இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்தக் கட்டுரையும் புகைப்படங்களும் வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளான கம்பளை நகரத்தில் வசிக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) வாசகர் தினிதி ஜயவர்தன அவர்களால் அனுப்பப்பட்டவை. அசல் கட்டுரைக்கு சில சிறிய திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
***
உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இன்றுவரை நாடு முழுவதும் 638 பேருக்கும் அதிகமானோரைக் கொன்று, பத்து இலட்சத்துக்கும் அதிகமானோரை இடம்பெயரச் செய்துள்ள 'டிட்வா' புயலால் அழிவுக்குள்ளான பகுதிகளில், கண்டி மாவட்டத்தின் கம்பளை முதன்மையானதாகும்.
1947 பிரமாண்ட வெள்ளப் பெருக்கின் பின்னர், நவம்பர் 28 அன்று நகரத்தின் ஓரமாக ஓடும் மஹாவலி நதி வெள்ளப்பெருக்கெடுத்து, கம்பளை நகருக்குள் பாய்ந்தது. சுமார் 10-15 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளம், கம்பளை நகரம் உட்பட நதியின் இருபுறமுள்ள பல பகுதிகளையும் கணப்பொழுதில் விழுங்கியது. வெளிப்படையாகத் தெரிந்தபடி, மலைப்பகுதியில் பெய்த 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை மட்டுமல்லாமல், நிரம்பி வழியும் நிலையை அடைந்திருந்த கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திடீரென திறக்கப்பட்டதால் வெளிப்பட்ட பாரிய நீர்ப்பெருக்கம் இந்த வெள்ள நிலைமைக்கு பங்களித்தன. கம்பளை நகரத்தின் ரயில் நிலையம், பஸ் நிலையம் உட்பட சுமார் 200 கடைகள் 48 மணி நேரம் வெள்ளத்தில் மூழ்கி, அவற்றின் பொருட்கள் முழுவதுமாக அழிந்துவிட்டன.
ஏதேனும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், வெள்ளம் வருவதற்கு முன் உயரமான இடங்களுக்குச் சென்று, அரிதான மனித உயிர்களை மட்டுமின்றி, குறைந்தபட்சம் பிறப்புச் சான்றிதழ்கள், காணி ஆவணங்கள் போன்ற மதிப்புமிக்க ஆவணங்களையாவது காப்பாற்றும் வாய்ப்பு இருந்திருக்கும் என தங்கள உறவினர்களையும் சொத்துக்களையும் இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (JVP/NPP) அரசாங்கத்தால் அத்தகைய எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கத் தவறிய இது, இயற்கை பேரிடருக்கு அப்பாற்பட்ட, முதலாளித்துவ அரசாங்கம் உட்பட அதிகாரிகள் முழுமையாக பொறுப்பேற்க வேண்டிய இயற்கை பேரழிவாகும்.
நீர் வடிந்ததும் கம்பளை நகருக்குச் சென்ற இந்த எழுத்தாளர், போர்க்களத்தை நினைவுபடுத்தும் காட்சிகளைக் கண்டார். வெள்ள நீரால் அழிந்த தொலைபேசிகள் மற்றும் மின்சார உபகரணங்கள், ஆடைகள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள், மசாலாப் பொருட்கள் உட்பட நுகர்வோர் பொருட்களும் குப்பைக் குவியலாக மூட்டை கட்டி கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்த காட்சிகளும், இறந்து அழுகிய நிலையில் இருந்த நாய்கள் உட்பட விலங்குகளும், இன்னும் சேற்றால் நிரம்பி துர்நாற்றம் வீசும் நகரமும் இதயத்தை பிழிந்தன.
சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் மக்கள் ஆடைகள் உட்பட நுகர்வோர் பொருட்களை வாங்க வரும் கம்பளை நகரம் இவ்வாறு அழிந்துவிட்டதால், குறிப்பாக அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாமல், நகரைச் சுற்றியும், ஓரளவு தொலைவில் உள்ள கிராமங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், சொல்ல முடியாத பெரும் சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி உதவி கேட்டு நிற்கின்றனர்.
நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள, குடமாகே கீழ்ப்பகுதி, காம்பொலவெல, கீரபனே, புவனேகபா வீதி, நிதாஸ் மாவத, நாவலப்பிட்டிய-காம்பளை வீதியின் ஆரம்பப் பகுதி, மகர, கஹடபிட்டிய, சாலியவெல போன்ற நகர்ப்புறங்கள், சுமார் 10-15 அடி வெள்ளத்தில் மூழ்கின. காம்பளை-கண்டி வீதியில் அமைந்துள்ள வெலிகல்ல நகரத்தின் ஒரு பகுதி, கெலிஓய, பேராதனை நகரம், கெட்டம்பே விகாரையின் சுற்றுப்புறம், பேராதனை தாவரவியல் பூங்கா மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியும் நீரில் மூழ்கின.
