மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலியர்களுக்கும் ஆம்ஸ்டர்டாம் குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் புதன்கிழமை மாலை தொடங்கியதிலிருந்து, ஆம்ஸ்டர்டாம் மக்கள் யூதர்களுக்கு எதிராக படுகொலைகளை ஏற்பாடு செய்வதாக குற்றம் சாட்டி ஒரு வெறித்தனமான பத்திரிகை பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் முதல் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வரையில் இஸ்ரேலின் கூட்டாளிகள், இந்த நிகழ்வுகளை யூத இனப்படுகொலையின் இருண்ட காலங்களுடன் ஒப்பிட்டனர். மேலும், ஆம்ஸ்டர்டாம் மக்கள் நாஜிக்களுடன் மிகத் தெளிவாக இணைந்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார்.
காஸா இனப்படுகொலைக்கு தலைமை தாங்கி வருவதற்காக ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞரால் அழித்தல், துன்புறுத்தல் மற்றும் பட்டினிக்கு தள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நெதன்யாகு, இந்த மோதல்கள் ஹிட்லரின் 1938 கிறிஸ்டல்நாச்ட் யூதப் படுகொலையின் மறுநிகழ்வு என்று கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை, “86 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய மண்ணில் யூதர்களாக தாக்கப்பட்டனர். கிறிஸ்டல்நாச்ட் இப்போது மீண்டும் நடக்கிறது“ என்று நெதன்யாகு கூறினார்.
ஞாயிறன்று, இடம்பெற்ற ஆம்ஸ்டர்டாம் மோதல்கள் கிறிஸ்டல்நாக்ட்டை “நினைவுகூர்ந்தது” என்று வாதிட்ட நெதன்யாகு பின்வருமாறு குறிப்பிட்டார்.
சமீபத்தில் டச்சு மண்ணில் நாம் பார்த்த இஸ்ரேலுக்கு எதிரான இரண்டு யூத-விரோத தாக்குதல்களில் ஒரு தெளிவான கோடு இணைக்கிறது: ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் அரசுக்கு எதிரான கண்டிக்கத்தக்க சட்டபூர்வ தாக்குதல், மற்றும் ஆம்ஸ்டர்டாம் வீதிகளில் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான வன்முறையான தாக்குதல். இரண்டு விடயங்களிலும், அங்கே அபாயகரமான யூத-எதிர்ப்புவாதம் இருந்தது.
ஐரோப்பாவில் இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பின் மீது பொலிஸ் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த இட்டுக்கட்டப்பட்ட ஒரு பெரிய பொய்யாக இந்த விவரிப்பு ஒரு சில நாட்களிலேயே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கானவர்களால் பார்க்கப்பட்ட காணொளிகள், இந்த மோதல்கள் ஆம்ஸ்டர்டாம் மக்களால் தூண்டிவிடப்படவில்லை, மாறாக அஜாக்ஸ் ஆம்ஸ்டர்டாம் உதைப்பந்தாட்ட கழகத்துடனான ஒரு போட்டிக்கு வருகை தந்திருந்த மக்காபி டெல் அவிவ் கிளப்பின் அதிவலது இஸ்ரேலிய கால்பந்து குண்டர்களால் தூண்டிவிடப்பட்டவை என்பதைக் காட்டின. அவர்கள் அரேபியர்களைத் தாக்கினர், பாலஸ்தீனிய கொடிகளை கிழித்தெறிந்தனர் மற்றும் அரேபியர்களைக் கொல்ல அழைப்பு விடுத்து கோஷங்களை எழுப்பினர் மற்றும் காஸா இனப்படுகொலையைப் பாராட்டினர்.
