மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நவம்பர் 10, ஞாயிறன்று, அமெரிக்க நேரப்படி, மாலை 3 மணிக்கு, (இந்திய - இலங்கை நேரம் திங்கள் அதிகாலை 01h30 மணி) சோசலிச சமத்துவக் கட்சி “தேர்தல் தோல்வியும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்” என்ற தலைப்பில் ஒரு இணையவழி நிகழ்வை நடத்துகிறது. wsws.org/FightTrump இல் பதிவுசெய்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவும்.
டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாகும், அதன் அரசியல் விளைவுகள் உலகெங்கிலும் உணரப்படும். இந்த பாசிச வாய்வீச்சாளர் 2024 தேர்தலில் தேர்தல் மற்றும் மக்கள் வாக்குகளுடன், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். இன்னமும் 73 நாட்களில் அவர் மீண்டும் வெள்ளை மாளிகையில் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கானவர்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளால் சாத்தியமாக்கப்பட்ட தேர்தல் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பிடம் வெறித்தனமாக சரணடைந்ததைக் காணும்போது, இந்த அதிர்ச்சி அருவருப்பாக மாறுகிறது.
ஜனவரி 6, 2021 அன்று அரசியலமைப்பை வன்முறையில் தூக்கியெறிய ட்ரம்ப் முயற்சித்தது மட்டுமல்லாமல், முதல் நாளிலிருந்து ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் விடுத்த வெளிப்படையான அச்சுறுத்தல்களையும் மறந்து, ஜனாதிபதி பைடென் மற்றும் துணை ஜனாதிபதி ஹாரிஸ் இப்போது மற்றும் ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்பு நாளுக்கு இடையில் ட்ரம்பின் “மாற்றக் குழுவிற்கு” உதவுவதாக உறுதியளித்துள்ளனர். அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான வழியை அவர்கள் தெளிவுபடுத்தியது மட்டும் அல்லாது, அவர்கள் இப்போது ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பின் இருக்கையை மெருகூட்டுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்கு முன்னர், கமலா ஹாரிஸ் ட்ரம்ப் ஒரு பாசிசவாதி என்று எச்சரித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும், எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார். ஒரு பாசிசவாத ஜனாதிபதிக்கு முதுகெலும்பின்றி அதிகாரத்தை மாற்றுவது ஜனநாயகத்தின் வெற்றியாக கொண்டாடப்பட தகுதியானது என்பது போல, பதவியேற்பு நாளில் அதிகாரத்தின் “அமைதியான மாற்றம்” இருக்கும் என்று பைடன் பெருமையுடன் வாக்குறுதி அளிக்கிறார்.
ஜனநாயகக் கட்சியினர் பொதுமக்களுக்கு மயக்க மருந்து கொடுக்க முயற்சிக்கின்றனர்.
இதுதான் கடைசி தேர்தல் என்றும், தனது ஆதரவாளர்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டியதில்லை என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் தேர்வானது முன்கண்டிராத ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு மறுதலிப்பிற்கும், பாரிய ஒடுக்குமுறையின் ஓர் அலைக்கும், மற்றும் வன்முறையான சமூக எதிர்புரட்சிக்கும் களம் அமைக்கிறது என்பதே அரசியல் யதார்த்தமாகும். பைடென் ஒரு சமாதான ஆலிவ் கிளையை நீட்டுகின்ற அதேவேளையில், ட்ரம்பின் ஆலோசகர்கள் அவர்களின் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பழிவாங்க அச்சுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ட்ரம்பின் ஒரு முக்கிய ஆலோசகரான ஸ்டீவ் பானன், அவர்களை “முரட்டுத்தனமான ரோமானிய நீதி”, அதாவது கொலை கொண்டு அச்சுறுத்தியுள்ளார்.
பெருந்திரளான மக்களை நாடு கடத்துவதற்கான திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன. பொருளாதார முன்னணியில், எலோன் மஸ்க் புதிய நிர்வாகத்தின் கொள்கைகள் வலியை விளைவிக்கும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் அத்தியாவசிய சமூக திட்டங்களுக்கு, குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் ஓய்வூதிய நலன்கள் தொடர்பானவற்றுக்கான நிதியைக் குறைப்பதை அர்த்தப்படுத்துகிறார். மேலும், பாரிய பணிநீக்கங்களை செயல்படுத்த பெருநிறுவனங்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படும்.
அனைத்திற்கும் மேலாக, போரை எதிர்ப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறினாலும், அது பைடெனுக்கு சற்றும் குறையாத ஆக்ரோஷமான இராணுவவாத வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும்.
ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களின் பாதுகாப்பை ட்ரம்ப்பின் வெற்றிக்கு பொறுப்பானவர்களிடம் ஒப்படைக்க முடியாது.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே முக்கிய பணியாகும். ஜனநாயக கட்சி ட்ரம்பிடம் சரணடைந்துள்ளது. ஆனால், ஒரு பொலிஸ் அரசுக்கான திட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வளரும். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பை எதிர்த்துப் போராடப் போவதில்லை, ஆனால் தொழிலாள வர்க்கமே எதிர்த்துப் போராடும்.
உண்மையில், காஸாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்களில் இருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையின் ஒரு சீரான வளர்ச்சி வரையில், கடந்த ஆண்டு அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பின் ஒரு வெடிப்பார்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆழ்ந்த சமூகப் போராட்டங்கள் தொடுவானத்தில் உள்ளன.
இந்த போராட்டங்கள், அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் செல்வந்த தட்டுக்களின் ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தின் மூலமாக மட்டுமே பாசிசத்தை நிறுத்த முடியும் என்ற ஒரு புரிதலால் வழிநடத்தப்பட்டு, ஜனநாயகக் கட்சியில் இருந்து அரசியல்ரீதியாக சுயாதீனமானதாகவும் அதற்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதும், ஒரு சர்வதேச மூலோபாயத்தால் உயிரூட்டப்பட்டதாக, உண்மையான சோசலிச அரசியலுக்கு “ஒரு புதிய பிறப்பு” இருந்தாக வேண்டும்.
இதை நோக்கி, சோசலிச சமத்துவக் கட்சி ஞாயிறன்று “தேர்தல் தோல்வியும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்” என்ற தலைப்பில் ஒரு அவசர இணையவழி நிகழ்வை நடத்தவுள்ளது. அதன் நோக்கம் தற்போதைய அரசியல் நிலைமை பற்றிய பகுப்பாய்வை வழங்குவதும், வரவிருக்கும் சமூக, தொழில்துறை, பணியிட மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு தேவையான மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டம் பற்றி விவாதிப்பதும் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர், துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியுரிமை சட்ட வல்லுனர் எரிக் லண்டன் மற்றும் டேவிட் நோர்த் இந்த இணையவழி விவாதத்தில் பங்கெடுக்கும் குழுவில் உள்ளடங்குவர்.
புலம்ப வேண்டாம். ஒழுங்கமைத்து வியூகத்தை வகுக்கவும்! இந்த ஞாயிறு மதியம் கிழக்கு நிலையான (அமெரிக்கா) நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய - இலங்கை நேரம் திங்கள் அதிகாலை 01h30 மணி) நடைபெறும் இந்த இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும், wsws.org/FightTrump இல் பதிவுசெய்து இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளவும்.