முன்னோக்கு

அமெரிக்க அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நவம்பர் 1, 1952 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள எனெவெடக் அட்டோலின் மீது, உலகின் முதல் வெப்ப அணுக்கரு சாதனத்தின் (ஹைட்ரஜன் குண்டு) சோதனையிலிருந்து வெளிப்படும் காளான் மேகம். [AP Photo/Los Alamos National Laboratory]

கடந்த வியாழக்கிழமை, அணு ஆயுத சோதனையை அமெரிக்கா மீண்டும் தொடங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, மூன்றாம் உலகப் போருக்கான அதன் தயாரிப்புகளைத் தடுக்கும் மீதமுள்ள அனைத்து பாதுகாப்புத் தடுப்புகளையும் அகற்றுவதற்கான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையாகும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அணு ஆயுத சோதனையை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. ஆகவே, அணு ஆயுத சோதனை முடிவு, அமெரிக்காவை இந்த நடைமுறையை அனுமதிக்கும் உலகின் ஒரே நாடாக ஆக்குகிறது.

வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்புவதற்கும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதற்கும் அப்பால், அணு ஆயுத சோதனை என்பது, தவறான கணக்கீடுகள் மூலமாகவோ அல்லது வேண்டுமென்றே தூண்டுதல் மூலமாகவோ, அணு ஆயுதப் போரின் சாத்தியத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் அதிகரிக்கும் ஒரு செயலாக உலகளவில் புரிந்து கொள்ளப்படுகிறது.

1963 இல், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கியூபா ஏவுகணை நெருக்கடியில், அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு வந்த ஒரு வருடம் கழித்து, கென்னடி நிர்வாகம் அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியது. இது நிலத்தடி சோதனைகளைத் தவிர, அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்தது. 1992 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அணு ஆயுத சோதனைக்கு ஒருதலைப்பட்சமான தடையை அறிவித்தார்.

இந்த சோதனை தடை செய்யப்படுவதற்கு முந்தைய தசாப்தங்களில், 2,000 க்கும் மேற்பட்ட அணுக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்கு பசிபிக் முழுவதிலும் உள்ள சமூகங்களை நோய்வாய்ப்படுத்தி, முழுப் பகுதிகளையும் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றியது.

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் குறித்து தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு ட்ரம்ப் தனது அணு ஆயுத சோதனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். உலக அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ட்ரம்ப், அணு ஆயுதப் போர் மூலம் அழித்தொழிக்கும் அச்சுறுத்தலை மனிதகுலத்தின் தலையில் தொங்கவிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனா இணைந்து செலவிடுவதை விட, உலகின் மிகப்பெரிய அணு ஆயுத திட்டத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, இரண்டு மடங்குக்கு அதிகமாக அணு ஆயுதங்களுக்காக செலவிடுகிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்துவதற்காக, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் உள்ள பாதுகாப்பற்ற மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே ஆகும்.

ட்ரம்பின் அறிவிப்பைப் பற்றி செய்தி வெளியிடும் போது, அமெரிக்க ஊடகங்கள் எந்தவொரு வரலாற்று சூழலையும் அல்லது அதற்கு முந்தைய நிகழ்வுகளையும் முன்வைக்கத் தவறிவிட்டன. ஆனால், திடீரென நிகழ்ந்த ஒரு செயலாக இருக்காமல், அமெரிக்க இராணுவ நடவடிக்கையை திட்டமிடுபவர்கள், குறைந்தது 2020 முதல் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையை அறிவிக்கும் ட்ரம்பின் சொந்தப் பதிவு, பல ஆண்டுகளாக அமெரிக்க அணு ஆயுதக் கிடங்கைக் கட்டியெழுப்புவதன் பின்னணியில் அதை தெளிவாக வைத்துள்ளது. “வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. இது ஓரளவுக்கு, எனது முதல் பதவிக் காலத்தில், ஏற்கனவே உள்ள ஆயுதங்களை விரிவாக மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதன் மூலம் அடையப்பட்டுள்ளது” என்று அவர் எழுதினார்.

மேலும் அவர், “எங்கள் அணு ஆயுதங்களை சமமான நிலையில் சோதிக்கத் தொடங்குமாறு போர்த் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ட்ரம்பின் பதிவு, கதையின் ஒரு பகுதியை மட்டுமே கூறியது. அவர் பெருமையாகக் கூறிய அணு ஆயுதக் குவிப்பு, உண்மையில், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டது மற்றும் ட்ரம்பின் முதல் பதவிக் காலத்திலும், பைடெனின் பதவிக் காலத்திலும், இப்போது இரண்டாவது ட்ரம்ப் பதவிக் காலத்திலும் தொடர்கிறது. அமெரிக்க மக்களில் பரந்த பெரும்பான்மையினருக்கு தெரியாத இந்த அணுஆயுத கட்டமைப்பு, 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில், முழுமையான இருகட்சியின் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) ஆதரவுடன் தொடர்கிறது.

