மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நியூ யோர்க் நகர தேர்தல், ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் நடைபெற உள்ளது. முன்கூட்டியே வாக்குப்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி உள்ளன. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) உறுப்பினரான ஜோஹ்ரான் மம்தானி, தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இது, தன்னைத்தானே சோசலிஸ்ட் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவரை, அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமும், உலக நிதிய மூலதனத்தின் மையமும், தாயகமும் ஆன வோல் ஸ்ட்ரீட் இருக்கும் நியூ யோர்க்கின் மேயராக ஆக்குகிறது.
ஒரு வருடத்துக்கு முன்புவரை கிட்டத்தட்ட அறியப்படாமல் இருந்த மம்தானி, கடந்த ஜூன் மாதம் நடந்த ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தல்களில் நியூ யோர்க் அரசியல் ஸ்தாபனத்தின் விருப்பமான வேட்பாளராக இருந்த முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்தார். அப்போதிருந்து, சுயேச்சை வேட்பாளரான குவோமோ மற்றும் குடியரசுக் கட்சியின் வாய்வீச்சாளர் கர்டிஸ் ஸ்லிவாவை விட மம்தானி வாக்குகளில் ஒரு வசதியான முன்னிலையைப் பேணி வருகிறார்.
மம்தானியின் பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ள பரவலான ஆதரவு என்பது, அல்பானி நகரில் ஆண்ட்ரூ கியூமோ, தனது பதவிக்காலம் முழுவதும், இரக்கமின்றி செயல்படுத்திய ஜனநாயகக் கட்சியின் பெருநிறுவன-சார்பு அரசியல் மீதான ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கிறது. ஜனநாயகக் கட்சி ட்ரம்புக்கு இணங்கிப் போவது குறித்து தொழிலாளர்களும் இளைஞர்களும் வெறுப்படைந்துள்ளனர். இவர்கள், மலைப்பூட்டும் சமத்துவமின்மை, உயர்ந்து வரும் வாடகைகள், வறுமை ஊதியங்கள், முடிவற்ற போர், காஸாவில் இடம் பெற்றவரும் இனப்படுகொலை மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரின் (ICE) புலம்பெயர்ந்த மக்கள் மீதான சோதனைகள் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவதற்கான வழியைத் தேடுகின்றனர்.
அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக தன்னலக்குழு ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளின் ஆதரவுடன், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகரிக்கும் சதித்திட்டத்தின் மத்தியில், நியூ யோர்க்கில் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் இராணுவப் படைகளை நிறுத்துவதிலும், அல்லது திட்டமிட்டு பயன்படுத்துவதிலும், அரசாங்க சேவைகளை பணிநிறுத்துவதன் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பாரிய தாக்குதலிலும் இந்த சதி வெளிப்பட்டுள்ளது.
மம்தானி தேர்தலில் வெற்றி பெற்றால், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ட்ரம்பின் போரில் நியூ யோர்க் உடனடியாக அடுத்த போர்க் களமாக மாறும். கடந்த வாரம், வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், இராணுவ உபகரணங்களுடன் பற்கள் வரை ஆயுதம் ஏந்திய குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை குண்டர்களை, மன்ஹாட்டனில் வன்முறையில் ஈடுபடவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிமக்களை கடத்தவும் அனுப்ப உள்ளார். ட்ரம்ப் மம்தானியை பாசிச மொழியில் பலமுறை கண்டித்து, அவரை “100 சதவீத கம்யூனிச பைத்தியக்காரர்” என்று அழைத்துள்ளார். காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினர், அமெரிக்காவின் குடிமகனான மம்தானி நாடு கடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அக்டோபர் 18 அன்று நடந்த “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டதில் ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு பரந்த மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இவைதான் மம்தானியின் எழுச்சிக்கு ஊக்கமளித்துள்ள பிரபலமான மனநிலைகள் ஆகும்.
எவ்வாறெனினும், சோசலிச சமத்துவக் கட்சி மம்தானிக்கோ அல்லது அவரது போட்டியாளர்களுக்கோ வாக்களிக்க அழைப்பு விடுக்கவில்லை. மம்தானியின் அரசியல் தளமும் வேலைத்திட்டமும் தன்னலக்குழு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னோக்கிய பாதையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக ஒரு அரசியல் பொறியையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.
