மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சார்லி சாப்ளினின் “தங்க வேட்டை” (The Gold Rush) (1925) திரைப்படம் வெளியாகி ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், உலக சினிமாவின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மாபெரும் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான சாப்ளின், தனது ஒப்பற்ற, பேச்சை விட செய்கைகளின் மூலம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாண்டோமைம் கலையை, நெகிழ்ச்சியான நாடகத்துடனும், ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுடனான ஆழ்ந்த பச்சாதாபத்துடனும் இணைத்து, லண்டனின் சேரிகளில் பசி மற்றும் தீவிர வறுமைக்கு உட்பட்ட தனது சொந்த குழந்தைப் பருவ அனுபவத்தை வரைந்தார்.
சிறிய நாடோடி என்ற கதாபாத்திரத்தை உருவாக்குவதன் மூலம், சாப்ளின் உத்தியோகபூர்வ முதலாளித்துவ சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூக வகையை — ஒரு நாடோடி, வேலையில்லாத மனிதன், சொத்து இல்லாத மனிதன் — எடுத்துக்கொண்டு, அவரை உலகின் மிகவும் பிரியமான கதாபாத்திரமாக மாற்றினார். மேலும், மில்லியன் கணக்கானவர்களால் மனிதகுலத்தின் உருவகமாக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
மீள்தன்மை, மென்மை, எப்போதும் (உணவு, பாதுகாப்பு அல்லது அன்பிற்காக) தேடுவது, மற்றும் ஆழ்ந்த நீதி உணர்வைக் கொண்டிருப்பது, சில சமயங்களில் அவரை ஒரு போலீஸ்காரரைப் பின்னால் இருந்து உதைக்க வழிவகுக்கிறது. இது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கிறது.
சாப்ளினின் கலை வளர்ச்சியில் ஒரு தீர்க்கமான படியாக தங்க வேட்டை திரைப்படம் உள்ளது. இது அவரது படைப்புகளின் உணர்ச்சி மற்றும் தார்மீக வரம்பை ஆழப்படுத்துகிறது மற்றும் அவற்றில், நகர விளக்குகள், நவீன காலம் மற்றும் சிறந்த சர்வாதிகாரி (City Lights, Modern Times and The Great Dictator) உள்ளிட்ட அவரது பிற்கால தலைசிறந்த படைப்புகளுக்கு வழி வகுக்கிறது.
சமீபத்தில் மெக்ஸிகோ நகரத்தில் இந்த படத்தின் அற்புதமான புதிய மறுசீரமைப்பு திரையிடலின் போது, ஒரு விமர்சகர் குறிப்பிட்டது போல, தங்க வேட்டை திரைப்படமானது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே கட்டுப்படுத்த முடியாத சிரிப்பைத் தூண்டும் சக்தியை இழக்கவில்லை - இது சாப்ளினின் நகைச்சுவை மேதைமைக்கும், ஒடுக்கப்பட்டோர் மீதான அவரது இரக்கத்திற்கும் சான்றாகும். இந்தப் திரைப்படம் காலத்தால் அழியாதது.
திரைக் கதையும் அதன் மறக்க முடியாத தருணங்களும்
1890களின் பிற்பகுதியில், வடமேற்கு கனடாவில் உள்ள குளோண்டிக் தங்க வேட்டையின் போது உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், வடமேற்கு கனடாவில் உள்ள யூகோனின் பனி நிறைந்த பாலைவனங்கள் வழியாக தங்கத்தைத் தேடி அலைந்து திரியும் அதிர்ஷ்டம் தேடுபவர்களின் கூட்டத்துடன் இணையும் (சுமார் 100,000 பேர் 1896 மற்றும் 1899 க்கு இடையில் இந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர்) ஒரு சிறிய நாடோடியான சாப்ளினை —இங்கே தனிமையாக தேடுபவர் என்று வெறுமனே அடையாளம் காட்டப்படுகிறார்— பின்தொடர்கிறது. தங்க வேட்டைக்குப் பதிலாக, அவர் கஷ்டம், பசி மற்றும் இறுதியில் காதல் ஆகியவற்றைக் காண்கிறார்.
