முன்னோக்கு

தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாப்போம்! பாரிய பணிநீக்கங்களுக்கு எதிரான ஒரு சுயாதீனமான, உலகளாவிய இயக்கத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

டெட்ராய்டில் வாகனத்துறை ஆலை மூடல்களுக்கு எதிரான ஒரு பேரணியில் தொழிலாளர்கள்

பெருநிறுவனக் கட்சிகள் மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக, பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு எதிராக, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்தை ஒழுங்கமைக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, IWA-RFC, “பணிநீக்கங்கள் மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராட சாமானிய குழுக்களை உருவாக்குங்கள்!” என்ற தலைப்பில் IWA-RFC ஏற்பாடு செய்த இணையவழி கூட்டத்தில், 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் உள்ள பல்வேறு தொழில்களில் உள்ள தொழிலாளர்களின் சக்திவாய்ந்த அறிக்கைகள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றன. அவற்றில் சில, வரும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்படும்.

பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களில் கூட கண்டிராத அளவில் இப்போது கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் பணிநீக்கங்களின் அலை, கூட்டத்தின் மையக் கவனமாக இருந்தது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள், தங்கள் வாழ்க்கையில் அடுத்த படிகளைக் கண்டறிய உதவும் நிறுவனமான சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸின் கூற்றுப்படி, அமெரிக்க நிறுவனங்கள் இந்த ஆண்டு இதுவரை 1.1 மில்லியன் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இது 2022 ஐ விட 65 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதத்தின் மொத்த எண்ணிக்கை 20 ஆண்டுகளில் எந்த அக்டோபரிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகவும், 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெரும் மந்தநிலையின் போது எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகவும் இருந்தது. சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று, வாஷிங்டன், டி.சி. உட்பட 22 மாநிலங்கள் ஏற்கனவே மந்தநிலையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

இந்த நெருக்கடி சர்வதேச அளவில் உள்ளது. ஜேர்மன் வாகனத் துறையில் மட்டும், 2030க்குள் 90,000 ம் வேலைகள் அகற்றப்பட உள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் எங்கிலும் ஆயிரக்கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏனெனில், விற்பனை வீழ்ச்சிக்கான செலவு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள சுங்கவரிகளின் தாக்கத்தை தொழிலாளர்கள் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக்கி வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு மூலம் 92 மில்லியன் வேலைகள் அகற்றப்படும் என்று உலகப் பொருளாதார மன்றம் மதிப்பிட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அலுவலகத் தொழிலாளர்கள் இருவருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலஞ்சர் நிறுவனத்தின் அறிக்கையில், 45,000 வேலை வெட்டுக்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவை நேரடியாக காரணமாகக் மேற்கோள் காட்டினாலும், அவற்றில் 30,000ம் கடந்த மாதத்தில் மட்டும் நிகழ்ந்தன. இது, செயல்முறையின் விரைவான வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வேலையின்மை மற்றும் சமூகத் துயரங்களின் அதிகரிப்புடன், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு செல்வங்கள் பெரும் செல்வந்தர்களால் குவிக்கப்பட்டு வருகின்றன. பத்து அமெரிக்க பில்லியனர்கள் கடந்த ஆண்டில் தங்கள் கூட்டு செல்வத்தை 700 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளனர். ஒரு பாசிச முட்டாளும், டெஸ்லாவின் தலைவருமான எலோன் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர்கள் வரை ஊதியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 2008-2009 வீழ்ச்சியை விட கூடுதலான அளவில் மற்றொரு உலகப் பொருளாதார நெருக்கடியின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. முன்னொருபோதும் இல்லாத நிதியக் குமிழிகளின் விளைபொருளான இந்த நெருக்கடியின் சுமை, முற்றிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட வேண்டும் என்பதில் ஆளும் வர்க்கம் உறுதியாக உள்ளது.

