மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
“ஐரோப்பாவை ஒரு பூதம் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது – அது கம்யூனிசம் எனும் பூதம்”. 1847 இன் பிற்பகுதியில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, 1848 இன் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது. ஏறத்தாழ 180 ஆண்டுகளுக்குப் பின்னர், அதே பூதம் மீண்டுமொருமுறை ஐரோப்பாவில் மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்களை வேட்டையாடுகிறது.
ரஷ்யாவில் 1917 சோசலிசப் புரட்சியின் ஆண்டு நிறைவான நவம்பர் 7 அன்று, நவம்பர் 2-8 தேதிகளை அமெரிக்காவில் “கம்யூனிச-எதிர்ப்பு வாரம்” என்று அறிவித்து, ட்ரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை பிரகடனத்தின் இன்றியமையாத முக்கியத்துவம் இதுவாகும். சோசலிசத்தை “நம்பிக்கை, விசுவாசம், சுதந்திரம் மற்றும் செழிப்புக்கு” அச்சுறுத்தலாகக் கருதி, இந்த ஆவணம் “புதிய குரல்கள்” பழைய பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்கிறது என்று எச்சரிக்கிறது.
“நம்பிக்கையை அழிக்கவும், சுதந்திரத்தை நசுக்கவும், கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த செழிப்பை அழிக்கவும் முயன்ற ஆட்சிகளால் கொல்லப்பட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களுக்கு கம்யூனிசம் தான் பொறுப்பு” என்ற மோசடியான கூற்றுடன் இந்தப் பிரகடனம் தொடங்குகிறது. வலதுசாரி சித்தாந்தவாதிகளால் தொடர்ந்து கூறப்படும் இந்த எண்ணிக்கை, 1997 ஆம் ஆண்டு வெளியான “கம்யூனிசத்தின் கருப்பு புத்தகம்“ என்ற தவறான படைப்பிலிருந்து வருகிறது. இது 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து வன்முறை நிகழ்வுகளையும் - உள்நாட்டுப் போர்கள் முதல் பஞ்சங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளைக் குறிவைத்து ஸ்டாலினிச களையெடுப்புகள் வரை - ஒன்றாக இணைத்து “கம்யூனிசம்” என்று கூறப்படும் ஒற்றை இறப்பு எண்ணிக்கையாகக் காட்டுகிறது.
“ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கம்யூனிசம், அழிவைத் தவிர வேறெதையும் கொண்டு வரவில்லை” என்று ட்ரம்பின் பிரகடனம் அறிவிக்கிறது. ஆயினும், ட்ரம்பின் அறிவிப்பில் எங்கும் முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் பற்றிய குறிப்பு இல்லை: குறிப்பாக, முதலாம் உலகப் போர் (22 மில்லியன் பேர் இறந்தனர்); இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத இனப்டுகொலை, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுக் குண்டு வீச்சுக்கள் (85 மில்லியன் பேர் இறந்தனர்); கொரியப் போர் (3 மில்லியன் பேர் இறந்தனர்); வியட்நாம் போர் (3 மில்லியன் வியட்நாமியர்கள், மேலும் கம்போடியா மற்றும் லாவோஸில் 370,000 பேர் இறந்தனர்); 1965-66 இல் இந்தோனேசியாவில் நடந்த பாரிய படுகொலை (குறைந்தது 1 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர்), மற்றும் எண்ணற்ற பிற குற்றங்கள் அடங்குகின்றன.
வெள்ளை மாளிகை தனது ஆவணத்தில், குறிப்பாக “பனிப்போர் முடிவடைந்ததில் இருந்து 34 ஆண்டுகள்” என்று குறிப்பிடுகிறது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை, யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சு முதல் லிபியா மற்றும் சிரியா மீதான படையெடுப்புகள் வரை, மற்றும் இப்போது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலை வரையில் முடிவில்லா மற்றும் தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் நடந்து வருகிறது. ஏகாதிபத்தியம் மீண்டும் மனிதகுலத்தை உலகப் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. ட்ரம்பின் சொந்த “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்செத் கடந்த வாரம் “நாம் 1939 உடன் ஒப்பிடக்கூடிய ஒரு தருணத்தை கடந்து வருகிறோம்” என்று அறிவித்தார்.
வெளிப்படையான வஞ்சகத்திற்கு அப்பால், இந்தப் பிரகடனத்தின் முழுமையான பாசாங்குத்தனம் தனித்து நிற்கிறது. “கம்யூனிச ஆட்சிகள் தாங்கள் ஒடுக்கிய மக்களின் கடவுள் கொடுத்த உரிமைகளையும் கண்ணியத்தையும்” மீறிவிட்டதாக அறிவித்துள்ள வெள்ளை மாளிகை, “கம்யூனிசத்தை எதிர்த்து உறுதியாக நிற்பதாகவும், சுதந்திரத்தையும் மனித கண்ணியத்தையும் பாதுகாத்து வருவதாகவும்” சூளுரைக்கிறது. கம்யூனிசம் “கருத்து வேறுபாட்டை மௌனமாக்குகிறது, நம்பிக்கைகளை தண்டிக்கிறது, மற்றும் தலைமுறையினர் அரசின் அதிகாரத்தின் முன் மண்டியிட வேண்டும் என்று கோருகிறது” என்றும் அது பிரகடனம் செய்கிறது.
