இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணமொன்றின் போது, அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். செவ்வாய்கிழமை இரண்டாவது விசாரணை வரை அவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் எதிர்கொள்ளும் தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே, முன்னெப்போதும் நடந்திராத வகையில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்துவதற்கு விரோதமாக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பால் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடி குவிந்துவருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது வரிகளை விதிப்பதன் மூலமும், விலை மானியங்களைக் குறைப்பதன் மூலமும், கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட அத்தியாவசிய சமூக சேவைகளை மேலும் ஆழமாக வெட்டிக் குறைப்பதன் மூலமும் வரவு-செலவுத் திட்டத்தைக் குறைக்க உறுதிபூண்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்க அல்லது மறுசீரமைப்பைதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக இலட்சக்கணக்கான தொழில்கள் அழிக்கப்படும்.
அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமாவதற்கு முன்பே, அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழில்துறை போராட்ட அலையை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான அஞ்சல் ஊழியர்கள், 19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரமாக காலவரையறையற்ற தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன.
நாடு முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள், 2025 ஆம் ஆண்டு பாதீட்டில் சம்பளக் குறைப்புகளுக்கு எதிராக கடந்த புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக, அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபைத் தொழிலாளர்கள் ஜூலை 22 அன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தியதுடன் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர். மாணவர்கள், வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் விவசாயிகளும் போராட்டங்களை நடத்தினர்.
தொழிலாளர்களின் எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாமல், அரசாங்கம் மேலும் மேலும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட அதே நாளில், தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை அனுப்பியது. குவிந்திருந்த பெருமளவிலான பொதிகளை அகற்றுவதற்காக கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு படையினர் அனுப்பப்பட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் அஞ்சல் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அரசாங்கம் அச்சுறுத்தியது.
2022 முதல் 2024 வரை ஜனாதிபதியாக இருந்த விக்ரமசிங்கவை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு, உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் இரக்கமற்ற தாக்குதல்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தீவிர முயற்சியாகும்.
அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ பயணத்தின் பின்னர், லண்டனில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக விக்ரமசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள், உண்மை என நிரூபிக்கப்பட்டாலும் கூட, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் பரவலாக இருக்கும் ஊழலின் அளவிற்குச் சமமாக இல்லை.
2022 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைத் தொடங்கியதற்காகவும், தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை ஒடுக்கியதற்காகவும் உழைக்கும் மக்களால் பரவலாக வெறுக்கப்படுவதாலேயே விக்ரமசிங்கவை தனிமைப்படுத்தி தாக்க முடிந்தது. எவ்வாறெனினும், நாட்டின் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் தேவையை ஒப்புக்கொண்ட ஜே.வி.பி. உட்பட அனைத்து பாராளுமன்றக் கட்சிகளின் உதவியுடனேயே அவர் அப்போது பதவியில் அமர்த்தப்பட்டார்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேன் போரினால் தூண்டப்பட்ட ஆழமான அந்நிய செலாவனி பற்றாக்குறையை எதிர்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கம், அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பற்றாக்குறையும் உடனடியாக உயர்ந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களைத் தூண்டியது. தினமும் மின்சாரத் தடை ஏற்பட்டது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் பங்குபற்றிய 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சி, இராணுவத்தின் அணிதிரட்டலை மீறி, ராஜபக்ஷவை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது.
வலதுசாரி விக்கிரமசிங்க பிரதமராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்றது, அவருக்கு மக்கள் ஆதரவு இருந்ததால் அல்ல. உண்மையில், அவர் மட்டுமே தனது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால் அவரது நீண்ட அமெரிக்க ஆதரவு மற்றும் சர்வதேச நாணய நிதிய ஆதரவு சாதனையுடன், இலங்கை முதலாளித்துவத்தை காப்பாற்றவும் அதன் ஆட்சியை தூக்கி நிறுத்தவும் கூடிய ஒரு நபராக அவர் தேர்வுசெய்யப்பட்டார்.
