முன்னோக்கு

ட்ரம்ப் பாசிச ஒடுக்குமுறைக்கும் ஏகாதிபத்திய போருக்குமான அமைச்சரவையைக் கூட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தொடர்ச்சியான விரைவான நியமனங்கள் மற்றும் அறிவிப்புகளில், பாசிச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தனது உருவத்தில் ஒரு நிர்வாகத்தை அமைத்து வருகிறார். இதுவரை அறிவிக்கப்பட்ட நியமனங்களுக்கு இரண்டு அளவுகோல்கள் மட்டுமே உள்ளன: அது, ட்ரம்ப் நடைமுறைப்படுத்த முனையும் பாசிசவாத கொள்கைகளுடன் முழுமையாக அணிதிரள்வது மற்றும் வருங்கால சர்வாதிகாரிக்கு நிபந்தனையற்ற தனிப்பட்ட விசுவாசமாக இருப்பது.

புளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் [AP Photo/Evan Vucci]

ஜனவரி 20, 2025 என்பது முன்னாள் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழைவதை மட்டும் குறிக்காது. மாறாக அதிகாரத்தின் அனைத்து நெம்புகோல்களுக்கும் பொறுப்பான அவரது உதவியாளர்கள் மற்றும் கைக்கூலிகளைக் கொண்ட ஆட்சியை நிறுவுவதாகும். அமெரிக்க மக்களிடமிருந்து வரும் அனைத்து உள்நாட்டு எதிர்ப்பிற்கும் எதிராகவும், ட்ரம்ப் எந்த நாடுகளுக்கு எதிராக முற்றுகை, அடிபணிய வைத்தல் அல்லது வெளிப்படையான போருக்கு இலக்கு வைக்க விரும்புகிறாரோ, அந்த நாடுகளுக்கு எதிராகவும் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளார்.

ட்ரம்ப் அவரது திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், இன்னும் இரண்டு மாதங்களுக்கு அதிகாரத்தில் இருக்கும் பைடென் நிர்வாகம், ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், மக்களை எச்சரிக்க கூட முற்றிலும் எதுவும் செய்யவில்லை. புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு ட்ரம்பை வரவேற்கும் பைடென், ட்ரம்ப் பதவியை தொடர்வதற்கு உத்தரவாதம் அளிப்பது மட்டுமல்ல, மாறாக அவரது கொள்கைகளை செயல்படுத்த உதவுவதும் தனது பொறுப்பு என்பது போல் நடந்து கொள்கிறார்.

ட்ரம்ப் தலைமையிலான புதிய ஆட்சியின் வரையறைகள், கடந்த மூன்று நாட்களாக பகிரங்கப்படுத்தப்பட்ட அல்லது ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட நியமனங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ட்ரம்பின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு நியமனங்கள் அனைத்தும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன:

  • வெளியுறவுத்துறை அமைச்சர், புளோரிடாவின் அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோ (Marco Rubio)
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர், புளோரிடாவைச் சேர்ந்த பிரதிநிதி மைக்கேல் வால்ட்ஸ் (Michael Waltz)
  • ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர், நியூயோர்க்கின் பிரதிநிதி எலிஸ் ஸ்டெபானிக் (Elise Stefanik)
  • சி.ஐ.ஏ இயக்குனராக, முதலாவது ட்ரம்ப் நிர்வாகத்தில் இணைவதற்கு முன்னர் டெக்சாஸின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான ஜோன் ராட்க்ளிஃப் (John Ratcliffe),
  • பாதுகாப்பு அமைச்சராக, அமெரிக்காவின் அதிதீவிர-வலதுசாரியும், முன்னாள் படையினர்களின் தளபதியும் (கோச் சகோதரர்களால் நிதியளிக்கப்பட்டது) மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியான ஃபாக்ஸ் & பிரண்ட்ஸின் (Fox & Friends) நீண்டகால இணை தொகுப்பாளருமான பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து, இவர்கள் அனைவரும் சீனாவுடன் மோதுவதற்கும், அமெரிக்க இராணுவத்திற்கு எந்தவொரு வெளிப்படையான மோதலிலும் “சுதந்திரமான கையுடன்” ஈடுபட அனுமதிப்பதற்கும் வலுவான வக்கீல்களாக இருப்பதோடு, மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலக்கு வைக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு தடைக் கட்டுப். பாடுகளையும் எதிர்ப்பவர்களாக உள்ளனர்.

