ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் நேட்டோவுக்குள் பிளவை ஆழமாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

MAGA (அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு) தொப்பி அணிந்த ட்ரம்ப். மார்ச் 19, 2016 [AP Photo/Matt York]

புதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையேயான கூட்டணி மேலோட்டமாக மட்டுமல்ல, ஆழமாகப் பிளவுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட ட்வீட்களில் அறிவித்ததையும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் ஆற்றிய உரையும் இப்போது உத்தியோகபூர்வ அமெரிக்க வெளியுறவுக் கொள்கையாக ஆகி உள்ளது.

ஒவ்வொரு ஜனாதிபதி பதவிக் காலத்திலும் ஒருமுறை திருத்தப்படும் மூலோபாய ஆவணம், ட்ரம்பின் “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” (“Make America Great Again”) என்ற முழக்கத்தை வெளியுறவுக் கொள்கையின் மொழியில் மொழிபெயர்க்கிறது. முதலாம் உலகப் போரின் முடிவில் ஜனாதிபதி உட்ரோ வில்சன் (Woodrow Wilson) தனது “14 அம்சங்களை” வெளியிட்டதிலிருந்து, அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்கான தேடலை “சுதந்திரம்,” “ஜனநாயகம்” மற்றும் “சட்டத்தின் ஆட்சி” போன்ற சொற்றொடர்களால் எப்போதும் மறைத்து வந்தது. 2017 இல் ட்ரம்பின் முதல் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திலும் இதுதான் நிலை. ஆனால் இன்று அது உண்மையாக இல்லை.

புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயம் அதன் கொள்ளையடிக்கும் இலக்குகளை வெளிப்படையாகக் கூறுகிறது. “வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் முக்கிய தேசிய நலன்களைப் பாதுகாப்பதாகும்; இதுதான் இந்த மூலோபாயத்தின் ஒரே கவனம்,” என்று அந்த ஆவணம் கூறுகிறது. “அமெரிக்கா உலகின் மிக வலிமையான, பணக்கார, மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகவும் வெற்றிகரமான நாடாக இன்னும் பல தசாப்தங்களுக்குத் தொடர்வதை” இந்த மூலோபாயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்காக அமெரிக்கா, “உலகின் மிகவும் சக்திவாய்ந்த, கொடிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யவும், பயிற்சி அளிக்கவும், உபகரணங்களை வழங்கவும், களமிறக்கவும்,” “உலகின் மிக உறுதியான, நம்பகமான மற்றும் நவீன அணு ஆயுத தடுப்பை” உருவாக்கவும், மேலும் “உலகின் மிக வலிமையான, மிகவும் ஆற்றல்மிக்க, மிகவும் புதுமையான மற்றும் மிகவும் மேம்பட்ட பொருளாதாரத்தை” ஏற்படுத்தவும் விரும்புகிறது.

மற்ற அனைத்து நாடுகளுடனான அனைத்து உறவுகளும் இந்தக் குறிக்கோள்களுக்குக் கீழ்ப்படுத்தப்படும்.

1823 இன் மன்ரோ கோட்பாட்டிற்கான “ட்ரம்ப்பின் பிற்சேர்க்கை” (“Trump Corollary”) மூலம் இலத்தீன் அமெரிக்கா மீண்டும் அமெரிக்காவின் கொல்லைப்புறமாக (backyard) மாற வேண்டும்:

பல ஆண்டுகளாக அலட்சியப்படுத்தப்பட்ட பிறகு, அமெரிக்கா மேற்கு அரைக்கோளத்தில் (அமெரிக்கக் கண்டம்) அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மீட்டெடுக்கவும், செயல்படுத்தவும், மேலும் எமது தாயகத்தையும் பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கிய புவியியல் பகுதிகளுக்கான எமது அணுகலையும் பாதுகாக்க மன்ரோ கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் மற்றும் செயல்படுத்தும். அரைக்கோளத்திற்கு வெளியில் உள்ள போட்டியாளர்கள் எமது அரைக்கோளத்தில் படைகள் அல்லது அச்சுறுத்தும் பிற திறன்களை நிலைநிறுத்தவோ, அல்லது மூலோபாய ரீதியாக இன்றியமையாத சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யும் திறனை நாம் மறுப்போம்.