அந்தக் கடுமையான அரசியல் நெருக்கடியின் போது, ஒரு இடைக்கால பாராளுமன்ற அரசாங்கத்திற்கான பிரேரணையுடன் -அதாவது இதே மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிகளைக் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கான பிரேரணையுடன்- ஜே.வி.பி.யும் ஏனைய எதிர்க்கட்சிகளும், வெகுஜன இயக்கத்தை பாராளுமன்ற அரசியல் முட்டுச்சந்திற்குள் திருப்பிவிடுவதில் கருவியாக செயற்பட்டுள்ளன. விக்கிரமசிங்க ஒரு தேர்தலின் மூலம் அன்றி, மாறாக ஒரு பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலமே ஜனநாயக விரோதமாக ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு கடனுக்கான ஒப்பந்தத்தை எட்டியதுடன், அது நாட்டை சிக்கன திட்டத்துக்குள் தள்ளியது. சர்வதேச நாணய நிதிய கடன்கள் தற்காலிகமாக அந்நிய செலாவனி நெருக்கடியை சமாளித்த போதிலும், அதற்கு சமூகம் முழுவதுமே பயங்கரமான விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. எஞ்சிய கடன் தொகைகள் கிடைக்கவேண்டுமெனில் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்க வேண்டும். உழைக்கும் மக்களே அந்த சுமையை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
விக்ரமசிங்கவும் ஒரு பிரதிநிதியாக இருக்கும், பாரம்பரியமாக ஒரு சில சக்திவாய்ந்த குடும்பங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தின் மீதான பரவலான விரோதம், கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெளிப்பட்டது. முந்தைய பாராளுமன்றத்தில் ஒரு சில ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஜே.வி.பி.யும் அதன் தேசிய மக்கள் சக்தி என்ற தேர்தல் முன்னணியும், ஜனாதிபதி பதவியையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையையும் வென்றன.
சிங்கள பேரினவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தில் வேரூன்றிய கட்சியான ஜே.வி.பி., நீண்டகால முதலாளித்துவ ஆட்சியின் கட்சிகளுக்கு உண்மையான மாற்றீட்டை பிரதிதிநித்துவப்படுத்துவதாகவும்; ஊழல் நிறைந்த அரசியல் ஸ்தாபனத்தை எதிர்க்கும் ஒரு 'சுத்தமான' கட்சி என்றும்; உழைக்கும் மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கூடியவாறு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பொய் கூறியே ஆட்சிக்கு வந்தது.
அதன் கடைசி வாக்குறுதி அம்பலமானது. நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களுக்குள், நிதியமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க, தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக செயல்படுத்தும் என்று அறிவித்தார்.
பத்து மாதங்கள் கடந்தும், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் பெரும்பகுதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதையும், அடிப்படைப் பொருளாதார நெருக்கடி நீங்கவில்லை என்பதையும், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை மீண்டும் செலுத்தத் தொடங்க வேண்டியிருக்கும் என்பதையும் திசாநாயக்க நன்கு அறிவார்.
அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 20 சதவீத வரி விதித்ததால் பொருளாதார சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன. இது, குறிப்பாக ஆடைத் தொழில்துறையைப் பாதிக்கும். இந்த சுங்க வரிகள் இலங்கையின் ஏற்றுமதியில் 634 மில்லியன் டொலர் இழப்பையும் 16,000 தொழில்களையும் இழக்க வழிவகுக்கும் என்று கொள்கை ஆய்வுகள் நிறுவனம் இந்த மாதம் எச்சரித்தது.
நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், சந்தேகத்திற்கு இடமின்றி தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் சமூக நிலைமைகளை இன்னும் ஆழமாக வெட்ட வேண்டியிருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தும் அரசாங்கம், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் கோபம், 2022 எழுச்சியை விஞ்சக்கூடிய ஒரு வெகுஜன இயக்கமாக வெடிக்கக்கூடும் என்று அஞ்சுகிறது. அதனால்தான், விக்ரமசிங்கவுக்கு கிடைத்திருப்பது நியாயமான தண்டனைதான் என உழைக்கும் மக்களின் அடுக்குகள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை நன்கு அறிந்தே, ஊழல் துரும்புச்சீட்டை கபடத்தனமாகப் பயன்படுத்தி, பாரம்பரிய இலங்கை உயரடுக்கின் ஒரு பகுதியை குறிவைத்து வருகிறது.
'முன்னாள் பொலிஸ் மா அதிபர் அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்லது முன்னாள் அமைச்சர் அல்லது முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், தனிநபர் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் அதிகாரத்தை செயல்படுத்துவதாக அரசாங்கம் நிரூபித்துள்ளது' என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பெருமையாகக் கூறினார்.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது போலவே, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியானது ஊழல் மற்றும் வீண்விரயத்தின் விளைவாகும் என்ற ஜே.வி.பி./தே.ம.ச.யின் கூற்று, முழு மோசடியாகும். ஏனைய இடங்களில் போலவே, இலங்கை ஆளும் வட்டாரங்களிலும் ஊழல் பரவலாக இருந்தாலும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளுக்கு முதலாளித்துவ முறைமையே காரணம் ஆகும்.
விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கையை கண்டித்த பிரதான எதிர்க்கட்சிகள், இது 'ஜனநாயக விரோதமானது' என்றும் 'அரசியல் பழிவாங்கும் ஒரு அற்ப செயல்' என்றும் அறிவித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட இந்தக் கட்சிகள் அனைத்தும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக பேர் போனவை ஆகும். அவை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவே உறுதிப்பாட்டுடன் உள்ள போதிலும், இந்த கைது, சிக்கலான காலங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசியல் ஸ்தாபனத்திற்குள் தேவைப்படும் ஒற்றுமைக்கு குழிபறித்துவிடும் என்று அவை பீதியடைந்துள்ளன.
எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கம் விக்கிரமசிங்கவின் கைது குறித்து கடும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஜே.வி.பி./தே.ம.ச., அதுவே ஒரு அங்கமாக இருக்கும் அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு முக்கிய உறுப்பினரைக் கைது செய்ததன் மூலம், அது சர்வதேச நாணய நிதியத்தினதும் பெருவணிகத்தினதும் கோரிக்கைகளைத் திணிக்க எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளது என்பதையே முன்மாதிரியாக காட்டியிருக்கின்றது. தபால் ஊழியர்களுக்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டிய அரசாங்கம், தொழிலாளர்களை பெருந்தொகையில் வேலை நீக்கம் செய்வதாகவும் அச்சுறுத்தியதில் இந்த தயாரிப்பு ஏற்கனவே சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் அரசாங்கத்துடன் நேரடி மோதலுக்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தயாராக வேண்டும். முதலாளித்துவத்தை ஒழித்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவ, இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட அடுக்குகளை அணிதிரட்டிக்கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். செல்வந்தர்கள் சிலரின் இலாபங்களுக்காக அன்றி, பெரும்பான்மையினரின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், சமூகம் சோசலிச வழிகளில் மறுசீரமைக்கப்பட வேண்டும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அத்துடன் இதற்கு உலகளவில் தொழிலாள வர்க்கத்துடனான ஐக்கியம் மிகவும் இன்றியமையாததாகும்.
மேலும் படிக்க
- அரசாங்க அச்சுறுத்தல்களை மீறி ஆயிரக்கணக்கான இலங்கை தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
- நோயாளிகள் மருந்தை கொள்வனவுசெய்ய நிர்ப்பந்திக்கும் இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைகள் பொது சுகாதார சேவைகளுக்கு ஒரு மரண அடி
- இலங்கையில் மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்
- இலங்கை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் முல்லைத்தீவு பத்திரிகையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்