முதலாவதாக, இதில் அடிப்படையான கொள்கை ரீதியான கேள்விகள் சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கும்போது, ஒருவர் தனது அரசியல் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார். ஒரு சோசலிஸ்ட் என்று பாசாங்கு செய்திருந்தாலும், மம்தானி ஒரு ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஆவார். ஒரு முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சியாக இருந்து வருகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள் ஒரு அடி கூட முன்னோக்கி வைக்க முடியாது என்பதை அனைத்து அரசியல் அனுபவங்களும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தத் தேர்தலில் ஆபத்தில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து, மம்தானி, ஒட்டுமொத்த அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் (DSA) இணைந்து, ஜனநாயகக் கட்சியை இடது பக்கம் நகர்த்தி, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக மாற்ற முடியும் என்ற பொய்யைப் ஊக்குவிப்பதன் மூலம், எதிர்ப்பை வேண்டுமென்றே திசைதிருப்ப முயற்சிக்கிறார். எவ்வாறெனினும், மம்தானியின் சொந்தப் பிரச்சாரம் இதை ஒரு அரசியல் மோசடி என்று அம்பலப்படுத்துகிறது.
கடந்த ஐந்து மாதங்களில், மம்தானி தான் எதிர்ப்பதாகக் கூறும் அதே பில்லியனர்களுக்கு உறுதியளிக்க பின்னோக்கி சாய்ந்து வருகிறார். காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு மத்தியில், பாலஸ்தீனியர்களைப் பாதுகாப்பதில் இருந்து பின்வாங்கிய அவர், இஸ்ரேல் இருப்பதற்கான உரிமை உண்டு என்றும், ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றும் அறிவித்தார்.
வலதுசாரிகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, பில்லியனர் வாரிசு ஜெசிகா டிஷை நியூ யோர்க் பொலிஸ் துறையின் தலைவராக வைத்திருக்கும் தனது விருப்பத்தை மம்தானி கடந்த வாரம் அறிவித்தார். பெருவணிக உலகின் முக்கிய கோரிக்கையாக இருந்துவரும் இந்த நியமனம், வெடிப்பார்ந்த சமூக நிலைமைகளுக்கு மத்தியில், அரசின் ஆயுதமேந்திய எந்திரத்தை கட்டுப்படுத்தும் போது, ஒரு நம்பகமான பிரமுகர் தலைமைப் பொறுப்பில் இருப்பார் என்பதை அடையாளப்படுத்துகிறது.
தன்னலக்குழுவிற்கு எதிரான எதிர்ப்பை வலியுறுத்தும் மம்தானியின் வேலைத்திட்டம், ஒரு சில தாராளவாத சீர்திருத்தங்களுக்கான ஒரு சாதாரண அழைப்பைத் தவிர வேறில்லை: அவை, நகரத்தின் வாடகைக் கட்டணங்களில் பாதியளவுக்கு அதிகரிப்புகளை நிறுத்துதல், சில போக்குவரத்து பயணிகளுக்கான போக்குவரத்துச் செலவுகளை சற்றுக் குறைத்தல் மற்றும் செல்வந்தர்களுக்கு வரி அதிகரிப்பு மூலம் நிதியளிக்கப்படும் பொது நிதியுதவி பெற்ற குழந்தை பராமரிப்பில் விரிவாக்கம் ஆகியனவாகும். இவை செயல்படுத்தப்பட்டாலும் கூட, இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை தீர்க்க ஏதையும் செய்யப் போவதில்லை.
அப்படியிருந்தும் மம்தானி, ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் சில பிரிவுகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவர்களின் விருப்பமான வேட்பாளர் குவோமோ, மம்தானி ஒரு இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் என்று முத்திரை குத்தி ஒரு மோசமான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் வேளையில், மம்தானியின் இந்த முன்மொழிவுகள் ஒரு கற்பனை என்று கண்டித்துள்ளார். அமெரிக்க செனட்டில் உள்ள நியூ யோர்க் பிரதிநிதிகள் குழு, கட்சியின் முதன்மை வெற்றியாளரான மம்தானியை ஆதரிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் தனது ஆதரவை மம்தானிக்கு வழங்க கடந்த வாரம் வரை காத்திருந்தார்.
