முன்னோக்கு

ட்ரம்ப், ஜி ஜின்பிங் வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், சீனாவுடனான அமெரிக்கா தலைமையிலான மோதல் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தென் கொரியாவின் பூசானில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இடது, மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தங்கள் உச்சி மாநாட்டுப் பேச்சுக்கு முன்னதாக போஸ் கொடுக்கிறார்கள். வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2025 [AP Photo/Mark Schiefelbein]

கடந்த வாரம், தென் கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உச்சி மாநாடு இடம்பெற்றது. இந்த ஆண்டு ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து வியத்தகு முறையில் தீவிரப்படுத்தப்பட்ட ஒரு பொருளாதாரப் போரில், இது நிச்சயமற்ற ஓராண்டு போர் நிறுத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த சந்திப்பு வர்த்தகம் தொடர்பான சண்டையை தற்காலிகமாக நிறுத்தக்கூடும் என்றாலும், சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரப் போரும், இராணுவக் குவிப்பும் தொடரும் என்பது உறுதி.

2017 ஆம் ஆண்டில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க வரிகள் வெறும் 3.1 சதவீதமாக இருந்தன. ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில், அவர் சீனாவில் இருந்து இறக்குமதி மீதான வரிகளை 20 சதவீதமாக உயர்த்தினார். இது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் நடைமுறையில் விட்டுச் சென்ற விகிதமாகும். ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது, அவர் இந்த சுங்கவரிகளை மீண்டும் இரட்டிப்பாக்கியதால், இப்போது 47 சதவீதத்திற்கும் அதிகமாக சுங்கவரி உயர்ந்துள்ளது.

வெள்ளை மாளிகையானது, அதிக சுங்கவரிகளுடன் சேர்த்து “தேசிய பாதுகாப்பு” என்பதன் அடிப்படையில் சீனாவுக்கு மேம்பட்ட செமி-கண்டக்டர் மற்றும் கம்பியூட்டர் சிப் தயாரிக்கும் உபகரணங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உயர் தொழில்நுட்ப சீன தொழில்களை முடக்க முயன்றுள்ளது. வாகனம், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பரந்த அளவிலான தொழில்களுக்கு தேவையான, பூமியிலுள்ள அரிய தாதுப் பொருட்களின் விற்பனையை மட்டுப்படுத்துவதன் மூலம் சீனா இதற்கு பதிலடி கொடுத்தது.

கடந்த மாதம் இடம்பெற்ற உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் ஒருமுறை ஆத்திரமூட்டும் வகையில், தனது நடவடிக்கைகளை அதிகரித்தோடு, பரிந்துரைக்கப்பட்ட சீன நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அவை பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் செமி-கண்டக்டர் விற்பனையை கட்டுப்படுத்தியது. ஒரு மதிப்பீட்டின்படி, இது சுமார் 1,300 சீனா தொடர்பான நிறுவனங்களின் தடைகளின் வரம்பை 20,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களாக விரிவுபடுத்தியது.

முந்தைய ஒப்பந்தங்களை மீறுவதாகக் கருதியதால் தெளிவாக கோபமடைந்த சீனா, பூமியிலுள்ள அரிய தாதுப்பொருட்களின் ஏற்றுமதி மீதான அதன் கட்டுப்பாடுகளை விரிவாக்கியது. பூமியிலுள்ள அரிய தாதுப்பொருட்களின் சுரங்கம் மற்றும் அதனை பதப்படுத்துவதற்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான அதன் சொந்த உரிமத் தேவைகளையும் இது நிறுவியது. குறிப்பாக, இராணுவ நடவடிக்கைகள் போன்ற முக்கியமான பகுதிகளுக்கு பயன்படக்கூடிய பொருட்களுக்கான ஏற்றுமதியை தடை செய்தது. இந்த அத்தியாவசிய பொருட்களின் சுரங்கம் மற்றும் செயலாக்கம் இரண்டிலும் சீனா கிட்டத்தட்ட உலகளாவிய ஏகபோகத்தைக் கொண்டுள்ளது.