இந்தோ-பசுபிக் பகுதி “இப்போதே மற்றும் வரும் நூற்றாண்டுகளின் முக்கிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போர்க்களங்களில் ஒன்றாகத் தொடர்ந்து இருக்கும்.”

கொள்கையில் மிகவும் வியத்தகு மாற்றம் ஐரோப்பாவை நோக்கியதாக இருக்கும். அமெரிக்கா தனது நேட்டோ கூட்டாளிகளின் உள்விவகாரங்களில் தலையிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தை உடைக்கவும், பாசிசக் கட்சிகளை வலுப்படுத்தவும், இனவெறி மறுகுடியேற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உதவவும் நோக்கம் கொண்டுள்ளது. இல்லையெனில், வெளிப்படையான இனவெறி மொழியில் கூறப்படுவதன் படி, “அதிபட்சம் சில தசாப்தங்களுக்குள் சில நேட்டோ உறுப்பினர்கள் பெரும்பான்மையாக ஐரோப்பியரல்லாதவர்களாக மாறுவது சாத்தியமானதை விட அதிகம்.”

ரஷ்யா இனி ஒரு எதிரியாகக் குறிப்பிடப்படவில்லை; மாறாக, ரஷ்யாவுடன் “மூலோபாய ஸ்திரத்தன்மையை” அடைய ஐரோப்பாவிற்கு “உதவப்பட” வேண்டும். “போர் குறித்து நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் ஐரோப்பிய அதிகாரிகளுடன் ட்ரம்ப் நிர்வாகம் முரண்படுவதாகக்” அது தொடர்கிறது.

ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சி “நாகரிக அழிவின் உண்மையான மற்றும் இன்னும் கடுமையான வாய்ப்பால்” விஞ்சப்படுகிறது என்று அந்த ஆவணம் கூறுகிறது. இது அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தை குற்றம் சாட்டுகிறது. ஐரோப்பிய குடியேற்றக் கொள்கை கண்டத்தை பிளவுபடுத்துவதாகவும், கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதாகவும், பேச்சு சுதந்திரம் தணிக்கை செய்யப்படுவதாகவும், அரசியல் எதிர்ப்பு ஒடுக்கப்படுவதாகவும், தேசிய அடையாளம் மற்றும் தன்னம்பிக்கை இழக்கப்படுவதாகவும் அது கூறுகிறது. “தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், ஐரோப்பிய கண்டம் 20 ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கும் குறைவாக அடையாளம் காண முடியாததாக மாறும்” என்று அது அறிவிக்கிறது.

இந்த மூலோபாய ஆவணம், “ஐரோப்பிய நாடுகளுக்குள் ஐரோப்பாவின் தற்போதைய போக்குக்கு எதிர்ப்பை வளர்க்க” உறுதியளிக்கிறது மற்றும் “தேசபக்தி கொண்ட ஐரோப்பிய கட்சிகளின் வளர்ந்து வரும் செல்வாக்கு” ஒரு “பெரும் நம்பிக்கைக்கான காரணம்” என்று விவரிக்கிறது. இது ஜேர்மனியின் AfD, ஸ்பெயினின் Vox மற்றும் இத்தாலியின் Fratelli d’Italia போன்ற அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகளைக் குறிக்கிறது.

