மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பாசிசவாதிகள் மற்றும் அவரது விசுவாசிகளின் ஒரு அமைச்சரவையை அதிவேகமாக கூட்டிவரும் நிலையில், ஜனாதிபதி ஜோ பைடென் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு அந்த ஆர்வமுள்ள சர்வாதிகாரியை வரவேற்றதுடன், புதிய அரசாங்கத்திற்கான மாற்றத்திற்கு அவரது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு உறுதியளித்தார்.
ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியாக, பைடென் “உங்களுக்கு இடமளிக்கப்படுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், உங்களுக்குத் தேவையானதைப் பெறுங்கள்” என்று கூறினார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “மிகவும் மென்மையான ஒரு மாற்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன், அது உங்களால் முடிந்தவரை மென்மையாக இருக்கும்.” பைடென் ட்ரம்பை “டொனால்ட்” என்றும், ட்ரம்ப் பைடெனை “ஜோ” என்றும் அழைத்தனர்.
வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர்தான், ட்ரம்ப் ஒரு பாசிசவாதி என்பதை பைடென் ஒப்புக் கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்டில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பைடென் ஆற்றிய உரையில், ட்ரம்ப் “முதல் நாளிலேயே ஒரு சர்வாதிகாரியாக” இருப்பார் என்று எச்சரித்திருந்தார். இப்போது, அவர் தனது வாரிசாக வர இருப்பவருக்கு வெள்ளை மாளிகையைத் திறந்துவிட்டுள்ளார். ட்ரம்பின் தேர்தல் வெற்றியைப் படம்பிடிக்க பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு பைடென் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனம், ஏமாற்றுத்தனம் மற்றும் அரசியல் திவால்தன்மைக்கு இன்னும் நிரூபணம் தேவைப்பட்டால், அது இதுதான். பைடென் இரண்டு மாதங்களுக்கு மேலாக அதிபராக நீடிக்க இருக்கிறார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் மீதும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும், ஒரு பாரிய தாக்குதலுக்கு தயாரிப்பு செய்து வரும், ஜனாதிபதியாக வரவிருக்கின்ற ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு, பைடென் எடுக்கக்கூடிய எண்ணற்ற நடவடிக்கைகள் உள்ளன. மாறாக, ஜனநாயகக் கட்சியினர் தங்கள் ஒத்துழைப்பை ட்ரம்புக்கு உறுதியளித்துள்ளனர்.
பகிரங்கமாக புகைப்படம் எடுத்ததைத் தொடர்ந்து மூடிய கதவுக்குப் பின்னால், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் ஈரான் மீது ஒருமுனைப்பட்ட மத்திய கிழக்கிலான பரந்த போர் நகர்வுகள் உட்பட, அடுத்தடுத்த பத்திரிகை விபரங்களின்படி, பைடெனும் ட்ரம்பும் பிரதானமாக வெளியுறவு கொள்கை குறித்து இரண்டு மணி நேரமாக விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு குறித்த கலந்துரையாடலை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். இரு ஜனாதிபதிகளும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் ஆயத்தப்படுத்தல் குறித்தும் விவாதித்திருக்கலாம். அங்கு பைடென் அப்பிராந்தியத்தில் அதன் பிரதான கூட்டாளிகளான ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடன் அமெரிக்க இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதில் குவிப்புக் காட்டியுள்ளார். அதேவேளையில், அமெரிக்க இராணுவ தளவாடங்களை பசிபிக்கிற்கு தொடர்ந்து அவர் நகர்த்துகிறார். வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கு செனட்டர் மார்கோ ரூபியோ (Marco Rubio), தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு பிரதிநிதி மைக்கேல் வால்ட்ஸ் (Michael Waltz), ஐ.நா. தூதர் பதவிக்கு எலிஸ் ஸ்டெபானிக் (Elise Stefanik), மற்றும் பாதுகாப்பு செயலர் பதவிக்கு ஃபாக்ஸ் நியூஸ் பண்டிதர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உட்பட சீன-விரோத பருந்துகளின் ஒரு தொகையினர், தேசிய பாதுகாப்பு பதவிகளுக்கான ட்ரம்பின் ஆரம்ப நியமனங்களாக இருக்கின்றனர்.