சீனா மீது கூடுதலாக 100 சதவீத சுங்க வரிகளை விதிப்பதாகவும், கூடுதல் வரிகளை ஒத்திவைப்பதற்கு முன்பு உச்சி மாநாட்டை ரத்து செய்வதாகவும் ட்ரம்ப் கோபத்தில் வெடித்தார். ஆனால் ட்ரம்ப், ஜி ஜின்பிங்குடன் அமர இருந்தபோது, குண்டர் பாணியில், அமெரிக்க அணு ஆயுத பரிசோதனையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளதாக ட்வீட் செய்து, குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவை இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 1990 களில், மூன்று நாடுகளாலும் நிறுத்தப்பட்ட அணு ஆயுத பரிசோதனையை மீண்டும் அமெரிக்கா தொடங்குவது, ஜி ஜின்பிங்கிடம் இருந்து சலுகைகளை பறிக்கும் ஒரு கொடூரமான முயற்சி மட்டுமல்ல, ட்ரம்பின் பொருளாதாரப் போர், அணு ஆயுதம் ஏந்திய சீனாவுடன் இராணுவ மோதலுக்கான முன்னேறிய அமெரிக்க தலைமையிலான தயாரிப்புகளுடன் நெருக்கமாக தொடர்புடையது என்பதையும் நிரூபிக்கிறது.

இந்த குறுகிய உச்சிமாநாட்டின் விளைவு, சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் அமெரிக்க மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்களால் முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டதைத் தவிர வேறொன்றுமில்லை. சீனாவும் அமெரிக்காவும் பூமியிலுள்ள அரிய தாதுக்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன. சீன ஏற்றுமதிகள் மீதான தற்போதைய வரிகளை அமெரிக்கா 10 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைத்தது. மேலும், அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ் மற்றும் பிற விவசாயப் பொருட்களை மீண்டும் வாங்க சீனா ஒப்புக்கொண்டது.

உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான உடனடி பிளவை இந்த உச்சிமாநாடு தடுத்ததால், உலகளாவிய சந்தைகளும் பொருளாதார உயரடுக்குகளும் கூட்டாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், யாரும் மாயையில் இல்லை. இந்தப் போர் நிறுத்தம் தற்காலிகமானது, எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும். கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. மேலும், ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாததால், என்ன செய்யப்பட்டது என்பது பற்றிய விவரம் கூட தெளிவாக இல்லை.

அமெரிக்காவிற்குத் திரும்பும் விமானத்தில், ட்ரம்ப் உச்சி மாநாட்டின் முடிவுகளை மிகப்பெரிய வெற்றியாகப் பெருமையாகக் கூறி, அதற்கு “10க்கு 12” மதிப்பெண்களை வழங்கினார். நேற்று CNN இல், அரசின் நிலை குறித்துப் பேசுகையில், கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட், “ஜனாதிபதி ட்ரம்புக்கும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான மாநாட்டில் வெளிவந்த அனைத்தும் அமெரிக்காவிற்கு அதிக நன்மையை அளித்தன. ... சீனப் பொருட்களுக்கு 100 சதவீத வரிகளைச் சேர்ப்பதாக அவர் அச்சுறுத்தினார். அதனால், ஒரு வருட ஒத்திவைப்பை நாங்கள் பெற முடிந்தது” என்று கூறினார்.

எவ்வாறிருப்பினும், “ட்ரம்பின் சீன வர்த்தகப் போரில் இருந்து படிப்பினைகள்” என்ற அதன் தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் “இந்த ஒப்பந்தம் அதிக குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தைத் தடுத்தது என்றும், “அமெரிக்கா-சீன இடையிலான பனிப்போர் தொடரும்” என்றும் எச்சரித்தது.

இதேபோன்ற தொனியில், வாஷிங்டன் போஸ்ட், “இந்த சந்திப்பிலிருந்து என்ன வெளிப்பட்டது என்பது ஒரு நீடித்த சமாதான ஒப்பந்தத்தை விட தற்காலிகமான போர் நிறுத்தம் போல் தெரிகிறது” என்று கருத்துரைத்தது. மேலும் அது, “உறவு மாறிவிட்டது. அமெரிக்கா சார்ந்திருப்பவற்றை சுரண்ட சீனா தனது விருப்பத்தைக் காட்டியுள்ளது. அந்நியச் செலாவணியைக் குறைக்க அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும், ஏனெனில் துண்டித்தல் தொடரும்” என்று எச்சரித்தது.

கடந்த வாரம் ஆசிய சுற்றுப் பயணம் முழுவதும், ட்ரம்ப்பும் அவரது பரிவாரங்களும் இதைச் செய்வதற்காகவே துல்லியமாக உழைத்து வந்தனர். மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் பூமியிலுள்ள அரிய தாதுக்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். கடந்த மாதம், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான சந்திப்பின் போது, ​​ஆஸ்திரேலியாவில் அரிய தாதுக்கள் உட்பட முக்கியமான கனிமங்களை பிரித்தெடுப்பதற்கும், பதப்படுத்துவதற்கும் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை எட்டினார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், சீனாவின் ஏகபோகத்தை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும் என்று பைனான்சியல் டைம்ஸிடம் கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசன்ட் கூறிய போதிலும், பல ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்ட சீனாவின் அரிய வகை தாதுக்கள் தொழில்துறை விரைவாக மாற்றீடு செய்யப்படப் போவதில்லை. உதாரணமாக, ஆஸ்திரேலியா, அதன் அரிய மண் தாதுக்களில் பெரும் பகுதியை செயலாக்கத்திற்காக சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

