ஜேர்மனியின் கூட்டணி அரசாங்கத்தின் உடைவு வர்க்கப் போராட்டத்தின் புதிய கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற சில மணி நேரங்களில், ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு உடைந்தது. மத்தியிலுள்ள கூட்டாட்சியின் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் (SPD) புதன்கிழமை மாலை தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சியின் (FDP) நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னெரை பதவியிலிருந்து நீக்கினார். அதற்குப் பின்னர் போக்குவரத்து மந்திரி வோல்க்கர் விஸ்சிங்கைத் தவிர இதர தாராளவாத ஜனநாயகக் கட்சி அமைச்சர்களும் இராஜிநாமா செய்தனர்.

துணை அதிபர் ராபர்ட் ஹேபெக், அதிபர் ஓலாஃப் ஷூல்ட்ஸ் மற்றும் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் [Photo by Sandro Halank / Wikimedia Commons / CC BY-SA 4.0]

அமெரிக்கத் தேர்தலுக்கும், ஜேர்மன் கூட்டணியின் தோல்விக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஐரோப்பாவிற்கு எதிரான புதிய வர்த்தகப் போர் நடவடிக்கைகளாலும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் இருந்து அமெரிக்கா ஓரளவு விலகியதாலும் குறிக்கப்படும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் ஜேர்மன் அரசாங்கத்தை வர்த்தகப் போரில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்வதன் மூலம் ஜேர்மன் பொருளாதாரத்தை ஆதரிக்க வேண்டும் என்றும், உக்ரேனில் போரைத் தொடர ஆயுதச் செலவினங்களை கணிசமாக அதிகரிக்கவும், இராணுவ ரீதியாக சொந்தக் காலில் நிற்கவும் வலியுறுத்துகின்றனர். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்கள் அவசியப்படுவதால், வர்த்தகப் போர் மற்றும் போரின் செலவுகளை தொழிலாள வர்க்கமே சுமக்க வேண்டியுள்ளது.

லிண்ட்னரின் பதவி நீக்கத்தை நியாயப்படுத்திய அவரது அறிக்கையில், சான்சிலர் ஷொல்ஸ் ட்ரம்பின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு பின்வருமாறு தெரிவித்தார்: “ஜேர்மனி அதன் பொறுப்புகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. நாம் முன்னெப்போதையும் விட ஐரோப்பாவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நமது சொந்த பாதுகாப்பு மற்றும் பலத்திற்காக தொடர்ந்து ஒன்றாக முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், நிலைமை மிகமோசமாக உள்ளது. ஐரோப்பாவில் போர் நடக்கிறது. மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.”

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் (SPD) ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்துறைகளின் ஒருங்கிணைப்பில் நெருக்கமான கூட்டுறவு குறித்து கலந்துரையாடுவதற்கு புதனன்று பாரிஸில் அவரது பிரெஞ்சு சமதரப்பான செபஸ்டியான் லெகொர்னுவை சந்தித்தார். அடுத்த கட்டமாக பேர்லினில் ஐந்து பாதுகாப்பு மந்திரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது, இதில் பிரிட்டன், போலந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் அடங்கும்.

அதே நேரத்தில், “நமது பொருளாதாரம் தண்ணீரில் மிதக்கிறது. எங்கள் நிறுவனங்களுக்கு ஆதரவு தேவை, அவர்களுக்கு இப்போது அது தேவை” என்று ஷொல்ஸ் குறிப்பிட்டார். கணக்கீடுகளின்படி, ட்ரம்ப்பால் அச்சுறுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உற்பத்திப் பொருட்கள் மீதான அமெரிக்க இறக்குமதி வரிகளில் 10 சதவீதம் அதிகரிப்பானது, ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 127 பில்லியன் யூரோக்களை சுமத்தும். வாகனத்துறை, வாகன உதிரி பாகங்கள், எஃகுத்துறை, இரசாயனத் துறை மற்றும் ஏனைய தொழில்துறைகளில் ஆயிரக் கணக்கான வேலைகள் வெட்டப்படாமல் ஒரு வாரமும் கடந்துபோக முடியாது.

உலக பொருளாதாரத்திற்கான கீல் பயிலகத்தின் (IfW Kiel) தலைவர் மோரிட்ஸ் ஷுலாரிக், ஷொல்ஸ் பேசிய அதே தொனியில் பேசினார். மேலும், “டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றியுடன், கூட்டாட்சி குடியரசின் வரலாற்றில் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமான தருணம் தொடங்குகிறது. ஏனென்றால் உள்நாட்டு கட்டமைப்பு நெருக்கடிக்கான பாரிய வெளிநாட்டு பொருளாதார மற்றும் பாதுகாப்பு கொள்கை சவால்களை நாம் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம், அதற்கு நாங்கள் தயாராக இல்லை,” என்று அவர் தனது நிறுவனத்தின் வலைத் தளத்தில் எழுதினார்.

“ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் வளர்ச்சியை மேலதிகமாக எடைபோடும் பாதுகாப்புவாத சுங்கவரிகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள்” குறித்து எச்சரித்த அவர், “நாம் குறுகிய காலத்தில் பாதுகாப்பு தகைமைகளில் பாரியளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளதுடன், ஐரோப்பிய பாதுகாப்பைக் கட்டியெழுப்ப பிரான்ஸ் மற்றும் விருப்பமுள்ள ஏனைய ஐரோப்பிய பங்காளிகளுடன் முன்நகர்ந்து செல்ல வேண்டும்,” என்றும் கோரினார்.

லிண்ட்னர் வெளியேற்றப்பட்ட பின்னர், ஷொல்ஸ் அவரது பதவி நீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் பொறுப்பற்ற முறையில் தேவையான சமரசங்களை எதிர்த்தார், “பொருத்தமற்ற சட்டங்களைத் தடுத்து, அற்பமான கட்சி-அரசியல் தந்திரங்களைப் பின்பற்றினார்”. “அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்படுவதற்கு” பதிலாக, அவர் “தனது சொந்த வாடிக்கையாளர்களை” மற்றும் “தனது சொந்த கட்சியின் குறுகிய கால உயிர்பிழைப்பை” மட்டுமே கவனித்துக் கொள்கிறார். “ஒரு அரசாங்கத்தில் நுழையும் எவரும் தீவிரமாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். விஷயங்கள் கடினமாக இருக்கும்போது ஒளிந்து கொள்ள ஓடக்கூடாது” என்று ஷொல்ஸ் குறிப்பிட்டார்.

கூட்டணி அரசாங்கம் பல மாதங்களாக எதிர்கால பட்ஜெட் குறித்து விவாதித்து வருகிறது. உக்ரேன் போரை ஆதரிப்பதற்கும் பில்லியன்களுடன் வணிகம் செய்வதற்கும் அது ஒப்புக்கொண்டது. ஆனால், நிதி விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. லிண்ட்னர் கூடுதல் கடன் எதையும் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். நவம்பர் தொடக்கத்தில், மீள்ஆயுதமயமாக்கலுக்கும் செல்வந்தர்களுக்கான வரி குறைப்புக்களுக்கும் நிதியாதாரமளிக்க ஓய்வூதியங்கள், சலுகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறைகளில் பாரிய வெட்டுக்களை வலியுறுத்தும் ஒரு ஆய்வறிக்கையை அவர் ஊடகங்களுக்கு கசியவிட்டார்.

ஷொல்ஸ் இந்த போக்கை மிகவும் அபாயகரமானதாக கருதுகிறார். மீள்ஆயுதமயமாக்கல், செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் சமூக வெட்டுக்கள் ஆகியவற்றின் இதுபோன்றவொரு பகிரங்க கலவை தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்பதால், இதை தொழிற்சங்கங்களால் கூட இனியும் அடக்க முடியாது என்று அவர் அஞ்சுகிறார். ஆகவே, அவர் கூடுதல் கடன்களை எடுப்பதற்காகவும், அவ்விதத்தில் அவரது தொழிலாளர்-விரோத மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நெரிப்பதில் சூழ்ச்சிகளுக்கு அதிக இடமளிப்பதற்காகவும் கடன் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்மொழிகிறார்.

“ஒருபோதும், உள், வெளி மற்றும் சமூகப் பாதுகாப்பை ஒருவருக்கொருவர் எதிர்த்து விளையாடக் கூடாது” என்று கடன் தடையை தளர்த்துவதை கண்டிப்புடன் நிராகரிக்கும் லிண்ட்னருக்கு எதிராக அவர் முழங்கினார். லிண்ட்னர் “ஒரு சில உயர் வருமானம் பெறுபவர்களுக்கு பில்லியன் கணக்கான வரிக் குறைப்புக்களையும் அதே நேரத்தில் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியக் வெட்டுக்களையும்” கோரியதற்காக லிண்ட்னரை ஷொல்ஸ் குற்றஞ்சாட்டினார். … இது நமது ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும், இது இறுதியில் நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிட்டார்.

நிச்சயமாக, இது வெற்று வாய்வீச்சாகும். சான்சிலர் ஷொல்ஸ் 1998 க்குப் பின்னர் இருந்து, வெறும் நான்காண்டு கால இடைவெளியுடன், தொழிற் கட்சி மற்றும் மிக முக்கியமான சமூக அமைச்சகங்களுக்கு தலைமை கொடுத்து வந்துள்ள ஒரு கட்சியைச் சேர்ந்தவர். கூட்டாட்சி குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் செல்வந்தர்களுக்கு ஆதரவாக மிகப் பெரிய செல்வவள மறுபகிர்வுக்கு பொறுப்பாளியாவார். முன்னாள் தொழிலாளர்களின் கட்சி இன்று அரசியல் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் பணக்கார நடுத்தர வர்க்கத்தின் பிற உறுப்பினர்களை நம்பியுள்ளது. இந்த கட்சி மிகவும் வெறுக்கப்படுகிறது, அது வாக்கெடுப்பில் 15 சதவீதத்தை மட்டுமே எட்டுகிறது மற்றும் அதி தீவிர வலதுசாரிகளான ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சிக்கும் பின்தங்கியிருக்கிறது.

