இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை அஞ்சல் ஊழியர்கள் சுமார் 17,000 பேர் ஞாயிற்றுக்கிழமை முதல் 19 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். துணை தபால் அதிபர்களைத் தவிர, அனைத்துப் பிரிவுகளும் பங்கேற்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், நாட்டின் அஞ்சல் சேவைகளை கிட்டத்தட்ட முடக்கியுள்ளது.
வேலைநிறுத்தம் செய்யும் அஞ்சல் ஊழியர்கள், மேலதிக நேர ஊதியம் மற்றும் தற்காலிக, பதில் மற்றும் கீழ்மட்ட தொழிலாளர் தரத்திலும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம், அனைத்து தொழில் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புதல், பதவி உயர்வுகள் மற்றும் அஞ்சல் போக்குவரத்து பிரிவில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரி வருகின்றனர். முதல் தர அதிகாரிகளுக்கு தரப்பட வேண்டிய மூன்று ஊதிய உயர்வுகள் வேண்டும், தொழிலாளர்களின் வருகை மற்றும் வெளியேற்றத்தை பதிவு செய்வதற்கான கைரேகை இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
ஆகஸ்ட் 18 அன்று, கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள், பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். அங்கு தொழிற்சங்க அதிகாரிகள் ஜனாதிபதி திசாநாயக்கவிடம் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ஒரு கடிதத்தை வழங்கினர்.
இந்த வேலைநிறுத்தமானது இலங்கையிலும் உலகெங்கிலும், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் தொழிற்துறை போராட்டம் மற்றும் தீவிரமயமாதல் அலையின் ஒரு பகுதியாகும்,
ஆகஸ்ட் 19 அன்று, 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த கல்விசாரா தொழிலாளர்கள், அரசாங்கம் 2025 பாதீட்டில் மேற்கொண்டுள்ள செலவு வெட்டு நடவடிக்கைகளை எதிர்த்து, நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
ஜூலை 22 அன்று, இலங்கை மின்சார சபையின் 22,000 பலமான தொழிலாளர் படையில் சுமார் 16,000 தொழிலாளர்கள், அரசுக்குச் சொந்தமான நிறைவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தின் பாகமாக, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்து ஒரு சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தபால் ஊழியர்களின் நடவடிக்கையானது தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளுக்கும் பரவும் என்று அஞ்சும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், வேலைநிறுத்தத்திற்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. சனிக்கிழமை முதல் தபால் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்து, வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்கியுள்ளதுடன் வேலை நிறுத்தத்தை நியாயமற்றது என்று கண்டித்துள்ளது.
தபால் மா அதிபர் ருவான் சத்குமார, வேலைநிறுத்தம் 'நியாயமற்றது' என்றும், 'ஊழியர்களின் பல கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன' என்றும் ஊடகங்களுக்கு பொய் கூறினார். தொழிற்சங்கத் தலைவர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாட விரும்பினால், வேலைநிறுத்தம் கைவிடப்பட வேண்டும் என்று அவர் அறிவித்தார். 'நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. வேலைநிறுத்தம் இருக்கும்போது பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வேலைநிறுத்தங்கள் 'திறைசேரிக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துகின்றன. எதிர்காலத்தில், இது திட்டமிடப்பட்ட சம்பள உயர்வு அல்லது மேலதிக நேர கொடுப்பனவுகளை பாதிக்கலாம். எனவே, இதை ஒரு நியாயமற்ற வேலைநிறுத்தமாக நான் கருதுகிறேன்,' என்றார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜயதிஸ்ஸ, வேலைநிறுத்தக்காரர்களின் 19 கோரிக்கைகளில் 17 'தீர்க்கப்பட்டுவிட்டன அல்லது தீர்க்கப்பட்டு வருகின்றன, மீதமுள்ள இரண்டு கோரிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மேலதிக நேர ஊதியம் பற்றியது [ஆனால்] மேலதிக நேர ஊதியத்தை அதிகரிக்க முடியாது மற்றும் கைரேகை இயந்திரங்களை அகற்ற முடியாது' என்று கூறினார்.
பின்னர் “அதற்கு உடன்படும் அஞ்சல் ஊழியர்கள் இருக்கலாம், மற்றவர்கள் வேறு எங்கும் வேலை தேடிக்கொள்ளலாம்,” என அவர் ஒரு அச்சுறுத்தலை விடுத்தார்.
வேலைநிறுத்தம் செய்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஜயதிஸ்ஸவின் கோரிக்கை, அரசாங்கம் வேலைநிறுத்தத்தை நசுக்கத் தயாராக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
தபால் ஊழியர்களோ ஜயதிஸ்ஸ மற்றும் தபால் மா அதிபரின் கூற்றுக்களை திட்டவட்டமாக நிராகரித்து, அவர்களின் 19 கோரிக்கைகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை என்று வலியுறுத்தினர்.
