இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), 17,000 தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் இந்த முக்கியமான போராட்டத்தை வெற்றிக்குக் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாட ஆகஸ்ட் 25 திங்கட்கிழமை ஒரு சூம் கூட்டத்தை நடத்தவுள்ளது. முழு தொழிலாள வர்க்கத்திற்கும் முக்கியமான ஒரு வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடும் இந்தக் கூட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள், ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளையும் பங்கேற்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.
தபால் ஊழியர்கள் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். மேலதிக நேர ஊதியம், தற்காலிக, பதில் மற்றும் கீழ்மட்ட தொழிலாளர் வகை ஊழியர்களை நிரந்தரமாக்கல், வெற்றிடங்களை உடனடியாக நிரப்புதல், நீண்டகாலமாக தாமதமாகி வரும் பதவி உயர்வுகள், அஞ்சல் போக்குவரத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் முதல் தர அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று ஊதிய உயர்வுகள் உட்பட நீண்டகால பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான 19 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் தபால் வேலைநிறுத்தத்திற்கு அச்சுறுத்தல்கள் விடுத்தும், ஊடகங்களின் ஆதரவுடன் கொடூரமான அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலமும் பிரதிபலித்துள்ளது. தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம், வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில், தபால் ஊழியர்களின் 19 கோரிக்கைகளில் 17 நிறைவேற்றப்பட்டுள்ளதாக அல்லது நிறைவேற்றப்பட்டு வருவதாக பொய்யாகக் கூறிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளான, கைரேகை இயந்திரங்களை அகற்றுதல் மற்றும் மேலதிக நேர ஊதியத்தையும் நிறைவேற்ற முடியாது என்று வலியுறுத்தினார். அதற்கு உடன்படாத தபால் ஊழியர்கள் வேறு எங்காவது வேலை தேடலாம் என்று அவர் அச்சுறுத்தினார்.
ஆகஸ்ட் 22 அன்று, வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், கலகத் தடுப்பு பொலிசாரின் ஆதரவுடன், படையினர் குழு ஒன்று, கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக தேங்கி நின்ற ஏராளமான பொதிகளை அகற்ற தலையிட்டது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்வதாக அரசாங்கம் அச்சுறுத்தியுள்ளது.
இந்த செயற்பாடுகள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அஞ்சல் வேலைநிறுத்தத்தை முறியடிக்க முயற்சிக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. தபால் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதில் அது எதாவதொரு வகையில் வெற்றி பெறுமாயின், அது, தொழிலாள வர்க்கத்தின் ஏனைய அனைத்து பிரிவுகளுக்கும் எதிராக அரசாங்கத்தின் கைகளை வலுப்படுத்தும். 400க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் / மறுசீரமைப்பு செய்தல் உட்பட சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பதை எதிர்க்கும் எந்தவொரு தொழிலாள வர்க்கப் போராட்டங்களையும் கொடூரமாக அடக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
எனவே அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி விடக்கூடாது. அரசாங்கத்தின் கொடூரமான வேலைநிறுத்த-எதிர் தாக்குதல்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் தபால் ஊழியர்களைப் பாதுகாப்பதில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் தலையிட வேண்டும். வேலைநிறுத்தம் செய்யும் தபால் ஊழியர்கள் எதிர்கொள்வது, அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தையே ஆகும். தபால் தொழிற்சங்கங்கள் ஊக்குவிக்கப்பது போல், அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர்களின் கோரிக்கைகளை வெல்ல முடியாது.
தற்போதைய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ள தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அஞ்சல் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தியுள்ளன. அஞ்சல் ஊழியர்களைப் பாதுகாக்க ஏனைய பிரிவு தொழிலாளர்களையும் முன்வருமாறு அவர்கள் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. அதே நேரம், மற்ற துறைகளில் உள்ள தொழிற்சங்கத் தலைமைகளும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் சவால் செய்யப்படாமல் இருக்க அனுமதித்து மௌனம் காக்கின்றன.
சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவது அவசியமாகும். வேலைநிறுத்தம் செய்யும் தபால் ஊழியர்கள், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவு தொழிலாளர்களை நாட வேண்டும். தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியிருக்க முடியாது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலை, அலுவலகம், வேலைத்தளம் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக, தங்கள் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தெற்காசியாவிலும் உலகளவில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து, சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, ஏகாதிபத்தியப் போர், ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத் திட்டங்களுக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தில் இணைய வேண்டும்.
திங்கட்கிழமை நடைபெறும் சோசலிச சமத்துவக் கட்சியின் சூம் கூட்டத்தில் இந்த வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடப்படும். அதில் பங்குபற்றுமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.
திகதி மற்றும் நேரம்: ஆகஸ்ட் 25, திங்கள், மாலை 7 மணிக்கு