இந்த வரிகள் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களிடமிருந்து உணவு முத்திரை சலுகைகளை அகற்ற பணியாற்றிவரும் ஒரு நிர்வாகத்தால் எழுதப்பட்டுள்ளன. இந்த நிர்வாகம், அமெரிக்க நகரங்களில் மத்திய கூட்டாட்சி துருப்புக்களை நிலைநிறுத்துகிறது; குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) சோதனைகள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சுற்றி வளைத்து காணாமல் ஆக்கி வருகிறது; ஜனநாயக ஆட்சி வடிவங்களை தூக்கி எறிந்து, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் சதித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
தடுத்து நிறுத்தக்கூடிய தொழில்துறை பேரழிவுகளில் தொழிலாளர்கள் தினமும் இறந்துவரும் ஒரு சமூகத்தில், 1 சதவீத பணக்காரர்கள் கீழ்மட்டத்திலுள்ள 90 சதவீதத்தினரை விட அதிகமான செல்வத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சமூகத்தில், “சுதந்திரம்” மற்றும் “கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த செழிப்பை” பாதுகாப்பதாகக் கூறுவது, பெரும்பான்மையான மக்களின் அறிவு மற்றும் அனுபவத்திற்கு கிடைத்த அவமானமாகும். ட்ரம்பின் “சுதந்திரம்” என்பது சமூகத்தை சூறையாடுவதற்கும், பூமியை அழிப்பதற்கும் மற்றும் தண்டனையின்றி கொல்வதற்குமான தன்னலக் குழுக்களின் சுதந்திரமாகும்.
அனைத்துப் பொய்களுக்கும், வரலாற்று பொய்மைப்படுத்தல்களுக்கும் அடிப்படையாக இருப்பது முதலாளித்துவத்திற்கு எதிராக, வளர்ந்து வரும் எதிர்ப்பால் பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கத்தின் அச்சங்களாகும். வெள்ளை மாளிகையின் இந்த பிரகடனத்திற்கான உடனடி அரசியல் உள்ளடக்கம் நியூ யோர்க் மேயர் தேர்தலாகும். இதில், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட சோஹ்ரான் மம்தானிக்கு வாக்களித்தனர். “கம்யூனிச எதிர்ப்பு வாரமானது” நவம்பர் 4 ஆம் தேதி இடம்பெற்ற தேர்தல் நாளையும் சேர்க்கும் வகையில் பின் தேதியிடப்பட்டுள்ளது. மேலும் “சமூக நீதி” மற்றும் “ஜனநாயக சோசலிசம்” என்ற மொழியில் தங்களை மறைத்துக் கொள்பவர்களுக்கு எதிராக அது ஒரு கடுமையான எச்சரிக்கையாக உள்ளது.
வெள்ளை மாளிகையின் பிரகடனத்திற்கு ஒரு நாள் கழித்து, பில்லியனரான அமேசன் ஸ்தாபகர் ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழு, “ஜெனரலிசிமோ மம்தானி” என்று அவர்கள் அழைத்த நபர் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியது. மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் “வர்க்க எதிரிகளை அடையாளம் கண்டு... பின்னர் அவர்களை நசுக்குவதற்காக” போஸ்ட் கண்டனம் செய்தது.
ஒட்டுமொத்த தன்னலக்குழுக்களும், மிதமான சமூக-ஜனநாயகவாதி மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வெறித்தனமாக பதிலளித்து வருகின்றனர். ஆனால், மம்தானி, தேர்தலுக்குப் பிந்தைய நாட்களில் தன்னலக்குழுக்களுக்கு உறுதியளிக்க விரைந்துள்ளார்.
புராணக் கதையின் ஒரு கற்பனைக் கதாபாத்திரமான மெல்வில்லின் கேப்டன் ஆஹாப், மோபி டிக்கை ஒரு “பேஸ்ட்போர்டு முகமூடி” என்று கூறுகிறார். அதன் பின்னால் ஒரு “புரிந்துகொள்ள முடியாத தீங்கு இருந்தது. அந்த புரிந்துகொள்ள முடியாத விஷயத்தைத் தான் நான் முக்கியமாக வெறுக்கிறேன்; வெள்ளை திமிங்கல முகவராகவோ அல்லது வெள்ளை திமிங்கல அதிபராகவோ இருந்தால், நான் அந்த வெறுப்பை அவர் மீது செலுத்துவேன்” என்று கேப்டன் ஆஹாப் கூறுகிறார். நியூ யோர்க் தேர்தலில் ஆளும் வர்க்கம் அஞ்சுவது மம்தானியை அல்ல, அவர் ஒரு பெரிய திமிங்கலம் அல்ல, மாறாக அவரது விரைவான எழுச்சிக்குக் காரணமான நனவில் ஏற்படும் மாற்றம் – அது புரட்சி மற்றும் பறிமுதல் என்ற பூதமாகும்.
முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வருவதாலும், அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுவதாலும் அவர்களின் வெறி எழுகிறது – கடந்த அக்டோபர் 18 அன்று நடந்த பாரிய “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான பெரும் எதிர்ப்பு, தற்போது ஆப்பிரிக்கா முழுவதும் பரவி வரும் “பரம்பரை Z” போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் 67 சதவீத இளைஞர்கள் சோசலிசம் குறித்து நேர்மறையான அல்லது நடுநிலையான பார்வையைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டும் கருத்துக் கணிப்புக்களை ஒப்பிடுகையில், முதலாளித்துவத்திற்கு வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர் என்பதைக் காட்டுகின்றன.
ஒரு மோசமான கிரிப்டோ-பாசிஸ்ட் பீட்டர் தியேல் என்பவரிடமிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு மின்னஞ்சல் வெளியாகியுள்ளது. அவர் சமீபத்தில் தனது சக பில்லியனர்களுக்கு, கிறிஸ்துவின் விரோதியின் வருகை குறித்து எச்சரிக்கும் உரைகளை அனுப்பத் தொடங்கியுள்ளார். இந்த மின்னஞ்சலில், “நீங்கள் இளைஞர்களை பாட்டாளி வர்க்கமாக்கினால், அவர்கள் இறுதியில் கம்யூனிஸ்டுகளாக மாறினால் ஆச்சரியப்படக் கூடாது” என்று அவர் எச்சரிக்கிறார்.
ஆனால், இதுதான் முதலாளித்துவம் மற்றும் தன்னலக்குழுவின் ஆட்சியின் தர்க்கம் ஆகும். அதீத செல்வந்தர்களுக்கும் மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினருக்கும் இடையிலான இடைவெளி மிகவும் மோசமானது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் எலோன் மஸ்க்கிற்கு ஒரு மணி நேரத்திற்கு 50 மில்லியன் டாலருக்கு சமமான 1 டிரில்லியன் டாலர் ஊதிய தொகுப்பை வழங்கியுள்ளனர். அதே நேரத்தில், டெஸ்லாவின் ஆலைகளில் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 18 டாலரில் தொடங்கி, இடைவிடாத வேகம், பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர். கடந்த பத்து வருடங்களில், பத்து மில்லியன் கணக்கானவர்கள், பணிநீக்கங்கள், பட்டினி மற்றும் கடன் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையிலும் கூட, 10 பணக்கார அமெரிக்கர்களின் கூட்டு செல்வவளம் ஆறு மடங்குகள் அதிகரித்திருப்பதைக் கண்டுள்ளனர்.
தன்னலக்குழுக்கள் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாள வர்க்கத்தில் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தின் எழுச்சி, அவர்களின் செல்வவளம் மற்றும் அதிகாரத்திற்கு பிரதான அச்சுறுத்தல் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதால், அவர்கள் சோசலிசத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்.
ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், உண்மையான “கம்யூனிசத்தின் குற்றங்கள்” ஸ்டாலினிச ஆட்சிகளின் நடவடிக்கைகள் அல்ல. மாறாக 1917 ரஷ்யப் புரட்சியின் மரபியமே ஆகும். அக்டோபர் புரட்சிதான் வரலாற்றில் முதல் தடவையாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் திறனை எடுத்துக்காட்டியது. 20 ஆம் நூற்றாண்டில், தொழிலாளர்கள் வென்றெடுத்த ஒவ்வொரு பெரிய ஆதாயமும் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட பாரிய போராட்டங்கள் மூலமாக வென்றெடுக்கப்பட்டது. சிக்கன நடவடிக்கைகள், போர், சர்வாதிகாரம் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை மூலமாக, ஆளும் வர்க்கம் இந்த மரபியத்தை அழிக்க தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் இப்போது கட்டவிழ்ந்து வரும் அனுபவங்கள், பல தசாப்தங்களாக “இடது” என்று கடந்து வந்த அரசியலை மதிப்பிழக்கச் செய்து வருகின்றன. அதாவது, இனம் மற்றும் பாலினம் என்ற உயர் நடுத்தர வர்க்க அரசியல் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், சாண்டர்ஸ், ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் இப்போது மம்தானி ஆகியோரின் முட்டுச்சந்தில் உள்ள சீர்திருத்தவாதம், வரலாற்றுரீதியில் திவாலான ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் விளிம்புகளைச் சுற்றி ஒட்டுவேலை செய்துவரும் அரசியலைக் கொண்டுள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தின் மார்க்சிச வேலைத்திட்டத்தில் வேரூன்றியுள்ள தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுதல் மற்றும் தனியார் இலாபத்திற்காக அன்றி மனித தேவைகளுக்கு சேவை செய்வதற்காக பொருளாதார வாழ்வை ஜனநாயக ரீதியாக மறுஒழுங்கு செய்யும் சோசலிசத்திற்கான போராட்டத்தில், சர்வதேச அளவில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்த போராடுகிறது.