அது இஸ்ரேலிய ஆட்சியின் சக்திகள் மற்றும் கீர்ட் வில்டர்ஸ் (Geert Wilders) தலைமையிலான அதிவலது டச்சு அரசாங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ஆத்திரமூட்டலாக இருந்தது. மக்காபி டெல் அவிவ் கழக ஆதரவு கூலிகான் குண்டர்கள் தங்கள் இனவெறி மற்றும் இஸ்ரேலிய அரசு மற்றும் ஆயுதப் படைகளுடன் நெருக்கமான உறவுகளுக்கு இழிபுகழ் பெற்றவர்கள் ஆவர். இந்த கிளப்பில் ஒருபோதும் ஒரு அரபு வீரர் இருந்ததில்லை. இஸ்ரேலிய ஆட்சியானது, இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்காரர்களை தாக்க பெய்தர் ஜெருசலேமின் “லா ஃபேமிலியா” குண்டர்கள் போன்ற அதன் குண்டர்களைப் பயன்படுத்துகிறது. கோவிட்-19 தொற்றுநோயை அதிகாரப்பூர்வமாக கையாள்வதற்கு எதிரான ஆகஸ்ட் 2020 போராட்டங்களுக்கு மத்தியில், ஜேர்மன் அரசு ஒளிபரப்பு நிறுவனமான டாய்ச் வெல்லே பின்வருமாறு தெரிவித்துள்ளது:
ஜெருசலேமில் போராட்டங்கள் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது, டெல் அவிவில், ஒரு இளைஞர் குழு நெதன்யாகு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தடிகளாலும், உடைந்த பாட்டில்களாலும் தாக்கியது. இதன் விளைவாக ஐந்து பேர் காயமடைந்தனர். தாக்குதலின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன, பயனர்கள் ஆரம்பத்தில் லா ஃபேமிலியா தான் தாக்குதலுக்கு காரணம் என்று கருதினர். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்கள் மக்காபி டெல் அவிவ் தீவிரவாத குழுவான மக்காபி ஃபேனாடிக்ஸின் உறுப்பினர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
மக்காபி மற்றும் அஜாக்ஸ் கழகங்களின் உதைப்பந்தாட்டப் போட்டிக்கு முன்பு, ஜெருசலேம் போஸ்ட் மற்றும் டி டெலிகிராஃப் ஆகியவை இஸ்ரேலின் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனமான மொசாட், மக்காபி ரசிகர்களை ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் செல்லும் என்று அறிவித்தன. மக்காபி ரசிகர்களின் படங்களை பகுப்பாய்வு செய்ததில், சிலர் உண்மையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) உறுப்பினர்கள் என்பதைக் காட்டுகிறது.
பாலஸ்தீனியர்களுக்கு நட்பாக இல்லாத வட்டாரங்கள், நடந்தது இஸ்ரேலிய குண்டர்களின் ஆத்திரமூட்டல் என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஆம்ஸ்டர்டாம் காவல்துறைத் தலைவர் பீட்டர் ஹோல்லா பிரான்ஸ் 24 செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், “புதன்கிழமை இரவு ரசிகர்களுக்கு இடையே வன்முறை தொடங்கியது. … மக்காபி ரசிகர்கள் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரோகின் [கால்வாய்] முகப்பில் இருந்து ஒரு கொடியை இறக்கியதுடன், ஒரு டாக்ஸியை அழித்தனர். ஒரு பாலஸ்தீன கொடி எரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு சாதகமான மற்றொரு ஊடகமான நியூயார்க் டைம்ஸ், ஜனநாயகக் கட்சியின் பைடென் நிர்வாகம் நெதன்யாகு அரசாங்கத்தை இனப்படுகொலைக்காக ஆயுதபாணியாக்கியதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது:
ஆம்ஸ்டர்டாமிலுள்ள பல சிவில் அமைப்புத் தலைவர்கள் அடிப்படை உண்மைகளை ஒப்புக்கொள்கிறார்கள். காஸாவில் “குழந்தைகள் இல்லை” என்று அறிவித்து, பாலஸ்தீனியக் கொடியை அழித்து, வண்டியை நாசப்படுத்துவது உட்பட, எரியூட்டும் மற்றும் இனவெறி முழக்கங்களை எழுப்புவதன் மூலம் சில இஸ்ரேலிய ரசிகர்கள் நகர முஸ்லீம் மக்களிடையே கோபத்தைத் தூண்டினர் என்பதை அவர்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறார்கள். இஸ்ரேலிய ரசிகர்கள் வெவ்வேறு இடங்களில் பல சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டனர் என்றும் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கால் நடைகளில் வந்தவர்கள் தாக்கியதாகவும், மற்றும் சில தாக்குபவர்கள் யூதர்கள் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியதாகத் தெரிகிறது என்றும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். …
ஒரு இளம் டச்சு யூடியூப்பர் (YouTube) ஒருவரால், நள்ளிரவுக்குப் பிறகு படமாக்கப்பட்ட மற்றும் தி டைம்ஸ் மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு வீடியோ காணொளி ஒரு ஆண்கள் குழுவைக் காட்டுகிறது. பல இஸ்ரேலிய இரசிகர்கள் மக்காபி நிறங்களை அணிந்து, கட்டிட கட்டுமான தளத்தில் இருந்த குழாய்களையும் பலகைகளையும் சேகரித்து, பின்னர் ஒரு மனிதனை துரத்தி அடிப்பதைக் காட்டுகிறது. இந்த சம்பவம் புகைப்படக் கலைஞர் அனெட் டி கிராஃப் எடுத்த வீடியோவிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் வீடியோவில், நெதர்லாந்து இளைஞர் ஒருவர், போலீஸ் அவர்களை பஸ்ஸில் ஏற்றுவதற்கு முன்பு இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீனிய கொடியால் மூடப்பட்ட ஒரு வீட்டின் மீது கற்களை வீசியதாக கூறினார்.
இந்த மோதல்களுக்குப் பின்னர், பல இஸ்ரேலிய மக்காபி கூலிகான் குண்டர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளியன்று, சில மக்காபி ஆதரவாளர்கள் காணாமல் போனதாக பத்திரிகை வதந்திகள் பரவிய பின்னர், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் அனைத்து மக்காபி குண்டர்களும் உண்மையில் கணக்கெடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
வில்டர்ஸ் அரசாங்கத்தின் விடையிறுப்பானது, அதிதீவிர வலது குண்டர்கள் மீதான அதன் அரசியல் அனுதாபத்தை அம்பலப்படுத்துகிறது. இது அனைத்து மக்காபி டெல் அவிவ் கூலிகான் குண்டர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது. இவ்விதத்தில் மோதல்களை விசாரிப்பதாக பொலிஸ் அளித்த உறுதிமொழிகள் கேலிக்கூத்தாகியது. இப்பொழுது வில்டர்ஸ் அரசாங்கம் மக்காபி குண்டர்களை எதிர்த்துப் போராடியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஏராளமானவர்களை கைது செய்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று 62 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்டர்டாம் அதிகாரிகள் தடை செய்த ஒரு போராட்டத்தில் நேற்று டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்டர்டாம் நிகழ்வுகள் அரசியல்ரீதியாக அசாதாரணமானவை. அதிவலது சியோனிச குண்டர்கள் ஆம்ஸ்டர்டாமுக்கு வந்து, இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பின் மீது பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்த வில்டர்ஸ் பயன்படுத்திய ஒரு ஆத்திரமூட்டலை அரங்கேற்றினர். மற்ற கால்பந்து மோதல்களுக்கு பின்னர் நடந்தது போல், குண்டர்களை வருங்கால போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து தடை செய்வதற்கு பதிலாக, அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் அவர்களை அரவணைத்தனர். இனப்படுகொலையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இனப்படுகொலைக்கு ஆதரவான குண்டர்களை அவர்கள் வெட்கமின்றி பாதுகாக்க அழைக்கிறார்கள்!
இந்த நிகழ்வுகளை Kristallnacht உடன் சமன்படுத்தும் முயற்சிகள் இழிந்த அரசியல் பொய்கள் ஆகும். நவம்பர் 9, 1938 இல், நாஜிக்கள் ஜேர்மனியின் யூத மக்களுக்கு எதிராக ஒரு அரசு பயங்கரவாத தாக்குதலை தொடங்கினர். அதில் 91 யூதர்கள் கொல்லப்பட்டதோடு, 30,000 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 267 ஜெப ஆலயங்கள், அத்துடன் எண்ணற்ற யூதர்களுக்கு சொந்தமான கடைகள் அழிக்கப்பட்டன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இறுதியில் யூத இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றது. அதாவது 100,000 க்கும் அதிகமான டச்சு யூதர்கள் உட்பட நாஜிக்கள் மற்றும் ஐரோப்பிய நாஜி-ஒத்துழைப்புவாத ஆட்சிகளால் 6 மில்லியன் யூதர்களின் பாரிய படுகொலைக்கு இட்டுச் சென்றது.
ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைத் தாக்கி, ஆம்ஸ்டர்டாமில் இனப்படுகொலை முறைகளை ஆதரிக்கும் அதி தீவிர வலதுசாரி சக்தி எது? மொரோக்கோவிலிருந்து குடியேறியவர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பிற நகரவாசிகள் ஆகியோர், மக்காபி கூலிகான் குண்டர்களை எதிர்கொண்டு ஒரு சிலரை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை. மேலும், அவர்கள் யூத எதிர்ப்புவாதத்தால், அதாவது யூதர்கள் மீதான வெறுப்பால் உந்தப்பட்டனர் என்பதற்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, மக்காபி கூலிகான்களின் குண்டர் நடவடிக்கைகள் மற்றும் இனப்படுகொலைக்கான ஆதரவு ஆகியவற்றால் அவர்கள் கோபமடைந்தனர். இது வில்டர்ஸின் நோயுற்ற முஸ்லீம்-விரோத சுதந்திரக் கட்சி (PVV) மற்றும் காஸா இனப்படுகொலையை ஆதரிக்கும் பிற நேட்டோ அரசாங்கங்களே இந்த குண்டர்களை ஆதரிக்கும் சக்திகளாகும்.
இப்போது, பிரெஞ்சு அரசாங்கம் ஆம்ஸ்டர்டாம் ஆத்திரமூட்டலை மீண்டும் செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது. பாரிஸ் செயிண்ட்-டெனிஸில் உள்ள ஸ்டட் டூ பிரான்ஸ் விளையாட்டு மைதானத்தில் பிரெஞ்சு மற்றும் இஸ்ரேலிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான நவம்பர் 14 திகதி ஆட்டம் நடைபெறும் என்று மக்ரோன் தொடர்ந்து கூறி வருகிறார். யூத எதிர்ப்பை எதிர்க்க, இஸ்ரேலிய ரசிகர்கள் பெரும்பாலும் முஸ்லிம் தொழிலாள வர்க்க பாரிஸ் புறநகர் பகுதி வழியாக அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு 4,000ம் கனரக ஆயுதமேந்திய பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசார் குவிக்கப்படுவதுடன், நெதன்யாகு மொசாட் முகவர்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் யூதர்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்ப்பதற்கோ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்ல. மாறாக, இவை இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பை ஒடுக்குவதை நியாயப்படுத்துவதற்கான அதிவலதுசாரிகளின் ஆத்திரமூட்டல்களாகும். காஸா இனப்படுகொலை மற்றும் சியோனிசத்திற்கான எதிர்ப்பு, யூத-எதிர்ப்பாகும் என்ற பொய்யை தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும். மாறாக, இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போருக்கு தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த எதிர்ப்பு, இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துவதற்கும், படுகொலைகளை நிறுத்துவதற்கும், நெதன்யாகுவுக்கு ஆயுதமளித்து இனப்படுகொலை தொடர அனுமதிக்கும் நேட்டோ ஏகாதிபத்திய அரசாங்கங்களை எதிர்ப்பதற்குமான ஒரு போராட்டத்தில் அணிதிரட்டப்பட வேண்டும்.