ஒரு வருடத்திற்கு முன்னர், நியூ யோர்க் டைம்ஸ் “ஒரு நிலையற்ற புதிய அணு ஆயுத யுகத்திற்கான நவீன ஆயுதக் களஞ்சியத்தை” உருவாக்குவதன் மூலம், அமெரிக்காவை அணு ஆயுத சக்தியாக மாற்றுவதற்கான ரகசியத் திட்டம் குறித்து ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது.

“நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் இடத்திலோ அல்லது ஏவுகணை குழிகள் தோண்டப்படும் இடத்திலோ நீங்கள் வசிக்கவில்லை என்றால், அது நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது” என்று டைம்ஸ் எழுதியது. “மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கம், இந்தத் திட்டத்தைப் பற்றி பகிரங்கமாக, காங்கிரசின் விசாரணைகள் மற்றும் மூலோபாய ஆவணங்களுக்கு வெளியே, அல்லது பெருமளவிலான தொகை இதற்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கூறவில்லை. இது தொடர்பாக குறிப்பிடத்தக்க விவாதம் எதுவும் இல்லை. பில்லியன் டாலர் திட்டங்கள் ரேடாரின் கீழ் நகர்கின்றன” என்று டைம்ஸ் தெரிவித்தது.

இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதில் இருந்து, பாரிய அமெரிக்க அணுவாயுதக் கட்டமைப்பு மற்றும் அதைச் சுற்றி இடம்பெறும் அமைதியான சதி ஆகிய இரண்டும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. கடந்த டிசம்பரில், காங்கிரஸ் 895 பில்லியன் டாலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (NDAA) ஒப்புதல் அளித்தது, இது மனிதகுல வரலாற்றில் எந்தவொரு நாட்டையும் விட மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டமாகும். இதில் அணு ஆயுத நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கான சாதனை நிதியும் அடங்கும்.

கடந்த ஜனவரியில், ட்ரம்ப், அமெரிக்கா “உடனடியாக ஒரு அதிநவீன இரும்புத் திரை போன்ற ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை நிர்மாணிக்கத் தொடங்கும்” என்று அறிவித்தார். ஒரு தற்காப்பு நடவடிக்கையாக வெகு தொலைவில் இருக்கும் இந்த “கோல்டன் டோம்” என்று அழைக்கப்படுவது, ஏவுகணை கவசம் அமெரிக்காவை பழிவாங்கலில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுவதால், முன்கூட்டியே அணு ஆயுத முதல் தாக்குதலுடன் மற்ற நாடுகளை அச்சுறுத்த வெள்ளை மாளிகையை ஊக்குவிக்கும்.

அமெரிக்காவின் அணு ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான கட்டமைப்பின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க ட்ரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது. மிக முக்கியமாக, 2019 ஆகஸ்டில் ட்ரம்ப் ஆட்சியின் கீழ், அமெரிக்கா இடைநிலை-தூர அணு ஆயுத (INF) ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

2018 அக்டோபரில், அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து விலகும் என்று ட்ரம்ப் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்யா ஒரு புதிய தொடர் அணு ஆயுத விநியோக வழிமுறைகளை அபிவிருத்தி செய்யத் தொடங்கும் என்று கூறினார். இதில் போஸிடான் எனப்படும் நீருக்கடியில் ட்ரோன் மற்றும் பியூரெவெஸ்ட்னிக் எனப்படும் புதிய நீண்ட தூர கப்பல் ஏவுகணை உள்ளிட்ட, புதிய அணு ஆயுத விநியோக வழிமுறைகளை ரஷ்யா உருவாக்கும் என்று புட்டின் கூறினார்.

ரஷ்யா சமீபத்தில் இந்த இரண்டு அணு ஆயுத அமைப்புகளை அல்ல, ஆனால் அதை ஏவும் பொறிமுறை அமைப்புகளை பரிசோதனை செய்தது. இது, நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு மற்றும் கலந்துரையாடப்பட்ட அமெரிக்க அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்குவதை அறிவிக்க, ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

அமெரிக்கா, இடைநிலை-தூர அணு ஆயுத (INF) உடன்பாட்டில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, முன்னர் ஒப்பந்தத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் சீனாவைத் தாக்கக்கூடிய இடங்களுக்கு நிலைநிறுத்த நகர்ந்துள்ளது. பென்டகன் அதன் துல்லியமான தாக்குதல் ஏவுகணையின் தூரத்தை விரிவுபடுத்தியுள்ளதோடு, SLCM-N என்று அழைக்கப்படும் ஒரு புதிய அணுவாயுத, கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை அபிவிருத்தி செய்வதற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை கொட்டியுள்ளது.