ஐரோப்பாவை “தன்னுடைய காலில் நிற்கவும், ஒன்றுபட்ட இறையாண்மை கொண்ட நாடுகளின் குழுவாகச் செயல்படவும்” உதவுவதே இதன் நோக்கம் என்று அது மேலும் கூறுகிறது. “இறையாண்மை கொண்ட நாடுகளின் ஐரோப்பா” (Europe of Sovereign Nations) என்பது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் AfD அங்கம் வகிக்கும் அதிதீவிர வலதுசாரி பிரிவின் பெயராகும். மேலும், “மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவின் ஆரோக்கியமான நாடுகள் வணிகத் தொடர்புகள், ஆயுத விற்பனை, அரசியல் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் மூலம்” பலப்படுத்தப்பட வேண்டும். இது அதிதீவிர வலதுசாரி அரசாங்கங்களைக் கொண்ட ஹங்கேரி போன்ற நாடுகளைக் குறிக்கிறது.

நேட்டோவின் விரிவாக்கம் நிறுத்தப்பட வேண்டும், ஐரோப்பிய சந்தைகள் அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காகத் திறக்கப்பட வேண்டும், மேலும் அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நியாயமான சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஆவணம் வலியுறுத்துகிறது.

இந்த மூலோபாய ஆவணம் ஐரோப்பிய பத்திரிகைகளில் சீற்ற அலையை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு செய்தித்தாளான லூ மொண்ட் (Le Monde) பின்வருமாறு எழுதியது:

சொத்துக்கள் பிரிந்து செல்வது வரை இந்தப் பிளவு இறுதியானது. டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது, அட்லாண்டிக்கின் நாடுகடந்த முன்னோக்கில் அப்படித்தான் தோன்றுகிறது. ... [இது] ஒரு வரலாற்று பிளவைக் (rupture) குறிக்கிறது. இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தத் தன்மையுள்ள ஒரு உத்தியோகபூர்வ ஆவணம் அமெரிக்காவின் எதிர்ப்பாளர்களைப் பற்றி இவ்வளவு அலட்சியத்தையும், அதன் பாரம்பரிய கூட்டாளிகள், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ளவர்களைப் பற்றி இவ்வளவு அவமதிப்பையும் வெளிப்படுத்தியதில்லை.

ஜேர்மன் வார இதழான டை சைட் (Die Zeit) இந்த ஆவணத்தை “ஐரோப்பிய எதிர்ப்பு கோட்பாடு” (“anti-Europe doctrine”) என்றும், “மதிப்புடன் பிணைக்கப்பட்ட மேற்குலகம் என்ற கருத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ள விரும்பிய அனைத்து அட்லாண்டிக்வாதிகளுக்கும் ஒரு கொடூரமான விழிப்பு அழைப்பு” என்றும் விவரித்தது, அதே சமயம் பிராங்பேர்ட்டர் அல்கெமைன் செய்தித்தாள் (Frankfurter Allgemeine Zeitung) அதை “அமெரிக்கா ஐரோப்பாவுடன் கணக்குகளைத் தீர்க்கும் ஒரு ஆவணம்” என்று அழைத்தது.

ஐரோப்பிய அரசாங்கங்களின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அதிக எச்சரிக்கையுடன் இதற்கு பதிலளித்தனர். ஏனெனில், உக்ரேன் தொடர்பான பதட்டமான பேச்சுவார்த்தைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் ட்ரம்ப்பை மேலும் தூண்டிவிட விரும்பவில்லை. அவர்கள் பதிலை, ஜேர்மன் பாராளுமன்றத்தில் உள்ள கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) பிரிவின் துணைத் தலைவரான நார்ன்பெர்ட் ரோட்கென் போன்ற, நேரடி அரசாங்கப் பொறுப்பற்ற இரண்டாம் தர அரசியல்வாதிகளிடம் விட்டுவிட்டனர்.

