கியேவ் மீதான தாக்குதலும் நேட்டோவின் தீவிரப்பாடும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு நேரடி போருக்கு அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உக்ரேனின் கியேவ் நகரில் வியாழக்கிழமை அதிகாலை ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு எரியும் கட்டிட பகுதியில் தீயணைப்பு படையினர்கள் பணிபுரிகின்றனர். ஆகஸ்ட் 28, 2025 [AP Photo/Efrem Lukatsky]

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு, ரஷ்யா ஆகஸ்ட் 28 அதிகாலை, உக்ரேன் தலைநகர் கியேவில் தனது மிகக் கொடிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 18 முதல் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் அலுவலகங்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இத்தாக்குதலில் சேதமடைந்தன. இராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கிரெம்ளின் கூறியது, ஆனால் அவை குடியிருப்பு பகுதிகளையும் ஒரு வணிக வளாகத்தையும் அழித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களை இலக்கு வைப்பது, போர் விரிவாக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. இதன் மூலம், மாஸ்கோ ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: அது உக்ரேனில் ஐரோப்பிய துருப்புக்களை ஏற்றுக்கொள்ளாது. வெறும் ஒரு நாளுக்கு முன்னர்தான், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரேனில் ஐரோப்பிய “அமைதி காக்கும் படையினரை” நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை திட்டவட்டமாக நிராகரித்தார். இது பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்ட தீர்வின் ஒரு பகுதியாக விளாடிமிர் புட்டின் அத்தகைய படையை ஏற்கத் தயாராக இருப்பார் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது. மேலும், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்கான மூல காரணங்களில் ஒன்றாகும் என்றும் ஐரோப்பிய படையெடுப்புகள் விரோதச் செயல்களாகக் கருதப்படும் என்றும் பெஸ்கோவ் எச்சரித்தார்.

போரின் தர்க்கம் ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு இராணுவ மோதலை நோக்கி நேரடியாக இட்டுச் செல்கிறது. இது மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை அச்சுறுத்துவதோடு ஒட்டுமொத்த கண்டத்தின் அழிவையும் அச்சுறுத்துகிறது.

ரஷ்யாவின் தாக்குதல்களை அடுத்து பின்வாங்குவதற்குப் பதிலாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் புதிய அச்சுறுத்தல்களை விடுக்கவும் போர் முனைவை தீவிரப்படுத்தவும் இவற்றைப் பற்றிக் கொண்டன. பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், புட்டின் “அமைதிக்கான எந்தவொரு நம்பிக்கையையும் நாசப்படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டினார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாவின் “பயங்கரம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தை” கண்டித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் 19 வது தடையாணை தொகுப்பை அறிவித்து, முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புதிய சுற்றுப்பயணகளை மேற்கொள்வதுக்கு சூளுரைத்தார். மேலும் உக்ரேனை மேற்கத்திய ஆயுதங்கள் நிறைந்த ஒரு “உருக்குவாய்ந்த முள்ளம்பன்றியாக” மாற்ற சூளுரைத்தார். பேயர்ன் என்ற போர்க்கப்பலில் இருந்தபடியே ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், ரஷ்யா “எங்கள் தயார்நிலையை சோதித்து வருவதாக” அறிவித்தார். மேலும், நேட்டோ பிரதேசத்தைப் பாதுகாக்க பேர்லின் “எல்லாவற்றையும்” செய்யும் என்று அச்சுறுத்தினார்.

இந்த அறிக்கைகள் தற்காப்புக்கானது அல்ல, ஆனால் ஆக்ரோஷமானவை. ரஷ்யாவின் மூர்க்கத்தனத்திற்கு எதிராக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் “சுதந்திரம்” மற்றும் “சமாதானத்தை” பாதுகாத்து வருகின்றன என்ற வாதம் போர் பிரச்சாரமாகும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு, நேட்டோ பல தசாப்தங்களாக மோதலைத் திட்டமிட்டுத் தூண்டி, அதன் வாக்குறுதிகளையும் மீறி ரஷ்யாவின் எல்லைகளுக்கு விரிவடைந்து, மாஸ்கோவை இராணுவ ரீதியாக சுற்றி வளைத்து, உக்ரேனை நேட்டோவின் முன்னரங்க தளமாக மாற்றியது என்ற உண்மையை மாற்றிவிடாது.