பென்டகனின் தலைவராக ட்ரம்பின் சாத்தியமான தேர்வு பற்றிய ஊடக ஊகங்களில் குறிப்பிடப்படாத ஒரு நபரான ஹெக்செத்தின் ஆச்சரியமான தேர்வில் இது குறிப்பாக வெளிப்படையாக உள்ளது.

இப்போது இராணுவ ரிசர்வ் பிரிவில் மேஜராக இருக்கும் ஹெக்சேத், புஷ் நிர்வாகத்தின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” போது, கியூபாவின் குவாண்டநாமோ வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் பணியமர்த்தப்பட்டார். பின்னர், ஈராக் போரில் தன்னார்வலராக ஈடுபட்ட அவர், பாக்தாத் மற்றும் சமாராவில் படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார். பின்னர் அவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் இராணுவத்திற்கு கிளர்ச்சி எதிர்ப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.

முன்பு 50 முதல் 100 படையினர்களைக் கொண்ட குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஹெக்செத் இப்போது உலகின் மிகப்பெரிய இராணுவ அமைப்பான பென்டகனை நிர்வகிக்கும் பணியில் அமர்க்கப்பட்டுள்ளார். இதில், 2.1 மில்லியன் பணியிலுள்ள ரிசர்வ் படையினர், 750,000ம் சிவிலியன் ஊழியர்கள் மற்றும் 650,000 ஒப்பந்தக்காரர்கள் உட்பட 3.5 மில்லியன் பேர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய இராணுவ அமைப்பை பென்டகன் கொண்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும், இராணுவ போர்க் குற்றவாளிகளுக்காக வாதிடுபவர் என்ற அவரது பாத்திரமே இதற்கான அவரது தகுதியாகும்.

2019 இல், ட்ரம்ப் ஒரு தீவிர பார்வையாளராக இருக்கும் அதிதீவிர வலது நிகழ்ச்சியான “ஃபாக்ஸ் & பிரண்ட்ஸ்” விவாத நிகழ்ச்சியில் ஹெக்சேத், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர் குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது விசாரணைக்கு காத்திருக்கும் மூன்று சிப்பாய்களை விடுவிப்பதற்கான ஒரு பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார். நிராயுதபாணிகளான கைதிகளை விசாரணையின்றி தூக்கிலிட்டதும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை கொலை செய்ததும் இக்குற்றங்களில் அடங்கும்.

ட்ரம்பை சந்தித்த பின்னர், ஜனாதிபதியின் அணுகுமுறையை ஹெக்செத் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “சந்தேகத்தின் பலன் தூண்டிவிடுபவர்களுக்குச் செல்ல வேண்டும்.” ட்ரம்ப் மன்னிப்புகளை வழங்கினார் மற்றும் ஒவ்வொரு கொலைகாரனையும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட “அநீதிக்கு” இரங்கல் தெரிவித்தார். மேலும், இரண்டு போர்களிலும் அமெரிக்கப் படைகள் செய்த அட்டூழியங்களின் வெளிப்பாடுகளை ஈடுகட்ட சில அடையாள வழக்குகளை நடத்துவது அவசியம் என்று கருதிய உயர்மட்ட இராணுவத் தளபதிகளின் முடிவுகளை மீறி நடப்பதாக பகிரங்கமாக பெருமைபீற்றினார்.