2025 வரவு-செலவுத் திட்டத்தில், ஊதிய உயர்வுகள் எனப்படுவது அவர்களின் தற்போதைய அடிப்படை மாத சம்பளத்தில் கொடுப்பனவுகளைச் சேர்த்தமை மட்டுமே என்று தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை சுமார் 2,000 முதல் 12,000 ரூபாய் வரையான உயர்வாக இருப்பதோடு இது வானளாவ உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யப் போதாதது.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினதும் தலைவர்கள், இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது, அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான உண்மையான போராட்டத்தை ஒழுங்கமைக்க அன்றி, மாறாக இந்த நீண்டகால பிரச்சினைகள் மீதான அவர்களின் வளர்ந்து வரும் கோபத்தைக் கலைத்துவிடவே ஆகும். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதானது அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் என்ற பொய் மாயைகளை தொழிற்சங்க அதிகாரிகள் பரப்பி வருகின்றனர்.
ஆகஸ்ட் 13 அன்று, அகில இலங்கை துணை தபால் அதிபர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, 19 கோரிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ள துணை அஞ்சல் அதிபர்களைப் பாதிக்கும் நான்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால், தேசிய வேலை நிறுத்தத்தில் சேரப்போவதில்லை என்று கூறி ஒரு கபடத்தனமான அறிக்கையை வெளியிட்டது. 'வேலைநிறுத்தம் தொடர்பான பிற பிரச்சினைகள் துணை தபால் அதிபர்களை நேரடியாகப் பாதிக்காதுடன், முடிவில், வேலைநிறுத்தத்துடன் தொடர்புடைய எந்த சலுகைகளையும் நாங்கள் பெற மாட்டோம்' என்றும் அது கூறியது.
திங்களன்று, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: 'நாங்கள் எங்கள் கோரிக்கைகளை பல அரசாங்கங்கள், 11 ஊடக அமைச்சர்கள் மற்றும் மூன்று தபால் மா அதிபர்களிடமும் முன்வைத்துள்ளோம். இருந்த போதிலும், எந்த தீர்வுகளும் இல்லாததால்தான் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்தோம்.'
அஞ்சல் ஊழியர் சங்கங்கள் ஏராளமான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, நிர்வாகம் மற்றும் அரசாங்கங்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றே அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த போராட்டங்கள் எந்த பிரச்சினையையும் தீர்க்காததோடு, கோரிக்கைகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
மார்ச் மற்றும் மே மாதங்களில் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தங்கள் மற்றும் ஜூலை 15-16 அன்று மேலதிக நேர வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நான்காவது முறையாக தற்போதைய அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடக்கின்றது. அரசாங்கமும் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகளும் தீர்வு காண்பதாக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்த பின்னர் இந்த வேலைநிறுத்தங்கள் கைவிடப்பட்டன.
தொழிற்சங்கத் தலைமைகள், இந்த வாரமும், தலையிட்டு சர்ச்சையைத் தீர்க்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் அதையே செய்துள்ளன. இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள திசாநாயக்கவும் அவரது வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கமும் தங்களின் போக்கை மாற்றப் போவதில்லை.
கடந்த காலத்தில் செய்தது போலவே, முதல் வாய்ப்பிலேயே தங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுக்க எதிர்பார்க்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது அஞ்சல் ஊழியர்கள் எந்த நம்பிக்கையும் வைக்கக்கூடாது.
ஞாயிற்றுக்கிழமை உலக சோசலிச வலைத் தளத்தின் சிங்கள மற்றும் தமிழ் பக்கங்களில் வெளியான ஒரு கட்டுரை, “தங்கள் ஊதியங்கள், தொழில்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போராட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு தொழிலாள வர்க்கப் பிரிவினரும், அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்காமல் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது வெல்லவோ முடியாது…
“தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் பலம் அணிதிரட்டப்பட வேண்டும். வேலைநிறுத்தம் செய்யும் அஞ்சல் ஊழியர்கள் ஏனைய தொழிலாளர்களை நாடி அவர்களின் தீவிர ஆதரவைக் கோர வேண்டும். ஒரு பகுதி தொழிலாளர்களின் போராட்டத்தின் தோல்வி மற்ற அனைத்து பிரிவுகள் மீதான தாக்குதல்களுக்கு களம் அமைக்கும்.”
இலங்கைத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன பலத்தைத் திரட்டுவதன் மூலமும், சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைவதன் மூலமும் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் தோற்கடிக்க முடியும்.
அஞ்சல் ஊழியர்கள் பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பொருள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் பிரதிநிதிகளிடமிருந்து சுயாதீனமாக, அஞ்சல் அலுவலகங்கள், செயல்பாட்டு அலுவலகங்கள் மற்றும் மத்திய தபால் பரிமாற்றத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபித்து, ஏனைய வேலைத் தளங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் உள்ள நடவடிக்கைக் குழுக்களுடன் ஒன்றிணைவதாகும்.
இந்த குழுக்கள், அனைத்து வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கும் சோசலிச வேலைத்திட்டத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் அதன் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் கூட்டுப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.