ஜனநாயகக் கட்சியின் இந்த சூழ்ச்சிகள், மம்தானியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், நியூ ஜெர்சியில் கடற்படை விமானி மிகி ஷெரில் மற்றும் வேர்ஜீனியாவில் முன்னாள் சிஐஏ முகவர் அபிகெய்ல் ஸ்பான்பெர்கர் போன்ற ஆளுநர் வேட்பாளர்களை ஊக்குவிப்பதையும் ஜனநாயகக் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இவர்கள், 2026 இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்மாதிரிகளாகக் கூறப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள், ஜனநாயகக் கட்சியைக் காப்பாற்ற முயலும் விதம், அதன் விருப்பத்திற்கு மாறாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை குயின்ஸில் நடந்த பெரிய பிரச்சாரப் பேரணியில் எடுத்துக்காட்டப்பட்டது. அப்போது, ஆளுநர் கேத்தி ஹோச்சுலுக்கு உதவ மேடையில் ஏறிய மம்தானி, 13,000 பேர் கூடியிருந்த கூட்டத்திலிருந்து “பணக்காரர்கள் மீது வரி விதிக்க வேண்டும்” என்ற கூச்சல்களையும் முழக்கங்களையும் அடக்க ஆளுநர் கேத்தி ஹோச்சுலுடன் சேர்ந்து தனது கைகளை உயர்த்தினார்.
பெர்னி சாண்டர்ஸ் மற்றும் சமீபத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பேரணியில் மம்தானியுடன் மேடையில் தோன்றிய அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் வகுத்த அதே அரசியல் ஏமாற்றுப் பாதையை மம்தானியும் பின்பற்றுகிறார்.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, சான்டர்ஸ் எதிர்ப்புகளுக்கு ஒரு மின்னல் தூண்டுதலாக செயல்பட்டு, முதலாளித்துவத்தின் மீது வளர்ந்து வரும் விரோதத்தை, நனவுபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் முட்டுச்சந்திற்குள் திருப்பிவிடுகிறார். 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு, “அரசியல் புரட்சி” என்ற பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்றார். இறுதியில், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகன் ஆதரவு வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜோ பைடெனை சான்டர்ஸ் ஆதரித்தார். வெளியுறவுக் கொள்கையில், சாண்டர்ஸ் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க மற்றும் நேட்டோ தலைமையிலான போரையும், இஸ்ரேலுக்கு வரம்பற்ற முறையில் நிதியை வழங்குவதற்கான ஆதரவையும் அளித்து வந்தார்.
மம்தானியின் சக ஜனநாயக சோசலிஸ்டு உறுப்பினரான ஒகாசியோ-கோர்டெஸும், ஆளும் வர்க்கத்தின் நலன்களின் ஒரு விசுவாசமான பாதுகாவலர் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் ஒரு எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். அவர் 2022 இல், இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்க வாக்களித்ததோடு, காஸாவில் இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு நிதியளிப்பதை ஆதரித்தார். அதே நேரத்தில், தனது ஆதரவாளர்களை “பெரியவர்களாக இருந்து” போர்க் குற்றவாளி பைடெனுக்கு பின்னால் அணிதிரளுமாறு வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பில், முன்னெப்போதிலும் இல்லாத அளவிற்கு நேரடியான பாத்திரத்தை அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் வகித்து வருகின்றனர். மேலும், இது சர்வதேசப் போக்கின் வெளிப்பாடாக அமெரிக்காவில் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக, பிரிட்டனில் ஜெர்மி கோர்பின் போன்ற பிரமுகர்கள் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளையும் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போரையும் நடைமுறைப்படுத்தும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு, இடது முலாம்களை பூசி வந்துள்ளனர். “இடதுசாரி யூத எதிர்ப்பு” என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு சூனிய வேட்டையின் மத்தியில், கோர்பினே தொழிற்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ஒரு பிற்போக்குவாதியான கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியை வழிநடத்தி பிரதமராக வருவதற்கு வழி வகுத்தது.