27 ஆம் திகதி இரவு திடீரென சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கும் கம்பளை குடமாகே மற்றும் காம்பொலவெல நகர்ப்புறங்கள் 12-15 அடி பிரமாண்ட நீர்ப்பெருக்கால் மூடப்பட்டன. மாடி வீடுகள் இருந்த வெறும் நூறுக்கும் அதிகமான மக்கள் மட்டுமே சிரமத்துடன் ஏறிச் சென்று தங்களைக் காப்பாற்றிக்கொண்டமை, பேரிடரின் அளவை விவரிக்கின்றது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கிற்கு காரணம் மேலே உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்தின் கதவுகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டமையா அல்லது மழை நீருடன் அந்த வெளியேறும் நீரும் சேர்ந்து உருவான பிரமாண்ட வெள்ளப்பெருக்கா என்பது இன்னும் தெளிவாகவில்லை. பெரும்பாலும் இந்த இரண்டு காரணங்களும் இருக்கலாம். பிள்ளைகள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோரை விட்டுவிட்டு உடுத்திய உடைகளுடன் மட்டுமே தப்பி ஓட குடியிருப்பாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். மரணமடைந்த சுமார் 60 பேரின் உடல்கள் “விறகு குவியல்கள் போல்' கம்பளை பொது மருத்துவமனை சவக்கிடங்கில் குவிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படாத, அழுகி அடையாளம் காண முடியாத சடலங்கள் பல இடங்களில் மண் மேடுகள், சேறு மற்றும் குப்பைக் குவியல்களில் சிக்கிக் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன, என இறந்தவரின் உறவினர் ஒருவர் கூறினார்.
கம்பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மேற்கூறிய சடலங்களில் பாதியளவு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டாலும், மீதமுள்ள சுமார் 30 உடல்கள் ரத்மல்கடுவ மயானத்தில் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்டதாக கிராம மக்கள் இந்த நிருபரிடம் குறிப்பிட்டனர். மருத்துவமனை சவக்கிடங்கில் போதுமான இடவசதி இல்லாமை, அதிக எண்ணிக்கையிலான உடல்களை வைக்க போதுமான குளிர்பதன வசதிகள் இல்லாமை, சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சடலங்களை ஏற்றுக்கொள்வதை 28 ஆம் திகதி முதல் மருத்துவமனை அதிகாரிகள் நிறுத்திவிட்டதாக இறந்த சிலரின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
பல நாட்கள் சேற்றில் சிக்கிக் கிடந்ததால், அடையாளம் காண முடியாத அளவுக்கு கெட்டுப்போயிருந்த மற்றும் தலை, விரல்கள் பிரிந்துபோன சடலங்கள் இறுதி மரியாதையின்றி மட்டுமல்லாமல், எந்த பிரேத பரிசோதனையுமின்றி புதைக்கப்படுவதாக தெரியவருகிறது. புல்டோசர் இயந்திரங்களின் உதவியுடன் தோண்டியெடுக்கப்படும் இந்த சடலங்கள், எண்ணிக்கை பதிவு செய்யாமலோ அல்லது எந்த அடையாள முறையுமின்றி வாகனங்களில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு கூட்டாக புதைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பேரிடர் நிவாரணக் குழுக்களின் மூலம் தற்போது வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள சில குழுக்களின் கடமை, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை முறையான முறையில் புதைப்பதற்கு பதிலாக, அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே தரையில் புதைத்துவிடுவதாகும். உடல்கள் தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் இந்த மிலேச்சத்தனமான நடைமுறை குறித்து கருத்து தெரிவித்த உறவினர் ஒருவர், 'இறந்த மனிதனுக்கு ஒரு சவப்பெட்டியாவது கொடுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லையா' என்று கோபத்துடன் கேட்டார். கடந்த ஞாயிறு நாட்டுக்கு உரையாற்றியபோது, பேரிடர்களால் மரணமடைந்த மக்களைப் பற்றி முதலைக் கண்ணீர் சிந்திய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் அரசாங்கத்திற்கு இந்த மரணங்கள் வெறும் எண்கள் மட்டுமே என்பதை இது காட்டுகிறது.