இவற்றுக்கு ஜனநாயகக் கட்சியின் பதில், ட்ரம்ப் போதுமான ஆக்ரோஷமாக இல்லை என்றும், அவர் ஜி ஜின்பிங்கிற்கு அடிபணிந்துள்ளார் என்றும் விமர்சித்தது. செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர், “அவரது முட்டாள்தனத்தை நம்ப வேண்டாம். ட்ரம்ப் சீனாவுக்கு அடிபணிந்துள்ளார்” என்று ட்விட்டரில் பதிவிட்டார். ஜனநாயகக் கட்சிக்கு நெருக்கமான வர்ணனையாளர்களின் விமர்சனங்களைச் சுருக்கமாகக் கூறும் பத்திரிகையாளர் ஜோன் ஹார்வுட், “ஜி, ட்ரம்பை அவமானப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

ஜனநாயகக் கட்சி சார்புடைய வெளியீடான நியூ யோர்க் டைம்ஸ், சீன பெரும்பான்மையினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அமெரிக்க மேம்பட்ட தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மீதான தடையை நீட்டிப்பதில் இருந்து ட்ரம்ப் பின்வாங்குவதன் மூலம், அமெரிக்க தேசிய பாதுகாப்பை சமரசம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியது. “வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளில் அமெரிக்கா செய்த முதல் சலுகைகளில் ஒன்றாக, இந்த நடவடிக்கை இருப்பதாக” பத்திரிகையாளர் அனா ஸ்வான்சன் அறிவித்தார்.

ஜனநாயகக் கட்சியினரின் பதில், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும், அவற்றின் தந்திரோபாய வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள, பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்திற்கு சீனாவை முக்கிய அச்சுறுத்தலாக கருதுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்” தொடங்கி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வாஷிங்டன், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அதிகரித்து வரும் இராஜதந்திர மற்றும் பொருளாதார தாக்குதல்களிலும், இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும் ஈடுபட்டுள்ளது. இதன் நோக்கம் சீனாவை பலவீனப்படுத்தி, இறுதியில் சீனாவை அதன் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதாகும்.

ட்ரம்ப் அவரது முதல் பதவிக்காலத்தில், போருக்கான தயாரிப்புகளின் முக்கிய பாகமாக, சீனாவிலிருந்து “துண்டிக்கப்பட வேண்டிய” அவசியத்தை ட்ரம்ப் ஊக்குவித்தார். சீனாவுடனான பதட்டங்களைத் தணிப்பதற்குப் பதிலாக, தென் கொரியாவில் ட்ரம்ப் மற்றும் ஜி ஜிங்பிங் இடையே ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தம், வெள்ளை மாளிகையிலும் வாஷிங்டனிலும் பரந்த அளவில் முடிவுக்கு இட்டுச் செல்கிறது. பொருளாதாரப் போரில் பெய்ஜிங்கை வெல்லத் தவறினால், இராணுவ வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் சீனாவின் விரைவான எழுச்சி காரணமாக, இது சீக்கிரம் தாமதமாக இருக்கப் போவதில்லை.

இது ஒரு புதிய “பனிப்போர்” அல்ல. மாறாக, ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் ஏற்கனவே நடந்து வரும் போர்களின் வியத்தகு விரிவாக்கமாக, சீனாவுடனான ஒரு இராணுவ மோதலாக தயாராகி வருகிறது. ஜி ஜிங்பிங்கை சந்திப்பதற்கு முன்னதாகவே, அணு ஆயுத அச்சுறுத்தலை ட்ரம்ப் முன்வைப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியம் புவிசார் அரசியல் போட்டியாளர்களை மட்டும் எதிர்கொள்ளாமல், உள்நாட்டில் ஒரு பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியையும் எதிர்கொள்ளும் போது, எதற்கு தயாராகிறது என்பதற்கான மிகக் கடுமையான எச்சரிக்கையாகும்.

உலகளாவிய யுத்தம் மற்றும் அணு ஆயுத பேரழிவை நோக்கிச் செல்வதை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். பிற்போக்குத்தனமாக, உலகை போட்டி தேசிய அரசுகளாகப் பிரித்துவரும் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்கு, ஒரு புரட்சிகர, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்கா, சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட, போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது.

Loading