும் இடையே சிறிய படகுகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக ஒரு “பதட்டமான சந்திப்பை” விவரித்தது. அதன் பிறகு, ஹோல்சி தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தார். அவரது மூன்று ஆண்டு பதவிக்காலத்தில், அந்த உயர் பதவியை அவர் முடித்து வெறும் ஒரு வருடம் மட்டுமே ஆகிறது.
பத்திரிகை தெரிவித்தது:
ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் வந்தவுடன், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலைப் பாதுகாக்க இந்தக் கோடையில் நிறுத்தப்பட்ட எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையிலான கப்பல்களை அமெரிக்கா கரீபியன் கடல் பகுதியில் வைத்திருக்கும்.
அமெரிக்க இராணுவ சொத்துக்கள் இப்பகுதியில் குவிந்துள்ளதால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை வீழ்த்துவது குறித்த நிர்வாகத்தின் வாய்வீச்சுக்கள் பெருகிய முறையில் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. “மதுரோவின் சடலம் அமெரிக்காவின் கைகளில் இருக்கும்போது” ட்ரம்ப் நிர்வாகம் அதன் இராணுவ நடவடிக்கைத் திட்டங்களில் காங்கிரஸுடன் ஒத்துழைக்கும் என்று வெள்ளை மாளிகை வட்டாரம் இந்த வாரம் செமாஃபோர் இணையத் தளத்திற்கு தெரிவித்தது.
சனிக்கிழமையன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி:
சமீபத்திய வாரங்களில் பென்டகன், மிதக்கும் சிறப்பு நடவடிக்கை தளமாக மாற்றப்பட்ட ஒரு சிவிலியன் கப்பலான MV Ocean Trader-ஐயும் கரீபியன் கடல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. இதிலிருந்து குறுகிய நேரத்தில் துருப்புக்களை களத்திற்கு அனுப்ப முடியும். கரீபியனில் இந்தக் கப்பலின் இருப்பு, உலகின் மிகவும் ஆபத்தான பணிகளை ஆதரிக்கும் ஒரு உயரடுக்கு ஹெலிகாப்டர் பிரிவான 160வது சிறப்பு நடவடிக்கை விமானப் படைப்பிரிவின் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களை நிலைநிறுத்துவதோடு ஒத்துப்போகிறது.
ட்ரம்ப் அச்சுறுத்தியதைப் போல, வெனிசுவேலாவில் உள்ள தரை இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அல்லது தலைநகர் காரகாஸில் உள்ள வெனிசுவேலாவின் தலைமைக்கு எதிரான ஒரு தலை துண்டிக்கப்பட்ட தாக்குதலுக்கு கூட இந்தப் படைகள் பயன்படுத்தப்படலாம். அமெரிக்க நாசகாரிக் கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லி மற்றும் கடற்படைப் பிரிவு இந்த வாரம் டிரினிடாட்டைப் பார்வையிட்டு வெனிசுலா கடற்கரையிலிருந்து ஆறு மைல்கள் தொலைவில் நிலைகொள்ள உள்ளன.
ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ரொபர்ட் ஓ’பிரையனை மேற்கோள் காட்டிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “நெருக்கடி மண்டலத்திற்கு ஒரு விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது என்பது நிலைமையின் தீவிரம் குறித்து அமெரிக்கா வெளியிடக்கூடிய மிகத் தெளிவான அறிக்கையாகும்... ஃபோர்டு அதிரடிப்படை பயன்படுத்தக்கூடிய போரின் பலம், [நிக்கோலஸ்] மதுரோ ஆட்சியின் இராணுவத்தைத் தோற்கடிக்கப் போதுமானது. இது, நாட்டின் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மரியா மச்சாடோவை ஆட்சியில் அமர்த்துவதற்கான முக்கிய படியாக இருக்கும்” என்று எழுதியது.
இந்தக் கடைசி அறிக்கை குறிப்பிடத்தக்கது. ஏனெனில், 2024ல் இடம்பெற்ற தேர்தல்களில் ஒரு வாக்கு கூட பெறாத மச்சாடோ, தேர்தல்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை. இருப்பினும், அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவில் ஒரு புதிய அமெரிக்க ஆதரவு ஆட்சியின் முன்னணி பெண்ணாக அவரை மாற்றியது.