ஜேர்மன் சான்சிலாராக இருந்த ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ஜேர்மன் மறு ஆயுதபாணியாக்கத்தை நியாயப்படுத்த “ஒரு புதிய சகாப்தம்” என்று அழைத்ததை இவர் (“Norbert Röttgen”) குறிப்பிட்டு, அமெரிக்க மூலோபாய ஆவணத்தை “ஐரோப்பாவிற்கு இரண்டாவது புதிய சகாப்தம்” என்று விவரித்தார். இது ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய அமெரிக்காவின் அடிப்படையில் புதிய புவிசார் அரசியல் நிலைப்பாட்டைக் குறிக்கிறது என்றும் ரோட்கென் மேலும் கூறினார். தீவிர வலதுசாரி கட்சிகளுடனான இலக்கு வைக்கப்பட்ட ஒத்துழைப்பையும் அவர் விமர்சித்தார்.

கடந்த காலத்தில் ஒவ்வொரு அமெரிக்கப் போர்க் குற்றத்தையும் நியாயப்படுத்தி, காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை நிபந்தனையின்றி ஆதரிக்கும் CDU அரசியல்வாதியான இவர், மேற்குலகம் “மேற்கு அரைக்கோளத்தில் ஒரு விரிவான ஆதிக்கத்தை” நாடுவதாக வாஷிங்டனைக் குற்றம் சாட்டினார். உறைந வைக்கப்பட்ட ரஷ்ய அரசு நிதியை, அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “இது தோல்வியடைந்தால், விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும்,” என்று ரோட்கென் கூறினார்.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் மோதலுக்குப் போர் மற்றும் வர்க்கப் போர் தவிர வேறு எந்த பதிலையும் கொண்டிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மதிப்பிழந்த மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவம் உயிர்வாழ அமெரிக்கா உதவியது. மேலும், சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போர் ஏகாதிபத்திய சக்திகளை ஒன்றாக இணைத்தது. இதுவே போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பொருளாதார ஏற்றம் மற்றும் சமூக சமரசங்களுக்கான அடிப்படையை உருவாக்கியது.

ஆனால் இப்போது, நாங்கள் ஒரு முந்தைய கட்டுரையில் எழுதியது போல, “முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் கச்சாப் பொருட்கள், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்காக அதனுடன் சேர்ந்து வரும் கடுமையான போராட்டம் ஆகியவை, உலகின் பொருளாதார உற்பத்தியில் 45 சதவீதத்தைக் கொண்டுள்ள இரண்டு பெரிய ஏகாதிபத்திய அதிகாரக் குழுக்களுக்கு இடையேயான கூட்டணியை அழித்து வருகின்றன.” ட்ரம்ப் இதற்குக் காரணம் அல்ல, மாறாக இந்த வளர்ச்சியின் அகநிலை வெளிப்பாடு மட்டுமே.

ஜேர்மனியும் மற்ற ஐரோப்பிய சக்திகளும் பல ஆண்டுகளாக அமெரிக்க மேலாதிக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், மீண்டும் ஒரு பெரிய சக்தியாக ஒரு சுயாதீனமான பங்கைக் கொண்டிருக்கவும் பாடுபட்டு வருகின்றன. இப்போது அவர்கள் இந்த முயற்சிகளைத் துரிதப்படுத்துகிறார்கள், மறுஆயுதபாணியாக்கத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன்களை முதலீடு செய்கிறார்கள், ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர்கிறார்கள், மேலும் சமூக வெட்டுக்கள் மற்றும் பாரிய வேலைநீக்கங்கள் மூலம் பெரும் செலவுகளை ஈடுசெய்கிறார்கள். ட்ரம்பைப் போலவே, அவர்களும் ஒரு போலீஸ் அரசைக் கட்டமைத்து வருகின்றனர், மேலும் அதிதீவிர வலதுசாரிகளின் மிருகத்தனமான குடியேற்றக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தொழிலாள வர்க்கம் அதிகரித்து வரும் அட்லாண்டிக் கடந்த மோதலில் இரு தரப்பினரையும் ஆதரிக்கக்கூடாது. அது சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டு முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு சோசலிச சமூகத்தை நிறுவுவதற்காக அட்லாண்டிக்கின் இரு பக்கங்களிலும் போராட வேண்டும்.

Loading