வெள்ள அபாயத்தில் சிக்கிய குடமாகே மற்றும் நிலச்சரிவு பயத்தால் அச்சுறுத்தப்பட்ட ராஹிம்மலை பகுதியின் நூற்றுக்கணக்கான மக்கள் எந்த உதவியும் இல்லாத நிலையில், உயிர் காப்பாற்றிக்கொள்வதற்காக சுமார் மூன்று நாட்கள் கம்பளை ஸ்ரீ விஜயாராம பௌத்த கோவிலின் பிரசங்க கூடத்தில் தங்க வேண்டியிருந்தது. இந்த மக்களுக்கும் மாகாணத்தில் இவ்வாறு தவிக்கும் மக்களுக்கும் போதுமான நிவாரணம் வழங்க அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
29 அன்று நள்ளிரவில், மேல் கொத்மலை நீர்த்தேக்கம் உடைந்து பிரம்மாண்ட வெள்ளப்பெருக்கு கிராமப்புறங்களை மூழ்கடிக்க பாய்ந்து வருகிறது என்ற வதந்தியுடன் ஏற்பட்ட பீதி நிலையானது, ஏற்பட்டுள்ள பேரிடரை நிர்வகிக்க அரசாங்கம் எல்லா வகையிலும் தோல்வியடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் ஆகும்.
இந்த வதந்தியுடன், கம்பளை ஹதுகொட, குடமாகே உட்பட பல தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் மரண பயத்தில் வீடுகளிலிருந்து வெளியே குதித்து உயிர் காக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. வயதான தாயுடன் அவ்வாறு குதித்து காப்பாற்றிக்கொள்ள இந்த நிருபரும் நிர்பந்திக்கப்பட்டார். நடக்க முடியாத வயதானவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பால் குடிக்கும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கடும் இருளில் ஓடிய நூற்றுக்கணக்கான மக்களில் மாரடைப்பால் குறைந்தபட்சம் ஒருவர் மரணமடைந்தார், குறைந்தபட்சம் நான்கு பேரின் கை கால் உடைந்து கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இன்னும் பலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. உயிர் காக்கும் ஏற்பாடுகளை உருவாக்குவது ஒருபுறம் இருக்க, குறைந்தபட்சம் சரியான தகவல் பகிர்வு வழிமுறையைக் கூட செயல்படுத்த தவறிய அரசாங்கம் இப்போது, இந்த வதந்தியைப் பரப்பியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.
பேரிடருக்கு ஆளானவர்கள் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த அனைத்தும் வெள்ளத்தால் அழிந்துபோன விதம் இதயத்தை உலுக்குகிறது. வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உட்பட மின்சார உபகரணங்கள், குழந்தைகளின் புத்தகங்கள், உடைகள், கல்விக்காக சிரமப்பட்டு பணம் சம்பாதித்து வாங்கிய கணினிகள், வீட்டு பொருட்கள் போன்ற அனைத்தும் மீண்டும் சரிசெய்ய முடியாத விதத்தில் அழிந்துவிட்டன. 'நாங்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். மீண்டும் பூஜ்யத்திலிருந்து நாங்கள் எழுந்திருக்க வேண்டும். எங்களால் மீண்டும் மேலே வர முடியாது' என்று வீடு வெள்ளத்தில் மூழ்கிய குடமாகே வீட்டுப் பெண் ஒருவர் கூறினார். அவரது கணவர் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆவார்.
கொத்தனார் ஒருவரின் மனைவி, வீட்டில் உள்ள அனைத்தும் நனைந்துபோயிருப்பதைக் காட்டி, 'தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யும்படி யாரிடமாவது சொல்லுங்கள்' என்று வேதனையுடன் கோரினார். உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளில் கல்வி பயிலும் அவரது பிள்ளைகளின் புத்தகங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிப்போய் விட்டன.