முன்னர் INF உடன்படிக்கையின் கீழ் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் குரூஸ் ஏவுகணைகளின் அபிவிருத்தி, ரஷ்யாவிற்குள் ஒரு நேட்டோ பினாமியான உக்ரேனின் நேரடி தாக்குதல்களின் தீவிரத்துடன் இணைந்துள்ளது. இந்த மாதம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “மேற்கத்திய கூட்டாளிகளால் வழங்கப்பட்ட சில நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவது மீதான ஒரு முக்கிய கட்டுப்பாட்டை ட்ரம்ப் நிர்வாகம் நீக்கியுள்ளது” என்று செய்தி வெளியிட்டது. இது, தெற்கு ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் நகரத்தைத் தாக்க இங்கிலாந்து வழங்கிய Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்த மாதம் இடம்பெற்ற ஒரு தாக்குதலுக்கு இட்டுச் சென்றது.

இந்த மாத தொடக்கத்தில், உக்ரேனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ், “வானில் பறக்கும் ஒரு வழக்கமான டோமாஹாக் ஏவுகணையிலிருந்து, அணு ஆயுத டோமாஹாக் ஏவுகணையை வேறுபடுத்திப் பார்ப்பது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டார். டோமாஹாக் ஏவுகணைகள் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை ஏவும் திறனைக் கொண்டுள்ளன.

ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லைகளில் குறுகிய தூர அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கும், ரஷ்ய நகரங்களுக்குள் நேட்டோவால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளை ஏவுவதற்கும், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கும் இடையில், முழு உலகமும் அணு ஆயுதப் போரின் விளிம்பில் இருக்கும்.

ஒரு அரை-அதிகாரப்பூர்வ நேட்டோ நட்பு நாடான உக்ரேனிலிருந்து ஒரு “வழக்கமான” ஏவுகணை ஏவப்படும் ஒவ்வொரு முறையும், அல்லது “பைத்தியக்காரக் கோட்பாட்டின்” முன்னணி ஆதரவாளரான ட்ரம்ப் உத்தரவிட்ட, திட்டமிடப்படாத அணு ஆயுத சோதனையை அமெரிக்கா நடத்தும் ஒவ்வொரு முறையும், ரஷ்ய மற்றும் சீனாவில் உள்ள திட்டமிடுபவர்கள், “நாங்கள் அணு ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டோமா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வார்கள்.

ரஷ்யாவையும் சீனாவையும் அடக்குவதற்காக கணக்கிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் தந்திரோபாயம், கணக்கிட முடியாத விளைவுகளுடன், ஒரு பாரிய அளவிலான போர் விரிவாக்க சுழற்சியை தூண்டக்கூடும்.

ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் எழுச்சியானது, அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதலுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் என்று ட்ரம்ப் அறிவித்திருப்பது, உணவு முத்திரைகளுக்கான நிதியுதவியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே வருகிறது. இது, நன்றி செலுத்தும் அறுவடை விழா மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஒரு முக்கிய உயிர்நாடியிலிருந்து துண்டிக்கிறது.

இந்த இரண்டிற்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது. இந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ப்ரூக்கிங்ஸ் நிறுவனம், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டாலும் ஆதரிக்கப்படும் ஒரு கொள்கையின் சார்பாகப் பேசுகையில், “அதன் வசம் உள்ள அனைத்துப் பொது மற்றும் தனியார் கருவிகளையும் பயன்படுத்தும், ஒரு முழு சமூக அளவிலான மீள்தன்மை மூலோபாயத்துக்கு அழைப்பு விடுத்தது: அது, ஒட்டுமொத்தப் போரின் யுகத்திற்கான முழுமையான பாதுகாப்பு” என்று குறிப்பிட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் இராணுவக் தலைமையால் தொடங்கப்பட்டு, நாஜி ஆட்சியின் கீழ் அரசு கோட்பாடாகப் பராமரிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் போர் கோட்பாடு, முழு சமூகத்தையும் போர் முயற்சிக்கு அடிபணியச் செய்து, தேசிய இராணுவ வெற்றியின் பெயரில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து “தியாகங்களைக்” கோரியது.

“ஒட்டுமொத்தப் போர்” என்ற கோட்பாட்டின் கீழ், நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு அழித்தொழிப்பு போரை நடத்தியது போலவே, ஜேர்மன் மக்கள் மீதும் பேரழிவை ஏற்படுத்தினர். இன்று, அமெரிக்க தன்னலக்குழுவின் சார்பாகப் பேசும் ட்ரம்ப், அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இராணுவ வன்முறைக்கும் நாஜி ஆட்சியை ஒரு முன்மாதிரியாகக் கருதுகிறார்.

ஆளும் வர்க்கம் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை வெளிநாடுகளில் இராணுவ விரிவாக்கத்துடன் இணைக்கிறது. தொழிலாள வர்க்கம், அதன் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதை, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்துவதன் மூலம் பதிலிளிக்க வேண்டும். இந்த மாத தொடக்கத்தில் நடந்த “மன்னர்கள் வேண்டாம்” பேரணி, ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகாரம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான கொள்கைகளுக்கு பாரிய எதிர்ப்பு இருப்பதைக் காட்டியது. இந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.

Loading