உழைக்கும் மக்களின் வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரங்களை நோக்கிய அவர்களின் இறுமாப்பு, உக்ரேன் மற்றும் காசா போர்களுக்கான ஆதரவு, மற்றும் அவர்களின் அகதிகள்-விரோத நாடுகடத்தல் கொள்கை ஆகியவற்றுடன் சேர்ந்து, அமெரிக்காவில் பாசிசவாத ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு பாதை வகுத்த ஜனநாயகக் கட்சியினரைப் போலவே, சமூக ஜனநாயகக் கட்சியும் அதன் கொள்கைகளைக் கொண்டு மிகவும் வலதுசாரி கூறுபாடுகளைப் பலப்படுத்தி வருகிறது.

பணவீக்கம் நிஜமான கூலிகள் மற்றும் வாடகைகளை அரித்தபோதும், எரிசக்தி விலைகள் வெடித்தபோதும் ஷொல்ஸ் லிண்ட்னருடன் நெருக்கமாக வேலை செய்தார். இதற்கிடையில், அவர் அமெரிக்காவின் பெரிய வங்கியான கோல்ட்மன் சாக்ஸில் ஜேர்மனியின் முன்னாள் தலைவரான ஜோர்க் குக்கிஸை லிண்ட்னருக்கு அடுத்து நிதி மந்திரியாக நியமித்துள்ளார். குக்கிஸ் ஏற்கனவே ஷோல்ஸ் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது அவருக்காக பணியாற்றினார். மேலும், 2021 முதல் சான்சலரியில் மாநில செயலாளராக அவர் பணியாற்றினார்.

ஷொல்ஸ் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய (CDU) தலைவரும், உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளரான பிளாக்ரோக்கின் ஜேர்மன் கிளையின் முன்னாள் தலைவருமான பிரெடெரிக் மெர்ஸ் இன் உதவியை நாடியுள்ளார். “நமது பொருளாதாரம் மற்றும் நமது பாதுகாப்புத் துறையை விரைவாக வலுப்படுத்துவதில்” தனது சிறுபான்மை அரசாங்கத்துடன் “ஆக்கபூர்வமாக” பணியாற்றவும், பொருத்தமான சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் மெர்ஸை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனவரி 15 அன்று, ஷொல்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைக்க உத்தேசித்துள்ளார். தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, கூட்டாட்சி ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மார்ச்சில் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கலாம். அதில் CDU வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றியால் வலுப்பெற்றதாக உணரும் அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி, வெற்றிபெறுவதற்கான நல்ல வாய்ப்பைக் கொண்டிருக்கும்.

எவ்வாறாயினும், CDU, கிறிஸ்துவ சமூக ஒன்றியம், AfD மற்றும் FDP ஆகியவை அடுத்த வார ஆரம்பத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எடுக்குமாறு ஷொல்ஸுக்கு அழுத்தமளித்து வருகின்றன, அவ்விதத்தில் கூட்டாட்சி தேர்தல் ஜனவரியில் நடக்க முடியும். எவ்வாறிருப்பினும், ஜேர்மனியின் அடிப்படைச் சட்டம் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இதை அடைவதற்கான அவர்களின் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன.

ஆனால், வரவிருக்கும் வாரங்களில் அரசியல் சூழ்ச்சிகளும் மோதல்களும் எவ்வாறு அரங்கேறுகின்றன என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து ஸ்தாபக கட்சிகளும் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உத்தியோகபூர்வ அரசியலின் அச்சை மேலும் வலதை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சிப்போக்கில் உள்ளன. மீள்ஆயுதமயமாக்கல், போர் மற்றும் பங்குச் சந்தைக்கு முட்டுக் கொடுக்க பிரம்மாண்டமான தொகைகள் கிடைக்கின்ற அதேவேளையில், இதற்கான எதிர்ப்பு ஒடுக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளும் இந்தக் கருத்துடன் உடன்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அனைத்துக் கட்சி கூட்டணி மீது போர் பிரகடனம் செய்கிறது. SGP முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அணிதிரட்டலுடன், போர் மற்றும் சமூக வெட்டுக்களுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டணியை எதிர்க்கிறது. சமூகத்தின் மறுஒழுங்கமைப்பிற்காக ஒரு சோசலிச அடிப்படையில் பேரழிவைத் தடுப்பதற்கு இதுவே ஒரே வழியாகும்.

Loading