அவர் சந்திக்கும் சிலரில், தங்கத்தைக் கண்டுபிடித்து நினைவை இழக்கும் ஒரு சுரங்க ஆராய்ச்சியாளரான பிக் ஜிம் மெக்கே (மேக் ஸ்வைன்); பேராசையால் பைத்தியம் பிடித்த கொலைகாரன் பிளாக் லார்சன் (டாம் முர்ரே); மற்றும் நாடோடி மயக்க முயற்சிக்கும் காதல் காபரே நடனக் கலைஞரான ஜோர்ஜியா (ஜோர்ஜியா ஹேல்) ஆகியோர் அடங்குகின்றனர்.
தங்க வேட்டை திரைப்படம், திறமையாக கட்டமைக்கப்பட்ட நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான அத்தியாயங்களின் தொடராக விரிவடைகிறது, ஒவ்வொன்றும், சாப்ளினின் பேச்சை விட செய்கைகளின் மூலம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாண்டோமைம் நகைச்சுவை-நாடக கதைசொல்லலில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. பட்டினியால் வாடும் நாடோடி, தனது தோல் பாதணியை வேகவைத்து மென்மையாக நூடில்ஸ் போல பாதணி கயிறுகளை சுழற்றி, மீன் எலும்புகளைப் போல நகங்களை மென்மையாக பிடுங்கிக் கொண்டு, சாப்பிடும் அவநம்பிக்கையான உணவை யாரால் மறக்க முடியும்?
அல்லது ஒரு குன்றின் விளிம்பில் நிலையற்ற முறையில் தள்ளாடியபடி, நாடோடியும், பிக் ஜிம்மும் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஊர்ந்து செல்லும்போது ஆபத்தான முறையில் ஊசலாடும் மரத்திலான சிறிய அறையின் சிலிர்ப்பூட்டும் காட்சி. அல்லது ஜோர்ஜியா மற்றும் நண்பர்களின் வருகைக்காக தனியாகவும், வீணாகவும் காத்திருக்கும் சாப்ளின், இரண்டு ரொட்டி ரோல்களை முட்கரண்டிகளில் சொருகி, ஒரு ஜோடி அழகான நடனக் கால்களாக அதை வளைத்து, தனது விருந்தினர்களை மகிழ்விப்பதாக கற்பனை செய்யும் அற்புதமான “ரோல்களின் நடனம்” ஆகியவற்றை யாரால் மறக்க முடியும்?
பதிப்புகள், நீக்குதல்கள் மற்றும் மறுசீரமைப்புகள்
எப்போதும் பரிபூரணவாதியாக இருந்துவந்த சாப்ளின், 1942 இல் தங்க வேட்டை திரைப்படத்தை மீண்டும் பார்வையிட்டார். அதில் இசை, ஒலி வடிவங்கள் மற்றும் அவரது சொந்த விவரிப்பு ஆகியவற்றைச் சேர்த்தார். இந்த புதிய பதிப்பு திரைப்படம், பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய அனுமதித்தாலும், இது சில வருந்தத்தக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தியது. குறிப்பாக படத்தின் அசலில் இருந்த மனதைத் தொடும் மற்றும் வேடிக்கையான முடிவை நீக்குவது உட்பட சில துரதிர்ஷ்டவசமான பொருட்களும் நீக்கப்பட்டன. இதில் நாடோடி மற்றும் ஜோர்ஜியா, புகைப்படக் கலைஞருக்கு போஸ் கொடுக்கும்போது அசையாமல் இருக்க முடியாமல், ஒரு முத்தத்தால் புகைப்படத்தை அழித்துவிட்டனர்.
1942 ஆம் ஆண்டு, ஒலிப் பதிப்புடன் படம் வெளியானவுடன், 1925 ஆம் ஆண்டு அமைதியான பதிப்பு புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், பல தசாப்தங்களாக படத்தை அதன் அசல் வடிவத்தில் பார்ப்பது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருந்தது.
