மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா), கடந்த புதன்கிழமை அதிகாலையில் எமது அன்பிற்குரிய மற்றும் அளவிடமுடியாத மதிப்பிற்குரிய தோழர் ஆலன் கெல்ஃபான்ட் இறந்ததை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறது. அவருக்கு 76 வயது, அவர் புற்றுநோயால் இறந்தார்.
ஆலனுக்கு 1986 ஆம் ஆண்டில், நாளங்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தில் ஒரு வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர கதிர்வீச்சு சிகிச்சை அவரை நோயிலிருந்து குணப்படுத்தியது. இருப்பினும், கதிர்வீச்சின் நீண்டகால விளைவுகள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் மீண்டும் வருவதற்கு வழிவகுத்தன. ஆலனின் உடல் நிலை மோசமடைந்ததால், தனது ஆயுளை நீட்டிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நிறுத்துமாறு கடந்த வாரம் அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.
ஆலன், தனது இறுதி மணிநேரங்கள் வரை, முழுமையாக தெளிவானவராக இருந்தார். நெருங்கி வந்த தனது மரணத்தை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஏற்றுக்கொண்ட ஆலன், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு 50 ஆண்டுகளை அர்ப்பணித்த, தனது வாழ்க்கைப் பாதையில் திருப்தியை வெளிப்படுத்தினார்.
அநீதிக்கு எதிரான ஆலனின் வெறுப்பும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அவரது தீவிரமான பாதுகாப்பும், அவரது அரசியலில் மட்டுமல்ல, லொஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பொதுப் பாதுகாவலராக அவரது தொழில்முறை வாழ்க்கையிலும் வெளிப்பட்டது.
ஒரு வழக்கறிஞராக, ஆலனின் அசாதாரண திறமை எண்ணற்ற பிரதிவாதிகளை அநீதியான தண்டனையிலிருந்து காப்பாற்றியது. மரண தண்டனைக்கு தீவிர எதிர்ப்பாளராக இருந்த அவர், கலிபோர்னியா மாநில மரண தண்டனை விதிப்பவர்களிடம், ஒரு பிரதிவாதியையும் இழக்கவில்லை என்ற உண்மையைப் பற்றி பெருமிதம் கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்புதான், சோசலிச சமத்துவக் கட்சி தனது சர்வதேச கோடைக்காலப் பள்ளியை, பாதுகாப்பும் மற்றும் நான்காம் அகிலமும் பற்றிய ஆய்வுக்காக அர்ப்பணித்திருந்தது. நான்காம் அகிலத்திற்கு எதிராக, ஸ்டாலினிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவதற்கான போராட்டத்தில், ஆலனின் மையப் பாத்திரம் அவரது பெயரைக் கொண்ட காவியமான, சட்ட மற்றும் அரசியல் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கெல்ஃபான்ட் வழக்கும், வரலாற்று உண்மைக்கான துணிச்சலும், இடைவிடாத அர்ப்பணிப்பும், அதற்கு ஊக்கமளித்த மனிதனும், போராளியும், ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் ஒரு அழிக்க முடியாத பகுதியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி ஆலனின் மனைவி ரோசன்னாவிற்கும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
டேவிட் நோர்த்
தேசியத் தலைவர், சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)
***
உலக சோசலிச வலைத் தளம் வரவிருக்கும் நாட்களில் அலன் கெல்ஃபான்ட் பற்றிய பாராட்டு ஒன்றை வெளியிடும்.