இது போர்க்குற்றங்களைச் செய்யும் தனிப்பட்ட சிப்பாய்களுக்கு மட்டுமல்ல, அவற்றை நடைமுறைப்படுத்த போர்க்குற்றங்களைக் கோரும் கொள்கைகளுக்கும் நிர்வாகத்தின் அணுகுமுறையாக இருக்கும். வரவிருக்கும் ஜனாதிபதி இதை அடையாளம் காட்டும் வகையில் முன்னாள் அர்கன்சாஸ் (Arkansas) கவர்னர் மைக் ஹக்கபீயை (Mike Huckabee) இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதராக நியமித்துள்ளார். ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியான ஹக்கபே, இஸ்ரேல் அரசால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு மத நியாயப்படுத்தலை வழங்கிய அவர், கடந்த காலத்தில் “உண்மையில் பாலஸ்தீனியர் என்று எவரும் இல்லை” என்று அறிவித்தார். அவர் “பாலஸ்தீனியர்கள் இல்லாத” ஒரு மிருகத்தனமான யதார்த்தத்தை உருவாக்க விரும்பும் நெதன்யாகு அரசாங்கத்தின் இனப்படுகொலைக் கொள்கையை தடையின்றி ஆதரிக்கிறார்.

இந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஏனைய நியமனம் பெற்ற குழுவானது, நாட்டுக்கு உள்ளே ட்ரம்பின் திட்டமிட்ட போரை நடத்துவதற்கு பணிக்கப்பட்டிருக்கும். இதில், மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைச் சுற்றி வளைப்பது, அவர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்து வைப்பது மற்றும் சாத்தியமானளவுக்கு விரைவாக அவர்களை நாடு கடத்துவது ஆகியவை உள்ளடங்கும். இந்த சர்வாதிகார கொள்கையின் முக்கிய குற்றவாளிகள் பின்வருமாறு:

  • வெள்ளை மாளிகையின் புதிய பதவியான “எல்லை ஆலோசகராக”, முதல் ட்ரம்ப் நிர்வாகத்தில் புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்தின் முன்னாள் தற்காலிக இயக்குனரும், பெருந்திரளான நாடுகடத்தல்களுக்கு நீண்டகாலமாக வக்காலத்து வாங்குபரும் மற்றும் பாதுகாவலருமான தோமஸ் ஹோமன் (Thomas Homan) இருக்கிறார்.
  • வெள்ளை மாளிகையின் கொள்கைக்கான துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller) முதல் ட்ரம்ப் நிர்வாகத்தில் குடியேற்ற கொள்கைக்கு பொறுப்பாக இருந்தார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பிரித்தல், பெருந்திரளான மக்களை தடுப்புக்காவலில் வைத்தல், மற்றும் தஞ்சம் கோருவோரை நடைமுறையளவில் தடுத்து நிறுத்தும் “மெக்சிகோவில் தங்கியிருத்தல்” திட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு மில்லர் தலைமை தாங்கினார்
  • உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலர் பதவிக்கு, தெற்கு டகோட்டா (South Dakota ) கவர்னர் கிறிஸ்டி நோம் (Kristi Noem) நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி ஆளுநரான இவர், ஒருகாலத்தில் ட்ரம்பின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு நம்பிக்கை கொண்டிருந்ததோடு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடந்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைக்கு மூர்க்கமாக வக்காலத்து வாங்குபவராக இருந்தார். ஒருமுறை டெக்சாஸ் மாநில ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் டசின் கணக்கான தெற்கு டகோட்டா தேசிய பாதுகாப்புப் படை துருப்புகளை டெக்சாஸுக்கு அனுப்பினார். அவர் எல்லை ரோந்து, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க மற்றும் இரகசிய சேவை போன்ற ஒடுக்குமுறை முகமைகளின் ஒட்டுமொத்த பொறுப்பில் இருப்பார்.

ட்ரம்பும் மில்லரும் வடிவமைத்து வருகின்ற மற்றும் ஹோமன் மற்றும் நோயெம் நடைமுறைப்படுத்தவிருக்கும் ஆட்சி, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய அமெரிக்கர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்புக்காவல் முகாம்களை குழந்தையின் விளையாட்டாக தோற்றமளிக்கச் செய்யும். ஹோமனின் கருத்துப்படி, ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது கடுமையான மக்கள் எதிர்ப்பைத் தூண்டிய குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பிரிக்கும் பிரச்சினை, குடும்ப உறுப்பினர்களில் சிலர் அமெரிக்க குடிமக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒட்டுமொத்த குடும்பங்களையும் நாடு கடத்துவதன் மூலமாக தீர்க்கப்படும்.