ஆகஸ்ட் 15 அன்று, அலாஸ்காவில் நடந்த ட்ரம்ப்-புட்டின் உச்சிமாநாடு இதற்கு உடனடி பின்புலமாகும். அங்கு அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு மறுநோக்குநிலைக்கு சமிக்ஞை செய்தார். ட்ரம்ப் புட்டினை அரவணைத்து, சீனாவுடனான மோதலே வாஷிங்டனின் முன்னுரிமை என்பதை தெளிவுபடுத்தினார். உக்ரேனுக்கு ஆயுதங்களை தொடர்ந்து அனுப்பத் தயாராக இருந்த போதிலும், ரஷ்யாவுடனான போரின் நிதி மற்றும் இராணுவச் சுமையை ஐரோப்பா ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினார்.

இதற்கு ஐரோப்பிய சக்திகள் சீற்றத்துடன் எதிர்வினையாற்றின. அமெரிக்கா ரஷ்யாவின் வளங்களை அணுகுவதை உறுதி செய்யும் அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தை முழுப் போருக்கு ஆளாக்கும் ஒரு சாத்தியமான ரஷ்ய-அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அத்தகைய விளைவைத் தடுக்க உறுதியாக, பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவை உக்ரேனில் தங்கள் ஈடுபாட்டைத் விரிவாக்கி வருகின்றன, “அமைதிகாப்பவர்கள்” என்று சிடுமூஞ்சித்தனமாக முத்திரை குத்தப்பட்ட தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்துவது குறித்தும் கூட இவை கலந்துரையாடி வருகின்றன.

இந்த தாக்குதலின் முன்னணியில் பிரதான ஐரோப்பிய சக்திகள் —பிரிட்டன், பிரான்ஸ் அன்றி குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியம்— உள்ளன. ஆகஸ்ட் 25 அன்று, ஜேர்மனியின் துணை சான்சிலரும் நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பைல் கியேவுக்கு பயணித்தார். அங்கு அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 9 பில்லியன் யூரோ கூடுதல் இராணுவ உதவியை வழங்க உறுதியளித்ததுடன், உக்ரேனுக்கு “பாதுகாப்பு உத்தரவாதங்களை” வழங்க பேர்லின் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார். நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் உற்பத்தி உட்பட உக்ரேனின் ஆயுத தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கு பாரிய ஜேர்மன் ஆதரவை அவர் உறுதியளித்தார். குறிப்பிடத்தக்க வகையில், கிளிங்பைல் ஜேர்மன் தரைப்படை துருப்புக்களை உக்ரேனில் நிலைநிறுத்துவதை நிராகரிப்பதை தவிர்த்தார்—இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கு எதிராகவும் ஜேர்மன் சிப்பாய்களை அனுப்பும் வாய்ப்பை திறந்து வைத்தது.

அதேநேரத்தில், ஒரே நேரத்தில் ஒரு போர் வரவு-செலவு திட்டத்தை தயாரிக்கிறார். இந்த பட்ஜெட் 2029 ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனியின் பாதுகாப்பு செலவினங்களை 52 யூரோக்களிலிருந்து 153 பில்லியன் யூரோக்களாக மூன்று மடங்காக உயர்த்தும். மேலும், செலவினங்களை ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக 225 பில்லியன் யூரோக்களாக உயர்த்துவதற்கான நீண்டகால திட்டங்களையும் கொண்டிருக்கும். இந்த மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியாதாரத்தை திரட்ட, அரசாங்கம் அரசியலமைப்பு கடன் வரம்புகளில் இருந்து இராணுவ செலவுகளை நீக்கி, 1 ட்ரில்லியன் யூரோ புதிய கடன்களை வாங்க அங்கீகாரம் அளித்துள்ளது. போருக்கு வரம்பற்ற நிதிகள் கிடைக்கின்ற அதேவேளையில், சமூக செலவினங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. “நமக்குத் தெரிந்த நலன்புரி அரசு இனியும் கட்டுபடியாகக்கூடியதாக இல்லை” என்று கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்தார்.