இந்த சுமை மூன்று வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. முதலாவது வழி முறையாக, நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியங்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு மீதான தாக்குதல்கள் மூலம் பெருநிறுவனங்கள் சுரண்டலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், ஒரு UPS சரக்கு ஜெட் விமான விபத்து மற்றும் கடந்த வாரம் இரண்டு அமெரிக்க தபால் ஊழியர்களின் கொடூரமான மரணங்கள் உள்ளிட்ட முடிவில்லாத தொடர்ச்சியான பயங்கரமான தொழில்துறை விபத்துகளுக்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

இரண்டாவது வழி முறையாக, குறைவான தொழிலாளர்களிடமிருந்து அதிக உழைப்பைப் பெறுவதற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாகும். இதுதான் செயற்கை நுண்ணறிவு ஏற்றத்தின் முக்கியத்துவம் ஆகும். லியர் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி அதன் சாரத்தை விளக்கியபோது, மனிதத் தலையீடு இல்லாமல் இயங்கும், முழுமையாக செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் “முழு தானியங்கி உற்பத்தி” தொழிற்சாலைகளின் இலக்கை விவரித்தார்.

மூன்றாவது வழிமுறையாக, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததைப் போலவே, யுத்தமாகும்: இது, மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான அணுகலைக் கைப்பற்ற ஏகாதிபத்திய சூறையாடல் ஆகும். இது, ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவு, காஸாவில் இனப்படுகொலை மற்றும் சீனாவிற்கு எதிரான இன்னும் இரத்தக்களரி மோதலுக்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வேலைத்திட்டத்தை ஜனநாயக வழிமுறைகள் மூலம் திணிக்க முடியாது. ட்ரம்ப் மற்றும் பிற நாடுகளில் உள்ள அவரது சகாக்கள் மூலமாக தன்னலக்குழுவானது, அது ஏற்கனவே தூண்டிவருகின்ற, அதிகரித்து வரும் எதிர்ப்பை அடக்குவதற்கு சர்வாதிகாரங்களை நிறுவ முயல்கிறது.

இதுதான், பெருநிறுவன செல்வந்த தன்னலக்குழுக்களின் “தீர்வாகும்”. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் தீர்வு, ஒவ்வொரு தொழிற்துறை மற்றும் வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும். இது தன்னலக்குழுவின் வேரூன்றிய அதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பலத்தைத் திரட்டுவதாக இருக்க வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட உபரியைப் பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும், உற்பத்தியின் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்காகவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்.

பிரமாண்டமான எதிர்ப்பு உருவாகி வருகிறது. பத்தாயிரக்கணக்கான அமெரிக்க சுகாதாரப் பணியாளர்கள் மத்தியிலும், இராணுவம் மற்றும் சிவிலியன் போயிங் விமானத் தொழிலாளர்கள் மத்தியிலும், மேலும் பல துறைகளிலும் உலகம் முழுவதும் வேலைநிறுத்தங்கள் வெடித்து வருகின்றன. இத்தாலியில், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை மையமாகக் கொண்ட மற்றொரு பொது வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன.

ஆனால் இந்த எதிர்ப்பானது, முதலாளித்துவ அரசாங்கங்களின் நிர்வாகத்தின் ஒரு கருவியாக செயல்பட்டுவரும் தொழிற்சங்க எந்திரத்தின் அடிப்படை தடையை எதிர்கொள்கிறது.

தொழிற்சங்கங்கள் பாரிய பணிநீக்கங்களுக்கு எதிராக எந்த தீவிரமான போராட்டத்தையும் முன்மொழியவில்லை. இதைவிட மோசமானது என்னவென்றால், இந்த பணிநீக்கங்களை செயல்படுத்த அவர்கள் உதவி வருகிறார்கள் என்பதாகும். அமெரிக்காவில், டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கத்தின் 2023 விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தின் விளைவாக, UPS நிறுவனத்தில் இந்த ஆண்டு 48,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஃபோர்டின் டியர்பார்ன் பார ஊர்தி நிறுவனத்தில் காலவரையற்ற பணிநீக்கங்கள் தொடங்கியுள்ளன. ஆனால், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம், தன்னார்வ வெளியேற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தொழிலாளர்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை!

இதற்கிடையில், இந்த இரு தொழிற்சங்கங்களின் தலைவர்களும், ஏனையவர்களும் உலகத்தின் மீதான ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” பொருளாதாரப் போரை பகிரங்கமாக ஆதரித்து வருகின்றனர். இது, தாங்களே அழிக்க உதவிய வேலைகளைக் காப்பாற்றும் என்று, அவர்கள் பொய்யாகக் கூறி வருகின்றனர்.

வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் அடிப்படைப் பணி, தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து அதன் சமூக செல்வாக்கை அழிப்பதாகும். தொழிற்சங்க எந்திரம் ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய, ஜனநாயக அமைப்புகள், சாமானிய தொழிலாளர் குழுக்களால் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் இலக்காகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற IWA-RFC யின் கூட்டம், ட்ரம்ப் நிர்வாகத்தின் கொடூரத்தால் அச்சமடையாமல், கோபமான, திறமையான மற்றும் உறுதியான தொழிலாள வர்க்கத்தின் குரலுக்கு சக்திவாய்ந்த வெளிப்பாட்டைக் கொடுத்தது.

அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் சமீபத்திய பணிநிறுத்தம் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம், மிச்சிகன் தொழிற்சாலையில் ஒரு மரணத்திற்கு வழிவகுத்த பாதுகாப்பற்ற நிலைமைகளை அம்பலப்படுத்திய தபால் ஊழியர்கள், பெருமளவிலான பணிநீக்கங்களை எதிர்கொண்ட வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் பொதுக் கல்விக்கான உரிமையை பாதுகாக்கும் கல்வியாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தின் பேச்சாளர்களில் அடங்குவர். கனடா மற்றும் ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டம் குறித்த அறிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றன.

இது, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பின்வரும் கோரிக்கைகள் தெளிவாக இருக்க வேண்டும்: வோல் ஸ்ட்ரீட் உருவாக்கிய நெருக்கடிக்கு விலை கொடுக்க ஒரு பணிநீக்கம் கூட இடம்பெறக்கூடாது! செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உபரிகளை, சுகாதாரம், ஓய்வூதியங்கள், வீட்டுவசதி மற்றும் கல்வி உரிமை உட்பட தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும்!

ஒரு நாட்டின் தொழிலாளர்களை மற்றொரு நாட்டின் தொழிலாளர்களுக்கு எதிராக மோதவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினரைக் குற்றம் சாட்டவும் முயலும் தேசியவாத விஷத்தை, தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவர்கள் எதிரிகள் அல்ல, மாறாக சகோதர சகோதரிகள், அனைவரும் ஒரே நிதிய தன்னலக்குழுவால் சுரண்டப்படுகிறார்கள்.

போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இராணுவ-தொழில்துறை எந்திரத்தை தகர்க்கவும், மனிதர்களை அழிப்பதற்கு செலவிடப்படும் வளங்களை மனிதர்களின் நலனுக்காக பயன்படுத்தவும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

ஆளும் உயரடுக்கு, சந்தை சக்திகளையும் பங்குதாரர்களின் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டி, இந்தத் திட்டம் நடைமுறைக்கு யதார்த்தமற்றது என்று சந்தேகத்திற்கு இடமின்றி பதிலடி கொடுக்கும். ஆனால், சமூக உரிமைகள் சந்தையின் அராஜகத்துடன் பொருந்திப் போகாது என்பதை மட்டுமே இது காட்டுகிறது. செல்வந்தர்கள் கூட “சுதந்திர சந்தையை” நம்பவில்லை. மாறாக அவர்கள், அரசாங்க பிணையெடுப்புகளில் உள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களையே நம்புகிறார்கள்.

தொழிலாளர்கள், தமது வேலைகளின் பாதுகாப்பை தன்னலக்குழுவின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு இணைக்க வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமும், அவற்றை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலமும், பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை நாம் அவர்களின் கைகளில் இருந்து பறிக்க வேண்டும்.

அதே நேரத்தில், இதுதான் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே யதார்த்தமான அடிப்படையும் ஆகும். ஏனென்றால், முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலமான மற்றும் பகுத்தறிவற்ற வர்க்க நலன்களே சர்வாதிகாரத்திற்கு ஆதாரமாகும்.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி, போராட்டத்திற்கு உதவி வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். இப்போதே எங்களைத் தொடர்பு கொண்டு போராடத் தொடங்குங்கள்.

Loading