பாதுகாப்பு செயலர் ஹெக்செத்தின் நியமனம் குறிப்பாக குறிப்பிடத்தக்கது. ஏனெனில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்ட முன்னாள் சிப்பாயான இவர், இராணுவ பதவிகளில் ஒரு மேஜராக மட்டுமே இருந்துள்ளார். மேலும், கடந்த தசாப்த காலத்தில், ஒவ்வொரு வார இறுதியில் இடம்பெறும் “ஃபாக்ஸ் & பிரண்ட்ஸின் (Fox & Friends)” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கழித்துள்ளார்.
“மூன்று மற்றும் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற அதிகாரிகளை மீளாய்வு செய்வதற்கும் மற்றும் தலைமைக்கு தகுதியற்றவர்களாக கருதப்படும் எவரொருவரையும் நீக்குவதற்கு பரிந்துரைப்பதற்கும்” அதிகாரம் கொண்ட ஓய்வுபெற்ற மூத்த இராணுவ தளபதிகளைக் கொண்ட ஒரு “படையினர் வாரியத்தை” ஸ்தாபிப்பதற்கான ஒரு வரைவு நிர்வாக உத்தரவை ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்ட நிலையில், இந்த படையினர் நியமனம் வந்துள்ளது. நடைமுறையளவில், அமெரிக்க மக்களுக்கு எதிராக வீதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்த 2020 இல் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு ஜெனரல் மார்க் மில்லி மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்த ஆட்சேபனைகளை மீண்டும் செய்யக்கூடிய ட்ரம்புக்கு போதுமானளவுக்கு விசுவாசமாக இல்லை என்று கருதப்படும் அதிகாரிகளை இராணுவத்திலிருந்து களையெடுப்பதற்கான ஒரு கருவியாக இந்த வாரியம் இருக்கும்.
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் பைடெனின் சந்திப்பு நடந்து கொண்டிருந்த போதே கூட, ட்ரம்ப் இடைக்கால அலுவலகம் அவரது மிகவும் ஆத்திரமூட்டும் நியமனத்தை அறிவித்தது: குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான மாட் கேட்ஸ் (Matt Gaetz), மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட சட்ட அமுலாக்க அதிகாரியாக, அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 42 வயதான புளோரிடா காங்கிரஸ் உறுப்பினரான இவர், பாசிஸ்ட் ஸ்டீவ் பானனின் (Steve Bannon) ஒரு நெருக்கமான கூட்டாளியும், பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி உட்குழுவில் ட்ரம்பின் மிகவும் ஆர்வமுள்ள ஆதரவாளர்களில் ஒருவருமாவார்.
செவ்வாயன்று, மாட் கேட்ஸ்சின் நியமனத்திற்கு முன்னதாக, பானன் அறிவிக்கையில், நீதித்துறை தொடர்பாக, “வேட்டையாடப்பட்டவர்கள் வேட்டைக்காரர்களாக மாற உள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கேபிடல் மீதான வன்முறைத் தாக்குதலுடன் மிக நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினரில் கெய்ட்ஸும் ஒருவராவர். 2020 தேர்தலில் பைடெனிடம் தோற்ற ட்ரம்ப்பால் வரவழைக்கப்பட்ட ஒரு கும்பல் காங்கிரஸின் சான்றிதழைத் தடுக்க முயன்றது. அப்போது, வாஷிங்டனில் ட்ரம்ப் உரையாற்றிய பேரணிக்கு செல்வதற்கான வாடகை பேருந்துகளுக்கு கேட்ஸ் உதவினார். கேபிட்டலைத் தாக்கிய பாசிச குண்டர்களைப் பாதுகாக்க, ட்ரம்ப் பதவியேற்றவுடன் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுத்து வருகிறார்.
கேட்ஸ் நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஏற்றால், ட்ரம்பின் பரந்த அளவிலான அரசியல் இலக்குகள் மீது வழக்குத் தொடுப்பதற்கான ஒரு பிரச்சாரத்தில் முக்கிய நபராக அவர் மாறுவார். இதில் பைடென், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போன்ற முக்கிய ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்ல, மாறாக காஸா இனப்படுகொலைக்கு எதிராக போராடும் மாணவர்கள், சோசலிஸ்டுகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல் தாக்குதலை எதிர்க்க முனையும் அனைவருமே இதில் உள்ளடங்குவர்.
ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச கூட்டாளிகளால் உத்தியோகபூர்வ வாஷிங்டனின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் மற்ற முன்னேற்றங்களுடன் கேட்ஸின் நியமனம் ஒத்துப்போகிறது. அரிசோனா மற்றும் கலிபோர்னியாவில் இரண்டு சர்ச்சைக்குரிய தேர்தல்களில், குடியரசுக் கட்சிப் பதவியில் இருப்பவர்களுக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான பெருநிறுவன செய்தி ஊடகப் பிரிவுகள் புதனன்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபையில் அதன் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று அறிவித்தன. இதன் அர்த்தம், ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் வெள்ளை மாளிகை, அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை மற்றும் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதாகும். அங்கு கடந்த கோடையில் ஆறுக்கு மூன்று அதிதீவிர வலதுசாரி பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற ட்ரம்ப் எவ்வளவு சட்டவிரோதமான, அரசியலமைப்பிற்கு முரணான அல்லது ஊழல் நிறைந்ததாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக அவர் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அவருக்கு முழுமையான விதிவிலக்கு உண்டு என்று தீர்ப்பளித்தது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் பெரும்பான்மை தலைவரான தெற்கு டகோட்டாவின் ஜோன் துனே (John Thune), ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் வரம்பற்ற ஒத்திவைப்புகளுக்கு உடன்பட வேண்டும் என்று கோருவதன் மூலமாக, ட்ரம்ப் தனது அதிகாரத்தை இன்னும் கூடுதலாக விரிவாக்க முயன்று வருகிறார். அந்த நேரத்தில் ட்ரம்ப் அமைச்சரவை பதவிகளை “இடைக்கால நியமனங்கள்” மூலம் நிரப்ப முடியும். இது செனட்டில் வாக்களிக்க வேண்டியதில்லை.
இது, உயர்மட்ட நிர்வாக மற்றும் நீதித்துறை பதவிகளுக்கான நியமனங்களுக்கு மேல் சபை அதன் “ஆலோசனை மற்றும் ஒப்புதலை” வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புத் தேவையை மீறுவதுடன், நடைமுறையளவில் ட்ரம்புக்கு நிர்வாக ஆணையின் மூலம் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. எந்தவொரு காங்கிரஸின் ஒப்புதலும் இல்லாமல், “அரசு செயல்திறன் துறையின்” பாகமாக எலோன் மஸ்க் (Elon Musk) முன்மொழிந்த பாரிய சமூக வெட்டுக்களைத் திணிப்பதற்கான அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குவதற்கான வழிகளையும் ஆலோசகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ட்ரம்ப் தனது கைகளில் நிறைவேற்று அதிகாரத்தை குவிக்கும் உந்துதல் முன்னொருபோதும் இல்லாத அதேவேளையில், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் தோரணை சமமாக அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஜனாதிபதியைப் பொறுத்தவரை, அவர் முதுமையானவராக இருந்தாலும் சரி, அல்லது கோழைத்தனம் மற்றும் அவரது காங்கிரஸ் சகாக்களுக்கு போலித்தனமாக இருந்தாலும் சரி, ஜனநாயகக் கட்சியினர் அரசாங்கத்தை பாசிஸ்டுகள் எடுத்துக் கொள்வதை எதிர்க்க ஒரு விரலைக் கூட உயர்த்த மறுத்து வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் “இடது” பிரிவைப் பொறுத்த வரையில், செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் ட்ரம்பின் ஆரம்ப நியமனங்கள் குறித்தும் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்-பைடென் காதல் கொண்டாட்டம் குறித்தும் எதுவும் கூறவில்லை. பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) நவம்பர் 5 அன்று, அவருக்கும் ட்ரம்புக்கும் வாக்களித்த பிராங்க்ஸ் தொகுதி மக்களுடன் பேசுவதற்காக “கேட்கும்” சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினரின் இழிவான ஒத்துழைப்பு, கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து, இப்போது விரிவடைந்து வரும் ஒரு வரலாற்று வடிவத்துடன் ஒத்துப்போகிறது. படிப்படியாக, அமெரிக்க ஜனநாயகம் சிதைந்து வரும் நிலையில், குடியரசுக் கட்சி ஆளும் வர்க்கத்தின் மிகவும் ஈவிரக்கமற்ற மற்றும் ஜனநாயக-விரோத பிரிவுகளின் கருவியாக முன்வந்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி எதிர்த்துப் போராடுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
2000 ஜனாதிபதி தேர்தல் திருடப்பட்டதற்கு முதல் தடவையாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தலையிட்டபோது, ஜனநாயகக் கட்சிக்காரரான அல்கோர் (Al Gore) புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் முடிவுக்கு அடிபணிந்தார். 2006 இல் ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றபோது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, ஈராக் மீதான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சட்டவிரோதப் போர் அல்லது இரகசிய CIA சித்திரவதை சிறை முகாம்களை நிறுவியதற்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுத்து நிறுத்தினார். 2008 இல் பராக் ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர் சித்திரவதை செய்தவர்கள் மீது எந்தவொரு வழக்கு விசாரணையையும் தடுத்து, புஷ்ஷின் சட்டவிரோத போர்களைத் தொடர்ந்தார். மேலும், அமெரிக்க குடிமக்கள் உட்பட உலகெங்கிலும் டிரோன்-ஏவுகணை படுகொலைகளுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலமாக ஜனாதிபதி பதவியின் மரணத்தை கையாளும் அதிகாரங்களை விரிவாக்கினார்.
2016 இல் ட்ரம்ப் முதன்முதலில் ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்றபோது, ஒபாமா அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று, ஒரே அணியில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த “உள்நாட்டு சண்டை” என்று அறிவித்தார். ட்ரம்ப், நிச்சயமாக, 2020 தேர்தலில் 7 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது, அதுபோன்றவொரு அணுகுமுறையை எடுக்கவில்லை, அதற்கு பதிலாக ஒரு வன்முறையான ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக தேர்தல் முடிவை மாற்றியமைக்க முனைந்தார்.
நடைமுறையளவில் ஒவ்வொரு முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்பின் நோக்கங்கள் ஒரு எதேச்சதிகார சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதே என்பதை ஒப்புக் கொண்டுள்ள நிலைமைகளின் கீழ், இப்போது பைடென் ட்ரம்பை ஒபாமா வரவேற்றதை போன்ற நிகழ்வை மீண்டும் நிகழ்த்தியுள்ளார்.
உலக சோசலிச வலைத் தளம் இடைவிடாது எச்சரித்து வந்திருப்பதைப் போல, அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு எந்தத் தளமும் இல்லை என்பதை இந்த முதுகெலும்பற்ற சரணாகதி மற்றும் அப்பட்டமான ஒத்துழைப்பின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. பெரும் செல்வந்தர்களின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும், அமெரிக்காவிற்குள் அதிகரித்து வரும் சமூக மோதல்களை ஒடுக்கவும், முற்றிலும் ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு சமூக அமைப்புமுறைக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எந்தவொரு சவாலையும் தடுக்கவும், வன்முறை ஒடுக்குமுறையில் ஈடுபட வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.