இராணுவமயமாக்கலின் அளவு உலகப் போர்களுக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாததாகும். ஜேர்மன் இராணுவம் 181,000 இல் இருந்து குறைந்தபட்சம் 260,000 சிப்பாய்களாக விரிவாக்கப்பட உள்ளது. இராணுவ கட்டாய சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 27 அன்று வெளிவந்த அமைச்சரவையின் ஒரு வரைவு, இராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது, 2026 ஆம் ஆண்டில் அனைத்து இளைஞர்களையும் இராணுவ சேவைக்கு பதிவு செய்யத் தொடங்கும். பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், கட்டாய இராணுவ சேவை ஆரம்பத்தில் தன்னார்வமாக இருக்கும், ஆனால் தேவைப்பட்டால் கட்டாயமாக்கப்படலாம் என்று வலியுறுத்தினார். இதன் நோக்கம் ஜேர்மன் இராணுவத்தையும் ஒரு பாரிய இருப்புப் படையையும் விரைவாக கட்டியெழுப்புவதாகும்.

கடந்த புதனன்று நடந்த அதே அமைச்சரவைக் கூட்டத்தில், இராணுவ, உளவுத்துறை மற்றும் பொருளாதாரக் கொள்கையின் ஒருங்கிணைப்பை மையப்படுத்த அரசாங்கம் ஒரு தேசிய பாதுகாப்பு கவுன்சிலை —யதார்த்தத்தில், ஒரு தேசிய போர் கவுன்சில்— உருவாக்கியது. சான்சிலரால் தலைமை தாங்கப்பட்டு, அமைச்சர்கள், தளபதிகள், பாதுகாப்பு சேவைகள், தொழில்துறை மற்றும் சிந்தனைக் குழாம்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த அமைப்பு, நாடாளுமன்ற மேற்பார்வை இல்லாமல் முடிவுகளைத் திணிக்க பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு யுத்தப் பொருளாதாரம் மற்றும் ஒரு சர்வாதிகார அரசை நோக்கிய திருப்பத்தை ஸ்தாபனமயப்படுத்துகிறது.

அனைத்து அறிகுறிகளும் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் ஒரு போர் நிலைப்பாட்டிற்கு மாறுவதையே சுட்டிக்காட்டுகின்றன. செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமீபத்திய பைனான்சியல் டைம்ஸ் புலனாய்வு, ஆயுத உற்பத்தியில் ஒரு வரலாற்று ஏற்றத்தை ஆவணப்படுத்தியது: ஐரோப்பாவின் ஆயுத தொழிற்சாலைகள் 2022 முதல் அமைதிக்கால மட்டங்களை விட மூன்று மடங்கு வேகமாக விரிவடைந்துள்ளன. இதனால் ஏழு மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான புதிய தொழில்துறை இடம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான ரைன்மெட்டல், 2022 இல் 70,000 ஆக இருந்த வருடாந்திர எறிகணை உற்பத்தியை 2027 க்குள் 1.1 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த வாரம் பிஸ்டோரியஸ், கிளிங்பீல் மற்றும் நேட்டோ தலைவர் மார்க் ருட்டே ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட அன்டர்லஸில் உள்ள ஒரு புதிய ரைன்மெட்டால் தொழிற்சாலை, 2027 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 350,000 பீரங்கி குண்டுகளை உற்பத்தி செய்யும் ஐரோப்பாவின் மிகப்பெரிய வெடிமருந்து ஆலையாக மாறும். ஏனைய ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் பெரும்பாலும் படைத்துறைசாரா தொழில்துறைகளை போர் நோக்கங்களுக்காக மாற்றுவதன் மூலமாக, ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் டாங்கி உற்பத்தியை அசுர வேகத்தில் விரிவாக்கி வருகின்றன. இது, 1930 களில் போர் உற்பத்தியை நோக்கி தொழில்துறை உருமாறியதை நினைவூட்டுகிறது.

