மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்களன்று, ட்ரம்ப் நிர்வாகம் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நான்கு பொதுமக்களின் படகுகளுக்கு எதிராக ஒரு புதிய தொடர்ச்சியான குற்றவியல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்தது. கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து இலத்தீன் அமெரிக்க கடல் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திவரும் சட்டத்திற்குப் புறம்பான காட்டுமிராண்டித்தனமான படுகொலைத் தாக்குதலில், இது மிகக் கொடியது ஆகும்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நடவடிக்கையானது, வன்முறை மற்றும் தாக்குதல் வீச்சின் பெரிய விரிவாக்கத்தைக் குறித்து நிற்கிறது. இதில், மூன்று வெவ்வேறு ஏவுகணைத் தாக்குதல்களில் தகர்க்கப்பட்ட நான்கு படகுகளில் இருந்த 14 பேர்கள் கொல்லப்பட்டனர். மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறியில், இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கையை 57 ஆகக் கொண்டு வந்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் குறித்த ஊடகச் செய்திகள், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் உள்ள பாசிஸ்டுகள் நிறுவிய கொடூரமான நடத்தைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும், அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலைகள், சமூக ஊடகங்களில் நீதிக்கு புறம்பான மரணதண்டனைகள் என்றால் என்ன என்பதற்கான வீடியோக்களுடன் எக்காள முழக்கத்துடன் பேசப்பட்டன.
“யுத்த அமைச்சர்” பீட் ஹெக்ஸெத், அடையாளம் தெரியாத தேசிய இனங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து X தளத்தில் பெருமை பீற்றிக் கொண்டார். “இந்த சிறிய படகுகள், அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழிகளில் பயணித்து, போதைப்பொருட்களை எடுத்துச்” சென்றதாகவும், அவற்றின் குழு உறுப்பினர்கள் “போதைப்பொருள் பயங்கரவாதிகள்” என்றும் அவர் மோசடியான கூற்றை மீண்டும் கூறினார்.
இலக்கு வைக்கப்பட்ட எந்தவொரு படகுகளோ அல்லது அவற்றின் பணியாளர்களோ போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்பதை நிரூபிக்க வெள்ளை மாளிகையால் ஒரு துளி ஆதாரம் கூட முன்வைக்கப்படவில்லை - எப்படியிருந்த போதிலும் இது, சர்வதேச கடற்பரப்பில் நிராயுதபாணியாக இருந்த பொதுமக்களை வெளிப்படையாகக் குற்றவியல் ரீதியில் படுகொலை செய்வதை சட்டப்பூர்வமாக்காது.
ஆனால் அமெரிக்க நிர்வாகம், அல் கபோன் புனித காதலர் தின படுகொலையை தார்மீக ரீதியாக நியாயப்படுத்த ஆர்வம் காட்டியதைப் போலவே, இதில் அதன் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டவில்லை. அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் பிரமாண்டமான சக்தி, வெளிப்படையாக சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கும் இலக்குகளுக்கு சேவை செய்யும் ஒரு பிரம்மாண்டமான குற்றவியல் நிறுவனமாக பயன்படுத்தப்படுகிறது.
சட்டவிரோத போதைப்பொருள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம், அவர் அழித்த ஒவ்வொரு சிறிய மீன்பிடி படகும் 50,000 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று ட்ரம்ப் முற்றிலும் அபத்தமான கூற்றை முன்வைத்தார். இந்தக் கணக்கு, அரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்களுக்கு சமமாகும். இருப்பினும், அமெரிக்காவில் ஆண்டுதோறும் அதிகப்படியான இறப்புகளின் எண்ணிக்கை 100,000 க்கும் குறைவாக உள்ளது. மேலும் பெரும்பாலானவை தென் அமெரிக்காவிருந்து அல்ல, மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தப்படும் ஃபெண்டானைல் சக்திவாய்ந்த மருந்தால் ஏற்படுகின்றன. அமெரிக்க ஏவுகணைகளால் தாக்கப்பட்ட சிறிய படகுகள் அமெரிக்காவில் இருந்து கிட்டத்தட்ட 3,000 மைல்கள் தொலைவில் இருந்தன. அவற்றுக்கு அமெரிக்க கடற்கரைகளுக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்லும் திறன் இல்லை.
யுத்த அமைச்சர் ஹெக்செத் இப்போது ட்ரம்பின் ஹிட்லரியன் பெரிய பொய்யை இரட்டிப்பாக்கியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை X தளத்தில் பதிவிட்ட இடுகையில் அவர் பின்வருமாறு எழுதினார்:
பாதுகாப்புத் துறை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இதர நாடுகளைப் பாதுகாக்கச் செலவிட்டுள்ளது. இன்று, நாம் நமது சொந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறோம். இந்தப் போதைப்பொருள் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவை விட அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றுள்ளனர். மேலும் அவர்கள் அதே வழியில் கையாளப்படுவார்கள். நாங்கள் அவர்களை வேட்டையாடுவோம், அடையாளம் காண்போம், பின்னர் அவர்களைப் பின்தொடர்ந்து கொலை செய்வாம்.
வாஷிங்டனின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்குவதற்கான நியாயப்படுத்தல்களை ஹெக்செத் அழைப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 9/11 தாக்குதல்கள் மற்றும் “பேரழிவு ஆயுதங்கள்” குறித்த அடுத்தடுத்து கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்குவதற்கு போலி சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டதைப் போலவே, இன்று “போதைப்பொருள்-பயங்கரவாதம்” என்று குற்றம் சாட்டப்பட்ட சிறிய படகுகளுக்கு எதிரான ட்ரம்பின் தாக்குதல்கள் பிரச்சாரம், எண்ணெய் வளம் மிக்க வெனிசுவேலாவை கொள்ளையடிப்பதற்கான ஒரு போரைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிக்கோலோ மதுரோவின் வெனிசுவேலா ஆட்சிக்கு எதிராக ஒரு முழு அளவிலான போருக்கான வாஷிங்டனின் தயாரிப்புகள் வேகமாக தீவிரமடைந்து வருகின்றன.
கடந்த வெள்ளியன்று, கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் நிலைநிறுத்துவதாக ஹெக்சேத் அறிவித்தார். அங்கு பயங்கர ஆயுதங்களைக் கொண்ட 10,000ம் அமெரிக்க மாலுமிகள் மற்றும் கடற்படையினர் ஏற்கனவே நிலை கொண்டுள்ளனர். போதைப்பொருள் தடைகளுக்கு மிகவும் பொருத்தமற்ற இந்த இராணுவ விரிவாக்கம், மதுரோவை வீழ்த்துவதற்கு CIA யின் நடவடிக்கைகளை ட்ரம்ப் அங்கீகரித்து, வெனிசுவேலா மீது படையெடுப்புக்கு அச்சுறுத்தியதைத் தொடர்ந்து வந்துள்ளது. வெனிசுவேலாவின் வான்வெளியை ஒட்டியுள்ள பகுதிகளில் B-1 குண்டுவீச்சு விமானங்கள் நிலை கொண்டுள்ளன.
வெனிசுலாவிற்கு எதிரான இராணுவக் குவிப்பு, இலத்தீன் அமெரிக்கா முழுவதற்கும் எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ உந்துதலின் ஒரு பகுதியாக உள்ளது. இது, இலத்தீன் அமெரிக்காவையும் அதன் மூலோபாய வளங்களையும் கட்டுப்படுத்த அமெரிக்காவிற்கு உரிமை உண்டு என்ற மன்ரோ கோட்பாட்டின் கூற்றுக்களை மீண்டும் உயிர்ப்பிப்பது மட்டுமல்லாமல், இப் பிராந்தியத்தில் சீனா தொடர்பாக, வாஷிங்டனின் மேலாதிக்க அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை இழந்ததற்கு இராணுவ வன்முறை மூலம் ஈடுசெய்யும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
பொதுமக்களின் படகுகளுக்கு எதிரான ட்ரம்பின் குற்றவியல் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது, ஒரு பிராந்தியப் போர் அச்சுறுத்தல் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதற்கான ஒரு அச்சுறுத்தும் அறிகுறியாகும். மேலும், இலத்தீன் அமெரிக்கா மீதான இராணுவத் தாக்குதல், வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரின் ஒரு முன்னணியில் இடம்பெறுகிறது.
ஆரம்ப தாக்குதல்கள் வெனிசுலாவுக்கு அருகிலுள்ள தெற்கு கரீபியனில் படகுகளைத் தாக்கினாலும், கடந்த திங்களன்று மற்றும் பிற சமீபத்திய தாக்குதல்கள் கொலம்பியாவின் கடற்கரைக்கு அப்பால் கிழக்கு பசிபிக்கில் நடந்துள்ளன. இந்த மாற்றம் ட்ரம்ப் கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கொடூரமான அரசியல் தாக்குதலைத் தொடங்குவதோடு ஒத்துப்போகிறது.