ட்ரம்ப் பதவியேற்றவுடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆட்சியை நிறுவ இருக்கிறார். ஜனவரி 20, 2025 அன்று, அவர் கையெழுத்திடும் நிர்வாக உத்தரவுகளை அவரது உதவியாளர்கள் ஏற்கனவே தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஹைட்டி மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை இரத்து செய்வதும் இதில் உள்ளடங்கும். அவர்களில் பலர் அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தைகளுடன் அமெரிக்காவில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் ஆவர்.

வரவிருக்கும் நிர்வாகம் புலம்பெயர்ந்தோர்-விரோத தாக்குதலில் இராணுவ ஆதாரவளங்களைப் பயன்படுத்த திட்டமிடுகிறது. இதன் அர்த்தம் புலம்பெயர்ந்து வருபவர்கள் இராணுவத் தளங்களில் உள்ள இராணுவ அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படலாம், மேலும் புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது அவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பும் பிற நாடுகளுக்கோ கொண்டு செல்வதில் இராணுவ விமானங்கள் ஒரு முக்கிய காரணியாக மாறக்கூடும் என்பதாகும்.

ட்ரம்ப் செனட் ஒப்புதல் இல்லாமல் தனது நியமனங்களை நிறைவேற்றவும் முயன்று வருகிறார். நியூ யோர்க் டைம்ஸ், “குடியரசுக் கட்சியினர் ஒரு புதிய செனட் பெரும்பான்மைத் தலைவரை தேர்வு செய்கிறார்கள், அந்த நேரத்தில் அவர் ஒருதலைப்பட்சமாக ஊழியர்களை நியமிக்கலாம், இது அவரை உறுதிப்படுத்தும் செயல்முறையைத் தவிர்க்க அனுமதிக்கும் என்று சமூக ஊடகங்களில் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டது.

செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு தலைப்பு செய்தியில், “ட்ரம்ப் ஒரு எல்லை ஒடுக்குமுறைக்கு திட்டமிட்டு வருகிறார். பைடென் ஏற்கனவே இதனை தொடங்கியுள்ளார்”. இது இரண்டு நிர்வாகங்களுக்கும் இடையிலான தொடர்ச்சியைக் குறிக்கிறது:

ட்ரம்ப், பைடென் நிர்வாகத்திடமிருந்து அமலாக்க கருவிகளைப் பெறுகிறார், அவை கடந்த முறை அவர் வசம் இருந்த கொள்கைகளை விட சக்திவாய்ந்தவை. எடுத்துக்காட்டாக, பைடென் நிர்வாக அதிகாரிகள், இந்த ஆண்டு அவசரகால எல்லைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். இது, சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு புகலிடத்தைத் தடை செய்கிறது. ட்ரம்பின் மெக்சிகோவில் தங்கியிருக்கும் கொள்கை தஞ்சம் கோருவோருக்கு அமெரிக்க நீதிமன்றங்களை அணுகுவதற்கான அணுகலை வழங்கிய அதேவேளையில், ஜனாதிபதி ஜோ பைடெனின் தஞ்சம் கோரும் கட்டுப்பாடுகள் அதுபோன்றவொரு நிகழ்முறையை வழங்கவில்லை. புலம்பெயர்ந்தோரை ஒட்டுமொத்தமாக நாடு கடத்தவும், அவர்கள் நாட்டுக்குள் திரும்பி வந்தால் குற்றவியல் வழக்கு தொடுக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தவும் அமெரிக்க அதிகாரிகளை இது அனுமதிக்கிறது.