கிரேக்கத்தில் அதிகாரத்திற்கு வந்த சிரிசாவின் அனுபவம் போலி-இடதின் பாத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. 2015 இல், கிரேக்கத்தில் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற்ற சில மாதங்களுக்குள், ஐரோப்பிய வங்கிகளை கைப்பற்றுவதற்கான அதன் வாக்குறுதிகளை நிராகரித்த “தீவிர இடதுகளின் கூட்டணி”, வெகுஜன வாக்கெடுப்பின் முடிவுகளையும் மீறி, வங்கியாளர்கள் கோரிய சிக்கன நடவடிக்கைகளை திணித்தது. இதன் மூலம், அது முன்முயற்சியை அதி தீவிர வலதுசாரிகளிடம் ஒப்படைத்தது. இப்படிப்பட்ட அனுபவங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எண்ணற்ற முறை திரும்பத் திரும்ப நடந்திருக்கின்றன.
மம்தானி வெற்றி பெற்றால், அவர் தலைமையிலான மேயர் பதவிக்கும் கியூமோ தலைமையிலான மேயர் பதவிக்கும் மிகக் குறைந்த வித்தியாசம் மட்டுமே இருக்கும் என்பதை அவர் ஏற்கனவே தனது பிரச்சாரத்தின் போது நிரூபித்துள்ளார்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே மம்தானிக்கு ஆதரவைத் தூண்டும் அபிலாஷைகள் - சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பு - மம்தானியின் பிரச்சாரத்தின் மூலமாகவோ அல்லது ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிலோ உணரப்பட முடியாது மற்றும் உணரப்படவும் மாட்டாது. சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த ஜூன் மாதத்தில் மம்தானியின் முதன்மை வெற்றியைத் தொடர்ந்து பின்வருமாறு எழுதியது:
அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் பிரதான போக்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் தீவிரமயமாக்கல் என்று சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வலியுறுத்தியுள்ளது. நியூ யோர்க் மேயர் தேர்தல் இந்தப் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது. ஆனால், இதனை இட்டு நிரப்புவதற்கான அடையாளமாக நாங்கள் இவற்றை குழப்பிக் கொள்ள மாட்டோம். மம்தானியின் வெற்றியின் முக்கியத்துவத்தை சோசலிச சமத்துவக் கட்சி அங்கீகரிக்கும் அதே வேளையில், அவரது தேர்தல் வெற்றியானது, அரசின் தன்மை, ஜனநாயகக் கட்சியின் வர்க்கத் தன்மை மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வன்முறை மற்றும் அடக்குமுறை தன்மை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற மாயைக்கு ஏற்ப, அதன் அரசியல் வேலைத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை.
கடந்த நான்கு மாதங்களின் அபிவிருத்திகள் இந்த மதிப்பீட்டை முற்றிலுமாக உறுதிப்படுத்தியுள்ளன. ட்ரம்ப் சர்வாதிகாரத்திற்கான தனது சதித்திட்டத்தை வன்முறையாக தீவிரப்படுத்தி வருகிறார். அவரைத் தடுக்க எதுவும் செய்யாத ஜனநாயகக் கட்சியினர், வேலைகள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதுக்கு ட்ரம்புடன் ஒத்துழைத்து வருகின்றனர். மம்தானியும் ஜனநாயக சோசலிஸ்டுகளும், தங்கள் பங்கிற்கு, தங்கள் முழு முன்னோக்கின் திவால்நிலையையும் நிரூபித்துள்ளனர். மேலும், இவர்கள் இந்த நெருக்கடிக்கு காரணமான முதலாளித்துவ ஸ்தாபனத்தின் பின்னால் வெகுஜன எதிர்ப்பை மீண்டும் திசைதிருப்ப வேலை செய்து வருகிறார்கள்.
போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம், “முற்போக்கான” ஜனநாயகக் கட்சியினர் மீதான பிரமைகள் மூலமாகவோ அல்லது அமெரிக்க முதலாளித்துவத்தின் தற்போதுள்ள அரசியல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாகவோ தொடர முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வு, இதற்கு அவசியமாகும். மிகப் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், தனியார் இலாபத்திற்காக அன்றி சமத்துவம், சமாதானம் மற்றும் சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நனவான அரசியல் சக்தியாக தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.
தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்டு, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட வேண்டும். சர்வாதிகாரம், யுத்தம் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் சகல தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