நடந்து வரும் குவாட்ரிகா 2025 பயிற்சிகள் நேட்டோவின் போர் தயாரிப்புகளின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சுமார் 8,000 ஜேர்மன் துருப்புகள், ஏனைய 13 நாடுகளின் படைகளுடன் சேர்ந்து, ஜேர்மனி, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் பால்டிக் கடலில் பெரியளவிலான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஒத்திகைகள் கடல்வழி மீள்விநியோகம், வான்வழி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு, மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்த்தல் ஆகிய பயிற்சிளை கொண்டிருப்பதுடன், —சுருக்கமாக, ரஷ்யாவுடனான நேரடி போருக்கான தயாரிப்புகளாகும்.

ஜேர்மன் இராணுவம் நிரந்தரமாக லித்துவேனியாவில் ஒரு போர் படைப்பிரிவை நிறுத்தி வருகிறது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெளிநாடுகளில் ஜேர்மன் தரைப்படைகள் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஜேர்மனியின் ஆக்ரோஷமான போக்கு தற்காப்புக்கு அல்ல, மாறாக அதன் வரலாற்று போர் நோக்கங்களின் ஒரு தொடர்ச்சியாகும்: அதாவது உக்ரேன் மீதான கட்டுப்பாடு, ரஷ்ய மூலப்பொருட்களை கைப்பற்றுவது மற்றும் யூரேஷிய நிலப்பரப்பில் மேலாதிக்கம் செலுத்துவது. இந்த நோக்கங்கள் இரண்டு உலகப் போர்களிலும் ஜேர்மயின் தாக்குதல்களுக்கு மையமாக இருந்தன. இன்று, அவை மீண்டுமொருமுறை முதலாளித்துவ நெருக்கடி, ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் தொடரப்படுகின்றன.

உலகப் போருக்கான உந்துதல் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலில் இருந்து பிரிக்கவியலாததாகும். டிரில்லியன் கணக்கான பணங்கள் ஆயுதங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றன அதே நேரத்தில் ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை வெட்டித் தள்ளப்படுகின்றன. இதற்கான எதிர்ப்பை ஒடுக்க, ஆளும் வர்க்கம் பொலிஸ், உளவுத்துறை முகமைகள் மற்றும் எதேச்சதிகார அரசு கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பி வருகிறது.

இந்த மோதலில் உள்ள அனைத்து பிற்போக்கு முகாம்களையும் தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பு, அதன் சொந்த சூறையாடும் நலன்களைப் பாதுகாக்க முனையும் ஒரு முதலாளித்துவ ஆட்சியின் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். ட்ரம்பை அவர் அரவணைப்பதும் ஐரோப்பா எங்கிலுமான அதிவலது சக்திகளுக்கு முறையிடுவதும் ரஷ்ய தேசியவாதத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகின்றன. ட்ரம்பின் சூழ்ச்சிகள் “சமாதானத்துக்கு” அல்ல, மாறாக சீனாவுக்கு எதிரான போருக்கான அமெரிக்க ஆதார வளங்களை விடுவிப்பதற்கான ஒரு தந்திரோபாய மாற்றமாகும். ஐரோப்பிய சக்திகள் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்வது எல்லாவற்றையும் விட மிகவும் திமிர்த்தனமான பொய்யாகும்: உண்மையில், அவை அவற்றின் சொந்த ஏகாதிபத்திய படுகொலைக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு ட்ரம்ப்-புட்டின் உச்சிமாநாடு குறித்த அதன் முன்னோக்கில் பின்வருமாறு வலியுறுத்தியது:

ட்ரம்பின் சூழ்ச்சிகளோ, அல்லது ஐரோப்பிய சக்திகளின் சூழ்ச்சிகளோ, அல்லது புட்டினின் பிற்போக்குத்தனமான கணக்கீடுகளோ ஒரு முன்னோக்கிய பாதையை ஒருபோதும் வழங்கப் போவதில்லை. இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு, அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் முகவர்களுக்கு எதிராக சமரசமின்றி போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான, சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் அவசியமாகும்.

Loading