1970களின் தொடக்கத்தில், அறிஞர்களும் காப்பகவாதிகளும் தங்க வேட்டை திரைப்படத்தில் எஞ்சியிருக்கும் பிரதிகளிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1992 ஆம் ஆண்டில் கெவின் பிரவுன்லோ மற்றும் டேவிட் கில் ஆகியோரால் சாப்ளினின் சொந்த குறிப்புகளின் அடிப்படையில் மறுகட்டமைக்கப்பட்ட இசையுடன் ஒரு பெரிய மறுசீரமைப்பு, படத்தின் அசல் தலைப்புகள் மற்றும் காட்சிகளைத் திரும்பப் பெற்றது. ஜூன் 26, 1925 அன்று லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எகிப்திய தியேட்டரில் படத்தின் அசல் பிரீமியரின் 100 வது ஆண்டு விழாவிற்காக தயாரிக்கப்பட்ட மிகச் சமீபத்திய 4K மறுசீரமைப்பு, இந்த ஆண்டு பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
கலைஞரும் காலமும்
சிரிப்பையும், பரிதாப உணர்ச்சியையும் கலந்து வெளிப்படுத்தும் சாப்ளினின் திறன், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தில் வேரூன்றியிருக்கிறது. 1889 ஆம் ஆண்டு, தெற்கு லண்டனில் ஏழ்மையான இசை அரங்கக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த அவர், வறுமையின் அவமானங்களை நேரடியாக அறிந்திருந்தார். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறினார்; அவரது தாயார் ஹன்னா பல வருட கஷ்டங்களுக்குப் பிறகு சிந்திக்கவும் செயல்படவும் இயலாதவர் ஆகிவிட்டார்.
இளம் சார்லி, நடிப்பு பணிமனையில் நேரத்தைச் செலவிட்டார். அவர் தனது நடிப்புத் திறனைத் தக்க வைத்துக் கொண்டார் - முதலில் இசை அரங்குகளில் சிறுவர் பொழுதுபோக்கு நடிகராகவும், பின்னர் பிரெட் கர்னோவின் குழுவுடன் ஒரு நகைச்சுவை நடிகராகவும் இருந்த அவரை, அமெரிக்காவிற்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு, 1914 இல், குறும் படங்களில் தோன்றத் தொடங்கிய சாப்ளின், விரைவில் திரைப் படங்களை இயக்கவும் தொடங்கினார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், நாடோடி கதாபாத்திரத்தின் நகைச்சுவை சினிமா சாகசங்கள், சாப்ளினை உலகின் மிகவும் பிரபலமான மனிதராக மாற்றியது. 1914 மற்றும் 1921 க்கு இடையில், சாப்ளின் 50 க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கி, அவரது உடல்மொழி நகைச்சுவை மற்றும் பரிதாபகரமான தோற்றக் கலையை முழுமையாக்கினார்.
1921 ஆம் ஆண்டு, குழந்தை (The Kid) என்ற திரைப்படத்தின் மூலம், நாடோடி கதாபாத்திரத்தை உள்ளடக்கிய ஒரு நகைச்சுவை மற்றும் நாடகக் கதை ஒரு திரைப்படத்தின் போக்கில் விரிவடைந்து, பார்வையாளர்களை சிரிக்க மட்டுமல்லாமல் உணர்ச்சிவசப்படவும் தூண்டும் என்பதை சாப்ளின் நிரூபித்தார். (இந்தப் படத்தின் முதல் இடைத் தலைப்பு அறிவிப்பது போல்: ஒரு புன்னகையுடன் கூடிய படம் - ஒருவேளை, ஒரு துளி கண்ணீரையும் சிந்த வைக்கும்.)
தங்க வேட்டை திரைப்படம் இந்தத் தொகுப்பை ஆழப்படுத்தியது. ஆனால் ஒரு பரந்த சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான வலையில், இந்தப் படம் அவரது முந்தைய குறும்படங்களின் அபாரமான ஆற்றலைத் தக்க வைத்துக் கொண்டது.