வெனிசுவேலாவுக்கு எதிரான சட்டவிரோதப் போரை நோக்கி ட்ரம்ப் நிர்வாகம் கட்டமைத்து வருவது குறித்து ஜனநாயகக் கட்சி பெரும்பாலும் மௌனமாக இருந்து வருகிறது. வெள்ளை மாளிகையால் உருவாக்கப்பட்ட சட்ட வாதத்தின் பெரும்பகுதி, ஒபாமா நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட “இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை” அடிப்படையாகக் கொண்டது. இது, அல்-கொய்தா பயங்கரவாதிகளின் “சுயவிவரத்திற்கு” பொருந்தக்கூடிய நபர்களுக்கு எதிராக, அவர்களின் உண்மையான அடையாளங்கள் தெரியவில்லை என்றாலும் கூட, அவர்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நியாயப்படுத்தியது. இதேபோல், கரீபியன் மீனவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் “சுயவிவரத்திற்கு” பொருந்துவதாகக் காட்டப்படுகிறார்கள்.
இந்த மாத தொடக்கத்தில், ஜனநாயகக் கட்சி செனட்டர்களான ஆடம் ஷிஃப் (கலிபோர்னியா) மற்றும் டிம் கெயின் (வேர்ஜீனியா) ஆகியோர் இந்தத் தக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்மானத்தை ஆதரித்தனர். 48க்கு 51 என்ற கணக்கில் தோல்வியடைந்த வாக்கெடுப்பிற்கு, ராண்ட் பால் (கென்டக்கி) மற்றும் லிசா முர்கோவ்ஸ்கி (அலாஸ்கா) மட்டுமே ஆதரித்த குடியரசுக் கட்சியினர் ஆவர். இதற்கு எதிராக வாக்களித்த ஒரே ஜனநாயகக் கட்சிக்காரர் ஜோன் ஃபெட்டர்மேன் (பென்சில்வேனியா) மட்டுமே ஆவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை “Meet the Press” இல் ஒரு குறிப்பிடத்தக்க நேர்காணலில், அரிசோனாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரூபன் கலேகோவிடம், போதைப்பொருள் படகுகள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்துடன் ஒத்துப்போகின்றனவா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இல்லை, இது கொலை... இந்த ஜனாதிபதி சட்டவிரோதமாக ஏதாவது செய்கிறார் என்று உணர்ந்தால், அவர் கடலோர காவல்படையைப் பயன்படுத்த வேண்டும். ஒரு போர் நடவடிக்கையாக இருப்பதால்தான், நீங்கள் எங்கள் இராணுவத்தைப் பயன்படுத்துகிறீர்கள், பின்னர் நீங்கள் முதலில் வந்து எங்களுடன் பேசுங்கள். ஆனால் இது ஒரு கொலை” என்று பதிலளித்தார்.
“Meet the Press” நேர்காணல் நிகழ்ச்சியை நடத்திய கிறிஸ்டன் வெல்கர் இந்த குணாதிசயத்தைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல், கருத்து தெரிவிக்காமல் கடந்து சென்றார். பின்னர் அரசாங்கப் பணி முடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதித்த ரூபன் கேலிகோ, ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ட்ரம்பை ஒரு கொலைகாரன் என்று அழைப்பதற்கும் அவருடன் பேச்சுவார்த்தை மேசையில் இடம் பெறுவதற்கும் இடையே எந்த முரண்பாடும் இருப்பதாக கலேகோவோ அல்லது வெல்கரோ சுட்டிக்காட்டவில்லை.
இதற்கிடையில், அரிசோனாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் மார்க் கெல்லி, ABC நியூஸின் “இந்த வாரம்” நிகழ்ச்சியில் பேசுகையில், கடற்படைத் தாக்குதல்களை “கேள்விக்குரியது” என்று வெறுமனே அழைத்தார். மேலும், ட்ரம்ப் அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு காங்கிரஸைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
இந்த வேறுபாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சிகள் என்ற முறையில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான அடிப்படை ஒற்றுமையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்றைய ட்ரம்பைப் போலவே, ஒபாமா மற்றும் பைடென் போன்ற ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதிகள், ட்ரோன் ஏவுகணை படுகொலைகள் மற்றும் லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சு மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் போன்ற ஏகாதிபத்திய படுகொலை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