அக்டோபர் 18 அன்று, கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை சமூக ஊடகங்களில் ட்ரம்ப் தாக்கி, அவர் “போதைப்பொருள் பெருமளவில் உற்பத்தி செய்வதை வலுவாக ஊக்குவிக்கும் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் தலைவர்” என்றும், இது “கொலம்பியாவின் மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்டது” என்றும் குற்றம் சாட்டினார். கொலம்பிய ஜனாதிபதி, அவரது குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, இந்தக் கொடூரமான பொய், வெனிசுலாவுக்கு எதிரான அரசியல் மற்றும் இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் மறுநிகழ்வு மட்டுமே ஆகும்.
இந்த ஏகாதிபத்திய தாக்குதலில் வரவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவர் ஞாயிறன்று CBS செய்தியிடம், “வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவிற்கு எதிரான எதிர்கால இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆசியா பயணத்திலிருந்து ட்ரம்ப் திரும்பியதும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக நேற்று என்னிடம் அவர் கூறினார்” என்று தெரிவித்தார்.
ட்ரம்பின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பின்பற்றப்பட்டு வரும் இந்தப் பாதை ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தீக்கிரையாக்கும். அதீத வன்முறை, பொருளாதார சீர்குலைவு, பாசிச மற்றும் இராணுவ ஆட்சிகளை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே அது அதன் நோக்கங்களை அடைய முடியும். இந்த நடவடிக்கைகள் பாரிய மக்கள் எதிர்ப்பைத் தூண்டும் மற்றும் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.
ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை முறியடிப்பது கட்டாயமாகும். ஆனால், இது உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறையின் முரண்பாடுகளில் வேரூன்றிய அதன் சாரத்தைத் தாக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
ரியோ கிராண்டே ஆற்றின் இருபுறமும் உள்ள தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இலத்தீன் அமெரிக்காவிலும், அமெரிக்காவிலும் உள்ள முழுத் தொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்தின் உண்மையான இலக்காக இருந்து வருகின்றனர் என்பதாகும்.
இலத்தீன் அமெரிக்க கடல் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் குறித்த குண்டர் பிரச்சாரம், ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டுத் தாக்குதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான அதன் துன்புறுத்தலுடன் இயல்பாகவே பிணைந்துள்ளது.
கரீபியன் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் மீனவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம், அமெரிக்காவிற்குள் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை சுற்றி வளைத்து நாடு கடத்த அணிதிரண்டு நிற்கிறது.
அன்னிய எதிரிகள் சட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்துவதும், “சர்வதேசமற்ற ஆயுதமேந்திய மோதல்” பிரகடனமும் வெளிநாட்டு கொலைகள் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறை இரண்டையும் நியாயப்படுத்த சேவையாற்றுகின்றன, இது வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போருக்கும், உள்நாட்டில் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை வெளிப்படுத்துகிறது. குண்டர் ட்ரம்ப் தென் அமெரிக்க கடல் பகுதியில் மீனவர்களையும் புலம்பெயர்ந்தோரையும் கொலை செய்து வருவதைப் போலவே, அவரது நிர்வாகமும் அமெரிக்காவிலேயே சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகளை நடத்துவதற்கான அதன் அதிகாரத்தை வலியுறுத்துகிறது.
மத்தியதரைக் கடலில் இருந்து கரீபியன் வரை ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவை மீண்டும் நிலைநிறுத்துவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ நடவடிக்கைகளின் உலகளாவிய தன்மையையும், ஒரே நேரத்தில் பல போர் முன் அரங்குகளில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் சமிக்ஞை செய்கிறது.
இலாப அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம், வெளிநாடுகளில் இராணுவ வன்முறை மற்றும் உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சி மூலம் பதிலளிக்கும் போது, பரந்த இராணுவ மோதல்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகின்றன.
ஏகாதிபத்தியப் போரைத் தடுக்கவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். இது, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தேசியவாத இயக்கங்களிலிருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டு, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து சோசலிசத்தை நிறுவுவதற்காகப் போராடுகிறது.
அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசு பயங்கரவாத தாக்குதலையும், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ட்ரோன் படுகொலைத் தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்ட சட்டவிரோத கொலைகளின் நடைமுறைக்கு முன்னோடியாக இருந்த ஜனநாயகக் கட்சியின் உடந்தையையும் நிராகரிக்க வேண்டும். ஜனநாயகக் கட்சி இலத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை ஆதரித்து செயல்படுத்தி வந்துள்ளது.
வெனிசுவேலா, கொலம்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து இலத்தீன் அமெரிக்கத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு, தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர சோசலிச தலைமையை வழங்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே, போருக்கு எதிரான போராட்டங்களையும், தேசிய எல்லைகளுக்கு அப்பால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் ஒன்றிணைத்து, பேரழிவுகரமான மோதலை நோக்கிய உந்துதலை நிறுத்தவும், உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான அடித்தளங்களை அமைக்கவும் முடியும்.