சாப்ளினின் கலை மற்றும் 20 ஆம் நூற்றாண்டு
“தங்க வேட்டை” திரைப்படத்தில், நவீன காலம் (Modern Times -பெரும் மந்தநிலை மற்றும் தொழிற்சாலை வாழ்க்கை) அல்லது “பெரும் சர்வாதிகாரி” (The Great Dictator-பாசிசம்) போன்ற படங்களில் காணப்பட்ட வெளிப்படையான சமூக விமர்சனங்கள் இல்லாவிட்டாலும், அந்த படங்களை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இது இருந்தது. ஒரே படைப்பிற்குள் நகைச் சுவையையும், நாடகத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் அனுபவங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை இது சாப்ளினுக்குக் கற்றுக் கொடுத்தது.
இந்தப் படத்தின் வெற்றி, ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பிலிருந்து சாப்ளின் சுதந்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தியது. ஒருங்கிணைந்த கலைஞர்களின் இணை நிறுவனராகவும், தனது சொந்த ஸ்டுடியோவின் உரிமையாளராகவும், சாப்ளின் முழு படைப்புக் கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டார். எழுதுதல், இயக்குதல், தயாரித்தல், இசையமைத்தல் மற்றும் தனது சொந்த திரைப்படங்களில் நடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டார். இந்த சுதந்திரம், சிறிது காலத்திற்கு, அன்றைய மிக முக்கியமான பிரச்சினைகளை நேரடியாகக் கையாள அவரை அனுமதித்தது.
தங்க வேட்டை திரைப்படத்துக்கு பிறகு சாப்ளினின் வாழ்க்கை அவரது காலத்தில் வளர்ந்து வரும் முரண்பாடுகளைப் பிரதிபலித்தது. 1952 ஆம் ஆண்டில், லைம் லைட் திரைப்படத்தின் முதல் காட்சிக்காக லண்டனுக்குப் பயணம் செய்தபோது, இடதுசாரி திரைப்படத் தயாரிப்பாளர் மீது வேண்டுமென்றே மெக்கார்த்தியிஸ்ட் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம், அவர் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சாப்ளின் தனது வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழத் தள்ளப்பட்டார். மேலும் அவர், 1972 இல் ஒரு கெளரவ அகாடமி விருதைப் பெறுவதற்காக அமெரிக்காவிற்கு ஒரு முறை மட்டுமே திரும்பியிருந்தார்.
இன்று தங்க வேட்டை திரைப்படம்
இன்று தங்க வேட்டை வெளியாகி ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், இத் திரைப்படம் இன்னும் ஒரு வியக்கத்தக்க சாதனையாக உள்ளது. இது, கவிதை, நகைச்சுவை மற்றும் ஆழ்ந்த மனிதாபிமானத்தை கொண்டுள்ளது. சாப்ளின் ஒருமுறை, இந்தப் படம் மூலம் தான் நினைவுகூரப்பட விரும்புவதாகக் கூறினார். இன்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஏன் என்று எமக்குப் புரிகிறது. பசி மற்றும் நம்பிக்கை, ஒரு மனிதன் தனது காலணியை சாப்பிட்டு காதல் கனவு காண்பது போன்ற அதன் காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்கவும், ஒருவேளை கண்ணீரையும் வரவழைக்கின்றன.
சமூக சமத்துவமின்மையின் அளவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வரும் இன்றைய உலகில், சாப்ளினின் தொலைநோக்குப் பார்வை மீண்டும் அவசரமாகப் பொருத்தமானதாகிறது. சிரிப்பு என்பது ஒரு எதிர்ப்பின் செயலாக இருக்கலாம் என்பதைக் காட்டும் திறனில், சாப்ளினின் மேதைமை இருந்தது. முதலாளித்துவத்தின் மனிதாபிமானமற்ற தன்மையைக் கண்டு சிரிப்பது, அதைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல, மாறாக சமூக ஒழுங்கின் அபத்தத்தைக் காட்டுவதற்கும், சிறந்த ஒன்றைக் கற்பனை செய்வதற்கும் ஆகும்.