சிறிய சிகை அலங்கார கடை நடத்தும், குடமாகேயில் வசிக்கும் 38 வயதான சந்தனவின் அண்ணி, ஆட்டிசம் நிலை காரணமாக ஊனமுற்றிருந்தார். 34 வயதான அவர், வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் மூழ்கி மரணமடைந்தார். 'பாட்டி (வயது 70) இரவு 12 மணி அளவில் வீட்டில் தண்ணீர் நிரம்பியதாக கத்தினார். நான் எழுந்தபோது மின்சாரமும் இல்லை. 4 வயதான என் மகனை மனைவியிடம் விட்டுவிட்டு, அண்ணியின் அறைக்குச் சென்று மேல் தளத்திற்கு அவரை ஏற்ற முயன்றேன். ஆனால் தண்ணீர் வேகமாக நிரம்பியபோதும் அவர் பயந்து படுக்கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு இருந்தார். தண்ணீர் அதிகரித்தபோது எங்களால் அவரை விட்டுவிட வேண்டியதாயிற்று. இருளால் எனக்கோ என் பாட்டிக்கோ அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. போனில் டார்ச் போட்டுப் பார்த்தாலும், விரைவில் அதன் பேட்டரி தீர்ந்து அதுவும் அணைந்துவிட்டது. வேறு வழியின்றி, பாட்டியையும், குழந்தையையும், மனைவியையும் இழுத்துக்கொண்டு நான் மேல் ஸ்லாப்புக்கு ஏறினேன். காலை வரை தண்ணீர் வடியவில்லை. காலையில் அண்ணி இறந்து கிடந்தார்.' பலரின் கதைகளும் இதற்கு வேறுபட்டவை அல்ல.
வாடகை வீட்டில் வசித்து வந்த, கம்பளை, சிங்கப்பிட்டிய ஜினராஜ (ஆண்கள்) பாடசாலையின் ஆசிரியை ஒருவர், அம்புலுவா மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான பாரிய வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டதால் துன்பகரமாக மரணமடைந்தார். அரசியல்வாதிகளின் அபிவிருத்தி என்றழைக்கப்படும் நடவடிக்கைகளுக்காக மலையை வெட்டியதால் இந்த மலையில் நிலச்சரிவு ஏற்படும் சாத்தியம் அதிகரித்தது. 27 அன்று இரவு ஏற்பட்ட இந்த நிலச்சரிவால், அவரும் மகனும் பிரமாண்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். மகனின் உயிர் தற்செயலாக காப்பாற்றப்பட்ட போதிலும், மரணமடைந்த ஆசிரியையின் உடல் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாய் பாலத்துக்குள் அடித்துச் செல்லப்பட்டு மறுநாள் காலை கண்டுபிடிக்கப்பட்டது.
மண் மேடுகள் இடிந்து விழுந்தும் நிலச்சரிவுகளாலும் பல இடங்களில் அழிந்து போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள கம்பளை-தொலஸ்பாகே வீதியில், தொலஸ்பாகே வரை உள்ள 29 கிலோமீட்டர் முழுவதும் பரவியுள்ள நூற்றுக்கணக்கான மலைக் கிராமங்களின் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவுகள், மலைகள் இடிந்து விழுதல், பாறைகள் உருளுதல் போன்ற பல பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் நிலச்சரிவால் கம்பளை-நாவலப்பிட்டிய வீதியும், அட்டபாகே-துனுகேவுல்ல பாதையும் வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதால், சுகாதாரம், உணவு உட்பட அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்கு நகருக்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைபேசி தொடர்பு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ முடங்கியிருந்த நிலையில், நடந்துள்ள அழிவின் அளவு இன்னும் சரியாக அறிய வழியில்லை.
அத்தியாவசிய உணவு, சுத்தமான குடிநீர் அல்லது நிவாரணக் குழுக்கள் எதுவும் இந்த பகுதிகளுக்கு வருவில்லை. சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய கொள்முதல்களுக்காக கம்பளை நகரத்தைப் பயன்படுத்தும் ஆற்றின் மேல்நிலை பகுதியின் வெலிகன்ட, கல்பாய, மீதலாவ உட்பட்ட பகுதிகளின் மக்கள், அந்த நடவடிக்கைகளுக்காக, இப்போது மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பாதையில் ஐந்து-ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல நிர்பந்திக்கப்படுகின்றனர். அந்த பகுதிகளில் வசிக்கும் இந்த கட்டுரையாளரின் உறவினர்கள் குறிப்பிட்டது போல், விநியோகங்கள் இல்லாத நிலையில் பல கடைகளில் அரிசி ஒரு விதை வாங்க முடியவில்லை, கொஞ்சமாவது அவை இருக்கும் கடைகளில் நெருப்பு விலையில் விற்கப்படுகிறது.
மேலும் படிக்க
- இலங்கையில் டிட்வா சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது
- இலங்கை: டிட்வா சூறாவளியால் 481க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- ஆசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்
- இலங்கை: மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் டிட்வா சூறாவளியில் இருந்து தப்பியவர்கள் நிரந்தர வீடுகளைக் கோருவதோடு தோட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கின்றனர்.