வெறும் நான்காண்டுகளுக்கு முன்னர், குடியரசுக் கட்சியினர் ட்ரம்பின் தோல்விக்கு மூர்க்கமான கண்டனங்களுடன் விடையிறுத்தனர். அதனைத் தொடர்ந்து ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியும் நடந்தது. இதற்கு மாறாக, ஜனநாயகக் கட்சியினர் மக்களிடையே மயக்க மருந்து கொடுக்கவும், வரவிருக்கும் நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை என்ன விலை கொடுத்தும் தடுக்கவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். செவ்வாயன்று, வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் விஜயம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, பைடென் முன்னாள் சிப்பாய்கள் தினத்தன்று ஒரு சில மயக்க மருந்து ட்வீட்களை வெளியிட்டார். அதேவேளையில் அரசு எந்திரத்தின் பொறுப்பில் ட்ரம்ப் கொண்டு வர திட்டமிட்டு வரும் பாசிசவாதிகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து, ஆளும் வர்க்கத்திற்குள்ளான “உட்பூசல்கள்” என்று ஒபாமா எதைக் குறிப்பிட்டாரோ அது முடிந்துவிட்டது. முன்னாள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) நியூ யோர்க் டைம்ஸ் உடனான ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதைப் போல, புதிய ஜனாதிபதியின் “வெற்றியை” உறுதிப்படுத்துவது ஜனநாயகக் கட்சியினரின் பணியாக உள்ளது.

ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்த 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க பைடென் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் அல்லது பைடெனுக்கு வாக்களித்த 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எந்த ஆலோசனையும் இல்லை. பைடென் நிர்வாகத்தின் மத்திய கொள்கையான உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதை உறுதிப்படுத்துவதே அவர்களின் ஒரே கவலையாக உள்ளது.

உண்மையில், வெள்ளை மாளிகை உதவியாளர்களின் கருத்துப்படி, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மட்டுமே வெள்ளை மாளிகையில் பைடென் மற்றும் ட்ரம்ப் இடையிலான சந்திப்பின் ஒரே கவனக்குவிப்பாக இருக்கும். ஜனநாயகக் கட்சியினர், குழாய்த்திட்டம் பில்லியன் கணக்கான அமெரிக்க இராணுவ, பொருளாதார உதவிக்கு திறந்து விடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றனர். மேலும் கியேவ் ஆட்சி அமெரிக்க, நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு மாஸ்கோ உட்பட ரஷ்யாவிற்குள் இருக்கும் நீண்ட தூர இலக்குகளில் ஆத்திரமூட்டும் தாக்குதல்களில் ஈடுபட தொடர்ந்து அனுமதிக்க விரும்புகின்றனர்.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் தோல்வியடைந்த ஜனாதிபதி பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் ஜனநாயகத்திற்கான ஓர் அச்சுறுத்தல் என்று கூச்சலிட்டார்கள், பெருந்திரளான சுற்றிவளைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்கில் வைப்பது, மற்றும் சமூக எதிர்புரட்சிக்கான 900 பக்க கையேட்டான ட்ரம்ப் ஆதரவிலான 2025 திட்டத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார்கள்.

இப்போது, ட்ரம்ப் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த துரிதமாக நகர்ந்து வருகின்ற நிலையில், 2025 திட்டத்திற்கு உண்மையில் பங்களிப்பு செய்த ஸ்டீபன் மில்லர் மற்றும் தோமஸ் டோமன் ஆகிய இரண்டு உயர்மட்ட உதவியாளர்களை நியமித்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியினர் அதுபோன்ற போராட்டங்களைக் கைவிட்டு, “அமைதியான அதிகார மாற்றத்திற்கு” தங்களை உறுதிபூண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் உண்மையான அர்த்தம்: அமெரிக்க மக்களுக்கு எதிராக சர்வாதிகாரம் செயல்படுத்தப்படுவதை எதிர்க்க நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்பதாகும்.

ட்ரம்ப் தயாரிப்பு செய்து வரும் கொள்கைகளுக்கு பாரிய எதிர்ப்பு இருக்க வேண்டும், நிச்சயமாக இருக்கும். ஆனால், இந்த எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியால் குறுக்கீட்டுக்கு உட்படுத்தப்படக்கூடாது. ஜனநாயகக் கட்சி, பாசிச குடியரசுக் கட்சியைப் போலவே, வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாகும். ட்ரம்ப்புக்கு எதிரான எதிர்ப்பானது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தால் தலைமை கொடுக்கப்பட வேண்டும். அது, ஒரு புதிய புரட்சிகரத் தலைமையான சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading