மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நவம்பர் 10 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) “தேர்தல் தோல்வியும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்“ என்ற தலைப்பில் ஒரு நேரடி இணையவழிக் கூட்டத்தை நடத்தியது, அது ட்ரம்ப்பினுடைய வெற்றியின் காரணங்கள் மற்றும் பின்விளைவுகளை பகுப்பாய்வு செய்ததுடன், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராடுவதற்கான ஒரு அரசியல் மூலோபாயத்தை விரிவுபடுத்தியது.
இந்த நிகழ்வில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவர் டேவிட் நோர்த், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோசப் கிஷோர், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு அங்கத்தவர்களான எரிக் லண்டன் மற்றும் ரொம் கார்ட்டர் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அரசியல் திசைவழியை வழங்குவதில் இந்தக் கூட்டம் அத்தியாவசியமானதாக இருந்தது. ஒரு அரசியல் சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் மற்றும் ஒரு பாரிய சமூக எதிர்புரட்சியை நடைமுறைப்படுத்தும் திட்டநிரலுடன், ட்ரம்ப் அதிகாரத்திற்கு திரும்புவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பும், தேர்தல் நடைபெற்று வெறும் ஐந்து நாட்களுக்குப் பிறகும் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயார்படுத்திக்கொள்ள நோக்குநிலை மற்றும் முன்னோக்கை அபிவிருத்தி செய்வதே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. நவம்பர் 5-க்குப் பிந்தைய ஊடகங்களின் முடிவற்ற செய்தி வெளியீடுகளில், ஜனநாயகக் கட்சியின் கூட்டுச்சதி உட்பட தேர்தல் முடிவுகளின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களை ஆழமாக ஆய்வு செய்வதோ, சர்வாதிகாரம் மற்றும் பெருமளவிலான ஒடுக்குமுறைக்கான ட்ரம்ப்பின் விரிவான திட்டங்களை எதிர்கொள்வதற்கான நடைமுறைச் சாத்தியமான மூலோபாயங்களை முன்வைப்பதோ அல்லது விளக்குவதோ கிடையாது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தீவிரமான விடையிறுப்புடன் மிகத் தெளிவாக இருந்தனர். இந்த நேரடி நிகழ்வு உலகளவில் 2,000 க்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டது. இதை எழுதும் வரை, வெவ்வேறு இணையத் தளங்களில் வெளியான பதிவில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது.
இரண்டரை மணி நேரமாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கைகளை கவனமாக கற்றுக்கொள்ள வேண்டும். உரையாற்றப்பட்ட சில அத்தியாவசிய விடயங்களின் சுருக்கம் கீழே உள்ளது. ஆனால் இது முழுமையான உரையை கேட்பதற்கும் கவனமாக பரிசீலிப்பதற்கும் மாற்றாக இது இல்லை.
இந்தக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்த டேவிட் நோர்த், “அமெரிக்காவின் முதல் பாசிசவாத ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடியின் உச்சக்கட்டமாகும்” என்றும் இது ஆழமான சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளின் ஒரு வெளிப்பாடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இக்கூட்டம் ஒரு “மார்க்சிச பகுப்பாய்வை” முன்வைக்கும், என்று அவர் குறிப்பிட்டார். இது ட்ரம்ப் என்ற தனிநபரை மட்டும் மையப்படுத்தாமல், இத்தேர்தலில் வெளிப்பட்டுள்ள வர்க்க சக்திகள் மற்றும் நலன்களை ஆராயும் என்றார். எங்கள் பகுப்பாய்வின் அடிப்படைக் கருத்து என்னவெனில், இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வருவது, அமெரிக்காவில் நிலவும் உண்மையான சமூக உறவுகளுடன் தொடர்புடைய, நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது.
ட்ரம்ப் வெற்றியின் புறநிலை ஆதாரங்கள் மீதான வலியுறுத்தல், படுதோல்வியடைந்த ஜனநாயகக் கட்சியின் அரசியல் பொறுப்பை எந்த விதத்திலும் குறைத்துவிடாது. மேலும், ஜனநாயகக் கட்சியினரின் பிரதிபலிப்பைப் புரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத அடிப்படை இதுவாகும். இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வரும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு முரண்பட்ட விதத்தில், ஜனநாயகக் கட்சியினர் அவற்றை மூடிமறைக்க அனைத்தையும் செய்து வருகின்றனர் என்பதை நோர்த் தனது முன்னுரையில் வலியுறுத்தினார்.
“தேர்தலுக்கு முன்னர், ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஒரு உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்று பைடெனும் கமலா ஹாரிஸும் மீண்டும் மீண்டும் எச்சரித்தனர். தேர்தலுக்கு முந்தைய சொற்பொழிவில் பாசிசம் என்ற ‘F வார்த்தை’ முக்கியமாக இடம்பெற்றது. ஐந்து நாட்களில் என்ன வித்தியாசம். ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், ‘F’ என்ற வார்த்தை முன்கூட்டியே அரசியல் வனவாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்போம் மறப்போம் என்பதே ஜனநாயகக் கட்சியின் புதிய முழக்கமாக உள்ளது” என்று நோர்த் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பைடென் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையைப் பற்றி நோர்த் குறிப்பிட்டார். “ட்ரம்ப் தேர்தலில் தோல்வியுற்றால், இரண்டாவது மற்றும் அதிக வன்முறை சதித்திட்டத்திற்குத் தயாராகி வந்த ஒரு பாசிசவாதியாக இருந்தாலும், அதிகாரத்தை அமைதியான முறையில் மாற்றுவதை விட, பைடென் எந்த அரசியல் விழாவையும் புனிதமானதாக அறிவிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 30, 1933 அன்று ஜேர்மன் சான்சிலர் பதவிக்கு ஹிட்லர் உயர்த்தப்பட்டமையும் ஒரு அமைதியான அதிகார மாற்றமாக இருந்தது என்பதை நினைவுகூர வேண்டும். இதையடுத்து வன்முறை வெடித்தது. ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் வந்தமை ஹிட்லரின் 1933 வெற்றிக்கு சமமாகப் பார்ப்பது என்பது இப்போது சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் நிலைப்பாடு அல்ல. அமெரிக்கா வைய்மார் ஜேர்மனி அல்ல, அமெரிக்காவை ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தின் ஆதரவுடன் ஒரு போலிஸ் அரசு சர்வாதிகாரமாக உருமாற்றுவது, ட்ரம்பின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், ஒரே இரவில் இது அடையப்படப் போவதில்லை.
பெரும் போராட்டங்கள் நிச்சயம் இருக்கும், பிரம்மாண்டமான போராட்டம் இருக்கும். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தலின் ஆபத்தான விளைவுகளையும் உண்மையான பாதிப்புகளையும் அங்கீகரிக்காமல் இருப்பது அரசியல் ரீதியாக பொறுப்பற்றது மட்டுமல்லாமல், ட்ரம்ப்பின் நோக்கங்கள் வெற்றிபெற வழிவகுக்கும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலின் ஆபத்தான தாக்கங்கள் மற்றும் உண்மையான விளைவுகளை அங்கீகரிக்க முடியாது. குறைந்தபட்சம், ட்ரம்ப் கூறும் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் கட்டாயம் போராட வேண்டும், போராடும் என்று நோர்த் கூறினார்; “ஆனால் அந்த போராட்டம் தயாரிப்பு செய்யப்பட்டாக வேண்டும். இதற்கு பகுப்பாய்வு தேவை. இதற்கு அரசியல் நிகழ்வுகள் குறித்து ஒரு நிதானமான மற்றும் கவனமான அணுகுமுறை தேவைப்படுகிறது. அதற்கு கடைசியாக தேவைப்படுவது பீதி மற்றும் வெறித்தனம் அல்ல. … தீவிர அரசியலுக்கான நேரம் தொடங்கிவிட்டது.
ஜோசப் கிஷோரின் அறிக்கையானது இந்த கருப்பொருள்களை விரிவுபடுத்தியதுடன், ட்ரம்ப்பின் வெற்றியின் காரணங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது. எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் போன்ற பிரமுகர்கள் உட்பட ஒரு முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் கரங்களில் மலைப்பூட்டும் வகையில் செல்வவளம் குவிந்திருப்பதன் மீது அவர் ஒருமுனைப்படுத்தியிருந்தார் 800 பில்லியனர்கள் இப்போது மொத்தமாக 6.2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வ வளத்தைக் கொண்டுள்ளனர். இது அமெரிக்க முதலாளித்துவத்தினை வரையறுக்கும் அம்சமாகும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் 1.5 மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கு இட்டுச் சென்றுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கம் குறித்தும், பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் குவிமையமாக இருந்த காஸா இனப்படுகொலை மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் ஆகியவை உள்ளடங்கலாக முன்னணி வெளியுறவுக் கொள்கை பத்திரிகைகள் விவரித்ததைப் போல, “மொத்த போரின்” ஒரு காலகட்டத்தின் தொடக்கம் குறித்தும் கிஷோர் வலியுறுத்தினார்.
உலகளாவிய போர் என்பது ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் இணக்கமற்றது என்று கிஷோர் விளக்கினார். “போருக்கு செலவிட சமூக செலவுகள் வெட்டப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தை போருக்குப் பின்னால் ஒழுங்குபடுத்த வேண்டும். வர்க்கப் போராட்டம் போரின் நலன்களுக்காக ஒடுக்கப்பட வேண்டும். போருக்கான எதிர்ப்பு நசுக்கப்பட்டு, குற்றமாக்கப்பட வேண்டும். முழு யுத்தத்தின் உள்நாட்டு பின்விளைவு அரசியல் சர்வாதிகாரமாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் தேர்வானதில் ஜனநாயகக் கட்சியினரின் உடந்தையும் மற்றும் அவர்களின் பதிலளிப்பு குறித்து விவாதிக்கையில், அவர்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தையும், உயர்-நடுத்தர வர்க்கத்தின் சிறப்புரிமை பெற்ற பிரிவினரின் நலன்களை முன்னெடுப்பதற்காக இனம் மற்றும் பாலின விவகாரங்களில் ஜனநாயகக் கட்சியினர் கொண்டிருந்த தீவிர நிலைப்பாட்டையும் விவரித்தார்.
“ஜனநாயகக் கட்சியினரால் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட எந்த அணுகுமுறையையும் முன்வைக்க முடியவில்லை, மாறாக அதற்கு எதிராகவே இருந்தனர். அதற்குப் பதிலாக, இனவெறி மற்றும் பெண்கள் மீதான வெறுப்பு காரணமாகவே ஹாரிஸுக்கு வாக்களிக்கவில்லை என்று வாக்காளர்களைக் குற்றம்சாட்டியதே அவர்களின் செயல்பாடாக இருந்தது” என்று அவர் விமர்சித்தார்.
ட்ரம்ப் வாய்வீச்சுடன் சமூகக் கோபத்தை சுரண்ட முடிந்த நிலையில், தொழிலாள வர்க்கத்திற்குள்ளான அரசியல் மாற்றங்களை வலியுறுத்தும் விளக்கப்படங்களுடன் சேர்ந்து, தேர்தல் தரவுகள் மீதான ஒரு விரிவான பகுப்பாய்வின் மீது எரிக் இலண்டனின் அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. “கடந்த தேர்தலில் இருந்து இந்த தேர்தல் வரையில் ஜனநாயகக் கட்சி சுமார் 10 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளது. மேலும், அதற்கான ஆதரவில் இது ஒரு பாரிய வரலாற்று சரிவு” என்று எரிக் விளக்கினார்.
அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் ஹாரிஸிற்கான ஆதரவு வியத்தகு முறையில் வீழ்ச்சியடைந்திருந்ததை எரிக் எடுத்துக்காட்டிய அதேவேளையில், வசதி படைத்தவர்களிடையே மட்டுமே ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அதிகரித்திருப்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். “ஜனநாயகக் கட்சி... வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகள், ஏகாதிபத்தியம் மற்றும் அடையாள அரசியல் ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரச்சாரத்தை நடத்தியது... கறுப்பின ஆண்கள், இலத்தீன் ஆண்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து கணிசமாக விலகிவிட்டனர்.”
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் பிற தரவுகளை மதிப்பாய்வு செய்த எரிக், “மக்கள்தொகையில் கால் பகுதியினர் மட்டுமே தங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை என்று கூறுகின்றனர். ... இந்த வாக்காளர்கள் மத்தியில், நிதி ரீதியாக உண்மையில் கவலைப்பட ஒன்றுமில்லாத வாக்காளர்கள் மத்தியில் ஹாரிஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.”
அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் ஸ்தாபனங்களின் ஜனநாயக-விரோத குணாம்சத்தை ஆவணப்படுத்தும் சமீபத்திய ஆவணங்களையும் எரிக் திறனாய்வு செய்தார். “இது ஒரு செல்வந்த தன்னலக் குழுக்களின் அமைப்புமுறையாகும், இதில் 90 சதவீத மக்கள் தாங்கள் பெரிதும் ஆதரிக்கும் கொள்கைகளில் எதனையும் எந்தக் கட்சியாலும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதில் முற்றிலும் கருத்து கூற முடியாதுள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
ரொம் கார்ட்டரின் அறிக்கை, இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்தும் அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தைத் திணிக்க சதி செய்யும் அரசியல் சக்திகள் குறித்தும் ஒரு விரிவான மற்றும் உறைய வைக்கும் திறனாய்வை வழங்கியது. ட்ரம்பின் வெற்றிக்கு விடையிறுப்பாக, “நாங்கள் நன்றாக இருக்கப் போகிறோம்” என்ற பைடெனின் அறிவிப்பு, “அபாயத்தின் அளவை மூடிமறைப்பதற்கும்” மற்றும் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக ஒரு பாரிய இயக்கம் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“ட்ரம்ப் ஒரு பாரிய நாடுகடத்தல் நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருகிறார்,” என்று கார்ட்டர் விளக்கினார். அதற்கு தேவையான “தடுப்புக்காவல் முகாம்களைக் கட்டியெழுப்புவதுடன் சேர்ந்து, நூறாயிரக் கணக்கான போலிஸ் மற்றும் சிப்பாய்களை அணிதிரட்டுவது அவசியமாகும்.” மார்க்சிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் உட்பட அரசியல் எதிரிகளை கைது செய்து நாடு கடத்தும் ட்ரம்பின் திட்டங்களையும் அவர் மதிப்பாய்வு செய்தார்.
குடியரசுக் கட்சியினரின் திட்டம் 2025 ஐ கார்ட்டர் சுட்டிக்காட்டினார். அது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அடிபணியச் செய்வதற்கான முயற்சிகளாகும். “உங்கள் விசுவாசம் உண்மையில் அரசியலமைப்பின் மீது அல்ல, மாறாக ட்ரம்ப்புக்கு, ஏனெனில் அவர் மக்கள் வாக்குகளை வென்றார், எனவே ‘மக்களின் விருப்பத்தை’ அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்...” என்று ட்ரம்ப் மற்றும் அவரது பிரிவினர் கூறுகிறார்கள். இது தலைவர் கோட்பாட்டை, குறிப்பாக [நாஜிக்களின்] ஃபியூரர் கோட்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே.”
ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக உரிமையும் தாக்குதலின் கீழ் உள்ளது, என்று கார்ட்டர் தெரிவித்தார், “உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக” குற்றவியல் வழக்கு விசாரணையில் இருந்து ஜனாதிபதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஒரு உச்ச நீதிமன்றத்தால் ட்ரம்ப் ஆதரிக்கப்படுகிறார். வரவிருக்கும் நிர்வாகத்தின் திட்டநிரலில் உள்ள பல எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு மத்தியில், “ஆசிரியர்கள், ‘மாணவர்களுக்கு அவர்களின் நாட்டை நேசிக்க கற்பிக்க வேண்டும், அவர்களின் நாட்டை வெறுக்கக் கூடாது’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதை எதிர்க்கும் எந்தவொரு ஆசிரியரும் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள்” என்று கார்ட்டர் குறிப்பிட்டார்,
ஜெர்ரி வைட்டின் அறிக்கை, அவரை அறிமுகப்படுத்தும்போது நோர்த் தொகுத்தளித்த முக்கியமான மற்றும் அடிப்படைக் கேள்வியைக் குறிப்பிட்டது: “இந்த அபாயங்களைக் கடக்க, இத்தகைய தாக்குதல்களை எதிர்க்க தகைமை கொண்ட ஒரு சக்தி இங்கே இருக்கிறதா? அப்படிச் செய்வதில் அக்கறை கொண்ட ஒரு சக்தி இருக்கிறதா?” இந்த கேள்விக்கான பதில் ஆம்: அது, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்”.
1844 இல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய புனிதக் குடும்பம் என்ற நூலில் இருந்து ஒரு பத்தியை நோர்த் மேற்கோள் காட்டினார். முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாள வர்க்கம் அதனுடைய இடம் காரணமாக அதன் புரட்சிகரப் பாத்திரத்தை ஸ்தாபித்தது: “இந்த அல்லது அந்த பாட்டாளி வர்க்கம், அல்லது ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கமும் கூட, இத்தருணத்தில் அதன் நோக்கமாக எதைக் கருதுகிறது என்பது ஒரு கேள்வி அல்ல. பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, அதன் இருப்புக்கு ஏற்ப, அது வரலாற்று ரீதியாக என்ன செய்ய நிர்பந்திக்கப்படும் என்பதுதான் கேள்வி. அதன் இலக்கும் வரலாற்றுச் செயல்பாடும் அதன் தற்போதைய வாழ்க்கைச் சூழலிலும், இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு முழுவதிலும் தெளிவாகவும் மாற்றமுடியாத வகையிலும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் உள்ளது என்று நோர்த் குறிப்பிட்டார். மேலும், “முதலாளித்துவ வர்க்கம் இடைவிடாமல் பொய் சொல்கிறது என்று எப்படி சொல்லாமல் இருக்க முடியும். எவ்வாறாயினும், நனவின் சிக்கல்களைக் கடப்பதற்கான புறநிலை சாத்தியம் “முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில், வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தில்” உள்ளது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக யதார்த்தம் பற்றிய ஒரு விரிவான திறனாய்வின் மூலமாக இந்த நிலைமைகளை ஜெரி வைட் ஆவணப்படுத்தினார். இது பாரிய சமத்துவமின்மை மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள், உயரும் விலைகள் மற்றும் அதிகரித்த சுரண்டல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தீவிரமடைந்து வரும் சமூக நெருக்கடியால் பண்பிடப்படுகிறது. “வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு 2001 இன் முதல் காலாண்டில் சுமார் மூன்றில் இரண்டு பங்காக, அல்லது 64 சதவீதமாக இருந்ததில் இருந்து, 2024 இன் முதல் காலாண்டில் 55.8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது,” என்று அவர் குறிப்பிட்டார். சமூக சமத்துவமின்மை “AFL-CIO இன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் வர்க்கப் போராட்டத்தை செயற்கையாக ஒடுக்குவதற்கு நேரடியாக பொருந்துகிறது.”
ஆனால், 2024 இல் 220,000 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட குறைந்தபட்சம் 24 பிரதான வேலைநிறுத்தங்கள் உட்பட, தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் பல வெளிப்பாடுகள் உள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு வரும் “சமூக எதிர்ப்புரட்சி வர்க்க மோதலை அதிகரிக்கப் போகிறது. ட்ரம்ப் ஜனாதிபதி பதவியின் அப்பட்டமான வர்க்க நலன்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஜெரி வைட் விளக்கினார்.
கூட்டத்தின் முடிவில், ட்ரம்பின் தேர்தலில் இருந்து எடுக்கப்பட வேண்டிய மைய முடிவை நோர்த் வலியுறுத்தினார்: அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்ற புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
“தேர்தல், ஒரு உலகளாவிய நிகழ்வு. … அமெரிக்காவின் நெருக்கடி உலகெங்கிலும் எதிரொலிக்கும் ஒன்றாகும்.” ட்ரம்பை உருவாக்கிய நிலைமைகள் எல்லா இடங்களிலும் வெளிப்படையாக உள்ளன. “வலதுசாரி பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சி என்பது அமெரிக்காவுக்கே உரித்தான ஒரு நிகழ்வுப்போக்கு அல்ல. … இது ஒரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்காகும், ஏனென்றால் முதலாளித்துவம் சர்வதேசரீதியானது” என்று நோர்த் கூறினார்.
ஒரு சர்வதேச சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவது அவசர மற்றும் அவசியமும் சாத்தியமானதும் ஆகும். பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் உலகப் போரை உருவாக்கும் அதே முரண்பாடுகள்தான், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான அடிப்படையையும் உருவாக்குகின்றன.
ஆனால் இது தானாக நடக்காது. “ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்திற்கான புறநிலை தேவை இருக்கிறது. ஆனால் அத்தகையதொரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் தலையீடு செய்ய மக்கள் எடுக்கும் முடிவுகளின் விளைபொருளாகும்” என்று நோர்த் கூறினார்.
***
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது பிரமாண்டமான அரசியல் அதிர்ச்சிகளை உருவாக்கும். “அமெரிக்க நிலநடுக்கம்” உலகெங்கிலும் எதிரொலிக்கும். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியை திசைதிருப்ப, புதிய அரசியல் பொறிகளை உருவாக்க, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் முகவர்களின் தரப்பில் இருந்து எண்ணற்ற முயற்சிகள் இருக்கும்.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாறு முழுவதிலும் பாதுகாக்கப்படும் உண்மையான சோசலிச அரசியலை, புரட்சிகர அரசியலை, புதுப்பிப்பதன் மூலம்தான் தொழிலாள வர்க்கம் தன்னை நோக்குநிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தின் மையச் செய்தியாகும். கூட்டத்தின் தொடக்கத்தில் டேவிட் நோர்த் குறிப்பிட்டதைப் போல, “தீவிர அரசியலுக்கான நேரம் தொடங்கிவிட்டது.”
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலைக்கு, வரலாற்று அனுபவத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் முன்னோக்கை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். இந்த அடிப்படையில் மட்டுமே ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகவும், ஆளும் வர்க்கத்தின் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், பாசிசத்தின் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் ஒரு போராட்டத்தை நடத்த முடியும்.
“தேர்தல் தோல்வியும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்“ என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் முழுக் கூட்டத்தின் காணொளியை பார்வையிடுமாறும், மேலே உள்ள இந்த ஆய்வுகளை சாத்தியமான அளவுக்கு பரந்தளவில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதற்கும் முடிவெடுக்குமாறும் உலக சோசலிச வலைத் தளம் நமது வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறது.